search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hotel Meals"

    பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை காரணமாக பார்சல் சாப்பாடு விலை உயர்ந்துள்ளது.

    திண்டுக்கல்:

    தமிழகம் முழுவதும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து கடைகளில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக பயன்படுத்தக்கூடிய எளிதில் மக்கும் தன்மை கொண்ட பொருட்களை பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    திண்டுக்கல்லில் ஓட்டல்களில் பார்சல் வாங்கும் போது சாம்பார், ரசம், மோர், காய்கறி போன்றவை பிளாஸ்டிக் கவர்களில் கட்டி கொடுக்கப்பட்டு வந்தது. அவை அனைத்தும் பிளாஸ்டிக் பைகளிலேயே வினியோகம் செய்யப்பட்டது.

    தற்போது அதற்கு மாற்றாக ஓட்டல்கள் அனைத்திலும் மக்காச்சோளத்தால் தயாரிக்கப்பட்ட பைகள் மற்றும் குவளைகள் பயன் படுத்தப்பட்டு வருகின்றன. இந்த பைகள் விலை உயர்வு என்பதால் பார்சல் கட்டணமும் உயர்ந்துள்ளது.

    பஸ் நிலையம் அருகே உள்ள பெரும்பாலான ஓட்டல்களில் இது போன்ற பைகளே பயன்படுத்தப்பட்டு வருகிறது. வழக்கமாக ஒரு பார்சல் சாப்பாடு ரூ.80 என இருந்த நிலையில் தற்போது ரூ.105 ஆக உயர்ந்துள்ளது. இதே போல் காலை சிற்றுண்டியும் மாற்று பிளாஸ்டிக் பைகளுடன் சேர்த்து ரூ.5 முதல் ரூ.10 வரை விலை அதிகரித்துள்ளது.

    இது குறித்து ஓட்டல் ஊழியர்கள் தெரிவிக்கையில், பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக தற்போது எளிதில் மக்கும் தன்மை கொண்ட அரசால் சான்று பெற்ற பொருட்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. விலை உயர்வு என்ற போதும் வாடிக்கையாளர்கள் இதனை வாங்கிச் செல்கின்றனர்.

    அடுத்த முறை வரும் போது பாத்திரம் எடுத்து வருவதற்கும் அவர்களுக்கு அறிவுரை வழங்கப்படுகிறது. இதன் மூலம் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு படிப்படியாக குறையும் என எதிர்பார்க்கிறோம். சிறிய ஓட்டல்களில் நடுத்தர மக்களுக்கு இந்த விலை உயர்வு மிகுந்த சுமையை ஏற்படுத்தும். அவர்களும் விரைவில் பழைய நிலைக்கே பாத்திரம் கொண்டு வந்து பொருட்கள் வாங்கிச் செல்ல பழகிக் கொள்வார்கள் என்றனர்.

    ×