search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hybrid Education System"

    • கல்வி என்பது, எதிர்காலத்திற்கு ஏற்றதாக இருக்க வேண்டும்.
    • கல்வி முறைகள் தான் சிறப்பான எதிர்காலத்தை கட்டமைக்க உறுதுணையாக இருக்கும்.

    எல்.கே.ஜி. மற்றும் யூ.கே.ஜி. என அறியப்படும் கிண்டர் கார்டன் கல்வி முறையும், மாண்டிசோரி கல்வி முறையும்... 18-ம் நூற்றாண்டிலும், 19-ம் நூற்றாண்டிலும் கட்டமைக்கப்பட்டவை. அதைத்தான், நாம் இன்றும் பின்பற்றி, பாடம் பயில்கிறோம். அதை அப்படியே பின்பற்றினாலும், தவறில்லை.

    ஆனால், 'அட்வான்ஸ்ட்' கல்வி என்ற பெயரில், 4 வயதிலேயே குழந்தைகளை எழுத, படிக்க பழக்கப்படுத்தி, அவர்களுக்கு கல்வி மீதான ஆர்வத்தை குறைத்துவிடுகிறார்கள். இத்தகைய ஹைபிரீட் கல்வி முறைதான் இப்போது இந்தியாவில் நடைமுறையில் இருக்கிறது.

    உண்மையில், குழந்தைகளை 6 வயதிற்கு மேலாகதான் எழுத-படிக்க பழக்கப்படுத்த வேண்டும் என்பது, அறிவியல் உண்மை. ஆனால் அவை இந்தியாவில் பின்பற்றப்படுவதில்லை. இங்கிலாந்து, பின்லாந்து... போன்ற நாடுகளில் மட்டுமே பின்பற்றப்படுகிறது.

    குறிப்பாக, 21-ம் நூற்றாண்டில் கட்டமைக்கப்பட்டிருக்கும், இ.எல்.எஸ். எடிபிகேஷன் கல்வி முறை தான் அதிகம் பின்பற்றப்படுகிறது. இதுதான், எதிர்கால கல்வியாகவும் உருவெடுத்து வருகிறது.

    இது, 21-ம் நூற்றாண்டில் கட்டமைக்கப்பட்ட கல்வி என்பதால், நவீன கால குழந்தைகளின் எண்ண ஓட்டங்களை புரிந்துக்கொண்டு, அதற்கு ஏற்ப கல்விமுறையை உருவாக்கி இருக்கிறார்கள். எல்.எஸ்.ஆர்.டி.டபிள்யூ.ஏ. என்ற முறையில்தான் இது இயங்குகிறது.

    அதாவது லெர்னிங், ஸ்பீக்கிங், ரீடிங், டீச்சிங், ரைட்டிங், அனிமேஷன்... இப்படிதான் பாடம் கற்பிக்கப்படும். இதில் மொழி, கணிதம், அறிவியல் உள்பட வாழ்க்கைக்கு தேவையான 10 பாடங்கள் கற்பிக்கப்படும்.

    ஒரு வகுப்பில் 10 நிமிட 'தியரி' பாடமும், 15 நிமிட செயல்முறை பாடமும் கற்பிக்கப்படுவது இதன் தனிப்பெரும் சிறப்பு. மழலையர் கல்வியில் சிறப்பானதாக கருதப்படும் மாண்டிசோரியில், வெறும் 32 கல்வி உபகரணங்கள் மட்டுமே பயன்படுத்தப்படும் நிலையில், இதில் 64 கல்வி உபகரணங்கள் மூலமாக அறிவியலையும், வாழ்க்கை கல்வியையும் புகட்டுகிறார்கள்.

    பெரும்பாலும், புதிர்கள், அட்டைப்படங்கள் மூலமாகவே கல்வி பயிற்றுவிக்கப்படும். பழைய கதைகளும், பழைய பாடல்களும் இதில் இருக்காது. ஆனால் நவீன உலகில் ஒன்றியிருக்கும் கதைகளும், எதிர்கால தொழில்நுட்பத்தை சார்ந்த பாடல்களுமே இதில் இடம் பிடிக்கின்றன.

    இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, இந்தியா... என வளர்ச்சி கண்டு வரும் இந்த கல்வி முறையை, எதிர்கால கல்வி முறையாக பெரும்பாலான உலக நாடுகள் ஏற்றுக்கொண்டு, மேம்படுத்தி வருகின்றன.

    கல்வி என்பது, எதிர்காலத்திற்கு ஏற்றதாக இருக்க வேண்டும் என்பதை, எல்லா உலக நாடுகளும் உணர்ந்திருப்பதால், மழலையர் கல்வி முதற்கொண்டு, இத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.

    கல்வி முறைகள், நாளுக்கு நாள் மாறிக்கொண்டேதான் இருக்கும். அப்படி மாற்றம் காணும் கல்வி முறைகள்தான் சிறப்பான எதிர்காலத்தை கட்டமைக்க உறுதுணையாக இருக்கும் என்பதை உணர்ந்து கொண்டு, எதிர்காலத்திற்கு தேவையான கல்வி முறையில் குழந்தைகளை ஊக்கப்படுத்துங்கள். அதுவே அவர்களது எதிர்காலத்தை வளமானதாக கட்டமைக்கும்.

    அதே வேளையில் ஏதேனும் நிர்பந்தத்தின் பேரில் குழந்தைகளின் கற்றல் திறனுக்கு பொருத்தமற்ற கல்வி முறைக்குள் திணித்து அவர்களின் கல்வி ஆர்வத்திற்கு முட்டுக்கட்டை போட்டுவிடாதீர்கள்.

    ×