search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hill Pass"

    • அரசு வாகனங்கள், சுற்றுலா வாகனங்கள் அனைத்தும் 3 கிலோ மீட்டர் தொலைவில் நீண்ட வரிசையில் காத்திருந்தன.
    • மத்திய இணை மந்திரி எல்.முருகன் நீலகிரியில் இருந்து கோவை மேட்டுப்பாளையத்திற்கு காரில் வந்தார்.

    மேட்டுப்பாளையம்:

    கோவை, நீலகிரி மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக பரவலான மழை பெய்து வருகிறது.

    இதில் கடந்த 2 நாட்களில் மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை, அன்னூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த தொடர் மழையின் காரணமாக பல்வேறு இடங்களில் 100-க்கும் மேற்பட்ட குளம், குட்டை, தடுப்பணைகள் நிரம்பி சாலைகளை மழை நீர் மூழ்கடித்து செல்கின்றன.

    குன்னூர் பகுதியில் கடந்த சில தினங்களாக கடும் பனிமூட்டமும் அவ்வப்போது மழையும் பெய்து வருகிறது.

    நேற்றிரவு இரவு முதல் குன்னூர் சுற்றுப்புற பகுதிகளில் மிதமான மழை பெய்தது.

    இந்த மழை காரணமாக பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. 30க்கும் அதிகமான கிராமங்களில் மின்சாரம் இல்லாததால் அந்த பகுதி மக்கள் மிகவும் அவதிப்பட்டனர்.

    இந்நிலையில் இன்று காலை மேட்டுப்பாளையம்-குன்னூர் மலைப்பாதையில் பெய்த தொடர் மழையின் காரணமாக பர்லியாறு போலீஸ் சோதனை சாவடி அருகே மண்சரிவு ஏற்பட்டது.

    ஆங்காங்கே சில இடங்களில் மரங்களும் முறிந்து விழுந்தன.

    இதையடுத்து நீலகிரி மாவட்டத்தில் இருந்து மலை காய்கறிகளை ஏற்றி வந்த லாரிகள் மற்றும் அரசு வாகனங்கள், சுற்றுலா வாகனங்கள் அனைத்தும் 3 கிலோ மீட்டர் தொலைவில் நீண்ட வரிசையில் காத்திருந்தன.

    இதனால் இப்பகுதியில் 3 மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து ஏற்பட்டு வருகிறது.

    இந்நிலையில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் நீலகிரியில் இருந்து கோவை மேட்டுப்பாளையத்திற்கு காரில் வந்தார். பர்லியார் அருகே மண்சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    இதில் மத்திய மந்திரி எல்.முருகனின் காரும் மாட்டி கொண்டது. 1½ மணி நேரத்துக்கும் மேலாக அவரது காரும் சாலையிலேயே காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து, மண்சரிவினை ஒருபுறமாக அகற்றி, மத்திய மந்திரியின் கார் செல்வதற்கு ஏற்பாடுகள் செய்தனர்.

    அதன்பின்னர் அவரது கார் அங்கிருந்து புறப்பட்டு மேட்டுப்பாளையத்திற்கு சென்றது. தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் போலீசார் இணைந்து, அந்த பகுதியில் ஏற்பட்ட மண்சரிவினை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    மேட்டுப்பாளையம்-குன்னூர் மலைப்பாதையில் மண்சரிவு ஏற்பட்டதை தொடர்ந்து, மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு குன்னூர் வழியாக வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    வாகனங்கள் அனைத்தும் கோத்தகிரி வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன. இதனால் கோத்தகிரி சாலையில் வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளது.

    ×