search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "International recognition"

    • வெள்ளோடு பறவைகள் சரணாலய பகுதிகளில் வனத்துறை சமூகநலக் காடுகள் கோட்டத்தின் மூலமாக நாட்டு கருவேல மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றது.
    • இந்த பகுதியானது உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு பறவைகளுக்கான இனப்பெருக்க தளமாகவும் விளங்குகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம் வடமுகம் கிராமத்திலுள்ள வெள்ளோடு பறவைகள் சரணாலய (பெரிய குளம் ஏரி) பகுதிகளில் 1980-ம் ஆண்டு முதல் வனத்துறை சமூகநலக் காடுகள் கோட்டத்தின் மூலமாக நாட்டு கருவேல மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றது.

    இந்நிலையில் பெரிய குளம் ஏரியில் கட்லா, ரோகு, கெண்டை, விரால் போன்ற மீன் வகைகள் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த பகுதியானது அடர்ந்த நாட்டு கருவேல மரங்களால் சூழப்பட்டு உள்ளது.

    இதனால் சாம்பல் நாரை, இராக்கொக்கு, பாம்பு தாரா, வெள்ளை அரிவாள் மூக்கன், கரண்டி வாயன், புள்ளி மூக்கு வாத்து, தட்டை வாயன், வெண்புருவ வாத்து, புள்ளிஅலகு கூழைக்கடா போன்ற வெளி நாட்டு மற்றும் உள்நாட்டு பறவைகள் வாழ்வதற்கு ஏற்ற இடமாக மாறியது.

    இனி வரும் ஆண்டுகளில் பறவைகளின் எண்ணிக்கைஅதிகரித்து இந்த பகுதியானது உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு பறவைகளுக்கான இனப்பெருக்க தளமாகவும் விளங்குகிறது.

    இதன் தொடர்ச்சியாக பெரிய குளம் ஏரி பகுதியானது 2000-ம் ஆண்டு வெள்ளோடு பறவைகள் சரணாலயம் என வனஉயிரின பாதுகாப்பு சட்டம் 1972-ன் படி அறிவிப்பு வெளியிடப்பட்டு இன்று வரை மாவட்ட வன அலுவலர், ஈரோடு வனக்கோட்டத்தின் கட்டுபாட்டில் இயங்கி வருகிறது. 2018-2019-ம் ஆண்டு முதல் 2019-2020-ம் ஆண்டு வரை சூழல் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டதன் நீட்சியாக சரணாலயம் மேலும் பொழிவு பெற்று கூடுதல் பறவைகளின் கவனத்தையும் ஈர்த்தது.

    இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மேற்கொள்ளப்பட்ட பறவைகள் கணக்கெடுப்பில் 121 இனங்களுக்குட்பட்ட 23,427 பறவைகள் வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தில் வசித்து வருவது கண்டறியப்பட்டது.

    தனித்துவமான ஈரநில வகைகளின் பிரதிநிதி, உயிரியல் பன்முகத்தன்மை, அறிய இனங்களை கொண்டு சுற்றுச்சூழல் சமூகம் மற்றும் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நீர்வாழ் பறவைகளும் வசித்து வரும் ஈரநிலம் என பல காரணங்களால் வெள்ளோடு பறவைகள் சரணாலயம் அமைந்துள்ள பெரிய குளம் ஏரியானது ஈரநில பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஈர நிலமாக அங்கீகாரம் பெற்று இந்த ஆண்டு அரசால் ராம்சார் அமைப்பிற்கு முன்மொழியப்பட்டது.

    தற்போது ராம்சார் அமைப்பால் வெள்ளோடு பறவைகள் சரணாலயத்திற்கு சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஈரநிலம் என கடந்த 3-ந் தேதியன்று அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

    இந்த அறிவிப்பானது வெள்ளோடு பறவைகள் சரணாலயம் பல வகை உயிரினங்களின் வாழ்விடமாக விளங்குவதை பறைசாற்றும் விதமாக அமைந்துள்ளது.

    ×