search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "greenway road project"

    8 வழி சாலை திட்டத்தில் தமிழக அரசு கோர்ட்டு உத்தரவினை மீறி விதி மீறல்களை செய்வதாக ஜி.கே.வாசன் குற்றச்சாட்டியுள்ளார். #GkVasan
    கரூர்:

    கரூர் வெங்கமேடு பகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சேலம்-சென்னை இடையேயான 8 வழி சாலை அமைப்பதில் கோர்ட்டு உத்தரவினை மீறி தமிழக அரசு சில விதிமீறல்களை செய்கிறது. இதை அங்கிருக்கும் மக்களே முழுமையாக எதிர்த்து கொண்டிருக்கிறார்கள். தமிழக அரசு மக்கள் மீது திட்டங்களை திணிக்கவோ, கட்டாயப்படுத்தவோ கூடாது. கோர்ட்டு உத்தரவுக்கு ஏற்றவாறு செயல்படுவது தான் ஜனநாயகத்திற்கு நல்லதாக இருக்கும். 8 வழி சாலையை 6 வழி சாலையாக மாற்ற தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பரிந்துரை செய்திருப்பது குறித்து இறுதி முடிவு வந்த பின்னரே கருத்து கூற முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது முன்னாள் எம்.பி. நாட்ராயன், முன்னாள் எம்.எல்.ஏ. விடியல்சேகர், மாநில நெசவாளர் அணி தலைவர் அக்னி ராஜேஷ் மற்றும் பலர் உடனிருந்தனர். #GkVasan
    சேலம் எட்டு வழி பசுமை சாலை திட்டத்தை எதிர்த்து மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் போராட்டத்துக்கு தடை விதிப்பது குறித்து முக ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். #DMK #MKStalin
    சென்னை:

    தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு:-

    சேலம் எட்டு வழி பசுமை சாலை திட்டத்தை எதிர்த்து மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி நடத்தும் நடை பயணத்திற்கு தடை விதிப்பது ஜனநாயக விரோதம். தடையை மீறி அவர்கள் செல்வதை வரவேற்பதோடு திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் அவர்கள் போராட்டம் வெற்றி அடைய வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார். #DMK #MKStalin
    பசுமை வழிச்சாலைக்காக விவசாய நிலத்தில் கல் ஊன்றியபோது அதிகாரிகள் முன்னிலையில் தாய்-மகள் தற்கொலை செய்து கொள்ள முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #GreenwayRoad
    செய்யாறு:

    சென்னை-சேலம் பசுமை சாலைக்காக திருவண்ணாமலை மாவட்டத்தின் செய்யாறு, செங்கம் தாலுகாகளில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. நேற்று கீழ்கொளத்தூர் என்னும் ஊரில் உள்ள தொடக்கப்பள்ளி, விநாயகர் கோவில் ஆகிய இடங்களில் நிலம் அளவீடு செய்யும் பணி நடந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    எதிர்ப்புக்கு மத்தியிலும் அதிகாரிகள் நிலம் அளவிட்ட இடங்களில் கல் ஊன்றிவிட்டு சென்றனர். அதன்பின்பு எருமைவெட்டி கிராமத்திற்கு சென்ற அதிகாரிகள் அங்கு உள்ள விவசாயி ரமேஷ் என்பவருக்கு சொந்தமான வயலில் அளவிடும் பணியில் ஈடுபட்டனர்.

    அதற்கு ரமேஷின் மனைவி மீனாட்சி (வயது 40), மகள் தேவதர்ஷினி (18) ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து தாசில்தார்கள் மகேந்திரமணி, தமிழ்மணி ஆகியோருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது மீனாட்சி திடீரென தன் கையில் வைத்திருந்த மண்எண்ணெய் கேனிலிருந்த மண்எண்ணெய்யை உடலில் ஊற்றி தீ வைக்க முயன்றார். பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் அதனை பிடுங்கி அவரை சமரசம் செய்தனர்.

    தொடர்ந்து வயலில் நிலம் அளவீடு செய்து கல் ஊன்றும் பணி நடந்தது. இதனை பார்த்த அவரது மகள் தேவதர்ஷினி “எங்களின் எதிர்ப்பையும் மீறி எப்படி கல் நடலாம். அந்த கல்லை அகற்றுங்கள் இல்லாவிட்டால் பிளேடால் கழுத்தை அறுத்துக்கொள்வேன்” என எச்சரிக்கை விடுத்தார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகளும், போலீசாரும் அவரை நெருங்கியபோது தேவதர்ஷினி பிளேடால் தனது கழுத்தை அறுத்தார். அவரது கழுத்திலிருந்து ரத்தம் பீறிட்டது.

    அங்கிருந்த பொதுமக்கள் துணியை தண்ணீரில் நனைத்து அந்த ஈர துணியை தேவதர்ஷினியின் கழுத்தில் இறுக்கி கட்டினர். உடனே அவரை சமரசப்படுத்த அங்கு நடப்பட்டிருந்த கல்லை மட்டும் அதிகாரிகள் அகற்றினர். மற்ற இடங்களில் கல் நடும் பணி தொடர்ந்த வண்ணம் இருந்தது.

    அப்போது திடீரென மீனாட்சி மீண்டும் தனது கிணற்றின் அருகே வந்து “பணிகளை நிறுத்தாவிட்டால் குடும்பத்துடன் நாங்கள் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்வோம்” என்றார்.

    தேவதர்ஷினி பிளஸ்-2 முடித்து விட்டு அடுத்த ஆண்டு ‘நீட்’ தேர்வு எழுதுவதற்காக பயிற்சி மையத்திற்கு சென்று பயிற்சி பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. #GreenwayRoad
    ‘சென்னை-சேலம் பசுமை வழி சாலை திட்டத்துக்கு எதிராக சட்ட ரீதியாக போராடுவோம்’ என்று சேலத்தில் அன்புமணி ராமதாஸ் கூறினார். #AnbumaniRamadoss #PMK
    சேலம்:

    சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணத்தில் நேற்று பா.ம.க. சார்பில் சேலம்-சென்னை இடையே 8 வழி பசுமை சாலை திட்டம் குறித்து மக்கள் சந்திப்பு மற்றும் விவசாயிகள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. தலைமை தாங்கி விவசாயிகளிடம் கருத்துகளை கேட்டறிந்தார். அப்போது அவரிடம் விவசாயிகள் மனு அளித்தனர்.

    பின்னர் அவர் பேசுகையில், ‘நாட்டின் வளர்ச்சி திட்டத்துக்கு நான் எதிரானவன் அல்ல. விவசாய நிலங்களை அழித்து எந்தவொரு திட்டமும் செயல்படுத்த வேண்டாம். பசுமை வழி சாலை திட்டம் தொடர்பாக பொதுமக்களிடம் முதல்-அமைச்சர் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். இதையும் மீறி இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் அதை எதிர்த்து டெல்லியில் போராட்டம் நடத்துவேன்’ என்றார்.

    முன்னதாக அன்புமணி ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சேலம்-சென்னை இடையே 8 வழி பசுமை சாலை திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகளை சந்தித்து கருத்துக்களை கேட்டு வருகிறேன். இந்த கருத்துகளை ஒரு அறிக்கையாக தயாரித்து மத்திய, மாநில அரசுகளிடம் கொடுப்பேன். மேலும் மத்திய மந்திரி நிதின் கட்காரியை சந்தித்து இந்த திட்டத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், மாற்று வழிப்பாதை குறித்தும் விளக்கம் அளிப்பேன்.

    அதையும் மீறி பசுமை வழி சாலை திட்டத்தை செயல்படுத்த முயன்றால் சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் போராடுவோம். பசுமை வழி சாலை திட்டம் குறித்து சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொய் கூறி வருகிறார்.

    மேலும் கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு இழப்பீடாக குறைந்தபட்சமாக ரூ.21 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.9.4 கோடி வரை ஒரு ஹெக்டேருக்கு வழங்கப்படும் என்று தவறாக கூறப்படுகிறது. இந்த பசுமை வழிச்சாலை தாம்பரம் அருகே உள்ள படப்பை என்ற இடத்தில் நிறைவு பெறுகிறது.

    அங்கிருந்து சென்னைக்கு செல்வதற்கு போக்குவரத்து நெரிசல் காரணமாக குறைந்தது 2 மணி நேரம் ஆகும். எனவே சேலத்தில் இருந்து சென்னைக்கு 5 மணி நேரம் ஆகும். இந்த சாலை அமைப்பது தொடர்பாக எந்த ஆய்வும் நடத்தப்படவில்லை.



    கஞ்சமலையில் உள்ள இரும்பு தாதுக்களை எடுப்பதற்காகவே இந்த சாலை அமைக்கப்படுவதாக கூறப்படுகிறது. இரும்பு தாதுவை எடுக்க விடமாட்டோம். பசுமை வழி சாலை திட்டத்துக்கு எதிராக போராடும் விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்களை போலீசார் கைது செய்வது கண்டிக்கத்தக்கது. நாடாளுமன்றத்தில் பசுமை வழி சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசுவேன்.

    பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சமூக நீதி போராட்டத்தை கொச்சைப்படுத்தி பேசி உள்ளார். அவரை கண்டித்து நாளை (அதாவது இன்று) தமிழகம் முழுவதும் பா.ம.க. சார்பில் போராட்டம் நடைபெறுகிறது. மேலும் இந்த பேச்சுக்கு அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #AnbumaniRamadoss #PMK
    பசுமை வழிச்சாலை திட்டம் தொடர்பாக தமிழக அரசை கண்டித்து திருவண்ணாமலையில் தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் 5 எம்.எல்.ஏ.க்கள் கலந்துகொண்டனர்.
    திருவண்ணாமலை:

    சென்னை - சேலம் பசுமை வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து போராடும் மக்கள் மீதான அ.தி.மு.க. அரசின் நடவடிக்கையை கண்டித்து நேற்று திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்துக்கு திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான எ.வ.வேலு தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட செயலாளர் ஆர்.சிவானந்தம், எம்.எல்.ஏ.க்கள் கு.பிச்சாண்டி, மு.பெ.கிரி, கே.வி.சேகரன், எஸ்.அம்பேத்குமார், மாவட்ட அவைத் தலைவர் வேணுகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் எ.வ.வேலு எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    பசுமை வழிச்சாலை தொடர்பாக விவசாயிகளின் கருத்து கேட்கவில்லை. மக்களை துன்புறுத்தி நிலங்களை பெறக்கூடாது. திருவண்ணாமலை மாவட்டத்தில் 6 இடங்களில் காப்புக்காடுகள் உள்ளன. பசுமை வழிச்சாலையினால் காப்புக்காடுகள் பாதிப்புக்கு உள்ளாகும். பசுமை வழிச்சாலையினால் திருவண்ணாமலை மாவட்டத்துக்கு தான் அதிகம் பாதிப்பு. 122 கிலோ மீட்டர் சாலை அமைக்க 1100 ஹெக்டர் விவசாய நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது.

    ஜெயலலிதா முதல் - அமைச்சராக இருந்த போது மேம்பாலங்கள் அமைப்பது தொடர்பாக அறிவித்து இருந்தார். அந்த திட்டங்களை நிறைவேற்ற முன்வராமல், பசுமை வழிச்சாலை திட்டத்துக்கு முதல் - அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆர்வம் காட்டுவதன் நோக்கம் என்ன.

    மக்களுக்கு விருப்பம் இல்லாத திட்டத்தை கைவிட்டு விட்டு மாற்று வழிகளை கையாள வேண்டும் என்று தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் தலைமை செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதரன், மாவட்ட பொருளாளர் எஸ்.பன்னீர்செல்வம், நகர செயலாளர் கார்த்திவேல்மாறன், டாக்டர் எ.வ.வே.கம்பன், மாவட்ட அமைப்பாளர் அண்ணாதுரை உள்பட பலர் கலந்துகொண்டனர். 
    ×