என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "madurai govt hospital"
- கடந்த 2 நாட்களாக சிகிச்சை எதுவும் இன்றி காட்டுமாரி அவதி அடைந்துள்ளார்.
- சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
மதுரை:
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை தென் மாவட்டத்திலேயே மிகப்பெரிய அரசு மருத்துவமனையாகும். இங்கு தினமும் 3000-க்கும் மேற்பட்ட வெளிநோயாளிகளும், 500-க்கும் மேற்பட்ட உள் நோயாளிகளும் சிகிச்சைக்காக சேர்க்கப்படுகின்றனர். தற்போது இந்த அரசு ஆஸ்பத்திரியில் உயர்தர சிகிச்சைக்காக பல்வேறு வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. கூடுதல் கட்டிடங்கள் மற்றும் படுக்கை வசதிகளும் அதிகரிக்கப்பட்ட நிலையில் தலைக் காயம், விபத்து சிகிச்சை, உயிர் காக்கும் பிரிவு என்று அண்ணா பஸ் நிலைய பகுதியில் பிரமாண்ட கட்டிடமும் கட்டப்பட்டுள்ளது. இங்கும் தினசரி 1000-க்கும் மேற்பட்ட நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த நிலையில் மதுரை மாவட்டம் விளாச்சேரி பகுதியை சேர்ந்த சமையல் தொழிலாளியான காட்டுமாரி (வயது 58) என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிளில் நாகமலை புதுக்கோட்டை பகுதியில் சென்று கொண்டிருந்தபோது வாகன விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். இதில் அவரது மார்பு, கால் மற்றும் மணிக்கட்டுகளில் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அவரது மகன் வெளியூரில் இருப்பதால் காட்டுமாரி தனியாக ஆஸ்பத்திரியில் தங்கி இருந்து சிகிச்சை பெற்று வந்தார். அவரை அருகில் இருந்து கவனிக்க யாரும் இல்லாத நிலையில் வலதுகாலில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக அவரால் நடக்க முடியவில்லை. இதனால் ஆஸ்பத்திரியின் வராண்டா பகுதியில் காட்டுமாரி சிறுநீர் மற்றும் இயற்கை உபாதைகளை கழித்ததாக தெரிகிறது. இதனால் ஆஸ்பத்திரி பணியாளர்கள் காட்டுமாரியை அடிக்கடி வந்து எச்சரித்ததுடன், தரக்குறைவான வார்த்தைகளாலும் திட்டி உள்ளனர்.
இந்த நிலையில் காட்டுமாரி தொடர்ந்து ஆஸ்பத்திரி வளாகத்தில் சிறுநீர், இயற்கை உபாதைகளை கழித்ததால் ஆத்திரமடைந்த ஆஸ்பத்திரி பணியாளர்கள் அவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு அங்கிருந்து வெளியேற்றி அருகே உள்ள பஸ் நிலைய பிளாட் பாரத்தில் கொண்டு விட்டதாக தெரிகிறது.
இதனால் நடக்க வழி இல்லாமல் சாலை ஓரத்திலேயே காட்டுமாரி முடங்கினார். இந்த நிலையில் சாலை ஓரத்தில் தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த துப்புரவு பணியாளர்கள் காட்டுமாரியின் முனகல் சத்தம் கேட்டு அவரிடம் விசாரித்துள்ளனர்.
அப்போது ஆஸ்பத்திரி ஊழியர்கள் இங்கு கொண்டு வந்து போட்டுவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார். அதிர்ச்சி அடைந்த சாலையோர பணியாளர்கள் தன்னார்வ தொண்டு நிறுவனத்திடம் நோயாளி குறித்து தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக அங்கு வந்த தொண்டு நிறுவனத்தினர் சாலையோரத்தில் அனாதையாக கிடந்த காட்டுமாரியை மீட்டு மீண்டும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அரசு ஆஸ்பத்திரி ஊழியர்களின் மனிதாபிமானமற்ற இந்த செயல் காரணமாக கடந்த 2 நாட்களாக சிகிச்சை எதுவும் இன்றி காட்டுமாரி அவதி அடைந்துள்ளார். இதனால் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
இது தொடர்பாக மதுரை அரசு ஆஸ்பத்திரி டீன் தர்மராஜ் கூறியதாவது:-
முதியவர் காட்டுமாரி தொடர்பான மதுரை மருத்துவமனை ஆவணங்களில் கடந்த மாதம் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார் என்றும், கடந்த 2 நாட்களாக ஆஸ்பத்திரியில் இருந்து தலைமறைவாகி விட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் மீண்டும் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அவருக்கு உரிய சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
நோயாளியை வெளியேற்றியதாக ஆஸ்பத்திரி ஊழியர்கள் மீது கூறப்பட்டுள்ள புகார் தொடர்பாக மருத்துவமனை மருத்துவ அதிகாரியிடம் விசாரணை அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. அதில் தவறுகள் நடந்திருந்தால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதியவர் ரோட்டில் மீட்கப்பட்ட சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தபோது அடிக்கடி வாந்தியும், மூச்சுத்திணறலும் ஏற்பட்டுள்ளது.
- தற்போது பச்சிளம் குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு மிகவும் பாதிப்பிற்குள்ளாகி இருக்கிறது.
மதுரை:
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் லோகநாதன்-மீனாட்சி தம்பதியினர். இவர்களுக்கு திருமணமாகி 16 ஆண்டுகளுக்கு பிறகு ஆண் குழந்தை பிறந்தது. தற்போது அந்த குழந்தைக்கு 8 வயது ஆகிறது.
இந்தநிலையில் மீனாட்சி இரண்டாவது முறையாக கர்ப்பம் அடைந்தார். பிரசவத்திற்கு முன்பாக பல்வேறு கட்டங்களில் நடத்தப்பட்ட பரிசோதனையில் குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாக கூறப்பட்டது. அந்த குழந்தையை வரவேற்கும் விதமாக மருந்து, மாத்திரைகள் உட்கொண்டு உடலை மீனாட்சி முறையாக பராமரித்து வந்தார்.
பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து அவர் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் மகப்பேறு பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கடந்த நவம்பர் மாதம் 14-ந்தேதி பெண் குழந்தை பிறந்தது. அப்போது குழந்தையின் எடை 1 கிலோ 900 கிராம் மட்டுமே இருந்தது. சராசரி எடையை விட குறைவாக இருந்ததால் குழந்தைக்கு மூச்சுத்திணறல் மற்றும் சர்க்கரை அளவு குறைபாடும் இருந்தது.
இதையடுத்து அந்த குழந்தையை அரசு ஆஸ்பத்திரியில் இன்குபேட்டரில் வைத்து டாக்டர்கள் கண்காணித்து வந்தனர். அங்குள்ள சிறப்பு வார்டில் தீவிர சிகிச்சை பிரிவில் 21 நாள் பச்சிளம் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அதன்பின் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு சொந்த ஊரான முதுகுளத்தூருக்கு சென்றனர்.
அங்கு குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தபோது அடிக்கடி வாந்தியும், மூச்சுத்திணறலும் ஏற்பட்டுள்ளது. வாந்தி எடுக்கும் போது வாயில் இருந்து குழாய் போன்ற அமைப்பில் காற்றுடன் தண்ணீர் வெளியேறுவதுபோல் முட்டை முட்டையாக வந்ததை பார்த்து பெற்றோர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து அழுது கொண்டே வலியால் துடித்ததால் உடனடியாக குழந்தையை பரமக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அப்போது ஸ்கேன் எடுத்து பார்த்ததில் குழந்தையின் வயிற்றில் டியூப் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 21 நாட்கள் இன்குபேட்டரில் வைத்திருந்த குழந்தைக்கு தொண்டைக்குள் டியூப்பை விட்டு சிகிச்சை அளித்த போது அந்த டியூப்பை அகற்றாமல் அஜாக்கிரதையால் மறந்து குழந்தையை பெற்றோரிடம் திருப்பி கொடுத்துள்ளனர். அதனை அகற்ற அங்கு போதிய மருத்துவ வசதி இல்லாததால் மீண்டும் குழந்தையை மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றனர்.
இதனால் தற்போது பச்சிளம் குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு மிகவும் பாதிப்பிற்குள்ளாகி இருக்கிறது. டாக்டர்களின் அலட்சியம் மற்றும் அஜாக்கிரதையால் குழந்தை உயிருக்கு ஆபத்தான கட்டத்தில் உள்ளது. அங்கு சிறப்பு டாக்டர்கள் குழுவினர் குழந்தையை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து பரிசோதனை மற்றும் டியூப்பை அகற்றுவதற்கான சிகிச்சையை தொடங்கியுள்ளனர்.
- வாழ்க்கையில் வெறுப்படைந்த ரவி, தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்திருக்கிறார்.
- இன்று அதிகாலை ஆஸ்பத்திரியில் உள்ள கழிவறைக்கு சென்ற ரவி, நீண்ட நேரம் ஆகியும் வார்டுக்கு திரும்பவில்லை.
மதுரை:
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள சாத்தம்பாடியை சேர்ந்தவர் ரவி(வயது 36). கூலித்தொழிலாளியான இவருக்கு கடந்த சில மாதங்களாக அடிக்கடி வாய்ப்புண் ஏற்பட்டது. இது தொடர்பாக ரவி பல மருத்துவர்களிடம் காண்பித்தும் குணமாகவில்லை.
இதையடுத்து அவர் சில நாட்களுக்கு முன்பு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதில் ரவிக்கு நாக்கில் புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த ரவி மனம் உடைந்தார். டாக்டர்கள் ரவியை மேல் சிகிச்சைக்காக மதுரை பாலரங்காபுரத்தில் உள்ள அரசு புற்றுநோய் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு உள் நோயாளியாக சேர்க்கப்பட்ட ரவி கடந்த சில நாட்களாக தீவிர சிகிச்சையில் இருந்து வந்தார். ஆனால் அவருக்கு வலி அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது.
இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த ரவி, தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்திருக்கிறார். அதன்படி இன்று அதிகாலை ஆஸ்பத்திரியில் உள்ள கழிவறைக்கு சென்ற ரவி, நீண்ட நேரம் ஆகியும் வார்டுக்கு திரும்பவில்லை.
இதனால் சந்தேகமடைந்த அவரது உறவினர்கள் கழிவறைக்கு சென்று பார்த்தனர். அப்போது அவர் கழிவறையில் தூக்கில் பிணமாக தொங்கினார். அவர் தனது கைலியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது.
இதுகுறித்து தெப்பக்குளம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மாடசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ரவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அரசு ஆஸ்பத்திரியில் நோயாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மற்ற நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்களின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- மதுரை அரசு மருத்துவமனையில் குழந்தையின் நாக்குக்கு பதில் சிறுநீரக பகுதியில் ஆபரேஷன் செய்தனர்.
- தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து டீன் விளக்கம் அளித்தார்.
மதுரை:
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் கே.கே.நகர் காலனியைச் சேர்ந்தவர் அஜித்குமார் (23). கொத்தனார். இவருடைய மனைவி கார்த்திகா. இவர்களுக்கு ஒரு வயதில் கவின் என்ற குழந்தை உள்ளது.
கடந்த வருடம் மதுரை அரசு மருத்துவமனையில் குழந்தை கவினுக்கு நாக்கு பகுதியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மறு பரிசோதனைக்காக அவர்கள் கடந்த 21-ம் தேதி மதுரை அரசு மருத்துவமனைக்கு மீண்டும் குழந்தையைக் கொண்டு வந்தனர். அங்கு சிகிச்சையில் இருந்த குழந்தைக்கு நேற்று முன்தினம் காலை மீண்டும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால், அறுவை சிகிச்சை நாக்கில் செய்வதற்கு பதிலாக சிறுநீரக பகுதியில் செய்துவிட்டதாக பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதுகுறித்து குழந்தையின் தந்தை அஜித்குமார் மதுரை அரசு மருத்துவமனை போலீசில் புகார் அளித்தார்.
அந்தப் புகாரில், என்னுடைய மகனுக்கு நாக்குப் பகுதியில் அறுவை சிகிச்சை செய்வதற்கு பதிலாக, சிறுநீரக பகுதியில் அறுவை சிகிச்சை செய்துவிட்டனர். இதுகுறித்து டாக்டர்களிடம் கேட்டபோது, மீண்டும் என் மகனை அழைத்துச் சென்று நாக்குப் பகுதியில் அறுவைசிகிச்சை செய்தனர். எனவே, சம்பந்தப்பட்ட டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூறியிருந்தார்.
இதுதொடர்பாக மதுரை அரசு மருத்துவமனை டீன் ரத்தினவேல் கூறியதாவது:
குழந்தை கவினுக்கு வாய்க்குள் நாக்கு ஒட்டிக்கொண்ட பிரச்சினை இருந்தது. இதனால் அந்தக் குழந்தைக்கு கடந்த ஆண்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, வீட்டுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில் மீண்டும் அறுவை சிகிச்சைக்காக 2 தினங்களுக்கு முன்பு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. குழந்தைக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டது. அப்போது, குழந்தை சிறுநீர்ப்பை விரிவடைந்து இருப்பது கண்டறியப்பட்டது. குழந்தையின் சிறுநீரக பகுதியில் முன்தோல் குறுக்கம் இருப்பது தெரியவந்தது. இதனால், மற்றொரு மயக்க மருந்தைத் தவிர்ப்பதற்காக ஒரே அமர்வில் விருத்தசேதனம் மற்றும் நாக்கு ஒட்டுதல் ஆகியவற்றிற்காக அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது.
அறுவை சிகிச்சைக்குப் பிறகு குழந்தை நன்றாக இருக்கிறது. உணவு சாப்பிடுகிறது. சிறுநீர் கழிக்கிறது. குழந்தையின் உடல் நலம் சீராக இருக்கிறது என தெரிவித்தார்.
குழந்தைகள் நலத்துறை தலைவர் டாக்டர் மீனாட்சி சுந்தரி கூறுகையில், அறுவை சிகிச்சையின் போது குழந்தைக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டது. அப்போது குழந்தையின் வயிற்றுப்பகுதியில் வீக்கம் இருப்பது தெரிய வந்தது. மேலும், சிறுநீரக பகுதியில் அடைப்பு இருந்ததால் சிறுநீர் அதிக அளவில் இருந்தது உறுதியானது. அவ்வாறு இருக்கும்போது மீண்டும் மயக்க மருந்து கொடுத்தால் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால், சிறுநீரை வெளியேற்ற முயற்சி செய்தபோது, முன்பகுதியில் தோல்ஒட்டிய நிலையில் இருந்தது. அதனை இப்போது சரி செய்யாவிட்டாலும் பிற்காலத்தில் இந்த அறுவை சிகிச்சை செய்யவேண்டிய நிலை உள்ளது. அதன் காரணமாக ஒரே சமயத்தில் 2 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டது என கூறினார்.
- பத்மேஸ்வரன் தப்பி சென்ற சம்பவத்தில் அஜித் என்பவர் அவருக்கு உதவியாக இருந்தது தெரிய வந்தது. இவர் மீதும் போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
- அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய பத்மேஸ்வரனை அஜித் என்பவர்தான் மோட்டார் சைக்கிளில் வெளியூருக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
மதுரை:
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள வேப்பங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துமாரியப்பன். இவரது மகன் பத்மேஸ்வரன் (வயது 24). இவர் கடந்த மார்ச் மாதம் மூக்கையூர் கடற்கரையில் காதலனுடன் வந்த 21 வயது இளம்பெண்ணை நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் அவரது 2 கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டதால் அவருக்கு மதுரை பனகல் ரோட்டில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த 17-ந் தேதி பத்மேஸ்வரன், போலீசாரை ஏமாற்றி தப்பி சென்று விட்டார். பின்னர் பத்மேஸ்வரன் தப்பிச்செல்லும் வீடியோ வெளியாகி பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து தப்பி சென்ற பத்மேஸ்வரனை பிடிப்பதற்காக தல்லாகுளம் உதவி கமிஷனர் சுரேஷ்குமார், மதிச்சியம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. மேலும் போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் தலைமையிலான தனிப்படை போலீசாரும் தப்பிய கைதியை தேடி வந்தனர். அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது பத்மேஸ்வரன் தப்பி சென்ற சம்பவத்தில் அஜித் என்பவர் அவருக்கு உதவியாக இருந்தது தெரிய வந்தது. இவர் மீதும் போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய பத்மேஸ்வரனை அஜித் என்பவர்தான் மோட்டார் சைக்கிளில் வெளியூருக்கு அழைத்துச் சென்றுள்ளார். இதனை தொடர்ந்து தனிப்படை போலீசார் அஜித்தின் செல்போன் அழைப்புகளை கண்காணித்து வந்தனர். அப்போது பத்மேஸ்வரன் மேலூரில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. உடனே தனிப்படை போலீசார் நேற்று நள்ளிரவு மேலூருக்கு விரைந்து சென்றனர்.
அங்குள்ள ஒரு வீட்டில் பத்மேஸ்வரன், தனது கூட்டாளி அஜித்துடன் பதுங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து பிடிபட்ட 2 பேரிடமும் தனிப்படை போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தினர்.
போலீசாரின் முதல் கட்ட விசாரணையின்போது பத்மேஸ்வரன் கூறியதாவது:-
எனக்கு ஜெயிலில் இருக்க பிடிக்கவில்லை. எனவே தப்பிச் செல்ல முடிவு செய்தேன். இதனை தொடர்ந்து ஜெயிலில் என்னை பார்க்க வந்த உறவினர் ஒருவரிடம் நான், ஜெயிலில் இருந்து தப்பி செல்வது தொடர்பாக ஆலோசனை கேட்டேன்.
அப்போது அவர் 'மதுரை அரசு ஆஸ்பத்திரியில் இருந்து தப்பிச் செல்வதுதான் பாதுகாப்பானது' என்று தெரிவித்தார். இதனை தொடர்ந்து ஜெயில் அதிகாரிகளிடம் எனக்கு 2 கால்களும் வலிக்கின்றன' என்று தெரிவித்தேன். எனவே அவர்கள் என்னை மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து தப்பி சென்று விட்டேன்.
மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையாக சம்பளம் வழங்ககோரி தமிழகம் முழுவதும் இன்று டாக்டர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் 35-க்கும் மேற்பட்ட துறைகளில் பணிபுரியும் அரசு டாக்டர்கள் இன்று காலை பணிக்கு வரவில்லை. இதனால் ஆஸ்பத்திரிக்கு வந்த நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
வெளி நோயாளிகள் பிரிவை பொருத்தவரை மிக குறைந்த டாக்டர்களே பணியில் இருந்ததால், நோயாளிகள் நீண்ட வரிசையில் வெகு நேரம் காத்திருக்க நேரிட்டது.
இது தொடர்பாக மதுரை அரசு ஆஸ்பத்திரி டீன் (பொறுப்பு) சண்முக சுந்தரத்திடம் கேட்டபோது, அரசு டாக்டர்கள் ஸ்டிரைக் காரணமாக ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் பற்றாக்குறை நிலவுகிறது.
இதையடுத்து அரசு டாக்டர்கள் அல்லாத பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் மற்றும் பயிற்சி டாக்டர்களை பணியில் அமர்த்தி நிலைமையை சமாளித்து வருகிறோம் என்று தெரிவித்தார்.
ராமநாதபுரம் அரசு தலைமை ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் பணியை புறக்கணித்தனர். இதனால் சிகிச்சைக்கு வந்த வெளி நோயாளிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். தனியார் ஆஸ்பத்திரிகளில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
ராமநாதபுரம் தலைமை மருத்துவமனையில் உள்ள 42 டாக்டர்கள் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள 10 மருத்துவமனைகள், 48 ஆரம்ப சுகாதார நிலையங்களில் இன்று காலை 8 மணி முதல் வெளிநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படவில்லை.
மற்றபடி அவசர சிகிச்சைகள், வார்டில் தங்கி உள்ள உள் நோயாளிகளுக்கு வழக்கம் போல் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
சிவகங்கை அரசு ஆஸ்பத்திரி மற்றும் மாவட்டத்தின் பிற பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளிலும் டாக்டர்கள் சிகிச்சை அளிப்பதை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் வெளிநோயாளிகள் சிகிச்சை பெறமுடியாமல் பாதிக்கப்பட்டனர்.
சிவகங்கை மாவட்டம் முழுவதும் இன்று 1540 டாக்டர்கள் போராட்டத்தில் பங்கேற்றதாக அரசு டாக்டர்கள் சங்க கூட்டமைப்பின் மாநில பொருளாளர் டாக்டர் ராமு தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்டத்தில் 13 அரசு ஆஸ்பத்திரிகளும், 56 ஆரம்ப சுகாதார நிலையங்களும் உள்ளன. அரசு ஆஸ்பத்திரிகளில் உள்ள 156 டாக்டர்களில் 77 பேர் பணிக்கு வரவில்லை. இதனால் வெளிநோயாளிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். #DoctorsStrike
திண்டுக்கல் மாவட்டம் சானார்பட்டியைச் சேர்ந்தவர் சேக்இப்ராகிம். இவரது மகள் சுல்தான் பேகம் (வயது28). சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இவர் அந்த பகுதியில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். காய்ச்சல் குணமாகவில்லை.
எனவே மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு ரத்த மாதிரியை பரிசோதனை செய்ததில் சுல்தான்பேகம் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
எனவே அவரை தனி வார்டில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி சுல்தான்பேகம் இன்று காலை பரிதாபமாக இறந்தார்.
பன்றிகாய்ச்சல் வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ள 9 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. #Swineflu
திண்டுக்கல் அருகேயுள்ள பரளிபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் அழகு ராஜ். இவரது மனைவி ஜீவிதா (வயது 19). கடந்த வாரம் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஜீவிதா நத்தம் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் காய்ச்சல் குணமாகவில்லை.
எனவே மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு ரத்த மாதிரியை பரிசோதனை செய்ததில் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஜீவிதா பரிதாபமாக இறந்தார்.
மதுரை மாவட்டம், திருவேடகம் அருகேயுள்ள கீழமாத்தூரைச் சேர்ந்த பெரியசாமி மனைவி லட்சுமி (34). பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இவர், மதுரை அரசு ஆஸ்பத்திரியில் தனி வார்டில் சிகிச்சை பெற்று வந்தார். டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்த லட்சுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
பன்றிக்காய்ச்சல் பாதிப்பு உள்ள 23 பேர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். #SwineFlu
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்