என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Madurai airport"
- விமானத்தில் அமைச்சர் உள்பட 77 பயணிகள் இருந்தனர்.
- அமைச்சர் உட்பட 77 பயணிகளும் பத்திரமாக மதுரை விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் தூத்துக்குடி புறப்பட்டு சென்றனர்.
மதுரை:
கன்னியாகுமரியில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை வைக்கப்பட்டதின் வெள்ளிவிழா, வருகிற ஜனவரி 1-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வரும் 31-ந் தேதி மற்றும் ஜனவரி 1-ந் தேதி நடைபெறும் விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விழாவில் கலந்து கொள்கிறார்.
இதுதொடர்பான முன்னேற்பாடு பணிகளை இன்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார். இதற்காக அவர் சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்லும் இண்டிகோ விமானத்தில் அமைச்சர் எ.வ.வேலு இன்று காலை புறப்பட்டார். அந்த விமானத்தில் அமைச்சர் உள்பட 77 பயணிகள் இருந்தனர்.
வழக்கம்போல் இன்று காலை 6 மணிக்கு சென்னையிலிருந்து புறப்பட்ட இண்டிகோ விமானம் தூத்துக்குடி விமான நிலையம் அருகே மோசமான வானிலை மற்றும் அதிக மேகமூட்டம் காரணமாக மதுரை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
இதையடுத்து அமைச்சர் உட்பட 77 பயணிகளும் பத்திரமாக மதுரை விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் தூத்துக்குடி புறப்பட்டு சென்றனர். அமைச்சர் உட்பட 77 பயணிகளுடன் தூத்துக்குடி செல்ல வேண்டிய விமானம் மோசமான வானிலை காரணமாக திடீரென மதுரை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
- மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்தும் விவகாரத்தில் சின்ன உடைப்பு கிராம மக்கள் போராட்டம்.
- மக்களை வெளியேற்ற உயர் நீதிமன்ற மதுரைக்கிளை இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்தும் விவகாரத்தில் சின்ன உடைப்பு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
தங்களுக்கான நியாயம் கிடைக்கும் வரை முயற்சியை மேற்கொள்வோம் என சின்ன உடைப்பு மக்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், மதுரை விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்காக நிலம் கையகப்படுத்த சின்ன உடைப்பு பகுதியில் உள்ள மக்களை வெளியேற்ற உயர் நீதிமன்ற மதுரைக்கிளை இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
சட்ட விதிகளை பின்பற்றி மக்களுக்கு நோட்டீஸ் வழங்கி, அதன் அடிப்படையில் ஆக்கிரமிப்பாளர்களை அகற்றலாம் என நீதிபதி மாலா உத்தரவிட்டுள்ளார்.
மாற்று ஏற்பாடு செய்து தரும் வரை கையகப்படுத்த கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, போராட்டம் வாபஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சாதகமாக தீர்ப்பு வந்ததால் தற்காலிகமாக போராட்டத்தை வாபஸ் பெறுவதாக சின்ன உடைப்பு கிராம போராட்டக் குழுவினர் அறிவித்துள்ளனர்.
- நிலத்தை கையகப்படுத்துவற்கு ஏற்கனவே இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டு விட்டது.
- நிலம் கையகப்படுத்துவதை தடுக்க ஐகோர்ட்டில் மனு செய்ய உள்ளதாக சின்ன உடைப்பு கிராம மக்கள் தெரிவித்து உள்ளனர்.
மதுரை:
மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்காக நில எடுப்பு பிரச்சனை மதுரை சின்ன உடைப்பு ஊரில் உள்ள 164 வீடுகளுக்கு காலி செய்ய சொல்லி விமான நிலைய விரிவாக்க நில எடுப்பு தாசில்தார் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 3 நாட்களாக இப்பகுதி மக்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிந்தனர்.
இதையறிந்து பொதுமக்கள் பெரும் திரளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போராட்டக்காரர்களிடம் மதுரை மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் தலைமையில் மேலூர் வருவாய் கோட்டாட்சியர் கார்த்திகாயினி, தாசில்தார்கள் விஜயலட்சுமி, சுரேஷ் உள்ளிட்ட வருவாய் அலுவலர்கள் நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
பொதுமக்கள் சார்பில் கவுன்சிலர் இன்குலாப் முனியாண்டி, மள்ளர் சேனை நிறுவனத் தலைவர் சோலை பழனிவேல் ராஜன் ஆகியோர் பேசினர். அப்போது வீடுகளை காலி செய்ய வருகிற சனிக்கிழமை வரை அவகாசம் கோரப்பட்டது. இதனை ஏற்று அதிகாரிகள் வரும் ஒரு வாரம் வரை அவகாசம் அளித்துள்ளனர். இதனால் இந்த பிரச்சினை சுமூகமாக முடிந்தது. போராட்டமும் வாபஸ் பெறப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் சங்கீதா கூறுகையில், சின்ன உடைப்பு கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில் தற்காலிகமாக போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. மேலும் இடத்தை காலி செய்ய ஒரு வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
நிலத்தை கையகப்படுத்துவற்கு ஏற்கனவே இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டு விட்டது. கூடுதல் இழப்பீட்டு தொகை தொடர்பாக கிராம மக்கள் மனு அளிக்கவில்லை. நிலம் கையகப்படுத்தினால் பணம் மட்டுமே கொடுக்க முடியும், மாற்று நிலம் வழங்க முடியாது. வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு நிலம் வழங்க முடியும் என்றார்.
இதனிடையே நிலம் கையகப்படுத்துவதை தடுக்க ஐகோர்ட்டில் மனு செய்ய உள்ளதாக சின்ன உடைப்பு கிராம மக்கள் தெரிவித்து உள்ளனர்.
- வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில் சின்ன உடைப்பு கிராம மக்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
- பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில், கிராம மக்கள் நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை விமான நிலையத்தின் விரிவாக்க பணிகளுக்காக 633.17 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டு அதனை கையகப்படுத்துவதற்காக சின்ன உடைப்பு கிராமத்திற்கு அதிகாரிகள் வருகை தந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள் மதுரை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தங்களை மீள்குடியேற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். அவ்வாறு செய்யாமல் நிலம் கையகப்படுத்துவதை அனுமதிக்க மாட்டோம் என போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில் சின்ன உடைப்பு கிராம மக்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் உடன்பாடு ஏற்படாத நிலையில், கிராம மக்கள் நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக சின்ன உடைப்பு பகுதியில் பரபரப்பு நிலவியது.
இந்த நிலையில், சின்ன உடைப்பு கிராமத்தில் நிலம் கையகப்படுத்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவிப்பதால் நிலம் கையகப்படுத்தும் பணிக்காக வஜ்ரா வாகனத்துடன் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
போலீசார் பாதுகாப்புடன் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- வெளிநாட்டு விமான சேவை குறைவு, ஆட்கள் பற்றாக்குறையால் தற்போது நேரக்கட்டுப்பாடு உள்ளது.
- இரவு நேர சேவையை தொடங்க முன்வருமாறு விமான நிலையங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
மதுரை:
மதுரை விமான நிலையத்தில் தற்போது காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. வெளிநாட்டு விமான சேவை குறைவு, ஆட்கள் பற்றாக்குறையால் தற்போது நேரக்கட்டுப்பாடு உள்ளது.
இந்நிலையில் இரவு நேர சேவையை தொடங்க முன்வருமாறு விமான நிலையங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இதையடுத்து மதுரை விமான நிலையத்தில் அக்டோபர் முதல் 24 மணி நேர விமான சேவை தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மதுரை விமான நிலையத்தில் 24 மணி நேர சேவை வழங்க விமான நிறுவனங்களுக்கு விமான நிலைய ஆணையரகம் அழைப்பு விடுத்துள்ளது.
தற்போது மதுரை விமான நிலையத்தில் இரவு நேர சேவை இல்லாத நிலையில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
- இணையதள பிரச்சனை காரணமாக நேற்று முழுவதும் 2 விமானங்கள் ரத்து மற்றும் 2 விமான சேவைகள் தாமதம் என மதுரை விமான நிலையம் அறிவித்துள்ளது.
- மதுரை விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு விமானம் புறப்பட்டு சென்றது.
மதுரை:
மைக்ரோசாப்ட் இணைய தள பிரச்சனை காரணமாக சிக்னல் கோளாறு ஏற்பட்டு நாடு முழுவதும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மதுரை விமான நிலையத்திலும் இணையதளம் சேவை பிரச்சனை நேற்று முழுவதும் நீடித்து வருவதன் காரணமாக விமானங்கள் வருவதிலும், இங்கிருந்து புறப்பட்டு செல்வதிலும் தாமதம் ஏற்பட்டது.
மேலும் விமானத்தில் செல்லக்கூடிய போர்டிங் பாஸ் தற்காலிகமாக கைகளால் எழுதி பயணிகளிடம் வழங்கப்படுவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் இணையதள பிரச்சனை காரணமாக நேற்று முழுவதும் 2 விமானங்கள் ரத்து மற்றும் 2 விமான சேவைகள் தாமதம் என மதுரை விமான நிலையம் அறிவித்துள்ளது.
இன்று காலை செல்லக்கூடிய சென்னை மற்றும் பெங்களூரு விமான சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளதாக மதுரை விமான நிலையம் அறிவித்துள்ளது. இன்று காலை 6.20 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு 7.20 மதுரை விமான நிலையத்திற்கு வந்தடையும்.
அதேபோல் 6.20 பெங்களூரு விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு 7.35 மணிக்கு மதுரை விமான நிலையத்திற்கு இண்டிகோ விமானம் வந்தடையும். இந்த 2 விமான சேவையும் ரத்து என விமான நிலைய வட்டாரத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் இன்று காலை இணையதள பிரச்சனைகள் சீரானதை தொடர்ந்து விமான சேவைகள் மீண்டும் தொடங்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் காரணமாக இன்று காலை 8.40 மணிக்கு மதுரை விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு விமானம் புறப்பட்டு சென்றது.
இதனை தொடர்ந்து பெங்களூரு உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், துபாய் உள்பட வெளி நாடுகளுக்கும் விமான சேவைகள் தொடங்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- டிக்கெட் எதுவும் புக் செய்யப்படவில்லை என இண்டிகோ ஊழியர்கள் கூறியதால் ஆன்மிக சுற்றுலா செல்ல வந்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
- மோசடி செய்யப்பட்ட சம்பவம் குறித்து புகார் அளிக்க பாதிக்கப்பட்டவர்கள் முடிவு செய்துள்ளனர்.
இன்றைய காலக்கட்டத்தில் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தைக் கொண்டு பல்வேறு மோசடிகள் நாளுக்கு நாள் விதவிதமாக நடந்து வருகிறது. மோசடி குறித்து போலீசார் தரப்பில் இருந்து பல அறிவுறுத்தல்கள் வந்தாலும் ஏமாறுபவர்கள் ஏமாந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
அப்படி ஒரு மோசடி சம்பவம் குறித்து மதுரை விமான நிலையத்தில் தெரியவந்துள்ளது. ஆன்மிக சுற்றுலா அழைத்துச் செல்வதாக கூறி 106 பேரிடம் தலா ரூ.29 ஆயிரம் வசூலித்து மோசடி நடைபெற்றுள்ளது.
அயோத்தி செல்ல மதுரை விமான நிலையம் வந்தவர்களிடம், டிக்கெட் எதுவும் புக் செய்யப்படவில்லை என இண்டிகோ ஊழியர்கள் கூறியதால் ஆன்மிக சுற்றுலா செல்ல வந்தவர்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்தனர். சுமார் ரூ.26 லட்சத்திற்கு மோசடி செய்யப்பட்ட சம்பவம் குறித்து புகார் அளிக்க பாதிக்கப்பட்டவர்கள் முடிவு செய்துள்ளனர்.
- போதைப் பொருட்களுக்கு எதிரான போரில் அனைவரும் ஒன்றிணைவோம்.
- துண்டுப்பிரசுரத்தில் தொடர்புடைய நபர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு இருந்தன.
மதுரை:
தமிழகத்தில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து உள்ளதாகவும், சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாகவும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன.
அதேபோல் இளைஞர்களின் எதிர்கால வாழ்வை சீரழிக்கும் போதைப் பொருட்கள் புழக்கத்தை தடுக்க வேண்டும் என்று அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
இந்தநிலையில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே தெளிச்சாத்த நல்லூர் கிராமத்தில் அ.தி.மு.க. சார்பில் அமைக்கப்பட்டுள்ள 110 அடி உயர கொடிக்கம்பம் திறப்பு விழா மற்றும் கட்சி நிர்வாகி இல்லத் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க் கட்சி தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வருகை தந்தார்.
விமான நிலையத்தில் மதுரை மாநகர், புறநகர் கிழக்கு, புறநகர் மேற்கு மாவட்டம் சார்பில் முன் னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் மற்றும் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமையில் தொண்டர்கள் புடை சூழ உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியின் போது பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழகத்தில் விரும்பத்தகாத செயலாக தொடர்ந்து அரங்கேறி வரும் கொலை, கொள்ளை, போதைப் பொருட்கள் குறித்து பிரசாரம் செய்யும் வகையில் துண்டுப் பிரசுரங்களை எடப்பாடி பழனிசாமி தொண்டர்களிடம் வழங்கினார்.
அந்த துண்டு பிரசுரத்தில் வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு போதைப் பொருட்கள் கடத்தப்பட்ட மாதங்கள், அதில் தொடர்புடைய நபர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு இருந்தன. மேலும் போதைப் பொருட்களுக்கு எதிரான போரில் அனைவரும் ஒன்றிணைவோம் என்றும் அச்சிடப் பட்டு இருந்தது.
- தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு கஞ்சா மற்றும் போதைப்பொருட்கள் சர்வ சாதாரணமாக புழக்கத்தில் உள்ளது.
- தமிழக இளைஞர்கள், மாணவிகள், ஏழை கூலித்தொழிலாளர்கள், சிறுவர்கள் முதல் அனைவரும் போதை பழக்கத்திற்கு அடிமையாகி வருகிறார்கள்.
மதுரை:
தமிழகத்தில் ஒரே கட்ட மாக கடந்த 19-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது. இதையொட்டி தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து 40 தொகுதிகளிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டான் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். இதையடுத்து அவர் ஓய்வு எடுப்பதற்காக தனது குடும்பத்தினருடன் கொடைக்கானல் புறப்பட்டார். சென்னையில் இருந்து மதுரை விமான நிலையம் வந்த அவருக்கு அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர்.
முதலமைச்சரின் தனிப்பட்ட பயணமாக இது இருந்ததால் அவரை வரவேற்க கட்சியினர் யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. இந்தநிலையில் விமான நிலைய வரவேற்பு பகுதியில் தனி நபராக ஒருவர் மட்டும் நின்று கொண்டிருந்தார். அப்போது அவரிடம் சென்ற அவனியாபுரம் உதவி போலீஸ் கமிஷனர் செல்வக்குமார், இன்ஸ்பெக்டர் மணிக்குமார் ஆகியோர் விசாரித்தனர். அவர் மதுரை அய்யர்பங்களாவை சேர்ந்த பா.ஜ.க. மாநில செயற்குழு உறுப்பினர் சங்கர்பாண்டி என்பது தெரியவந்தது. மேலும் அவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் மனு கொடுப்பதற்காக வந்திருப்பதாக தெரிவித்தார். போலீசார் அதற்கு அனுமதி கிடையாது என்று கூறினர். தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவரிடம் மனுவை தருமாறு போலீசார் கேட்டனர். தரமறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் அவரிடம் இருந்து மனுவை போலீசார் கைப்பற்றினர். அந்த மனுவில் கூறியிருந்ததாவது:-
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு கஞ்சா மற்றும் போதைப்பொருட்கள் சர்வ சாதாரணமாக புழக்கத்தில் உள்ளது. சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களும் எளிதில் கிடைக்கிறது. இதனால் தமிழக இளைஞர்கள், மாணவிகள், ஏழை கூலித்தொழிலாளர்கள், சிறுவர்கள் முதல் அனைவரும் போதை பழக்கத்திற்கு அடிமையாகி வருகிறார்கள். இதனால் தமிழகத்தில் சமூக விரோத செயல்கள், குற்ற செயல்கள் அதிகரித்து வருகிறது. இது மிகவும் எனக்கு வேதனை அளிக்கிறது. ஆகவே தாங்கள் தமிழக மக்களின் நலன் கருதி, துரித நடவடிக்கை எடுத்து போதை பொருட்கள் புழக்கத்தை தடுக்க வேண்டும் என்று தங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
குறிப்பு: இத்துடன் தமிழகத்தில் எளிதில் கிடைக்கும் கஞ்சா பொட்டலம் இணைத்துள்ளேன்.
இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியிருந்தார்.
இதையடுத்து சங்கர்பாண்டியை தடுத்து நிறுத்திய போலீசார் அவரை கைது செய்து அவனியாபுரம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி ஆட்சியின்போது அப்போதைய சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின், மதுரையில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தபோது, அவருக்கு எதிராக கருப்புக் கொடி காட்டியவர் மற்றும் தற்போதைய பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்திக்கு எதிராக முகநூல் பக்கத்தில் அவதூறு கருத்துக்களை தெரிவித்து சர்ச்சையை ஏற்படுத்தியவர் என்றும் தெரியவந்தது. இதற்கிடையே விமான நிலையம் வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து காரில் கொடைக்கானல் புறப்பட்டு சென்றார்.
- விமான பயணிகளிடமும், அவர்களின் உடமைகளையும் அதிகாரிகள் அதிரடியாக சோதனை செய்தனர்.
- சுங்க இலாகா வான் நுண்ணறிவு பிரிவினர் நடத்திய சோதனையில் 160 கிராம் எடையுள்ள கடத்தல் தங்கம் பிடிப்பட்டது.
மதுரை:
மதுரை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வெளிநாடு மற்றும் உள்நாட்டு விமான சேவை அளிக்கப்பட்டு வருகிறது. சமீப காலமாக வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வருவது அதிகரித்துள்ளது.
இந்தநிலையில் துபாயில் இருந்து மதுரை வரும் விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்க இலாகா வான் நுண்ணறிவு பிரிவினருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து துபாயிலிருந்து மதுரை வந்த விமான பயணிகளிடமும், அவர்களின் உடமைகளையும் அதிகாரிகள் அதிரடியாக சோதனை செய்தனர்.
அப்போது மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த மண்டையன் மகன் பாக்கியம் என்பவரிடம் நடைபெற்ற சோதனையில் அவர் கொண்டு வந்த எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது. அதன்பேரில் அந்த பொருட்களை அதிநவீன ஸ்கேனர் மூலம் சோதனை செய்ததில் அதில் மறைத்து தங்கம் கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது.
அதனையடுத்து சுங்க இலாகா வான் நுண்ணறிவு பிரிவினர் நடத்திய சோதனையில் 160 கிராம் எடையுள்ள கடத்தல் தங்கம் பிடிப்பட்டது. அதன் மதிப்பு ரூ.10 லட்சத்து 88 ஆயிரத்து 320 ஆகும். இதனைத் தொடர்ந்து சுங்க இலாக வான் நுண்ணறிவு பிரிவினர் பாக்கியத்திடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சந்தேகத்திற்கு இடமான நபர் ஒருவரை தனி அறைக்கு அழைத்து சென்றனர்.
- சமீப காலமாக மதுரைக்கு வரும் விமானங்களில் அதிக அளவில் தங்கம் கடத்தி வருவதும், அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் அரங்கேறி வருகிறது.
மதுரை:
மதுரை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இலங்கை, துபாய், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாட்டு விமான சேவைகளும், சென்னை, மும்பை, டெல்லி, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு உள்நாட்டு விமான சேவைகளும் அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் இலங்கை, துபாய் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகள் தங்கம் கடத்தி வருவது வாடிக்கையாகி விட்டது. இதனை தடுக்க விமான நிலையத்தில் வான் நுண்ணறிவு பிரிவு மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்தநிலையில், துபாயில் இருந்து மதுரைக்கு ஸ்பைஸ் ஜெட் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க இலாக்கா நுண்ணறிவு பிரிவினர் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான நபர் ஒருவரை தனி அறைக்கு அழைத்து சென்றனர்.
மேலும் அவர் கொண்டு வந்த உடமைகளை சல்லடை போட்டு சோதனை செய்தனர். அப்போது அந்த நபர் கொண்டு வந்த செல்போன்களுக்கான சார்ஜிங் பிளக்குகளில் தங்கம் மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த பிளக்குகளில் இருந்து ரூ.6 லட்சத்து 60 ஆயிரத்து 500 மதிப்பிலான 100 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மேலும் சட்ட விரோதமாக தங்கம் கடத்தி வந்த ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டிணத்தை சேர்ந்த விஜய் ஆனந்த் (வயது 40) என்பவரிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். சமீப காலமாக மதுரைக்கு வரும் விமானங்களில் அதிக அளவில் தங்கம் கடத்தி வருவதும், அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் அரங்கேறி வருகிறது.
- ரகசிய தகவலின் பேரில் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனை பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- துபாயில் இருந்து மதுரை வந்த ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் வந்த பயணி ஒருவரை விமான புலனாய்வுப்பிரிவு அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் சோதனை நடத்தினர்.
மதுரை:
மதுரை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து துபாய், மலேசியா, இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும், சென்னை, பெங்களூரு, மும்பை, டெல்லி உள்ளிட்ட நகரங்களுக்கும் நேரடியாக விமான சேவை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் வரி ஏய்ப்பு செய்து அதிக அளவில் தங்க நகைகளை சட்டவிரோதமாக கடத்தி வருவது அதிகரித்துள்ளது.
அவ்வாறு தங்கம் கடத்தி வரும் பயணிகளை விமான நிலையத்தில் வான் நுண்ணறிவு பிரிவு மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர். இந்த நிலையில் துபாயில் இருந்து மதுரைக்கு விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனை பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அதன்படி துபாயில் இருந்து மதுரை வந்த ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் வந்த பயணி ஒருவரை விமான புலனாய்வுப்பிரிவு அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அவர் உடமைகளில் மறைத்து கடத்தி வந்த ரூ.21 லட்சத்து 31 ஆயிரத்து 640 மதிப்பிலான 322 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
பசை வடிவிலும், பவுடராகவும் மாற்றி கடத்தி வரப்பட்ட தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், அதனை கடத்திய விமான பயணியிடம் அதிரடியாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்