search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mannan subhash chandra kapoor"

    சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் சந்திரகபூரின் கூட்டாளி பரமதுரையை 15 நாள் காவலில் வைக்க கும்பகோணம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    கும்பகோணம்:

    நெல்லை மாவட்டம் பழவூரில் பிரசித்தி பெற்ற நாறும்பூநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 2005-ம் ஆண்டு 13 ஐம்பொன் சிலைகள் கொள்ளை போனது.

    இந்த வழக்கில் சுபாஷ் சந்திரகபூர், வல்லப பிரகாஷ், ஆதித்யா பிரகாஷ், தீனதயாளன் உள்ளிட்ட 18 பேர் மீது சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து சுபாஷ் சந்திரகபூர், வல்லப பிரகாஷ், ஆதித்யா பிரகாஷ், தீனதயாளன் உள்பட 10 பேரை கைது செய்தனர். தலைமறைவாக இருந்த 2 பேரை போலீசார் தேடிவந்தனர்.

    இந்த வழக்கில் தொடர்புடைய சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் சந்திரகபூரின் கூட்டாளியான தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா பரமதேவன்பட்டியை சேர்ந்த பரமதுரை (வயது 42), கடந்த 13 ஆண்டுகளாக போலீசாரின் பிடியில் சிக்காமல் தலைமறைவாக இருந்தார். இந்த நிலையில் சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் பரமதுரை இருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதைத்தொடர்ந்து ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் சென்னைக்கு சென்று கோயம்பேடு பஸ் நிலையத்தில் நின்ற பரமதுரையை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பரமதுரையை போலீசார் நேற்று கும்பகோணத்துக்கு கொண்டு வந்தனர். பின்னர் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அவருக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.

    தொடர்ந்து அவரை போலீசார் கும்பகோணம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பரமதுரையை 15 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அவரை போலீசார் பலத்த பாதுகாப்புடன் திருச்சிக்கு கொண்டு சென்று மத்திய சிறையில் அடைத்தனர்.

    இது குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கூறியதாவது:-

    நெல்லை மாவட்டம் பழவூரில் உள்ள நாறும்பூநாதர் கோவிலில் கொள்ளை போன பல கோடி ரூபாய் மதிப்பிலான ஐம்பொன் சிலைகளில் ஆடல் நடராஜர், சிவகாமி அம்மன், காரைக்கால் அம்மையார், மாணிக்கவாசகர், கிருஷ்ணர், அஸ்திர தேவர், வெயில்காத்த அம்மன், கோமதி அம்மன், சுப்பிரமணியர் உள்ளிட்ட 9 சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. இதில் நடராஜர் சிலை மட்டும் ரூ.15 கோடி மதிப்புள்ளது. கைது செய்யப்பட்ட பரமதுரை மீது சிலை கடத்தல் வழக்கு மட்டுமின்றி பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    ×