search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kancheepuram temple"

    காஞ்சிபுரம் கோவில் தங்கசிலை மோசடி தொடர்பாக அறநிலையத்துறை முன்னாள் கமி‌ஷனர் வீரசண்முக மணியை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். #EkambaranatharTemple
    சென்னை:

    காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் உள்ள சோமஸ்கந்தர் சிலை சேதம் அடைந்ததையொட்டி புதிய சிலை செய்வதற்கு பொதுமக்களிடம் இருந்து நன்கொடை பெறப்பட்டது.

    இப்படி பெறப்பட்ட 8.7 கிலோ தங்கத்தில் முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    இந்த நிலையில் இந்த சிலை மோசடியில் அறநிலையத்துறை முன்னாள் கமி‌ஷனரான வீரசண்முக மணிக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு கூறப்பட்டது. இருப்பினும் அவரை உடனடியாக கைது செய்யாத போலீசார் அதற்கான ஆவணங்களை திரட்டி வந்தனர்.

    இதனையடுத்து நேற்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வீரசண்முக மணியை கைது செய்தனர். அவரிடம் சோமஸ்கந்தர் சிலை மோசடி தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

    அதிகாரி வீரசண்முக மணி அறநிலையத்துறையில் பணியாற்றியபோது அனைவருக்கும் நன்கு அறிமுகமானவராக இருந்தார்.

    தமிழகத்தில் பல்வேறு துறைகளிலும் அவர் பணி புரிந்துள்ளார். சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அறநிலையத்துறையில் பணியாற்றிய 2 பெண் அதிகாரிகளை ஏற்கனவே கைது செய்திருந்தனர்.

    இந்த நிலையில் ஓய்வு பெற்ற முன்னாள் அதிகாரியான வீரசண்முகமணி கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #EkambaranatharTemple

    காஞ்சீபுரம் அருகே மூலஸ்தம்மன்கோவிலில் 23ந் தேதி நடைபெற உள்ள கும்பாபிஷேகத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கிறார்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் அடுத்த முத்தியால்பேட்டை பகுதியில் மூலஸ்தம்மன் கோவில் உள்ளது. அதே பகுதியில் வசித்து வந்த வாழ்முனி நாயக்கர்- மீனாட்சி அம்மாள் தம்பதியரால் இக்கோவில் சிறிய அளவில் கட்டப்பட்டு பொதுமக்கள் வழிபட்டு வந்தனர்.

    அம்மனை வழிபட்டால் வேலைவாய்ப்பு, திருமண பாக்கியம் மற்றும் புத்திர பாக்கியத்தினை அருளுவதாக நம்பப்படுகிறது. இதனால் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் இங்கு வந்து வழிபட்டுச் செல்கிறார்கள். இந்த நிலையில் வாழ்முனி தம்பதியரின் பேரனும், காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. பிரதிநிதியுமான முத்தியால்பேட்டை ஆர்.வி.ரஞ்சித்குமார் பெரும் பொருட்செலவில் இந்த கோவிலை தற்போது புதுப்பித்து கும்பாபிஷேகத்துக்கான ஏற்பாடுகளை செய்து இருக்கிறார்.

    கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் இன்று காலை சிறப்பு பூஜையுடன் தொடங்கியது. காலை 5 மணிக்கு மகா கணபதி பூஜையும், தொடர்ந்து கால பூஜைகளும் நடைபெற்றன. நாளை மறுதினம் (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு நான்காம் கால பூஜை நடைபெற்று காலை 10.30 மணி அளவில் கோபுர கும்பாபிஷேகமும், 11 மணியளவில் மூலவருக்கு கும்பாபிஷேகமும் நடைபெற உள்ளது.

    இதில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, அமைச்சர்கள் பெஞ்சமின், மாபா. பாண்டியராஜன் மற்றும் டாக்டர் மைத்ரேயன் எம்.பி., மாவட்டச் செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன், அமைப்புச் செயலாளர்கள் வி.சோமசுந்தரம், மைதிலி உள்பட பலர் பங்கேற்கிறார்கள்.

    கும்பாபிஷேகத்தினை முன்னிட்டு 10 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. முத்தியால்பேட்டை முழுவதும் வண்ண விளக்குகளாலும், தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அனைத்து ஏற்பாடுகளையும் அ.தி.மு.க. மாவட்ட பிரதிநிதி முத்தியால்பேட்டை ஆர்.வி.ரஞ்சித்குமார் செய்து உள்ளார்.

    காஞ்சீபுரம் கோவிலில் சாமி சிலைகள் குறித்து சமீப காலமாக பரபரப்பு சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில் தற்போது அம்மன் கோயிலில் சாமி சிலை வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    காஞ்சிபுரம்:

    பெரிய காஞ்சிபுரம் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற கைலாசநாதர் கோவிலில் அருகே கங்கையம்மன் கோவில் உள்ளது.

    இங்கு பணிபுரியும் அர்ச்சகர் பணிக்கு வராததால் நேற்று இரவு கோவிலை பூட்ட அப்பகுதி மக்கள் சென்றனர்.

    அப்போது உட்பிரகாரக் கதவு அருகே ஒன்றரை அடி உயரமும் 10 கிலோ எடையும் கொண்ட அர்த்தநாரீஸ்வரர் தோற்றம் கொண்ட உலோகச் சிலை இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் ஏராளமானோர் கோவிலில் குவிந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுபற்றி சிவகாஞ்சி இன்ஸ்பெக்டர் பழனி மற்றும் போலீசார் அதே பகுதியை சேர்ந்த பன்னீர் செல்வத்திடம் விசாரணை நடத்திய போது திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது. அவர் போலீசாரிடம் கூறும் போது “எனது மகன் மகேந்திரன், திருப்போரூர் பகுதியில் இருந்து இந்த சாமி சிலையை வாங்கி வந்து கடந்த 6 மாதமாக வீட்டில் வைத்து பூஜை செய்தான்.

    வீட்டிற்கு வந்த உறவினர்கள் சிலர் இந்த சிலையை வீட்டில் வைத்திருக்கக் கூடாது என்று கூறியதால் அதனை அம்மன் கோயிலில் வைத்தான்” என்று கூறினார்.

    இதையடுத்து பன்னீர் செல்வம் அவரது மகன் மகேந்திரன் ஆகியோரை காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சாமி சிலை எங்கு வாங்கப்பட்டது? விற்றவர்கள் யார்? எதற்காக வாங்கப்பட்டது என்று அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    காஞ்சீபுரம் கோவிலில் சாமி சிலைகள் குறித்து சமீப காலமாக பரபரப்பு சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில் தற்போது அம்மன் கோயிலில் சாமி சிலை வைக்கப்பட்ட சம்பவம் காஞ்சீபுரம் நகரில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
    ×