search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kallar Schools"

    • கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறையோடு இணைக்கும் முயற்சியினை கைவிட அதிமுக கோரிக்கை
    • அதிமுக சார்பில் 24.08.2024 அன்று மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

    பள்ளிக் கல்வித்துறையுடன் கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளை இணைக்கும் முயற்சியை கைவிட வலியுறுத்தி அதிமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆங்கிலேயர் காலம் முதல் கொடுஞ்சட்டங்களால் ஒடுக்கப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சீர்மரபினர் சமுதாயமான பிரமலைக் கள்ளர் சமுதாய மக்கள், கல்வி ஒன்றே தங்களது வருங்கால சந்ததியினரின் வளர்ச்சி என்பதை உணர்ந்து, எளிய பொருளாதார நிலையிலும் தங்களுக்கு தாங்களே "கள்ளர் காமன் பண்ட்" மூலமாகவும் தங்கள் நிலங்களையும், கடும் உழைப்பையும் கொடுத்து அமைத்து கொண்ட கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள் மற்றும் விடுதிகளின் நிர்வாகத்தை பிற்பட்டோர் நலத்துறையிடமிருந்து இருந்து பறித்து, உள்நோக்கத்தோடு பள்ளிக்கல்வித்துறைக்கு மாற்ற முயற்சிக்கும் விடியா திமுக அரசைக் கண்டித்து 17.08.2024 அன்று அறிக்கை வெளியிட்டிருந்தேன்.

    அந்த அறிக்கையில், அரசின் இந்த நடவடிக்கையினால், இதுவரையில் இச்சமூக மக்களுக்குக் கிடைத்து வந்த கல்வி கற்கக்கூடிய தளங்கள், வேலைவாய்ப்பு, நெடிய வரலாற்று அடையாளங்கள் அழிவதற்கான வாய்ப்புகள் போன்ற பல அடிப்படை உரிமைகள் பறிபோகும் என்பதால், கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளின் நிர்வாகத்தை மாற்ற முயற்சிக்கும் நடவடிக்கைகளை விடியா திமுக அரசு உடனடியாகக் கைவிடாவிடில் பாதிப்புக்குள்ளாகிய கள்ளர் சமுதாய மக்களின் கோரிக்கையை வலியுறுத்தி, அதிமுக கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து நடத்தும் என்று எச்சரித்திருந்தேன்.

    பேனா சிலை வைப்பதிலும், நூறு ரூபாய் நாணயம் வெளியிடுவதிலும், அதனை விளம்பரப் படுத்துவதிலும் மட்டுமே ஈடுபாடாக உள்ள இந்த விடியா திமுக அரசு, மக்கள் நலன் சார்ந்த பிரச்சனைகள் குறித்து எந்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுத்ததாக வரலாறு இல்லை. அதே போல், தற்போதும் கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளின் நிர்வாக முறையை மாற்றத் துடிக்கும் தன்னுடைய மக்கள் விரோதப் போக்கில் இருந்து விடியா திமுக அரசு மாறுவதாகத் தெரியவில்லை.

    எனவே, கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள் மற்றும் விடுதிகளை உள்நோக்கத்தோடு முடக்க முயற்சிக்கும் விடியா திமுக அரசைக் கண்டித்தும், பள்ளிக்கல்வித்துறையோடு இணைக்கும் முயற்சியினைக் கைவிட வலியுறுத்தியும் அதிமுக சார்பில் வரும் 24.08.2024 (சனிக்கிழமை) அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மதுரை மாவட்டம் செக்கானூரணி பேருந்து நிலையம் அருகில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

    • வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர்.
    • ஆதரவு கேட்டு கடந்த 2 நாட்களாக பிரசாரம் செய்தனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    தமிழ்நாடு கள்ளர் பள்ளிகளின் சீரமைப்பு மற்றும் பெயர் மாற்றம் குறித்து முன்னாள் நீதிபதி சந்துரு தனது அறிக்கையை தமிழக அரசிடம் சமர்ப்பித்தார்.

    இதில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள ஜாதிப் பெயரை நீக்க வேண்டும். ஆதிதிராவிடர், கள்ளர் சீரமைப்பு உள்ளிட்ட பெயர்களை மாற்ற வேண்டும் என்ற கருத்துக்களை தெரிவித்தார். இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    தமிழக பிரமலைக்கள்ளர் கூட்டமைப்பு மற்றும் பார்வர்டு பிளாக் கட்சியினர் இன்று மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர்.

    இதற்கு மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களிடமும், பொதுமக்களிடமும் ஆதரவு கேட்டு கடந்த 2 நாட்களாக பிரசாரம் செய்தனர்.

    இன்று தேனி மாவட்டத்தில் உள்ள கள்ளர் பள்ளிகளை பூட்டி அவர்கள் போராட்டம் நடத்தினர். தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் வருவதற்கு முன்பாகவே பள்ளிக்கு விடுமுறை என கூறி வந்த மாணவர்களையும் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

    இதனால் தங்களுக்கு பள்ளி விடுமுறை என நினைத்து மாணவர்கள் உற்சாகமாக திரும்பினர். அதன்பிறகு கள்ளர் பள்ளிகளை பெயர்மாற்றம் செய்யும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

    ×