என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Makaravilaku Pooja"
- ஐயப்பனின் திருநாமங்களை சொல்லும்போது கவனம் திசை திரும்பாது.
- எது உண்மையான அறிவு என்பதை விளக்குவதுதான் 'சின்' முத்திரை.
சபரிமலையில் அருள்புரியும் ஐயப்பனுக்கு கார்த்திகை மாதம் மாலை அணிந்து, 48 நாட்கள் விரதம் இருந்து இருமுடி கட்டி ஐயப்பனை தரிசனம் செய்யச் செல்வார்கள்.
சபரிமலையில் அருளும் ஐயப்பன், தனது மூன்று விரல்களை நீட்டி, ஆட்காட்டி விரலால் பெருவிரலை தொட்டுக்கொண்டு சின்முத்திரை காட்டுகிறார். 'சித்' என்றால் அறிவு எனப் பொருள். இந்த வார்த்தையே காலப்போக்கில் மருவி 'சின்' என மாறியது.
எது உண்மையான அறிவு என்பதை விளக்குவதுதான் இந்த 'சின்' முத்திரையாகும். இந்த முத்திரையுடன் தியான கோலத்தில் உள்ள ஐயப்பனை கண்ணாரக் கண்டு தரிசிப்பதால், பிறவிப் பயனை அடைந்த மகிழ்ச்சி கிடைக்கும்.
ஒவ்வொரு மாதமும் நடை அடைக்கப்படும் போதும், கிலோ கணக்கில் பசுமையான விபூதியை ஐயப்பன் மேல் சாற்றுவார்கள். அந்த விபூதி, 'தவக்கோல விபூதி' என்று அழைக்கப்படுகிறது.
நோயால் பாதிக்கப்பட்டவர்கள், அந்த விபூதி பிரசாதத்தை நெற்றியில் தரித்து, சிறிது உட்கொண்டால் நோய் குணமடையும் என்பது நம்பிக்கை. அத்துடன் ஐயப்பனின் சின் முத்திரையின் மேல் ஒரு ருத்ராட்ச மாலையை போடுவார்கள். இதற்கு 'தவக்கோலம்' என்று பெயர்.
அப்போது ஒரு விளக்கையும் ஏற்றி வைப்பார்கள். அந்த விளக்கானது மீண்டும் அடுத்த மாதம் நடை திறக்கப்படும் வரை எரிந்து கொண்டே இருக்குமாம்.
மீண்டும் ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படும் போது, உலகத்தின் பார்வை அந்த கோவிலுக்குள் படும் வேளையில் ஐயப்பனின் தவக்கோலம் கலைவதாக நம்பிக்கை.
அடுத்த நிமிடம் கோவிலில் ஏற்றிய விளக்கும் அணைந்துவிடும். மனித மனம் அலைபாயும் தன்மை கொண்டது. அதனால் தான் ஐயப்பனுக்கு மாலை அணிந்த ஐயப்ப பக்தர்கள், எப்போதும் ஐயப்பனின் திருநாமங்களை சத்தம் போட்டு சரணகோஷமாக சொல்கிறார்கள்.
இவ்வாறு ஐயப்பனின் திருநாமங்களை சொல்லும்போது கவனம் திசை திரும்பாது. அந்த ஒலி அலைகள் அந்த இடம் முழுக்க பரவி, பக்தி அதிர்வை ஏற்படுத்தும்.
இது வீட்டில் இருப்பவர்கள் மற்ற சிந்தனைகளுடனோ அல்லது வேறு பேச்சுக்களிலோ இருந்தால்கூட அவர்களது கவனத்தையும் ஐயப்பனை நோக்கி திரும்ப வைக்கும்.
- சபரிமலை யாத்திரை என்பது நாம் செய்த கோடி புண்ணியத்திற்கு சமமாகும்.
- குருசாமி என்ற நிலையை அடைய முடியும்.
சபரிமலைக்கு யாத்திரை சென்று தரிசனம் செய்வதாலும், அங்குள்ள புனித தீர்த்தத்தில் நீராடுவதாலும் அனைத்து பாவங்களும் நீங்கி, கோடி புண்ணியம் கிடைக்கும் என்று சாஸ்திரம் கூறுகிறது.
கார்த்திகை மாதத்தில் தான் ஐயப்ப பக்தர்கள், ஐயப்பனுக்கு மாலை அணிந்து சபரிமலை செல்ல தயாராவார்கள். அவ்வாறு சபரிமலைக்கு மாலை அணிந்து செல்லும் பக்தர்களுக்கு ஒரு குரு சாமி துணை வேண்டும். சபரிமலைக்கு 18 முறைக்கு மேல் சென்று வந்தவர்கள், 'குருசாமி' என்ற தகுதியை பெறுகிறார்கள்.
18-ம் வருடம் சபரிமலை யாத்திரை என்பது நாம் செய்த கோடி புண்ணியத்திற்கு சமமாகும். ஒரே ஆண்டில் பதினெட்டு முறை சென்றுவிட்டு வந்தால் அவர்களை குருசாமி என கூற முடியாது.
18 ஆண்டுகள் மகரவிளக்கு அல்லது மண்டல பூஜைக்கு இருமுடி கட்டு கட்டி, 48 நாட்கள் முதல் 60 நாட்கள் வரை விரதமிருந்து சென்று வருபவர்களே குருசாமி என்ற நிலையை அடைய முடியும்.
18-ம் வருடம் சபரிமலை யாத்திரையின்போது, சிறிய தென்னங்கன்று ஒன்றை எடுத்து செல்வார்கள். இதை கண்டதும் குருசாமி என்று மற்ற ஐயப்ப பக்தர்கள் புரிந்துகொண்டு, அவரிடம் ஆசி வாங்குவார்கள்.
இதனால் தான் 18-ம் வருடம் சபரிமலை யாத்திரையை புனித யாத்திரை என்று அழைக்கின்றனர். இந்த குருசாமி, அடுத்த முறை கார்த்திகை மாதத்தில் மாலை அணியும் ஐயப்ப பக்தர்களுக்கு, தன் கையால் மாலை அணிவிக்கலாம்.
- முன்பதிவு செய்த நாட்களில் சரியாக வர வேண்டும்.
- தேதியை மாற்ற முடிவு செய்தால், தங்களின் முன்பதிவை ரத்து செய்ய வேண்டும்.
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை அடுத்த மாதம் (டிசம்பர்) 26-ந்தேதி நடை பெறுகிறது. இதற்காக கோவில் நடை வருகிற 15-ந்தேதி மாலை திறக்கப்படுகிறது.
பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் சாமி தரிசனம் செய்வதற்கு பல்வேறு புதிய நடைமுறைகள் கடைபிடிக்கப்பட உள்ளன.
அதன்படி மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை சீசன் காலத்தில் 'ஆன்லைன் முன்பதிவு' மற்றும் 'ஸ்பாட் புக்கிங்' அடிப்படையில் தினமும் 80 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர்.
அது மட்டுமின்றி பக்தர்கள் தங்களின் இருமுடி கட்டுகளில் கற்பூரம், சாம்பிராணி, பன்னீர் ஆகியவற்றை எடுத்துச்செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் சபரிமலை வரக்கூடிய பக்தர்களுக்கான புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி சாமிதரிசனம் செய்வதற்கு ஆன்லைன் மூலமாக மெய்நிகர் வரிசையில் முன்பதிவு செய்த பக்தர்கள், முன்பதிவு செய்த நாட்களில் சரியாக வர வேண்டும்.
முன்பதிவு செய்த பக்தர்கள் யாத்திரை தேதியை மாற்ற முடிவு செய்தால், தங்களின் முன்பதிவை ரத்து செய்ய வேண்டும். வாட்ஸ்-அப்பில் பெறப்பட்ட இணைப்பு அல்லது ஆன்லைன் முன்பதிவு அமைப்பு மூலம் முன்பதிவுகளை ரத்து செய்யலாம். அப்படி செய்ய வில்லை என்றால், அது போன்ற பக்தர்களால் யாத்திரை காலத்தில் மீண்டும் முன்பதிவு செய்ய முடியாது.
திட்டமிட்ட தரிசனத்தை தவறவிடுபவர்களின் இடங்கள் ஸ்பாட் புக்கிங் செய்யக்கூடிய பக்தர்களுக்கு மாற்றப்படும். பம்பை, எருமேலி, வண்டிப் பெரியார்-சத்திரம் உள்ளிட்ட நுழைவு வாயில் களில் ஸ்பாட் புக்கிங்கை பயன்படுத்தும் பக்தர்கள், 12 மணி நேரத்திற்குள் தங்க ளின் தரிசனத்தை முடிக்க வேண்டும்.
ஸ்பாட் புக்கிங்கில் முன்பதிவு மற்றும் நுழைவு சரிபார்ப்புக்கு 2 நிமிடங்கள் ஆகும். அப்போது கியூ-ஆர் குறியீடு ஸ்கேன் மூலம் பத்தர்களின் தகவல்கள் மற்றும் புகைப்படம் அங்கீ கரிக்கப்படும். ஆனால் அவர்களுக்கான டிக்கெட் டில் பக்தர்களின் புகைப் படம் இருக்காது.
ஸ்பாட் புக்கிங்கிற்கு ஆதார் அட்டை கட்டாய மாகும். புதிய வழிகாட்டு தல்களின் படி எதிர் காலத்தில் அனைத்து மெய் நிகர் வரிசை முன்பதிவுகளும் ஆதார் அட்டையின் அடிப் படையில் மட்டும் இருக்கும் என்று தகவல் வெளியாகி யிருக்கிறது.
- 41 நாட்கள் மண்டல பூஜை நடைபெறும். அதன் பிறகு மகர விளக்கு பூஜை காலம் தொடங்கும்.
- ராஜா அண்ணாமலை புரத்தில் 18 படிகளுடன் கோவில் அமைந்துள்ளது. இங்கு காலை 6 மணிக்கு நடை திறக்கிறது. அது முதல் மாலை அணியலாம்.
சென்னை:
சபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று நடை திறக்கப்பட்டது. நாளை (கார்த்திகை 1) மண்டல பூஜை காலம் தொடங்குகிறது. 41 நாட்கள் மண்டல பூஜை நடைபெறும். அதன் பிறகு மகர விளக்கு பூஜை காலம் தொடங்கும்.
இந்த காலத்தில் மாலை அணிந்து விரதம் இருந்து லட்சக்கணக்கான அய்யப்ப பக்தர்கள் சபரி மலைக்கு செல்வார்கள்.
மண்டல பூஜை காலத்தில் சபரிமலைக்கு செல்பவர்கள் பம்பை வரை வாகனங்களில் செல்வார்கள். அங்கிருந்து சின்னப் பாதை எனப்படும் நீலிமலை வழியாக கால்நடையாக அய்யப்பன் சன்னிதானம் செல்வார்கள்.
மகரவிளக்கு காலத்தில் செல்லும் பக்தர்களில் பலர் எரிமேலி வரை வாகனங்களில் செல்வார்கள். அங்கு பேட்டை துள்ளிவிட்டு அடர்ந்த காட்டுப் பகுதியான பெருவழி பாதையில் நடந்து செல்வார்கள். பேரூர்தோடு, காளைகட்டி, அழுதாமலை, கல்லிடும் குன்றம், கரிமலை, பெரியானை வட்டம் வழியாக பம்பை சென்றடைவார்கள் அங்கிருந்து நீலிமலை வழியாக சன்னிதானம் செல்வார்கள்.
நாளை விரதத்தை தொடங்கும் அய்யப்ப பக்தர்கள் அதிகாலையில் துளசி மாலை அணிவார்கள். அன்றாட வாழ்வியலில் இருந்து மாறுபட்டு துறவு வாழ்க்கை போல் தங்கள் வாழ்க்கை முறையை மாற்றி கொள்வார்கள். கருப்பு, நீலம், காவி ஆடைகள் அணிந்து, காலில் செருப்பு அணியாமல் இருப்பார்கள். தினமும் காலையிலும், மாலையிலும் குளிர்ந்த நீரில் குளித்து சரணம் சொல்லி பூஜை செய்வார்கள்.
விரத காலம் முழுவதும் உணவு கட்டுப்பாடு, மனக்கட்டுப்பாட்டுடன் இருப்பார்கள். புனிதமான மாலை அணியும் நிகழ்ச்சி நாளை நடைபெறுகிறது. இதற்காக சென்னையில் உள்ள முக்கியமான அய்யப்பன் கோவில்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கோடம்பாக்கம் மகாலிங்க புரத்தில் உள்ள அய்யப்பன் கோவிலில் ஆண்டுதோறும் ஏராளமானவர்கள் மாலை அணிவார்கள். கடந்த ஆண்டு சுமார் 15 ஆயிரம் பேர் மாலை அணிந்ததாகவும் இந்த ஆண்டு அதைவிட அதிகமாக இருக்கும் என்று கருதுவதால் கோவிலில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதாக கூறினார்கள்.
அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கிறது. அதுமுதல் மாலை அணியலாம். கோவிலிலேயே மாலை மற்றும் நீலவேஷ்டிகள் விற்பனைக்கு ஏற்பாடு செய்துள்ளனர். டிக்கெட் கட்டணமாக ரூ.10 வசூலிக்கிறார்கள்.
ராஜா அண்ணாமலை புரத்தில் 18 படிகளுடன் கோவில் அமைந்துள்ளது. இங்கு காலை 6 மணிக்கு நடை திறக்கிறது. அது முதல் மாலை அணியலாம். டிக்கெட் கட்டணம் ரூ.10 செலுத்தி மாலை அணிந்து கொள்ளலாம். மாலை, வேட்டிகள் விற்பனைக்காக தனியாக கடைகள் உள்ளன.
மடிப்பாக்கம் அய்யப்பன் கோவிலில் 18 படிகள் அமைந்துள்ளது. மாலை அணிந்து இருமுடி கட்டி செல்பவர்கள் மட்டும் படிகள் வழியாக ஏறி செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
இன்று சுத்தி பூஜை நடந்தது. நாளை காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டதும் பக்தர்கள் மாலை அணியலாம். இங்கும், மாலை, வேஷ்டி, விற்பனைக்கு உள்ளது. அர்ச்சனை கட்டணமாக ரூ.10 செலுத்த வேண்டும். காலை 9 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது. அதைத் தொடர்ந்து பறை எடுப்பு (நெல் அளப்பது) நடைபெறுகிறது. ஊர்வலமாக அய்யப்பா நகர் தெருவில் அழைக்கப்பட்ட வீடுகளுக்கு சென்று நெல் அளப்பார்கள்.
மாலையில் படி பூஜை நடக்கிறது. தொடர்ந்து 18 நாட்கள் படி பூஜை நடக்கிறது.
மேடவாக்கம் அருகில் உள்ள வெள்ளக்கல்லில் 18 படியுடன் கூடிய அய்யப்பன் கோவில் அமைந்துள்ளது. இங்கு அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டதும் பக்தர்கள் மாலை அணியலாம். தினமும் சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடைபெறுவது போல் பூஜைகள் நடைபெறும்.
திருவொற்றியூர் ஹைரோடு டோல்கேட் அருகே வடசென்னை அய்யப்பன் கோவில் அமைந்துள்ளது. இங்கு நாளை காலை 4 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. நிர்மால்ய தரிசனம், அபிஷேகம் முடிந்ததும் அய்யப்பனுக்கு சந்தனக் காப்பு அலங்காரம் நடைபெறும். மணலி, காசிமேடு, திருவொற்றியூர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ளவர்கள் ஏராளமானோர் மாலை அணிந்து கொள்வார்கள்.
அண்ணாநகர் அய்யப்பன் கோவில் நாளை காலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. உடனே பக்தர்கள் மாலை அணிய தொடங்குவார்கள் என்றனர்.
இந்த அய்யப்பன் கோவில்கள் அனைத்திலும் மாலை அணிவதோடு, மாலை அணிந்த பக்தர்கள் இருமுடி கட்டவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்