search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Medical Panel Review for"

    • ஈரோடு மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் 3 மருத்துவர்கள் கொண்ட மருத்துவ குழுவினர் ஆய்வு செய்தனர்.
    • இங்கு சுகாதாரம், சுத்தம், மருத்துவ கழிவு மேலாண்மை போன்றவைகளின் அடிப்படையில் மதிப்பெண் வழங்குகிறோம்.

    ஈரோடு:

    மத்திய அரசின் காயகல்ப திட்டத்தில் அரசு மருத்துவ மனைகளின் தூய்மை மற்றும் தரமான மருத்துவ சேவை வழங்கப்படுவதை நேரடியாக ஆய்வு செய்து மதிப்பெண் மூலம் தேர்வு செய்கின்றனர்.

    அதிக மதிப்பெண் பெறும் மாவட்ட தலைமை மருத்துவமனைகள், தாலுகா மருத்துவகனைகளுக்கு தேசிய விருதும், ரொக்க பரிசும் வழங்கப்படுகிறது.

    இதன்படி ஈரோடு மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் அரூர் அரசு மருத்துவமனை டாக்டர். ராஜேஷ்கண்ணா தலைமையிலான 3 மருத்துவர்கள் கொண்ட மருத்துவ குழுவினர் ஆய்வு செய்தனர்.

    அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை, மருத்துவ சேவை, சிகிச்சை நுணுக்கங்கள், குடிநீர் வசதி, சுற்றுப்புற சுகாதாரம், கழிப்பறை வசதி, தூய்மை பணி, மருத்துவ கழிவுகள் சேகரிப்பு மற்றும் அகற்றம், மின் சிக்கனம், டாக்டர்கள், செவிலியர் வருகை பதிவு போன்றவற்றை ஆய்வு செய்தனர்.

    பின் கொரோனா சிகிச்சைக்கான ஆக்சிஜன் சிலிண்டர், படுக்கை வசதிகள், ஆர்.டி.பி.சி.ஆர். சோதனை கூடம் தயார் நிலையில் உள்ளதா என பார்வையிட்டனர்.

    இதுபற்றி மருத்துவ குழுவினர் கூறியதாவது:

    தேசிய காயகல்ப விருதுக்கு தமிழகத்தில் 32 அரசு மருத்துவமனைகள், 132 தாலுகா மருத்துவமனைகள் ஆய்வு செய்யப்படுகிறது. இதில் ஈரோடு அரசு மருத்துவமனையும் ஒன்றாகும்.

    இங்கு சுகாதாரம், சுத்தம், மருத்துவ கழிவு மேலாண்மை போன்றவைகளின் அடிப்படையில் மதிப்பெண் வழங்குகிறோம்.

    அதிக மதிப்பெண் பெறும் மருத்துவமனைக்கு தேசிய விருது கிடைக்கும். முதலிடம் பெறும் மருத்துவமனைக்கு, ரூ.30 லட்சம், 2-ம் இடம் பெறும் மருத்துவமனைக்கு ரூ.20 லட்சம் வழங்கப்படும்.

    இதுதவிர சுற்றுப்புற சூழல், மின் சிக்கனம் தொடர்பாக நடப்பாண்டு புதிய விருதும் அறிவிக்க உள்ளனர். இதில் முதலிடம் பெறும் மருத்துவமனைக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ஆய்வின் போது ஈரோடு அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் வெங்கடேஷ், ஆர்.எம்.ஓ. கவிதா ஆகியோர் உடனிருந்தனர்.

    ×