search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "grove ceremony"

    • கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் தோப்பு உற்சவத்துக்கு சாமி தூக்குவதற்கு மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    • பாடலீஸ்வரர் கோவில் முன்பு உள்ள கடைகளுக்கு தற்போது ஏலம் விடக்கூடாது.

    கடலூர்:

    கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் பிரசித்தி பெற்ற பாடலீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் பவுர்ணமி அன்று பாடலீஸ்வரர் மற்றும் பெரியநாயகி அம்மன் ஊர்வலமாக காராமணிக்குப்பம் விநாயகர் கோவில் அருகே தோப்பு உற்சவம் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இன்று காலை வழக்கம் போல் பாடலீஸ்வரர் பெரியநாயகி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். அப்போது கோவில் வளாகத்தில், கோவில் முன்பு உள்ள சிறு வியாபாரிகள் திடீரென்று திரண்டு வந்தனர். அவர்களுடன் சாமி தூக்குபவர்களும் வந்தனர். பின்னர் சாமி தூக்குபவர்கள் திடீரென்று நாங்கள் தோப்பு உற்சவத்திற்கு சாமி தூக்க மாட்டோம் என தெரிவித்ததால் கோவில் ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    பின்னர் சிறு வியாபாரிகள் கூறுகையில், பாடலீஸ்வரர் கோவில் முன்பு உள்ள கடைகளுக்கு தற்போது ஏலம் விடக்கூடாது. அதற்கு மாறாக முன்பு யார் கடை வைத்திருந்தார்களோ அவர்களே மீண்டும் கடை வைத்திருக்க அனுமதி அளிக்க வேண்டும் என தெரிவித்தனர். இதற்கு ஆதரவாக தான் சாமி தூக்குபவர்கள் இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து கோவில் நிர்வாகத்தினர் உடனடியாக சிறு வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட உயர் அதிகாரியிடம் பேச்சுவார்த்தை நடத்தி அடுத்த கட்ட நடவடிக்கை என்னவென்று பேசி முடிவு செய்வோம். 

    தற்போது தோப்பு உற்சவம் என்பது மிக முக்கியமான உற்சவம் ஆகும். ஆகையால் இதற்கு யாரும் தடையாக இருக்கக் கூடாது. மேலும் சாமி தூக்குபவர்கள் இது போன்ற நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம். ஆகையால் உங்கள் கோரிக்கைகள் தொடர்பாக பேசி நடவடிக்கை மேற்கொள்வோம். ஆகையால் தோப்பு உற்சவத்திற்கு சாமி தூக்கிக்கொண்டு காராமணிக்குப்பத்திற்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தினர். இதனை தொடர்ந்து சிறு வியாபாரிகள் அங்கிருந்து கலந்து சென்றனர். மேலும் சாமி தூக்குபவர்கள் தோப்பு உற்சவத்திற்கு செல்வதற்காக பாடலீஸ்வரர் மற்றும் பெரியநாயகி அம்மனை தூக்கிக் கொண்டு சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

    ×