search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "jayalalithaa dead"

    தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் ஜெயலலிதா மரணத்திற்கு காரணமானவர்கள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள் என்று ஊராட்சி சபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார். #DMK #MKStalin #JayalalithaaDeathProbe
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டம்  ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மேலகூட்டுடன் காடு கிராமத்தில் தி.மு.க. சார்பில் ஊராட்சி சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பொது மக்களிடம் குறைகள் கேட்டார்.

    அப்போது அங்கு திரண்டிருந்த பெண்கள் தங்கள் பகுதிக்கு குடிநீர் வசதி இல்லை, சாலை வசதிகள் செய்யப்படவில்லை. ரே‌ஷன் கடைகளில் முறையாக பொருட்கள் வழங்கப்படவில்லை. தெருவிளக்குகள் சரிவர எரிவதில்லை. பேருந்துகள் முறையாக இயக்கப்படவில்லை என அடுக்கடுக்கான புகார்களை கூறினர். அவற்றை மு.க.ஸ்டாலின் குறிப்பெடுத்து கொண்டார்.

    மேலும் அங்கு பங்கேற்ற பெண்கள் வங்கியில் கடன் கேட்டால் அலைக்கழிப்பதாகவும் குற்றம் சாட்டினார்கள். ஏராளமான பெண்கள் மு.க.ஸ்டாலினிடம் குறைகளை எடுத்து கூறினர்.

    தி.மு.க. சார்பில் எல்லா மாவட்டங்களிலும் ஊராட்சி சபை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மாநில நிர்வாகிகள், மாவட்ட பொறுப்பாளர்கள் இதில் பங்கேற்று வருகிறார்கள். நான் கலந்து கொள்ளும் 20-வது கூட்டம் இதுவாகும். இங்குள்ள பெரும்பாலான மக்கள் குடிநீர் வசதி, ரே‌ஷன் கடை பிரச்சனை, சாலை வசதிகள் குறித்து புகார் கூறினார்கள். இதற்கெல்லாம் காரணம் உள்ளாட்சி நிர்வாகம் இல்லாதது தான். உள்ளாட்சி தேர்தல்கள் நடத்தப்பட்டிருந்தால் இந்த குறைகள் உடனடியாக பூர்த்தி செய்யப்பட்டிருக்கும்.

    உள்ளாட்சி நிர்வாகம் அமையாததால் அரசின் திட்டப்பணிகள் கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகிறார்கள். இந்த ஆட்சி உள்ளாட்சி தேர்தலை நடத்த விரும்பவில்லை. தி.மு.க. ஆட்சியில் மக்களின் அடிப்படை தேவைகள் அனைத்தும் உடனடியாக நிறைவேற்றப்பட்டன. தி.மு.க. மீது நீங்கள் நம்பிக்கை வைத்துள்ளீர்கள்.

    இந்த கிராமத்தில் நடந்த கூட்டத்தில் அதிகமான பெண்கள் கலந்து கொண்டு பங்கேற்றுள்ளீர்கள். உங்கள் நம்பிக்கை எனக்கு புரிகிறது. அதற்கேற்றார் போல் நாங்கள் செயல்படுவோம். உங்களது குறைகளை நிறைவேற்ற மக்கள் நம்பிக்கைக்கு ஏற்ப மீண்டும் தி.மு.க. ஆட்சி அமையும்.

    இதைத்தொடர்ந்து முதல் வேலையாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும். மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கும் முந்தைய தி.மு.க. ஆட்சியை போல் சுழல் நிதி வழங்கப்படும். தற்போதைய ஆட்சியில் கட்சி பாகுபாடு பார்த்து முதியோர் உதவித் தொகை வழங்கப்படுகிறது. தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்பு அனைத்து முதியோருக்கும் முறையாக உதவித்தொகை வழங்கப்படும்.


    முதுமை காரணமாக கருணாநிதி உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அவர் முதல்- அமைச்சராக இல்லாத போதும் தினமும் காலை, மாலை என இரு நேரங்களில் அவரது உடல் நிலை பற்றி மக்களுக்கு தெரியப்படுத்தினோம். ஆனால் முதல்- அமைச்சராக இருந்த ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவரது நிலையை பற்றி யாரும் உண்மையை கூறவில்லை.

    ரூ.1 கோடி ரூபாய்க்கு இட்லி சாப்பிட்டதாக தகவல் கூறுகின்றனர். இதுகுறித்து விசாரணை கமி‌ஷன் நடத்தப்பட்டு வருகிறது. அது முறையாக நடக்கவில்லை. முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதாவுக்கே இந்த நிலை என்றால் சாதாரண மக்களுக்கு என்ன என்று நான் சொல்லி மக்களுக்கு தெரிய வேண்டியதில்லை.

    மேலும் கொடநாடு எஸ்டேட் விவகாரத்தில் அங்குள்ள ஊழியர் உள்பட 5 பேர் மர்மமாக இறந்துள்ளனர். இதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதும் குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு உண்மை குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்படுவார்கள்.

    ஊழல், லஞ்சத்தை தாண்டி கொலை, கொள்ளையிலும் அ.தி.மு.க. அரசுக்கு தொடர்பு உள்ளது. இதற்கு மத்திய அரசு துணை போகிறது. வருகிற பாராளுமன்ற தேர்தல் மற்றும் 21 சட்டமன்ற இடைத்தேர்தலில் மக்கள் தகுந்த தீர்ப்பு வழங்கி தி.மு.க.வுக்கு வாக்களிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். #DMK #MKStalin #JayalalithaaDeathProbe
    ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஷீலா பாலகிருஷ்ணன் மற்றும் சாந்த ஷீலா நாயர் ஆகியோர் ஆஜராகுமாறு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. #Jayalalithaa #Jayalalithaadeath #ApolloHospital

    சென்னை:

    ஜெயலலிதா மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி கமி‌ஷன் விசாரணை நடத்தி வருகிறது. இதில் இதுவரை 150-க்கும் மேற்பட்டவர்கள் ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளனர்.

    விசாரணை கமி‌ஷனில் வாக்குமூலம் அளித்த பலரும் சசிகலாவுக்கு எதிராகவே கூறியதாக தகவல்கள் வெளிவருகிறது.

    சசிகலா தனது தரப்பு விளக்கத்தை வக்கீல் மூலம் பிரமாண பத்திரமாக தாக்கல் செய்துள்ளார். சசிகலா வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியன் ஆணையத்தில் ஆஜராகி வாக்குமூலம் கொடுத்தவர்களிடம் குறுக்கு விசாரணை நடத்தி வருகிறார்.

    சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரி பெருமாள்சாமி, அப்பல்லோ டாக்டர்கள், நர்சுகள் என 13 பேர்களிடம் சசிகலாவின் வக்கீல் 3-ந் தேதி குறுக்கு விசாரணை நடத்த உள்ளனர்.

    விசாரணை ஆணையத்தில் திடீர் திருப்பமாக அப்பல்லோ ஆஸ்பத்திரியின் வக்கீல்களும் இப்போது குறுக்கு விசாரணை செய்ய உள்ளனர்.

    ஜெயலலிதாவின் செயலாளராக இருந்த சாந்த ஷீலா நாயர், அரசு ஆலோசகராக இருந்த ஷீலா பாலகிருஷ்ணன் ஆகியோரிடம் வருகிற 2-ந் தேதி அப்பல்லோ வக்கீல்கள் குறுக்கு விசாரணை நடத்த ஆணையத்தில் அனுமதி வாங்கி உள்ளனர்.

    இந்த விசாரணையில் ஆஜராக இருவருக்கும் ஆணையத்தில் இருந்து சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

    ஜெயலலிதா சிகிச்சையில் இருந்த போது தலைமைச் செயலாளராக இருந்த ராம மோகன ராவ், சுகாதாரத் துறை செயலாளர் ராதா கிருஷ்ணன் ஆகியோர்தான் அரசின் முடிவுகள் குறித்து முதல்-அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருடன் ஆலோசனை நடத்தியவர்கள் என்பதால் இவர்கள் இருவரிடமும் ஆணையம் மீண்டும் சில விளக்கங்களை பெற விரும்புகிறது.

    இதற்காக ராம மோகன ராவ் மற்றும் ராதாகிருஷ்ணன் எதிர் மனுதாரராக சேர்க்க கோரி கமி‌ஷன் வழக்கறிஞர் மனுதாக்கல் செய்துள்ளார்.

    ஜெயலலிதாவை வெளிநாட்டுக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிப்பது தொடர்பாக விவாதித்த விசயங்களை ஆணையம் முழுமையாக தெரிந்து கொள்ள விரும்புவதால் இவர்களிடம் ஆணையம் மேலும் சில விளக்கங்களை கேட்ட உள்ளது. #Jayalalithaa #Jayalalithaadeath #ApolloHospital

    நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை கமி‌ஷனில் ஜெயலலிதாவின் மரணத்திற்கு தி.மு.க.தான் காரணம் என்று பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்யத் தயாரா? என்று தம்பிதுரைக்கு ஆர்எஸ் பாரதி சவால் விடுத்துள்ளார். #RSBharathi #ThambiDurai
    சென்னை:

    தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழினத்தலைவர் கலைஞரின் மறைவின்போது, கழகத் தலைவர் தளபதி மெரீனாவில் நல்லடக்கம் செய்திட இடம் ஒதுக்கித்தருமாறு தமிழக முதலமைச்சரை அவரது இல்லத்திற்கு நேரில் சென்று வேண்டுகோள் வைத்தபோதும்; கொஞ்சமும் நெஞ்சில் ஈவுஇரக்கமின்றி, ‘இடம்தர முடியாது’ என்று மறுத்தார்.

    என்றாலும், எங்கள் தலைவர் தளபதியின் ஆலோசனையின்பேரில், நீதிமன்றம் சென்று, தமிழினத் தலைவர் கலைஞரை மெரீனாவில் அடக்கம் செய்ய அனுமதி பெறப்பட்டதிலிருந்து தொடர்ந்து, இதுவரையில் இந்தியாவில் வேறு எந்த தலைவருக்கும் நடைபெறாத வகையில் தலைவர் கலைஞருக்கு புகழஞ்சலிக் கூட்டங்களை வெற்றிகரமாக நடத்திக் காட்டியவர் தலைவர் தளபதி.

    இதன் மூலமாக திராவிட முன்னேற்றக் கழகமும் தலைவர் கலைஞரும், தமிழகத்திற்கும் தமிழ்ச் சமூகத்திற்கும் ஆற்றிய பணிகளை தமிழக மக்கள் திரும்பி பார்க்கச் செய்தது தலைவர் தளபதியின் பெரு முயற்சி.

    அதனைத் தொடர்ந்து, நூறே நாட்களில் தலைவர் கலைஞருடைய திருவுருவச் சிலையினை தத்ரூபமாக, தலைவர் கலைஞர் நேரில் நிற்பதைப் போன்ற வடிவத்துடன் அமைந்திட அவ்வப்போது சிலை உருவாவதை நேரில் பார்வையிட்டு, அனைவரும் பாராட்டிடும் வண்ணம் ஒரு அற்புதமான சிலையினை வடித்திட பெருமுயற்சி மேற்கொண்டவர் தலைவர் தளபதி.

    தமிழினத் தலைவர் கலைஞரின் மறைவிற்குப் பிறகு, ஒவ்வொரு நாளும், கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆற்றி வரும் பணிகள் காரணமாக, நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக, தமிழக மக்கள் மனதில் மாபெரும் எழுச்சியையும் வரவேற்பையும் பெற்று, அதன் காரணமாக கழகம் அடைந்து வரும் மாபெரும் வளர்ச்சியை தாங்கிக் கொள்ள முடியாத அ.தி.மு.க. முன்னணியினர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான உளறல்களை நித்தம் நித்தம் அறிக்கையாகவும், பேட்டியாகவும் வெளியிட்டு வருகிறார்கள்.


    ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது, “அம்மா” என்றும்; “தாயே” என்றும் நடித்து, அவரை ஏமாற்றி பிழைத்து வந்தவர்கள், ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், அ.தி.மு.க சார்பில் அவருக்கு ஒரு சிலை அமைத்தனர். ஆனால், அச்சிலை ஜெயலலிதா உருவமாக இல்லாமல், முதல்வர் எடப்பாடியின் உறவினர் மாதிரி இருந்ததாக, ஊடகங்கள் பத்திரிகைகள் சமூக வலைதளங்கள் கேலி செய்தன.

    மேலும், ஒவ்வொரு நாளும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் முன்பு ஒவ்வொரு விசித்திரமான செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. 75 நாட்களில் அப்பல்லோ மருத்துவமனையில் கோடிக்கணக்கான ரூபாயில் இட்லி, தோசை சாப்பிட்டதாக செய்தி உலா வருகிறது. நிலைமை இப்படியிருக்க, தமிழினத் தலைவர் கலைஞர் மறைவுக்குப் பின்னர், தலைவர் தளபதி கலந்து கொள்ளுகின்ற ஒவ்வொரு நிகழ்ச்சிகளிலும் மாநாடுகளில் கூடுவதைப் போல மக்கள் கூட்டம் கூடுகிறது.

    அண்மையில், திருச்சியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவிலும் செஞ்சியில் நடைபெற்ற திருமண வரவேற்பு விழாவிலும் மாநாடுகளைப் போல மக்கள் திரண்ட கூட்டத்தை கண்டும் நாளை (27-12-2018) கரூரில் நடைபெற உள்ள மாபெரும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள தலைவர் தளபதி வருகைபுரிவதை கண்டு, மிரண்டு, கரூர் தொகுதி அ.தி.மு.க. எம்.பி., தம்பிதுரை பித்தனைப் போல பிதற்ற ஆரம்பித்திருக்கிறார்.


    ஜெயலலிதா மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி கமி‌ஷன் விரிவான விசாரணையை நடத்தி வருகிறது. தம்பிதுரைக்கு தெம்பும் திராணியும் இருக்குமேயானால், நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை கமி‌ஷனில், ‘ஜெயலலிதாவின் மரணத்திற்கு தி.மு.க.தான் காரணம்’ என்று பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்யத் தயாரா? அவ்வாறு அவர் தாக்கல் செய்தால், ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது, ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து பத்திரிகையாளர் ஊடகத்தினருக்கு தம்பிதுரை அளித்த பேட்டி குறித்து தி.மு.க சார்பில் குறுக்கு விசாரணை செய்து, பல உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வருவோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #DMK #RSBharathi #Jayalalithaa #ThambiDurai
    ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையத்தில் பாதுகாப்பு அதிகாரி பெருமாள்சாமி இன்று ஆஜரானார். #JayaDeathProbe
    சென்னை:

    ஜெயலலிதா மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

    இதில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அப்பல்லோ டாக்டர்கள், எய்ம்ஸ் டாக்டர்கள், சசிகலாவின் உறவினர்கள் என 150 பேர் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.

    சசிகலாவும், தனது தரப்பு விளக்கத்தை வக்கீல் மூலம் ஆணையத்தில் சமர்ப்பித்துள்ளார். இதில் 50-க்கும் மேற்பட்டவர்களிடம் சசிகலா தரப்பு வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியன் குறுக்கு விசாரணை நடத்தி உள்ளார்.

    தற்போது விசாரணை இறுதி கட்டத்தை அடைந்துள்ளது.

    ஜெயலலிதாவுக்கு பாதுகாப்பு அதிகாரியாக இருந்த பெருமாள்சாமியிடம் மீண்டும் விசாரிக்க ஆணையம் முடிவு செய்திருந்தது.



    இதற்காக அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இதை ஏற்று பெருமாள்சாமி இன்று ஆணையத்தில் ஆஜர் ஆனார். அவருடன் அண்ணாநகர் துணை கமி‌ஷனர் சுதாகரும் ஆஜரானார்.

    இதேபோல் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் 3-வது நாளாக மீண்டும் ஆஜரானார்.

    இவர்களிடம் ஆணையத்தில் விசாரணை நடத்தப்பட்டது.

    இதன் அடுத்த கட்டமாக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கரிடம் விசாரணை நடத்த சம்மன் அனுப்ப உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். #JayaDeathProbe
    ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையத்தில் பொன்னையன் இன்று காலை ஆஜரானார். #JayaDeathProbe #Ponnaiyan
    சென்னை:

    ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

    இந்த ஆணையத்தில் ஜெயலலிதாவின் உதவியாளர்கள், கார் டிரைவர்கள், அரசு துறை செயலாளர்கள், சசிகலாவின் உறவினர்கள், அப்பல்லோ-அரசு டாக்டர்கள், எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் உள்ளிட்ட 148 பேர் ஆஜராகி உள்ளனர்.

    இவர்கள் கொடுத்த வாக்குமூலங்களின் அடிப்படையில் சசிகலா தரப்பு வக்கீல் ராஜா, செந்தூர் பாண்டியன் சிலரிடம் குறுக்கு விசாரணை நடத்தி உள்ளார்.

    சசிகலா தனது தரப்பு வாக்குமூலத்தை வக்கீல் மூலம் ஆணையத்தில் சமர்ப்பித்து உள்ளார். தற்போது விசாரணை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆணையத்தில் ஆஜராகி ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரங்கள் குறித்து அரசு எடுத்த நடவடிக்கை பற்றி விளக்கம் அளித்தார்.


    இதைத்தொடர்ந்து சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மற்றும் அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர் பொன்னையன் ஆகியோரிடம் விசாரணை நடத்த ஆணையம் சம்மன் அனுப்பி இருந்தது.

    இதை ஏற்று பொன்னையன் இன்று காலை ஆணையத்தில் ஆஜரானார். ஜெயலலிதா சிகிச்சையில் இருந்த போது இவர் பத்திரிகை- தொலைக்காட்சிகளுக்கு அடிக்கடி பேட்டி கொடுத்த விவரங்களை வைத்து ஆணையத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

    யார் சொன்ன தகவலை வைத்து பேட்டி அளித்தீர்கள். அந்த தகவல் எல்லாம் உண்மைதானா? என்றும் கேட்கப்பட்டது. இதற்கு பொன்னையன் சொன்ன பதில்களை வாக்குமூலமாக ஆணையத்தில் பதிவு செய்தனர்.

    சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று காலை ஆணையத்தில் ஆஜராகவில்லை. இதனால் அவருக்கு வேறொரு நாளில் ஆஜராக மீண்டும் சம்மன் அனுப்பப்படும் என தெரிகிறது. #JayaDeathProbe #Ponnaiyan
    மதுரையில் ஜெயலலிதா மரணம் பற்றிய சினிமாவை திரையிட முயன்ற 10 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மதுரை:

    மதுரை பழைய நத்தம் ரோட்டில் மீடியா மற்றும் குறும்பட தயாரிப்பு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று இரவு சுமார் 45 நிமிடம் ஓடக்கூடிய ‘ஜாக்குலின்’ என்ற பெயரில் எடுக்கப்பட்ட ஒரு குறும்படம் திரையிடப்பட இருப்பதாக அழைப்பிதழ் அச்சிடப்பட்டு முக்கிய நபர்களுக்கு வழங்கப்பட்டன.

    இதனால் மாலை 7 மணியில் இருந்தே அந்த அலுவலகம் முன்பு கூட்டம் திரள தொடங்கியது. 9 மணி அளவில் சுமார் 50 பேர் அனுமதிக்கப்பட்டு அந்த குறும்படம் திரையிட தயார் செய்யப்பட்டது.

    அப்போது தல்லாகுளம் போலீசார் திடீரென அங்கு சென்று குறும்படத்தை திரையிட தடை விதித்தனர். இந்த குறும்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம் பெற்று இருப்பதாகவும், நாங்கள் அதை முழுமையாக பார்த்து அனுமதி அளிக்கும் பட்சத்தில் மட்டுமே அந்த குறும்படத்தை பொதுமக்களுக்கு திரையிட வேண்டும் என்றும் கூறினர்.

    இதனால் படக்குழுவினருக்கும், போலீசாருக்கும் நீண்ட நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. குறும்படம் வெளியிட போலீசாரின் அனுமதி தேவையில்லை. போலீசார் பார்த்து அனுமதி வழங்க வேண்டும் என்று குறும்பட தயாரிப்பு தொடர்பான சட்ட விதிகள் எதுவும் இல்லை என்றும் படக்குழுவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    ஆனாலும் போலீசார் அந்த குறும்படம் தொடர்பான பென்டிரைவ், கதை ஆவணங்கள் மற்றும் உபகரணங்களை பறிமுதல் செய்தனர்.

    மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள அந்த ‘ஜாக்குலின்’ குறும்படம் பற்றி விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.

    இந்த குறும்படத்தை இசாஜ் (வயது28) என்பவர் தயாரித்துள்ளார். கால்நடை ஆராய்ச்சி மையத்தில் பணிபுரிந்த இவர் தனது வேலையை ராஜினாமா செய்து விட்டு கடந்த 4 ஆண்டுகளாக குறும்பட தயாரிப்பில் ஈடுபட்டுள்ளார். அவரும் குறும்படங்களில் நடித்துள்ளார்.

    கடந்த சில மாதங்களாக ‘ஜாக்குலின்’ என்ற பெயரில் குறும்படத்தை தயாரித்த இவர் அந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனங்களையும் எழுதி உள்ளார். இது தான் இவர் வெளியிடும் முதல் குறும்படம்.

    இந்த குறும்படத்தில் 15-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் நடித்துள்ளனர். மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக சர்ச்சைக்குரிய பல்வேறு காட்சிகள் மற்றும் கருத்துக்கள் இந்த குறும்படத்தில் இடம் பெற்றுள்ளதாக தெரிகிறது.

    டைரக்டர் இசாஜ் தனது உறவினருக்காக மருத்துவ சீட் பெறுவதற்காக கடந்த 2015-ம் ஆண்டு ரூ.20 லட்சத்தை ஒரு அமைச்சரிடம் கொடுத்ததாகவும், அவர் மருத்துவ சீட் வாங்கி கொடுக்காததால் இந்த அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் இந்த குறும்படத்தை தயாரித்து பொதுமக்கள் மத்தியில் திரையிட இசாஜ் திட்டமிட்டதாகவும் போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இதுதொடர்பாக மதுரை நகர போலீஸ் கமி‌ஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவின்பேரில் குறும்பட குழுவினர் 10 பேரிடம் தல்லாகுளம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தலைமறைவான குறும்பட டைரக்டர் இசாஜை தேடி வருகிறார்கள்.

    இதனிடையே ‘ஜாக்குலின்’ குறும்படத்தை நேற்று நள்ளிரவு யூ-டியூப் மூலம் அந்த குழுவினர் வெளியிட்டனர். அதனை சில மணி நேரத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர்.
    ஜெயலலிதாவின் ரத்தத்தில் பிரச்சனைக்குரிய அறிகுறிகள் எதுவும் இல்லை என்று அப்பல்லோ மருத்துவர் வாக்குமூலம் அளித்துள்ளார். #Jayalalithaa #JayaDeathProbe #ApolloHospital
    சென்னை:

    ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. அப்பல்லோ மருத்துவமனையின் ரத்தவியல் துறை மருத்துவர் பிரபு, தீவிர சிகிச்சை பிரிவு மருத்துவர் அசோக்குமார் ஆகியோர் நேற்று ஆஜராகினர்.

    ஜெயலலிதா சிகிச்சையில் இருந்த போது பல்வேறு காலகட்டங்களில் ரத்த மாதிரி எடுத்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ரத்தத்தில் சர்க்கரை அளவு, சிவப்பு, வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை போன்ற பல்வேறு பரிசோதனை முடிவுகளை மருத்துவர் பிரபு ஆய்வு செய்து அறிக்கை அளித்துள்ளார். அதன்படி, ஜெயலலிதாவுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.


    இதுதொடர்பாக மருத்துவர் பிரபு வாக்குமூலம் அளித்துள்ளார். ஜெயலலிதாவுக்கு ‘ஸ்லோ பாய்சன்’ கொடுத்ததாக பேசப்பட்டு வரும் நிலையில், ‘ஜெயலலிதா உடலில் இருந்து எடுக்கப்பட்ட ரத்தத்தில் ஏதேனும் மாறுபாடுகள் இருப்பது பரிசோதனை மூலம் தெரிந்ததா?’ என்று பிரபுவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு அவர், ‘சந்தேகப்படும்படியான மாறுதலோ, பிரச்சனைக்குரிய அறிகுறிகளோ ரத்தத்தில் இல்லை’ என்று பதில் அளித்தார். ரத்தத்தில் பாக்டீரியா கலந்ததன் மூலம் நோய் தொற்று ஏற்பட்டு ஜெயலலிதாவுக்கு இதயம் மற்றும் நுரையீரல் பாதிக்கப்பட்டதாக அப்பல்லோ தரப்பில் அளிக்கப்பட்டுள்ள மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனால் மருத்துவர் பிரபு, ரத்தத்தில் பாக்டீரியா கண்டறியப்படவில்லை என்றும், சிறுநீரில் தான் பாக்டீரியா கண்டறியப்பட்டதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார். இதுதொடர்பாக விரிவான விசாரணை நடத்த ஆணையம் முடிவு செய்துள்ளது.

    மருத்துவர் அசோக்குமார் தீவிர சிகிச்சை பிரிவில் பணியில் இருந்த போது, ஜெயலலிதாவுக்கு 4 நாட்கள் மட்டும் சிகிச்சை அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வாக்குமூலம் அளித்தார். #Jayalalithaa #JayaDeathProbe #ApolloHospital #ArumugasamyInquiryCommission
    ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை தீபாவளி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. #JayaDeathProbe
    சென்னை:

    ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

    சேப்பாக்கம் எழிலகம் கட்டிடத்தில் நடைபெறும் இந்த ஆணையத்தில் தினமும் சாட்சிகளிடம் விசாரணை நடக்கிறது. இதில் இதுவரை 150-க்கும் மேற்பட்டவர்களிடம் குறுக்கு விசாரணை நடந்துள்ளது.

    சமீபத்தில் டி.டிவி. தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செல்லும் என்று தீர்ப்பு வந்துள்ளதால் அந்த வழக்கில் மேல் முறையீடு செய்வதற்காக வக்கீல்கள் தீவிரமாக இருப்பதால் இன்றும், நாளையும் ஆறுமுகசாமி விசாரணை ஆணைய வழக்குகளில் ஆஜராக இயலாது என்று கூறி ஒத்திவைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

    இதை ஏற்றுக்கொண்ட ஆணையம் இன்றும், நாளையும் விசாரணையை ஒத்தி வைத்துள்ளது.

    ஏற்கனவே விசாரணை ஆணையத்துக்கு 4, 5,6, 7 ஆகிய நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் இனிமேல் ஆணைய விசாரணை தீபாவளிக்கு பிறகு தான் நடைபெறும் என்று வக்கீல்கள் தெரிவித்துள்ளனர். #JayaDeathProbe
    ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான சி.சி.டி.வி. வீடியோ பதிவுகள் அழிந்து விட்டதாக அப்பல்லோ மருத்துவமனை பரபரப்பு தகவல் தெரிவித்துள்ளது. #Apollohospital #Jayalalithadeath

    சென்னை:

    மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு முறையான சிகிச்சை அளிக்காததால் அவரது உடல்நிலை மோசம் அடைந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இது தொடர்பாக சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது புகார் கூறப்பட்டது.

    இதையடுத்து ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒரு நபர் விசாரணை கமி‌ஷன் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கிய விசாரணை கமி‌ஷனின் காலம் இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து மீண்டும் நீட்டிக்கப்பட்டது.

    நீதிபதி ஆறுமுகசாமி ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆம்புலன்ஸ் டிரைவர், அப்பல்லோ ஆஸ்பத்திரி நர்சுகள், பிசியோதெரபிஸ்ட்கள், டாக்டர்கள், எய்ம்ஸ் டாக்டர்கள், ஜெயலலிதாவின் உதவியாளர், செயலாளர் என அனைத்து தரப்பினருக்கும் சம்மன் அனுப்பி நேரில் வரவழைத்து விசாரணை நடத்தினார். அவர்களது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

    விசாரணை கமி‌ஷனில் சசிகலா சார்பில் வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியன் சாட்சியம் அளித்தும் குறுக்கு விசாரணை நடத்தியும் வருகிறார்.

    அப்பல்லோ ஆஸ்பத்திரி சார்பில் மருத்துவ ஆவணங்கள், சிகிச்சை விவரங்களும் தாக்கல் செய்யப்பட்டன. அதன் அடிப்படையில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

    ஜெயலலிதா மரணம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்ட நிலையில் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் உள்ள சி.சி.டி.வி. வீடியோ காட்சிகளை வெளியிட வேண்டும் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால் சி.சி.டி.வி. காட்சிகள் தங்களிடம் இல்லை என்றும், முக்கிய பிரமுகர்கள் சிகிச்சை பெறும் அறைகளில் சி.சி.டி.வி. கேமராக்கள் வைப்பது இல்லை என்றும் அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகம் அடிக்கடி கூறி வந்தது.

    இந்த நிலையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது திடீரென்று ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் ஜெயலலிதா ஜூஸ் குடித்துக் கொண்டே டி.வி. பார்ப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்று இருந்தது. இந்த வீடியோவை தினகரன் அணியைச் சேர்ந்த வெற்றிவேல் வெளியிட்டார். இந்த வீடியோ கிராபிக்ஸ் செய்யப்பட்டது என்று சந்தேகம் கிளப்பப்பட்டது. ஆனால் சசிகலாவே எடுத்தார் என்று வெற்றிவேல் கூறியிருந்தார்.

     


    இதையடுத்து ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான வீடியோவை விசாரணை ஆணையத்திடம் ஒப்படைக்கு மாறு நீதிபதி ஆறுமுகசாமி உத்தரவிட்டார். மேலும் அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகத்துக்கும் சி.சி.டி.வி. வீடியோ பதிவுகளை ஆணையத்திடம் சமர்ப்பிக்குமாறு கடிதம் அனுப்பினார்.

    அதற்கு அப்பல்லோ ஆஸ்பத்திரி சார்பில் கடந்த 11-ந்தேதி சுருக்கமான பதில் அனுப்பப்பட்டது. அதில் ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான சி.சி. டி.வி. வீடியோ பதிவுகள் அழிந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதில் மேலும் கூறியிருப்பதாவது:-

    அப்பல்லோ ஆஸ்பத்திரியில் உள்ள சி.சி.டி.வி. சர்வர்களில் ஒரு மாத பதிவுகள் மட்டுமே சேமித்து வைக்க முடியும். அதற்கு மேல் சேமிக்க முடியாது. புதிதாக பதிவுகள் சேரும்போது பழைய பதிவுகள் தானாகவே அழிந்து விடும். எனவே வீடியோ பதிவுகளை தாக்கல் செய்யவில்லை.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

    இதுபற்றி அப்பல்லோ ஆஸ்பத்திரி வக்கீல் மைமூனா பாஷா கூறுகையில், அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகத்திடம் ஜெயலலிதா சிகிச்சையின் போது எடுக்கப்பட்ட சி.சி. டி.வி. வீடியோ பதிவுகளை விசாரணை ஆணையம் கேட்டு இருந்தது. அதற்கு உரிய விளக்கம் அளித்து இருக்கிறோம். அதில் தங்களால் வீடியோ பதிவுகளை சமர்ப்பிக்க முடியவில்லை என்பதை தெரிவித்து இருக்கிறோம். முக்கியமான சில இடங்களில் உள்ள சி.சி. டி.வி. பதிவுகளை 30 நாட்களுக்கு மட்டுமே சர்வரில் சேமிக்க முடியும். ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போதும் இந்த நிலைமைதான் இருந்தது என்றார்.

    இதற்கிடையே அப்பல்லோ ஆஸ்பத்திரி சி.சி.டி.வி. பதிவு சர்வரை நிபுணர்களைக் கொண்டு ஆய்வு செய்து அதில் பழைய பதிவுகள் இருக்கிறதா? என்று கண்டுபிடிக்க ஆணையம் முடிவு செய்துள்ளது.

    மேலும் முக்கிய பிரமுகர்கள் சிகிச்சை பெறும் பகுதிகளில் சி.சி.டி.வி. கேமராக்கள் வைப்பதில்லை என்று அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகம் கூறியிருந்தது. இது தொடர்பாக மருத்துவ ஆய்வகங்களிடம் விளக்கம் கேட்டு இருப்பதாக ஆணைய வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

    அப்பல்லோ ஆஸ்பத்திரியின் முதன்மை செயல் அதிகாரி சுப்பையா விஸ்வநாதன் விசாரணை கமி‌ஷன் முன் ஆஜராகி ஏற்கனவே விளக்கம் அளித்துள்ள நிலையில் வருகிற 25-ந்தேதி அவர் மீண்டும் ஆஜராகிறார்.

    அப்போது அவரிடம் சசிகலா வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியன் குறுக்கு விசாரணை செய்கிறார்.

    ஜெயலலிதா மரணம் தொடர்பான நீதிபதி ஆறுமுகசாமி கமி‌ஷனின் விசாரணை இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. அடுத்த மாதம் (அக்டோபர்) அரசிடம் அறிக்கை தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளதாக தெரிய வருகிறது. #Apollohospital #Jayalalithadeath

    அப்பல்லோவில் வருகிற 29-ந்தேதி ஆணையம் ஆய்வு செய்யும் போது என்னையும் அழைத்து செல்ல வேண்டும் என்று ஆணையத்திடம் ஜெ. தீபா சார்பில் அவரது வக்கீல் மனு அளித்துள்ளார்.
    சென்னை:

    ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரித்து வருகிறது.

    இதில் இதுவரை 50-க்கும் மேற்பட்டவர்கள் ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளனர். இவர்களிடம் சசிகலா தரப்பு வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியன் அவ்வப்போது குறுக்கு விசாரணை நடத்தி உள்ளார்.

    விசாரணை ஆணையத்தில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா ஏற்கனவே ஆஜராகி இருக்கிறார். கடந்த 10 நாட்களாக அப்பல்லோ ஆஸ்பத்திரி டாக்டர்கள், செவிலியர்கள், ஆம்புலன்ஸ் டிரைவர்கள் ஆணையத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்து வருகின்றனர்.

    வருகிற 29-ந் தேதி அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு ஆணையம் சார்பில் வக்கீல்கள் பார்த்தசாரதி, நிரஞ்சன் ஆகியோர் சென்று ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். சசிகலா தரப்பு வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியனும் அப்போது உடன் செல்கிறார்.

    ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வார்டுகள், அமைச்சர்கள் தங்கி இருந்த இடங்கள், வி.ஐ.பி.க்கள் வந்து சென்ற இடங்கள் என 10 இடங்களை ஆணையம் சார்பில் போட்டோ எடுக்க உள்ளனர்.

    இந்த ஆய்வின் போது அப்பல்லோவுக்கு தன்னையும் அழைத்து செல்ல வேண்டும் என்றுஜெ.தீபா கூறி உள்ளார்.

    இது குறித்து விசாரணை ஆணையத்தில் ஜெ.தீபா சார்பில் வக்கீல் சுப்பிரமணியம் கொடுத்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:-

    ஜெ.தீபா, ஜெ.தீபக் ஆகிய நாங்கள் இருவரும்தான் ஜெயலலிதாவின் ரத்த உறவுகள். ஜெயலலிதா வசித்த போயஸ் கார்டன் வீட்டில்தான் இதற்கு முன்பு வசித்து வந்தோம்.


    ஜெயலலிதாவின் இறுதி சடங்கையும் தீபக் நடத்தினார். ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் இருந்த போது ஆஸ்பத்திரிக்குள் என்னை அனுமதிக்க மறுத்து விட்டனர்.

    இப்போது ஆணையம் சார்பில் அப்பல்லோ ஆஸ்பத்திரியிலும், போயஸ் கார்டனிலும் ஆய்வு செய்ய போவதாக அறிகிறேன். இந்த ஆய்வின் போது என்னையும், எனது வக்கீலையும் அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல வேண்டும்.

    நான் ரத்த உறவு என்பதால் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வார்டை பார்வையிட அனுமதிக்க வேண்டும். ஆணையத்தில் அளிக்க கூடிய சாட்சிகள் சில உண்மை தன்மை இல்லாததால் தன்னை முக்கிய சாட்சியாக ஆணையம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    விசாரணை ஆணையத்தில் இன்று ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன், சசிகலாவின் உதவியாளர் கார்த்திகேயன் ஆஜர் ஆனார்கள். அவர்களிடம் வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியன் குறுக்கு விசாரணை மேற்கொண்டார். #Jayalalithaa #Deepa
    ×