search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kovai car bomb blast"

    • கோவையில் 31-ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ள கடையடைப்பு போராட்டத்துக்கு தமிழக வியாபாரிகள் சம்மேளனம் ஆதரவில்லை.
    • கோவை நகரை பொறுத்த வரை அசம்பாவிதங்களைத் தடுப்பதே காவல் துறையின் பணி என்றார் போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன்.

    கோவை:

    கோவையில் நடந்த சிலிண்டர் குண்டு வெடிப்பு தொடர்பாக வரும் 31-ம் தேதி கோவை மாவட்ட பா.ஜ.க.சார்பாக முழு அடைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், தமிழக வியாபாரிகள் சம்மேளனம் கோவை மாவட்ட கிளை சார்பாக அதன் தலைவர் எஸ்.எம் முருகன் தலைமையில் கோவை சாய்பாபா காலனி பகுதியில் உள்ள ஜே.கே.ஓட்டல் அரங்கில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கலந்துகொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், கடந்த சில தினங்களுக்கு முன்பாக நடைபெற்ற கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் காவல்துறை விரைவாக செயல்பட்டு, சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்துள்ளதாகவும், கோவை நகரை பொறுத்த வரை அசம்பாவிதங்களைத் தடுப்பதே காவல் துறையின் பணி எனவும், இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்கவேண்டும் என தெரிவித்தார்.

    இதையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக வியாபாரிகள் சம்மேளனத்தின் தலைவர் எஸ்.எம்.முருகன் பேசுகையில், கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக கோவையில் வரும் 31-ம் தேதி கடைகள் அடைப்பு என சில அரசியல் கட்சி சார்பாக அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. இது குறித்து எங்களிடம் கலந்து பேசி போராட்டத்தை அறிவிக்கவில்லை என்பதால் 31-ம் தேதி முழு அடைப்பு போராட்டத்தில் நாங்கள் பங்கேற்கவில்லை. எனவே கோவையில் தமிழக வியாபாரிகள் சம்மேளனத்தின் கீழ் வரும் சுமார் 30,000 கடைகளும் 31-ம் தேதி செயல்படும் என தெரிவித்தார்.

    • பா.ஜ.க. அறிவித்துள்ள பந்த் மக்களிடையே பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
    • கோவையில் மத பதற்றத்தை ஏற்படுத்த வேண்டாம் என இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் கட்சிகளின் கூட்டமைப்பு தெரிவித்தது.

    கோவை:

    கோவையில் கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து பா.ஜ.க. சார்பில் வரும் 31-ம் தேதி கடையடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே கடையடைப்பு அன்று அனைத்து வணிகர்களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்கப்படும். கடைகளை அடைக்கக் கோரி வற்புறுத்தப்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அன்றைய தினம் அனைத்துப் பொருட்களும் கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்படும் என மாநகர காவல்துறை தெரிவித்திருந்தது.

    இந்நிலையில், அனைத்து ஜமாத், அரசியல் கட்சிகள் மற்றும் இஸ்லாமிய இயக்கங்கள் கூட்டமைப்பின் சார்பாக கோவை மாநகர காவல்துறை ஆணையாளர் பாலகிருஷ்ணன் உடன் பேச்சு நடத்தினர். அதன்பின், செய்தியாளர்களை சந்தித்த அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்புகளின் ஒருங்கிணைப்பாளர் சுல்தான் அமீர் கூறியதாவது:

    பா.ஜ.க. அறிவித்த பந்த் என்பது கோவை மக்களிடையே பதட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    பந்த் சமயத்தில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யவேண்டும் என காவல்துறையிடம் கேட்டுள்ளோம். வருங்காலத்தில் காவல் துறைக்கு இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் முழு ஒத்துழைப்பு வழங்குவோம். மத கண்ணோட்டத்தில் இந்தச் சம்பவத்தைப் பார்க்க வேண்டாம்.

    எல்லாம் மதத்திலும், மதத்தை நம்பாதவர்களும் தவறு செய்கிறார்கள். ஆனால் இஸ்லாமியர்கள் தவறு செய்யும்போது அதை பல கோணத்தில் தொடர்பு படுத்தி பேசுகிறார்கள்.

    இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் நாங்கள் உண்மை கண்டறியும் சோதனை குழு ஒன்றை அமைத்தோம். அந்தக் குழு விசாரித்ததில் கைது செய்யப்பட்ட குற்றவாளியில் ஒருவர் கார் வியாபரம் செய்பவர். அவர் வெறும் கார் வியாபரம் செய்பவர் மட்டுமே, அவர் குடும்பம் சாப்பாட்டுக்கே கஷ்டப்படுகிற சூழலில் உள்ளது. இப்படி இருக்க அவர்மீது எந்த தவறுமில்லை என மாநகர காவல் ஆணையரிடம் தெரிவித்துள்ளோம்.

    தேவையில்லாமல் கோவையில் மத பதட்டத்தை ஏற்படுத்த வேண்டாம் என்பதே எங்கள் விருப்பம் என தெரிவித்தனர்.

    • கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு பா.ஜ.க.வினர் உள்பட பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர்.
    • பா.ஜ.க. சார்பில் கோவையில் வரும் 31-ம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தது.

    சென்னை:

    கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக கடந்த 23-ம் தேதியன்று அதிகாலை கார் வெடித்துச் சிதறியது. அதில் உக்கடம் ஜி.எம். நகர் பகுதியை சேர்ந்த ஜமேசா முபின் என்பவர் உடல் கருகி உயிரிழந்தார்.

    இந்த வழக்கில் தொடர்புடைய முகமது தல்கா (25), முகமது அசாருதீன் (23), முகமது ரியாஸ் (27), பரோஸ் இஸ்மாயில் (27), முகமது நவாஸ் இஸ்மாயில் (26), அப்சர்கான் ஆகிய 6 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் 2-வது நாளாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு பா.ஜ.க.வினர் உள்பட பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பா.ஜ.க. சார்பில் கோவையில் வரும் 31-ம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தது.

    இதற்கிடையே, பாரதிய ஜனதாவின் முழு அடைப்பு போராட்டத்தை தடை விதிக்க வேண்டும் எனவும் சட்டவிரோதமானது என அறிவிக்க வேண்டும் என்று கோவையைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    இந்நிலையில், இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், இதுபோன்ற முழு அடைப்பு போராட்டம் நடத்தக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் இதற்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

    இதையடுத்து, பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முழு அடைப்பு போராட்டம் பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் மூலமாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மாநில தலைமையால் அழைப்பு விடுக்கவில்லை. அதை ஆதரிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டது.

    இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி அக்.31-ல் பாஜக பந்த் நடத்தினால் காவல்துறை நடவடிக்கை எடுக்கலாம் என உத்தரவிட்டு, வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்காமல் விசாரணையை நவம்பர் 1-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

    • சிறப்பாக புலன் விசாரணை செய்த 19 பேருக்கு தமிழக டி.ஜி.பி. பாராட்டு சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கினார்.
    • என்.ஐ.ஏ. அதிகாரிகளுக்கு தேவையான எல்லா உதவிகளையும் தமிழக காவல்துறை செய்யும் என்றார்.

    கோவை:

    கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் கார் வெடிப்பு வழக்கு தொடர்பாக, தமிழக டி.ஜி.பி. சைலேந்திர பாபு போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். இந்த வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை செய்த 19 பேருக்கு சைலேந்திர பாபு பாராட்டு சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கினார்.

    இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டிஜிபி சைலேந்திரபாபு கூறியதாவது:

    கோவையில் கடந்த 23-ம் தேதி நடந்த கார் வெடிப்பு சம்பவத்தில் கோவை மாநகர காவல் துறை துரிதமாக செயல்பட்டது. சம்பவ இடத்தை பாதுகாப்பாக வைத்து தடயங்களை சேகரித்தது. அதில் இறந்த நபர் யார் என்பதை கண்டுபிடித்தனர்.

    ஆறு குற்றவாளிகளை மிக துரிதமாக ஆதாரங்களைத் திரட்டி கைது செய்துள்ளனர். 5 பேரை காவலில் எடுத்து விசாரணை செய்துள்ளனர். இதில் நிறைய ஆதாரங்கள் கிடைத்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த வழக்கில் துரிதமாக துப்பு துலக்கி ஆதாரங்களை திரட்டி கைது செய்த காவல் துறையினருக்கு பாராட்டு மற்றும் வெகுமதி வழங்கப்பட்டுள்ளது. என்.ஐ.ஏ. விசாரணைக்கு முதல்வர் நேற்று பரிந்துரை செய்தார்.

    உள்துறை செயலகம் இன்று என்.ஐ.ஏ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. என்.ஐ.ஏ. அதிகாரிகள் கோவைக்கு வந்துள்ளனர்.

    என்.ஐ.ஏ. அதிகாரிகள் கூட்டம் நடத்தப்பட்டது. என்.ஐ.ஏ. வழக்கை விசாரிக்க நடவடிக்கை எடுக்கும். அவர்களுக்கு தேவையான எல்லா உதவிகளை காவல்துறை செய்யும்.

    புலன் விசாரணை விபரங்களை சொல்ல முடியாது. காவல் துறையினருக்கு கிடைக்கும் ஆதாரங்களை என்.ஐ.ஏ.விடம் ஒப்படைப்போம்.

    இவ்வழக்கில் திட்டங்கள் மற்றும் செயல்படுத்தியது தொடர்பாக கிடைத்த ஆதாரங்கள் அடிப்படையில் கைது செய்துள்ளோம். என்.ஐ.ஏ. விசாரணையில் கிடைக்கும் ஆதாரங்கள் அடிப்படையில் அவர்கள் கைது செய்வார்கள் என தெரிவித்தார்.

    • கோவை விமான நிலையத்தில் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களைச் சந்தித்தார்.
    • அப்போது பேசிய அவர் என்.ஐ.ஏ. விசாரணைக்கு தமிழக அரசு பரிந்துரைத்தது பாராட்டத்தக்க செயல் என்றார்.

    கோவை:

    கோவை விமான நிலையத்தில் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    கோவையில் இதுபோன்ற நிகழ்வுகள் எல்லாம் நடைபெறாமல் அமைதியாக இருக்க வேண்டும் என்ற நிலைப்பாடு தமிழகத்திற்கு வர வேண்டும் என்பதுதான் எனது எண்ணம்.

    பாராபட்சமற்ற விசாரணை நடத்துவதற்கு என்.ஐ.ஏ. விசாரணை உதவி செய்யும். அனைவரும் பாதுகாப்பான சூழ்நிலையில் வாழ்கிறோம் என்பதற்கு ஒரு உத்திரவாதத்தை ஏற்படுத்தும் அளவிற்கு தமிழக அரசு நடந்து கொள்ள வேண்டும் என்பதும் எனது கருத்து.

    இதை ஆளுநராக இல்லாமல் கோவையின் மருமகளாய் கூறுகிறேன். கோவை மகிழ்ச்சியான சூழ்நிலைக்கு வரவேண்டும்.

    இச்சம்பவத்திற்கு முன்பே பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில், அதனை முற்றிலும் ஆராய்ந்தது இதை போன்ற இடங்கள் எங்கும் இல்லை என்பதை தமிழக காவல் துறை உறுதிசெய்ய வேண்டும். கார் வெடிக்கும் வரை நமக்கு எப்படி தெரியாமல் போனது என ஆராய வேண்டும். இதில் முழு கவனம் செலுத்த வேண்டும். மேலும் குண்டு வெடித்து பா.ஜ.க. சொல்லிதான் மக்கள் பீதி அடைய வேண்டுமா?

    மக்கள் அனைவரும் தொலைக்காட்சிகளைப் பார்த்து அனைத்தையும் தெரிந்து வைத்துள்ளனர். மற்றவர்களை குறை சொல்லாமல் என்ன குறை என பார்ப்பது நல்லது.

    ஜனநாயக நாட்டில் பல்வேறு வழிமுறைகளை மேற்கொள்வது போல் எதிர்ப்பை தெரிவிக்க இதுவும் ஒரு வழிமுறை.

    எதுவாக இருந்தாலும் பாராபட்சமற்ற அணுகுமுறை இருக்க வேண்டும். மேலும் அரசியல் தலைவர்களை பொருத்தவரை சமூக வலைத்தளப் பதிவுகளில் நாகரீகமான முறையிலேயே நடந்துகொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்கிறேன்.

    தமிழ் தமிழகத்தில் சரியாக நடைமுறைப்படுத்த வேண்டும், தமிழ் சரியாக கையாளப்பட வேண்டும் என்பது தமிழிசையின் ஆசை என தெரிவித்தார்.

    ×