என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Greenwayroad"
சென்னை:
சென்னை- சேலம் இடையே 8 வழி பசுமை சாலை அமைக்க மத்திய அரசு ரூ.10 ஆயிரம் கோடியில் திட்டமிட்டுள்ளது.
இதற்காக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மாவட்டங்களில் நிலம் அளவீடு பணி 90 சதவீதம் முடிந்து விட்டது. தற்போது காஞ்சீபுரம் மாவட்டத்தில் நில அளவீட்டு பணியை அதிகாரிகள் மேற் கொண்டுள்ளனர்.
இதற்கிடையே 8 வழி சாலை திட்டத்தை எதிர்த்து கிருஷ்ணமூர்த்தி என்பவர் தொடர்ந்த வழக்கு விசாரணை சென்னை ஐகோர்ட்டில் நடந்தது. அப்போது தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், “8 வழி பசுமை சாலை திட்டத்துக்கு அனுமதி கேட்டு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மத்திய சுற்றுச்சூழல் ஆணைய நிபுணர்கள், அதிகாரிகள் அந்த வழித்தடம் அமைய உள்ள பகுதிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது 8 வழி சாலை திட்டம் சுமார் 10 கி.மீ. தூரத்துக்கு வனப்பகுதியில் செல்வது தெரிய வந்தது. அந்த வனப் பகுதிகள் வன விலங்குகள் வழித்தடங்கள் உள்ள பகுதியாகும். குறிப்பாக கல்வராயன் வனப் பகுதியில் அந்த வழிதடம் செல்வது தெரிய வந்துள்ளது.
சுற்றுச்சூழல் பாதிக்காத படி அந்த பாதையை அமைக்கும்படி சுற்றுச்சூழல் அமைச்சகம் கூறியுள்ளது. குறிப்பாக கல்வராயன் மலை வனப்பகுதியை தவிர்க்க கூறியுள்ளது.
நெடுஞ்சாலை அமைக்க நீர் நிலைகள், சதுப்பு நிலங்கள் பாதிக்கப்பட கூடாது. வனப் பகுதியில் சில இடங்களை தவிர்க்க கூறியுள்ளனர். இதனால் சுற்றுச்சூழல் அமைச்சகம் இன்னும் அனுமதி தர வில்லை.
சில பரிந்துரைகளை பூர்த்தி செய்யும்படி சுற்றுச் சூழல் அமைச்சகம் கடிதம் அனுப்பி உள்ளது. ஆனால் 8 வழி சாலை அமைக்க எந்த விதி மீறல்களும் செய்யப்படவில்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #Greenwayroad
காஞ்சீபுரம் மாவட்டத்தில் 8 வழிச்சாலைக்கு நிலம் கையப்படுத்தப்படுவது தொடர்பாக கலெக்டர் பொன்னையா நிரூபர்களிடம் கூறியதாவது:-
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் வட்டத்தில் 27 கிராமங்கள், ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் 10 கிராமங்கள், செங்கல்பட்டு வட்டத்தில் 5 கிராமங்கள் என 42 கிராமங்கள் வழியாக 8 வழிச் சாலை அமைய உள்ளது.
இது சம்மந்தமாக கடந்த 10 நாட்களாக வருவாய் துறையினர் மற்றும் காவல் துறையினர், கிராமங்கள் தோறும் சென்று விவசாயிகள், பொதுமக்கள் ஆகியோரிடம் 8 வழிச்சாலை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இந்த சாலை 59.1 கிலோ மீட்ர் தூரத்தில் 110 மீட்டர் அகலத்தில் அமைய உள்ளது. இதற்காக மாவட்டத்தில் 80 வீடுகள் மட்டுமே காலி செய்யப்பட இருக்கிறது. அவர்களுக்கு உடனடியாக அதே கிராமத்தில் 1 கிலோ மீட்டர் தூரத்திற்குள் வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டு பசுமை வீடு கட்டித்தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும் விவசாய நிலங்கள் இரண்டாக பிரியும் பகுதிகளில் உள்ள விசவாயிகள் ஒன்று சேர்ந்து மனு அளித்தால் அந்த இடத்தில் சுரங்கப்பாதை அல்லது பாதை அமைத்து தர நடவடிக்கை எடுக்கப்படும்.
நேரடியாக அளவீடு செய்யும் போது தான் எத்தனை கிணறுகள், மரங்கள் பாதிக்கப்படுகின்றன என்பதை கணக்கீடு செய்ய முடியும். வனத்துறை வழியாக இந்த பாதை செல்வதால் வனத்துறை வழங்கும் இடத்திற்கு மாற்றாக இருமடங்கு இடம் வனத்துறைக்கு வழங்கப்படும். வெட்டப்படும் ஒரு மரத்திற்கு ஈடாக 10 மரக்கன்றுகள் நடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே கலெக்டர் பொன்னையாவிடம் அரும்புலியூர் கிராமத்தை சேர்ந்த ஏராளமானோர் கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறி இருப்பதாவது:-
அரும்புலியூர் கிராமத்தின் வழியாக சென்னை-சேலம் 8 வழி பசுமைச் சாலை திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதன் காரணமாக அவ்வழியே 20 வீடுகள் மற்றும் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளது.
இதனால் நாங்கள் எங்கள் உடமைகளை இழக்க நேரிடும், இழப்பீடு மற்றும் மாற்று இடம் எங்களுக்கு தேவையில்லை. இத்திட்டத்தை எங்கள் பகுதியில் செயல் படுத்த வேண்டாம். எங்கள் கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #Greenwayroad
சென்னை:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
சேலத்திலிருந்து சென்னைக்கு பசுமை வழிச் சாலை என்ற பெயரில் புதிதாக ஒரு சாலையை அமைக்க மத்திய, மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளது. இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்காக 10,000 ஏக்கர் நிலம் பயன்படுத்தப்பட இருக்கிறது. பத்தாயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது.
சாலைக்காக விவசாயிகளுக்கு சொந்தமான சுமார் 6000 ஏக்கர் விளை நிலங்கள் கையகப்படுத்தப்பட இருக்கிறது. விவசாயிகளுக்கு சொந்தமான ஆயிரக்கணக்கான ஆழ்குழாய் கிணறுகள், திறந்த வெளி கிணறுகள், ஏரிகள், குளங்கள் என நீராதாரங்கள் முற்றிலும் அழிக்கப்பட இருக்கிறது. சுமார் 1000 ஏக்கர் வன நிலங்கள் அழிக்கப்படுவதால் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படுவதுடன், வன விலங்குகள் உட்பட இடம் பெயர வேண்டிய நிலை ஏற்படும்.
ஆயிரக்கணக்கானோர் தங்களின் குடியிருப்புகளை இழந்து வெளியேற்றும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தான் பசுமை வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து விவசாயிகளும், பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால், அரசு போராடும் மக்கள் மீது காவல்துறையை ஏவி மிரட்டுவது, அச்சுறுத்துவது, பொய் வழக்கில் கைது செய்து சிறையில் அடைப்பது போன்ற அடக்குமுறை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. இத்தகைய சட்டவிரோத அணுகு முறைகளை உடனடியாக நிறுத்த வேண்டும்.
தமிழக அரசின் அடக்கு முறையைக் கண்டித்தும், லட்சக்கணக்கான மக்களை பாதிக்கும் பசுமைச் சாலை திட்டத்தை கைவிட வலியுறுத்தியும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் உட்பட பல்வேறு அமைப்புகளின் சார்பில் நாளை (26-ந் தேதி) காஞ்சிபுரம், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் கருப்பு கொடி ஏற்றி எதிர்ப்பை தெரிவிப்பது என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த கருப்புக்கொடி ஏற்றும் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது முழு ஆதரவினை தெரிவித்துக் கொள்கிறது. மக்களின் நலன் காக்க நடைபெறும் இப்போராட்டத்தை வெற்றிகரமாக்குமாறு கட்சி அணிகளை மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #GreenWayRoad
தருமபுரி:
சென்னை- சேலம் இடையே 8 வழி பசுமை சாலை ரூ. 10 ஆயிரம் கோடி செலவில் அமைக்கப்பட உள்ளது. இதற்காக காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் ஆகியமாவட்டங்களில் நிலங்களை அளவிட்டு கற்களை நடும் பணி நடந்து வந்தது.
தருமபுரி மாவட்டத்தில் 54.8 கிலோ மீட்டர்தூரத்திற்கு நிலங்களை அளவிடும்பணி நடந்தது. தருமபுரி மாவட்டம் அரூர் அருகே இருளப்பட்டியில் தொடங்கி கோபி நாதம்பட்டி, ஏ.பள்ளிப்பட்டி, முக்கா ரெட்டிப்பட்டி, சாமியாபுரம், பாப்பிரெட்டிப்பட்டி, சின்னமஞ்சவாடி, கோம்பூர், பெரியமஞ்சவாடி ஆகிய பகுதிகளில் இந்த பணி கடந்த 11 நாட்களாக நடந்து வந்தது.
விவசாயிகள் தீக்குளிக்கப் போவதாக மிரட்டியதால் பதட்டம் ஏற்பட்டது. 100-க்கும் மேற்பட்ட போலீசாருடன் சென்று நிலத்தை அளந்தாலும் விவசாயிகளிடம் பேச்சு வார்த்த நடத்த தனிக்குழு அமைக்கப்பட்டு இருந்தது. அந்த குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி விவசாயிகளை சம்மதிக்க வைத்தனர்.
நில அளவிடும் பணி நேற்று மாலையுடன் முடிந்தது. தருமபுரி மாவட்டத்தில் மட்டும் மொத்தம் 957 ஏக்கர் நிலத்தில் நிலம் அளவிடும் பணி முடிந்துள்ளது.இனி அடுத்தக்கட்டமான சர்வே எண்களை வைத்து சரி பார்ப்பார்கள்.
அதன்பிறகு பொதுமக்களிடம் கருத்து கேட்டு திட்டப்பணிகள் தொடங்கும். #GreenWayRoad
பாப்பிரெட்டிப்பட்டி:
8 வழி சாலைக்கு நிலம் அளவிடும் பணிகள் தருமபுரி மாவட்டம் மஞ்சவாடி கணவாய் பகுதியில் நடைபெற்றது. அப்போது அந்த வழியாக தனது காரில் சென்று கொண்டிருந்த முன்னாள் உயர்கல்வி துறை அமைச்சரும், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.வுமான பழனியப்பன் தனது வாகனத்தை நிறுத்திவிட்டு நிலம் அளவிடும் பணிகளை பார்வையிட்டார்.
அதன்பிறகு அவர் நிரூபர்களிடம் கூறியதாவது:-
இந்த திட்டம் தேவையற்றது என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொது செயலாளர் தினகரன் கருத்து கூறி இருக்கிறார். இந்த திட்டம் விவசாயிகளுக்கு பயன்தராது என்றும், இந்த திட்டத்துக்காக விவசாயிகளிடம் இருந்து நிலம் பறிக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்றும் அவர் கூறி இருக்கிறார். அவரது கருத்தையே நானும் கூறுகிறேன்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வறட்சி காரணமாக விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாமல் அவதிப்பட்டனர். தற்போது விவசாயிகள் சொட்டு நீர் பாசனம் முலம் விவசாயம் செய்து வருகின்றனர். மஞ்சவாடி பகுதியில் தென்னை, வாழை மற்றும் மாமரங்கள் அதிக அளவில் உள்ளன. இந்த பண பயிர்களால் விவசாயிகளுக்கு வருமானம் கிடைத்து வருகிறது. எனவே விவசாயிகள் வயிற்றில் அடித்து அவர்களது நிலங்களை பறித்து இந்த பசுமை வழி சாலை திட்டத்தை நிறைவேற்றுவதை நிறுத்த வேண்டும். 8 வழி திட்டத்தால் விவசாயிகள் மட்டுமல்ல சிறு வணிகர்களுக்கும் பாதிப்பு ஏற்படும்.
சேலத்தில் இருந்து சென்னை செல்ல ஏற்கனவே விழுப்புரம் வழி சாலை, தருமபுரி வழி சாலை உள்ளது. மேலும் அரூர் சாலையும் உள்ளது. இந்த சாலைகளை விரிவுப்படுத்தி சாலைகளை சரி செய்தாலே போதும்.
ஏற்கனவே தமிழகத்தில் பல்வேறு சாலைகள் முடிக்கப்படாமல் பாதியில் உள்ளது. அவைகளை இந்த அரசு பணி நடவடிக்கை எடுத்து சீர் செய்ய வேண்டும். அதை விடுத்து விவசாயிகளின் விளை நிலங்களை அபகரிப்பது மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாகவின் கொள்கைக்கு எதிரானது.
மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதா அம்மா மத்திய அரசின் மக்கள் விரோத திட்டங்களை எதிர்த்தார். அந்த திட்டங்களை துணிச்சலுடன் தடுத்து நிறுத்தினார். உதாரணமாக கெயில் திட்டம் ஆகும். ஆனால் தற்போது நடக்கும் எடப்பாடி அரசு தூத்துக்குடி துப்பாக்கி சூடு படுகொலைக்கு பின்பு போராடும் மக்களை மிரட்டி அச்சுறுத்தி திட்டங்களை திணிக்கிறது. எனவே இந்த அரசை மக்களும், விவசாயிகளும் எதிர்த்து வருகிறார்கள். விவசாயத்தை அளிக்கும் திட்டத்தை நிறைவேற்றாமல் இருப்பது குறித்து அரசு பரிசீலக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #GreenWayRoad
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் மாவட்ட விவசாயிகளின் குறைதீர் கூட்டம் மாவட்ட கலெக்டர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
இதில் காஞ்சீபுரம், உத்திரமேரூர், வாலாஜாபாத், மதுராந்தகம், செய்யூர் உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் திரளாக விவசாயிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பாலாற்றில் தடுப்பணை கட்டுதல், கரும்புக்கு கூலி, சென்னை- சேலம் 8 வழிச்சாலை திட்ட மறுபரிசீலினை, உரங்கள் வழக்க கோருதல், கறவை மாடுகள் வாங்குவதற்கு கடன் கோருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பேசினர்.
பின்னர் மாவட்ட கலெக்டர் பொன்னையா பேசியபோது:-
மாவட்டத்தில் உள்ள விவசாயிகளின் குறைகளை நிவர்த்தி செய்து பொருளாதார முன்னேற்றம் அடையும் வகையில் இக்குறை தீர் கூட்டம் நடத்தப்படுகிறது. ஈசூர், வள்ளிபுரம், உள்ளாவூர் ஆகிய இடங்களில் பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கு கருத்துரு இறுதிவடிவம் பெறும் வகையில் தடுப்பணை கட்டும் முழு விவரம் அதற்கு ஆகும் செலவு குறித்த விவரம் அனைத்தும் நிதித்துறைக்கு அனுப்பபட்டுள்ளது.
அதன்படி நிதித்துறையில் இருந்து நிதி ஒதுக்கும் பட்சத்தில் தடுப்பணை கட்டும் பணிகள் விரைந்து தொடங்கப்படும்.
இந்த ஆண்டு இறுதிக்குள் தடுப்பணை கட்டும் பணிகள் தொடங்கப்படும். மேலும் சென்னை-சேலம் 8 வழிச் சாலை பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அதன் படி நிலம் கையப்படுத்தும்போது அரசு விதிமுறைகளை பின்பற்றி விவசாயிகளுக்கு தெரிவிக்கப்படும். அதோடு விவசாயிகளிடம் கருத்து கேட்பு நடத்தப்படும். அதன்பிறகு முறையாக 8 வழிச்சாலை திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்தார். நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் லதாபானுமதி, பொதுப்பணித்துறை செயற் பொறியாளர் தேவராஜன் உள்ளிட்ட பல்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். #GreenWayRoad
சென்னை:
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் சென்னையில் இன்று நிரூபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பாராளுமன்ற தேர்தலுக்கு த.மா.கா.வை தயார் படுத்தும் வகையில் அனைத்து சட்டமன்ற தொகுதிகள் வாரியாக சுற்றுப்பயணம் செய்ய உள்ளேன். கட்சியின் வளர்ச்சிக்கும், செயல் பாட்டுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இது வருகிற தேர்தலில் நல்ல பலன் தரும் என்று நம்புகிறேன்.தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவது வரவேற்கத்தக்கது.
சேலம்-சென்னை இடையே 8 வழிச்சாலை அமைப்பதற்கு மக்களின் சம்மதத்தை பெற வேண்டியது அவசியம். பொது மக்களுக்கும், விவசாயத்துக்கும், தொழில் வளர்ச்சிக்கும் எவ்விதமான இடையூறும் இருக்கக்கூடாது.
இதுதொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி பூரண சம்மதத்தை பெற வேண்டும். மக்கள் சம்மதிக்காவிட்டால் மாற்று வழி அல்லது இருக்கிற பாதையை விரிவுபடுத்துவது போன்றவற்றைத்தான் ஆலோசிக்க வேண்டும்.
புழல் சிறைக்குள் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருப்பது கவலை அளிக்கிறது. சென்னையில் வழிப்பறி, கொள்ளை அதிகரித்து வருகிறது. இதில் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் மட்டுமல்ல, வெளிநாடுகளில் இருந்தும் திருடர்கள் வருவதாக கூறப்படுகிறது. அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காவிரி பிரச்சினையில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை ஏற்க வேண்டும். கர்நாடக முதல்வர் குமாரசாமி தனது பிடிவாதபோக்கை கைவிட வேண்டும்.
ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்குமா? என்ற சந்தேகமே வரக்கூடாது. அதை நிரந்தரமாக மூடுவதில் அரசு உறுதியாக இருக்க வேண்டும்.
பயங்கரவாதிகள் ஊடுருவல் பற்றி மத்திய மத்திரி பொன்.ராதா கிருஷ்ணன் கூறுவது தமிழக உளவுத்துறை சரியில்லையோ என்ற கருத்தைத் தான் ஏற்படுத்துகிறது. அப்படியென்றால் அவர் மத்திய உளவுத்துறையிடம் சொல்லி அவர்களை கண்டுபிடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது ஞானதேசிகன், சக்தி வடிவேல், ஜி.ஆர்.வெங்கடேஷ், டி.என். அசோகன், விடியல்சேகர், மாவட்ட தலைவர்கள் சைதை மனோகரன், கொட்டிவாக்கம் முருகன் மற்றும் துறைமுகம் செல்வகுமார், கக்கன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.#GKVasan #GreenWayRoad
சென்னை:
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், சென்னை-சேலம் 8 வழி பசுமை சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் மத்திய மாநில அரசுகளை எதிர்த்து அவர் கோஷம் எழுப்பினார்.
தூத்துக்குடியில் காவல் துறையால் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும். ஐகோர்ட்டு நீதிபதி கண்காணிப்பில் விசாரணை நடைபெற வேண்டும்.
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் நீதிமன்றம் மூலம் திறக்க விடாதபடி நிரந்தரமாக மூட வேண்டும். இதற்காக சட்டம் இயற்ற வேண்டும். துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடும், அரசு வேலை வாய்ப்பும் வழங்க வேண்டும். மேலும் கைது செய்யப்பட்ட பொதுமக்களை விடுதலை செய்ய வேண்டும்.
குண்டர் சட்டத்தில் 7 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களை விடுவிக்க வேண்டும். பழிவாங்கும் முறையை அரசு கைவிட வேண்டும்.
வேதாந்தா நிறுவனத்துக்கு மத்திய-மாநில அரசுகள் துணை போகக்கூடாது. பொதுமக்களை அச்சுறுத்தி பொய்வழக்கு போடக் கூடாது.
சென்னை-சேலம் பசுமை வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் பணியில் அரசு ஈடுபட்டு வருகிறது. இதனால் விளைநிலங்கள், குடியிருப்புகள் பாதிக்கப்படுகின்றன. பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறிந்த பிறகே இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
ஆனால் ஆட்சியாளர்கள் அதிகாரத்தை பயன்படுத்தி நிலங்களை கையகப்படுத்தி வருகிறார்கள். இதை விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
ஏற்கனவே 4 வழிச்சாலை பயன்பாட்டில் உள்ளது. அதை மேலும் விரிவாக்கம் செய்து செயல்படுத்தலாம். மக்கள் நலன், நாட்டின் வளர்ச்சி என்று கூறி கார்ப்பரேட் நிறுவன முதலாளிகளின் வளர்ச்சிக்கு வித்திடுவதாக மக்கள் கருதுகிறார்கள்.
நாட்டின் வளர்ச்சி என்ற பெயரில் மக்களை திசை திருப்பி இத்திட்டத்தை செயல்படுத்துவது சரியல்ல. இத்திட்டம் சேலத்தை மையமாக கொண்டு ஏன் செயல்படுத்தப்படுகிறது. சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை இந்த சாலையை அமைக்கலாமே. சேலத்துக்கு கொண்டுவருவதன் நோக்கம் என்ன?
தனியார் நிறுவனத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மேலும் இது போன்று அமைகின்ற பசுமை சாலைகளில் சுங்கச் சாவடிகள் அமைத்து அதிக கட்டணம் வசூலிக்கிறார்கள். அரசு, தனியார், பொது மக்கள் ஆகியோர் சேர்ந்து செயல்படுத்தும் விதமாக 15 முதல் 20 ஆண்டுகள் வரை சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நிர்ணயிக்கப்பட்ட கால அளவைவிட அதிகமாக வசூலித்து மோசடி செய்கிறார்கள்.
மக்கள் திட்டம் என்ற அடிப்படையில் சுங்கசாவடி அமைத்து தனியார் சம்பாதிக்க வழிவகுக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் ஆளுர்ஷா நவாஸ், செல்லத்துரை, இரா.செல்வம், ராஜேந்திரன், இளங்கோ, கல்தூண் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
காஞ்சி வடக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பல்லாவரம் பஸ் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் தேவ அருள் பிரகாசம் தலைமை தாங்கினார். இதில் மண்டல செயலாளர் விடுதலை செழியன், சாமுவேல், பொற்செழியன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்