search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "MK Stain"

    • நண்பர் கமல்ஹாசன் அவர்களது அன்பு அழைப்பை ஏற்று, அமரன் திரைப்படம் பார்த்தேன்.
    • நம் நினைவில் வாழும் மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களுக்கும் பெரிய சல்யூட்.

    இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் 'அமரன்'. கமல்ஹாசனின் ராஜ்கமல் புரொடக்ஷன் தயாரிக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார்.

    ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயன் 'முகுந்தன்' என்ற கதாபாத்திரத்தில் ராணுவ வீரராக நடித்துள்ளார். இந்த படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.

    அமரன் படத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு படக்குழுவினர் சிறப்பு திரையிடல் செய்தனர். அப்போது, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் தங்கம் தென்னரசு, படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, நடிகர் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் உள்ளிட்டோர் இந்த படத்தை பார்த்து மகிழ்ந்தனர்.

     

    அமரன் படத்தை பார்த்த முதலமைச்சர் முக ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:- நண்பர் கலைஞானி கமல்ஹாசன் அவர்களது அன்பு அழைப்பை ஏற்று, நேற்று அமரன் திரைப்படம் பார்த்தேன்.

    புத்தகங்களைப் போல்- திரைப்பட வடிவிலும் உண்மைக் கதைகளை இன்றைய இளைஞர்களிடம் கொண்டு சேர்ப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

    தமிழ்நாட்டைச் சேர்ந்த இராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களது வீரத்தையும் அர்ப்பணிப்பையும் உணர்வுப்பூர்வமாகப் இயக்குநர் ராஜ்குமார் படமாக்கியுள்ளார்.

    மேஜர் முகுந்த் வரதராஜன்- திருமிகு. இந்து ரெபேக்கா வர்கீஸ் ஆகியோரது பாத்திரங்களைத் தங்களது நடிப்பால் சிறப்பாக வெளிப்படுத்திய தம்பி சிவகார்த்திகேயன், சாய் பல்லவி மற்றும் அமரன் படக்குழுவினர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்.

    நாட்டைப் பாதுகாக்கும் நமது இராணுவ வீரர்களுக்கும்- நம் நினைவில் வாழும் மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களுக்கும் பெரிய சல்யூட் என பதிவிட்டிருந்தார்.

    • தொழிலதிபர் ரத்தன் டாடா மறைவுக்கு தமிழக முதலமைச்சர் இரங்கல் தெரிவித்தார்.
    • ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.

    சென்னை:

    பிரபல தொழிலதிபரான ரத்தன் டாடா வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று நள்ளிரவில் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்.

    இந்நிலையில், தொழிலதிபர் ரத்தன் டாடா மறைவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியதாவது:

    ரத்தன் டாடாவின் மறைவால் ஆழ்ந்த வருத்தம். இந்திய தொழில்துறையின் உண்மையான கலங்கரை விளக்கமாக ரத்தன் டாடா விளங்குகிறார்.

    அவரது தொலைநோக்கு தலைமை டாடா குழுமத்தை வடிவமைத்தது மட்டுமல்லாமல், நெறிமுறை வணிக நடைமுறைகளுக்கு உலகளாவிய அளவுகோலையும் அமைத்தது.

    தேசத்தைக் கட்டியெழுப்புதல், கண்டுபிடிப்புகள் மற்றும் பரோபகாரம் ஆகியவற்றில் அவரது இடைவிடாத அர்ப்பணிப்பு மில்லியன் கணக்கான உயிர்களின் மீது அழியாத முத்திரையை பதித்துள்ளது.

    இந்தியா ஒரு பிரம்மாண்டத்தை இழந்துவிட்டது. ஆனால் அவரது பாரம்பரியம் தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கும்.

    அவரது இழப்பின் இந்த தருணத்தில் அவரது குடும்பத்தினருக்கும், சக ஊழியர்களுக்கும், ஒட்டுமொத்த டாடா குழுமத்திற்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

    • சிகாகோவில் உலகின் 16 முன்னணி நிறுவனங்களுடன் ரூ.7,016 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
    • போர்டு அதன் உலகளாவிய தொழில்நுட்பம் மற்றும் வணிக தீர்வு மையத்தை சென்னையில் கொண்டுள்ளது.

    உலக அளவில் பொருளாதாரத்தில் தமிழ்நாடு வேகமாக வளர்ந்துவரும் மாநிலமாக விளங்குவதோடு, அதிக தொழிற்சாலைகளுடன் இந்திய அளவில் முன்னணி மாநிலமாகவும் திகழ்கிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், தொழில் வளர்ச்சியை மேம்படுத்துவதற்காகவும், தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவில் அரசுமுறை பயணம் மேற்கொண்டு வருகிறார்.

    இப்பயணத்தின்போது முதலமைச்சர் முன்னிலையில், அமெரிக்க நாட்டின் சான் பிரான்சிஸ்கோ மற்றும் சிகாகோவில் உலகின் 16 முன்னணி நிறுவனங்களுடன் ரூ.7,016 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. உலகளவில் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் உயர் அலுவலர்களை முதலமைச்சர் சந்தித்து தமிழ்நாட்டில் புதிய தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்தார்.

    அதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் சிகாகோவில் போர்டு நிறுவனம் மற்றும் ஐடிசர்வ் கூட்டமைப்பின் உயர் அதிகாரிகளை முதலமைச்சர் சந்தித்து தமிழ்நாட்டில் புதிய தொழில் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொண்டார். போர்டு நிறுவனம் உலகெங்கிலும் செயல்படும் 2-வது பெரிய அமெரிக்க ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் நிறுவனம் ஆகும். போர்டு அதன் உலகளாவிய தொழில்நுட்பம் மற்றும் வணிக தீர்வு மையத்தை சென்னையில் கொண்டுள்ளது.

    சிகாகோவில், போர்டு மோட்டார் நிறுவனத்தின் உயர் அலுவலர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து, தமிழ்நாட்டில் கார் உற்பத்தியை மீண்டும் மேற்கொள்ள வேண்டும் என்றும், அவர்களது உலகளாவிய திறன் மையத்தை மேலும் விரிவுபடுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

    ஐடிசர்வ் கூட்டமைப்பு அமெரிக்காவில் உள்ள சிறிய மற்றும் நடுத்தர வணிகங்களுக்கான தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களின் மிகப்பெரிய கூட்டமைப்பாகும். இந்த கூட்டமைப்பானது 2,400 உறுப்பினர் நிறுவனங்களுடன் 23 மாநிலங்களில் செயல்பட்டு வருகிறது. இது வணிக-நட்பு கொள்கைகளுக்காக சட்டரீதியாக துணை புரிகிறது. நெட்வொர்க்கிங் வாய்ப்புகளை வளர்க்கிறது. ஐடிசர்வ் கூட்டமைப்பு, உயர்திறமை பணியாளர்களின் குடியேற்றத்திற்கு சட்ட உதவிகளை புரிகிறது.

    சிகாகோவில், ஐடிசர்வ் கூட்டமைப்பின் தேசிய தலைவர் ஜெகதீஸ் மொசாலி, இயக்குனர்கள் சிவ மூப்பனார், சம்ப மொவ்வா, சிகாகோ பிரிவு தலைவர் சதீஷ் யலமஞ்சிலி மற்றும் உயர் அலுவலர்களை முதலமைச்சர் சந்தித்து, திறன்மிகுந்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதற்காக தமிழ்நாட்டில் புதிய முதலீடுகளை மேற்கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.

    இந்நிலையில் அமெரிக்காவின் சிகாகோவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கேட்டர்பில்லர் நிறுவனத்துடன் ரூ.500 கோடி முதலீட்டிற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.

    திருவள்ளூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள கேட்டர்பில்லர் நிறுவனத்தின் உற்பத்தி நிலையங்களை விரிவுப்படுத்த ஒப்பந்தமாகி உள்ளது.

    கட்டுமானம், சுரங்க கருவி, இயற்கை எரிவாயு இயந்திரம், டீசல் எலெக்ட்ரிக் என்ஜின்களை கேட்டர்பில்லர் நிறுவனம் உற்பத்தி செய்கிறது.

    • தீண்டாமையை ஒழிக்கவும் சமூக விடுதலைக்காகவும் போராடிய தியாகி இமானுவேல் சேகரனார் நினைவு நாள் இன்று.
    • நாட்டுக்காகவும் ஒடுக்கப்பட்டோரின் முன்னேற்றத்துக்காகவும் உழைத்த அவரது வாழ்வைப் போற்றுவோம்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:-

    தீண்டாமையை ஒழிக்கவும் சமூக விடுதலைக்காகவும் போராடிய தியாகி இமானுவேல் சேகரனார் நினைவு நாள் இன்று.

    நாட்டுக்காகவும் ஒடுக்கப்பட்டோரின் முன்னேற்றத்துக்காகவும் உழைத்த அவரது வாழ்வைப் போற்றுவோம். சமத்துவமும் சமூக நல்லிணக்கமும் மிளிர்ந்த சமூகத்தை நோக்கிய நமது பயணத்துக்கு அவரது தொண்டு உரமாகட்டும்!

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • நேரடி பணிநியமன முறையில் இதுவரை 63 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
    • கடும் எதிர்ப்புக்கு பிறகு நேரடி பணிநியமன முறையை மத்திய அரசு திரும்ப பெற்றது.

    மத்திய அரசின் இணைச் செயலாளர்கள், இயக்குநர்கள், துணைச் செயலாளர்கள் போன்ற முக்கிய பதவிகளை ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் போன்ற யு.பி.எஸ்.சி.யில் தேர்ச்சி பெற்றவர்களையும், குரூப் ஏ சேவை அதிகாரிகள் மூலமே நிரப்பப்பட்டு வந்தன.

    ஆனால், கடந்த 2018-ம் ஆண்டு முதல் நேரடி பணிநியமனம் என அரசுப்பணியில் அல்லாத துறைசார்ந்த வல்லுநர்களைக் கொண்டு மத்திய அமைச்சகத்தின் முக்கிய பதவிகளில் நியமனம் செய்யும் முறையை பா.ஜ.க. அரசு தொடங்கியது. இந்தத் திட்டத்தில் இதுவரை 63 பேர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

    இதற்கிடையே, நேரடி பணிநியமன முறையில் மத்திய அமைச்சகங்களில் காலியாகவுள்ள 10 இணைச் செயலாளர்கள் மற்றும் 35 இயக்குநர்கள்/துணைச் செயலாளர்கள் பதவிகளை நிரப்புவதற்கான விளம்பரத்தை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது.

    மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், பிரதமர் மோடியின் அறிவுறுத்தலின்படி யு.பி.எஸ்.சி., தலைவருக்கு மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் எழுதியுள்ள கடிதத்தில்,மத்திய அரசுப் பணிகளில் நேரடியாக அதிகாரிகளை நியமிக்கும் நடைமுறையை ரத்துசெய்ய வேண்டும். நேரடி நியமனத்தால் சமூகநீதி பாதிக்கப்படக் கூடாது என்பதில் பிரதமர் மோடி உறுதியுடன் இருக்கிறார். வேலைவாய்ப்புகளில் சமூக நீதியை நிலைநாட்ட இட ஒதுக்கீடு அவசியம் என பிரதமர் வலியுறுத்தியுள்ளார் என தெரிவித்தார்.

    இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

    அவரது பதிவில், "இந்தியா கூட்டணியின் கடும் எதிர்ப்பிற்கு பிறகு உயர்பதவிகளில் நேரடி நியமன முறையை ஒன்றிய அரசு திரும்பப் பெற்றது சமூகநீதிக்குக் கிடைத்த வெற்றி. 50% இட ஒதுக்கீடு வரம்பை உடைத்து சாதிவாரி கணக்கெடுப்பில் சமூகநீதியை நிலை நாட்டுவோம்" என்று பதிவிட்டுள்ளார்.

    • உயிரிழந்த சிறுமிகளின் பெற்றோர்களுக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்
    • அவர்களின் பெற்றோர்களுக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்

    கன்னியாகுமரி மாவட்டம் அக்ஸ்தீஸ்வரம் அருகே 13 வயதுடைய இரு சிறுமிகள் கடந்த 25ம் தேதி கடல் அலையில் சிக்கி உயிரிழந்த சம்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருவரது குடும்பங்களுக்கு தலா ₹2 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் வட்டம் நீண்டகரை "ஆ" கிராமம். பிள்ளைத்தோப்பு கடற்கரைப் பகுதியில் கடந்த 25.02 2024 அன்று பிற்பகல் ஆலன்கோட்டை அரசுப்பள்ளியில் படித்துவரும் மாணவிகள் செல்வி.சஜிதா வயது 13) த/பெ முத்துக்குமார் மற்றும் செல்வி தர்ஷினி வயது 13] த/பெ இரத்தினகுமார் ஆகிய இருவரும் கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக கடல் அலை இழுத்துச் சென்றதில் கடல் நீரில் மூழ்கி உயிரிழந்தார்கள் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்

    உயிரிழந்த சிறுமிகளின் பெற்றோர்களுக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு அவர்களின் பெற்றோர்களுக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.

    • தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கடந்த ஆண்டு டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய நாட்களில் வரலாறு காணாத அதிகனமழைப் பொழிவு ஏற்பட்டது
    • கனமழையால் பாதிக்கப்பட்ட 2,60,909 விவசாயிகளுக்கு ₹201.67 கோடி நிவாரண நிதி வழங்க தமிழ்நாடு அரசு அரசாணை

    தென் மாவட்டங்களில் ஏற்பட்ட அதிகனமழையால் பாதிக்கப்பட்ட 2,60,909 விவசாயிகளுக்கு ₹201.67 கோடி நிவாரண நிதி வழங்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது

    அதில், "தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கடந்த ஆண்டு டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய நாட்களில் வரலாறு காணாத அதிகனமழைப் பொழிவு ஏற்பட்டது. தென்மாவட்டங்களின் பல பகுதிகளில் சராசரி ஆண்டு மழையளவை விட கூடுதலாக ஒரே நாளில் அதிகளவு மழைப்பொழிவு ஏற்பட்டது. அதிகனமழையினை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ள பாதிப்பால், பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதோடு, வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களுக்கும். பொது மற்றும் தனியார் கட்டமைப்புகளுக்கும் பெரும் சேதம் ஏற்பட்டது.

    மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் பாதிப்பிற்குள்ளான பகுதிகளை 21.12.2023 அன்று பார்வையிட்டு மிகக் கடுமையான வெள்ள பாதிப்பிற்குள்ளான பகுதிகளைச் சேர்ந்த குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி, மழை வெள்ளத்தால் பாதிப்பிற்குள்ளான பயிர்களுக்கான நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு நிவாரணத் தொகுப்புகளை அறிவித்தார்.

    அதன் அடிப்படையில், தென் மாவட்டங்களில் ஏற்பட்ட கனமழை மற்றும் பெருவெள்ளத்தின் காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி. கன்னியாகுமரி, விருதுநகர், இராமநாதபுரம். சிவகங்கை மற்றும் மதுரை ஆகிய 8 மாவட்டங்களில் பாதிப்பிற்குள்ளான 1.64.866 ஹெக்டேர் வேளாண் பயிர்களுக்கு, 1,98,174 விவசாயிகள் பயனடையும் வகையில் 160 கோடியே 42 இலட்சத்து 41 ஆயிரத்து 781 ரூபாய் நிவாரணம் வழங்கிடவும். 38.840 ஹெக்டேர் தோட்டக்கலைப் பயிர்களுக்கு 62,735 விவசாயிகள் பயனடையும் வகையில் 41 கோடியே 24 இலட்சத்து 74 ஆயிரத்து 680 ரூபாய் நிவாரணம் வழங்கிடவும், மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது சரியானதே.
    • அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஜனநாயக சமநிலையை மீட்டெடுத்துள்ளது.

    தேர்தல் பத்திரம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. ஐந்து நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் தேர்தல் பத்திரம் செல்லாது. பாரத ஸ்டேட் வங்கி தேர்தல் பத்திரம் வினியோகிப்பதை உடனடியான நிறுத்த வேண்டும் என அதிரடி உத்தரவை பிறப்பித்தது.

    இந்நிலையில், தேர்தல் பத்திரம் ரத்து தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு அளித்துள்ளார்.

    இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில்," தேர்தல் பத்திரம் சட்டவிரோதமானது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது சரியானதே" என குறிப்பிட்டுள்ளார்.

    மேலும்," உச்சநீதிமன்ற தீர்ப்பு, தேர்தல் நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும். இந்த தீர்ப்பு, அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஜனநாயக சமநிலையை மீட்டெடுத்துள்ளது" என குறிப்பிட்டுள்ளார்.

    • உயர்ந்த லட்சியத்தை அடைய உழைப்பைக் கொடுத்தே ஆக வேண்டும்.
    • அரசியல் பாதையில் குறுக்கிடும் பேர்வழிகளை, இடக்கையால் புறந்தள்ளி முன்னேறுவோம்.

    தமிழக மக்களுக்கும், திமுகவினருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

    கொரோனா தொற்றினால் நான் பாதிக்கப்பட்டசெய்தி அறிந்ததிலிருந்து ஆயிரக்கணக்கானவர்கள் என்னைத் தொடர்பு கொண்டும், கடிதம் எழுதியும்நலம் பெற வேண்டும் என்று நெஞ்சார வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

    நலமடைந்துவிட்டேன் என்ற நல்லசெய்தியுடன் அத்தனை நல்லுள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். தோழமைக் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பல கட்சிகளின் தலைவர்களும் என்னை அலைபேசியில் தொடர்பு கொண்டு நலன் விசாரித்தனர்.

    பொதுமக்கள், பல்வேறு அமைப்பினர் கடிதம் மூலமாக நலம் விசாரித்தனர். அந்தக் கடிதங்களை எல்லாம் தொடர்ந்து படித்து வருகிறேன். மருத்துவர்கள் அளித்த சிகிச்சையுடன் அந்தக் கடிதங்களும் உடலுக்கும் மனதுக்குத் தெம்பு தந்தது.

    எடுத்துக்காட்டாக, சேலம் மாவட்டம் எடப்பாடி அருகில்இருக்கும் பெரியசோரகையிலிருந்து தங்கராஜ் எனும் உடன்பிறப்பு எழுதிய கடிதத்தில், எங்களின் சக்திவாய்ந்த திராவிட மாடல் முதலமைச்சரை எந்தச் சக்தியும் நெருங்காது எனக் குறிப்பிட்டு, மிகுதியான அன்போடு, தனக்குத் தெரிந்த கை வைத்திய முறைகளையெல்லாம் குறிப்பிட்டு அனுப்பியிருந்தது நெகிழ வைத்தது.

    மருத்துவர்களின் சிறப்பான சிகிச்சையின் காரணமாக நலமடைந்திருக்கிறேன் என்று தங்கராஜ் அவர்களுக்கு அதே அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன். இதுபோல எண்ணற்ற கடிதங்கள் என் உடல்நலன் மேல் அக்கறை கொண்டு எழுதப்பட்டு இருப்பதுடன், எனக்குள்ள பெரும் பொறுப்பையும் உணர்த்தக் கூடியதாக இருந்தது.

    முதலமைச்சர் என்ற பொறுப்பை ஏற்பதற்கு முன்பாகவே, மருத்துவ அறிவியல் மீது முழுமையான நம்பிக்கை வைத்து தடுப்பூசி போட்டுக் கொண்டேன் என்பதால் இந்தக் கொரோனா தொற்று பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. இருமலும் சளியும் மட்டும் இருந்ததால், மருத்துவர்களின் அறிவுரையை ஏற்று, மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற வேண்டியதாயிற்று.

    மருத்துவர் மோகன் காமேஸ்வரன், மருத்துவர் அரவிந்தன், மருத்துவர் எழிலன் எம்.எல்.ஏ., மருத்துவர் தீரஜ் என இந்த நான்கு மருத்துவர்களும் காவேரி மருத்துவமனையில் என்னை தினமும் நல்ல முறையில் கவனித்து, விரைந்துநலம் பெற உதவினார்கள்.

    அவர்களுக்கும் அவர்களுடன் துணைநின்ற மருத்துவக் குழுவினருக்கும் இந்தக் கடிதத்தின் வாயிலாகவும் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாளை (திங்கட்கிழமை) டிஸ்சார்ஜ் செய்து விடுவார்கள். இருப்பினும், ஒருவார காலத்திற்கு வீட்டில் இருந்து ஓய்வெடுக்கவேண்டும்

    என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். வீட்டில் இருக்க சம்மதித்தாலும், ஓய்வில் இருந்திட மனம் ஒப்பவில்லை. உங்களில் ஒருவனான என்னை நம்பி, தமிழ்நாட்டு மக்கள் அளித்துள்ள பெரும் பொறுப்பினை உணர்ந்து, முதலமைச்சர் என்ற முறையில் ஆற்ற வேண்டிய பணிகளை, கவனிக்க வேண்டிய கோப்புகளை, எடுக்க வேண்டிய முடிவுகளை, செயல்படுத்த

    வேண்டிய திட்டங்களை வீட்டில் இருந்தாலும் கவனித்தபடிதான் இருப்பேன். திங்கட்கிழமையன்று குடியரசுத்தலைவர் தேர்தல் நடைபெறுவதால், அதற்கான ஜனநாயகக் கடமையை ஆற்றுவதற்கு நேரில் சென்று வாக்களித்துவிட்டுத் திரும்ப வேண்டிய நிலையில் இருக்கிறேன்.

    அதே நாளில் (சூலை 18) தமிழ்நாடு நாள் கொண்டாடப்பட இருக்கிறது. நம்முடைய மாநிலத்திற்குப் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள் 'தமிழ்நாடு' என்ற பெயர் சூட்டி, அதற்கான தீர்மானத்தை முதலமைச்சராக அவர் சட்டமன்றத்தில் முன்மொழிந்து, ஆளுங்கட்சி - எதிர்க்கட்சி என்ற பேதமின்றி அனைத்துக் கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைந்து தீர்மானத்தை  நிறைவேற்றிய நாள்தான் சூலை 18.

    பேரறிஞர் அண்ணா அவர்கள் தமிழ்நாடு, தமிழ்நாடு, தமிழ்நாடு என்று மூன்று முறை சொல்ல, அனைத்து உறுப்பினர்களும் 'வாழ்க.. வாழ்க.. வாழ்க'என்று முழங்கி, ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் உணர்வை இந்தியத் துணைக் கண்டத்திற்கு உணர்த்திய நாள்.

    அந்த நாளினை, உங்களில் ஒருவனான எனது தலைமையிலான நமது அரசு, தமிழ்நாடு நாள் என ஆண்டுதோறும் கொண்டாடத் தீர்மானித்திருப்பதால், சென்னை கலைவாணர் அரங்கில் 'தமிழ்நாடு திருநாள்' என்ற நிகழ்வு திங்கட் கிழமையன்று நடைபெறுகிறது.

    சென்னை மாநிலத்திற்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்ட அந்த மகத்தான நாளுக்கான கொண்டாட்டத்தில் பங்கேற்கும் வகையில், வீட்டிலிருந்தபடியே காணொலியில் உரையாற்றிட இருக்கிறேன்.

    தமிழ்நாடு என்ற பெயரால் மட்டுமல்ல, திராவிட மாடல் ஆட்சியின் விளைவினாலும் நம் மாநிலத்திற்குப் பெருமைகளைச் சேர்த்துவருகிறோம். அதில் ஒரு பெருமையாகத்தான், 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் சென்னையில் நடைபெறவிருக்கிறது.

    அதற்கான முன்னேற்பாடுகளை நான் தொடர்ந்து கவனித்து வருகிறேன். செஸ் ஆட்டத்தின் முக்கியத்துவத்தை அனைவரும் உணர்ந்திடும் வகையில் முன்னோட்ட நிகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. காணொலியும் வெளியிடப்பட்டு இளைஞர்கள், மாணவர்களிடம் செஸ் விளையாட்டு குறித்த விழிப்புணர்வையும் ஆர்வத்தையும் அதிகரிக்கச் செய்திருக்கிறது.

    திருச்சியில் 2140 பேர் கலந்துகொண்ட செஸ்போட்டி உலக சாதனை புரிந்திருக்கிறது. பிரதமர் நரேந்திரமோடி சூலை 28 அன்று சென்னை நேரு விளையாட்டரங்கில் இந்த நிகழ்வினைத் தொடங்கி வைத்துச் சிறப்பிக்க இருக்கிறார்.

    பல்வேறு நாடுகளைச் சேர்ந்த உலகப்புகழ் பெற்ற செஸ்சாம்பியன்களும், இளம் வீரர்களும் பங்கேற்க இருக்கிறார்கள். அதற்கான ஆயத்தமும் ஆர்வமும் இப்போது வெளிப்படத் தொடங்கியிருப்பதைக் காண முடிகிறது.

    'வருக.. வருக.. தமிழ்நாட்டுக்கு வருக…என இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அமைந்த முன்னோட்டக் காணொலியைத் தொடர்ந்து, அதன் முழுப் பாடலும் அடங்கிய காணொலி விரைவில் வெளிவர இருக்கிறது.

    செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில், தமிழ்நாட்டு மக்களின் பேரன்புமிக்க வாழ்த்துகளால் முழுமையானஉடல்நலத்துடன் உங்களில் ஒருவனான நான் பங்கேற்பேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    முதலமைச்சர் என்ற பொறுப்பினைச் சுமந்து, நாட்டு நடப்பைக் கவனிப்பது போலவே திமுகஎன்ற ஜனநாயகப் பேரியக்கத்தின் தலைவர் என்ற பொறுப்பினையும் சுமந்திருப்பதால், கழகப் பணிகளையும் மருத்துவமனையிலிருந்தபடியே கவனித்து வந்தேன்.

    கழக அமைப்புத் தேர்தல்கள் ஒன்றிய அளவில் முடிவுற்று, ஓரிரு இடங்களில் ஏற்பட்ட சின்னச் சின்ன சிக்கல்களும் தீர்க்கப்பட்டு விரைவில் முழுமையான அறிவிப்பு வெளிவர இருக்கிறது.

    அதனைத் தொடர்ந்து, பகுதி கழகச் செயலாளர் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனையும் நடத்தி முடித்து, நமக்கான இலட்சியப் பாதையில் பயணித்து, மக்களுக்கான பணியினைக் கழகத்தினர் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்பதுதான் தலைவர் என்ற பொறுப்பில் இருக்கும் உங்களில் ஒருவனான என்னுடைய அன்பு வேண்டுகோள்.

    என் கடன் பணி செய்து கிடப்பதே என்று சைவத் தமிழ்நெறி பாடிய திருநாவுக்கரசர் கூறியது போல, 'என் பணி மக்கள் தொண்டாற்றுவதே' என்று உறுதியேற்று செயலாற்றி வருகிறேன். தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாகவும், உலக நாடுகளுடன் ஒப்பிடக்கூடிய மாநிலமாகவும் உயர்த்த வேண்டும் என்பது என் பெருங்கனவு.

    அதனை அடைய வேண்டுமென்றால் இப்போது உழைப்பதை விடவும் இன்னும் அதிகமாக உழைத்திட வேண்டும். நான் மட்டுமல்ல, நம்முடைய அரசில் பொறுப்பில் இருக்கும் அத்தனை பேரும் அயராது உழைத்திட வேண்டும். ஆளுங்கட்சி என்ற முறையில் கழகத்தினர் ஒவ்வொருவருக்கும் கூட அந்தப் பொறுப்பு இருக்கிறது.

    உயர்ந்த இலட்சியத்தை அடைய வேண்டுமென்றால் அதற்கான உழைப்பைக் கொடுத்தே ஆக வேண்டும். நம் பாதையில் நாம் உறுதியாகப் பயணிப்போம். சில அரைவேக்காடுகள் குறுக்கும் நெடுக்குமாக விமர்சனச் சேற்றை வீசியபடி ஓடும். நாம் சற்று ஒதுங்கிக் கொண்டு, அவற்றைக் கடந்து செல்ல வேண்டும்.

    நம்மைத் தாக்கி, அதன் மூலம் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ள நினைக்கும் வீணர்களுக்கு நாம் இடம் தரக்கூடாது. அரசியல் பாதையில் குறுக்கிடும் அத்தகைய பேர்வழிகளை, இடக்கையால் புறந்தள்ளி நாம் முன்னேறிச் செல்வோம்.

    நான் ஏற்கனவே திருவண்ணாமலையில் சொன்னபடி I Dont care என்று அவர்களை அலட்சியப்படுத்துங்கள். வம்படியாகப் பேசி விளம்பரம் தேடிக்கொள்ள நினைப்போரைத் தவிர்த்து, நம் வழியில் பயணிப்போம். மக்களுடன் நாம் எப்போதும் இருப்போம். மக்கள் நம்முடன் எப்போதும் இருப்பார்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பள்ளிக்கூடத்தில் அடிப்படை வசதிகள் எவ்வாறு அமைந்துள்ளது என்பதை முக ஸ்டாலின் பார்வையிட்டார்.
    • பள்ளியின் சமையலறை, கழிவறை பகுதிக்கும் சென்று முதலமைச்சர் முக ஸ்டாலின் பார்வையிட்டு வந்தார்.

    சென்னை:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று புழல் பகுதிக்கு சென்று எண்ணும் எழுத்தும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சி முடிந்ததும் சென்னை திரும்பும் வழியில் வடகரையில் உள்ள அரசு ஆதிதிராவிடர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    பள்ளிக்கூடத்தில் அடிப்படை வசதிகள் எவ்வாறு அமைந்துள்ளது என்பதை பார்வையிட்டார். பள்ளிக்கூடத்தில் உள்ள ஒவ்வொரு வகுப்பறைக்கும் சென்று பார்வையிட்டபடி வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 10-ம் வகுப்புக்குள் சென்று மாணவர்களுடன் அமர்ந்தார். அங்கு பாடம் எடுத்த ஆசிரியையிடம் நீங்கள் தொடர்ந்து பாடம் எடுங்கள் என்றார்.

    அதைத்தொடர்ந்து ஆசிரியை எவ்வாறு பாடம் சொல்லிக் கொடுக்கிறார் என்பதை சிறிது நேரம் கவனித்தார்.

    அதன் பிறகு பள்ளியின் சமையலறைக்கு சென்று பார்வையிட்டார். கழிவறை பகுதிக்கும் சென்று பார்வையிட்டு வந்தார்.

    எங்களை சீண்டிப் பார்த்தால் தி.மு.க.வின் ஊழல்களை வெளிப்படுத்துவோம் என்று அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார். #TNMinister #RajendraBalaji #ADMK #DMK
    விருதுநகர்:

    இலங்கை தமிழர் படுகொலையில் கூட்டணி அரசாக இருந்த தி.மு.க. மற்றும் காங்கிரசை தண்டிக்க வலியுறுத்தி அ.தி.மு.க. சார்பில் மாவட்ட அ.தி.மு.க. சார்பாக விருதுநகரில் ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    மாவட்ட அவைத் தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளரும் அமைச்சருமான கே.டி. ராஜேந்திரபாலாஜி, திரைப்பட இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், ராதாகிருஷ்ணன் எம்பி, சந்திரபிரபா எம்.எல்.ஏ. தலைமை கழக பேச்சாளர் முன்னாள் எம்.எல்.ஏ. அசோகன் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர்.

    அமைச்சர் கே.டி.ராஜேந் திர பாலாஜி பேசியதாவது:-

    இலங்கை தமிழர்களுக்கு தி.மு.க., காங்கிரஸ் செய்த துரோகங்களை நாங்கள் பட்டியலிட்டு பிட் நோட்டீஸ் அடித்து பொதுமக்களுக்கு வழங்கியுள்ளோம். ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அ.தி.மு.க. ஆட்சி இருக்காது இயங்காது என்று எண்ணியவர்களின் கனவு நிறைவேறவில்லை.

    அ.தி.மு.க.வில் பிளவு என்பது போல் ஒரு மாயத்தோற்றத்தை தி.மு.க.வினர் பேசி வருகின்றனர். ஆனால் தி.மு.க. வில்தான் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளது.

    எங்கள் மீது வீண் பழியை சுமத்தினால் நாங்கள் எப்படி சும்மா இருப்போம். நாங்கள் விசிலடித்து கட்சிக்கு வந்தவர்கள். எங்களை சீண்டி பார்த்தால் உங்கள் ஊழல், துரோகங்களை கிராமம் கிராமமாக சென்று பொதுமக்களிடம் எடுத்து சொல்வோம்.

    2 லட்சம் இலங்கை தமிழர்களை சுட்டுக்கொன்றது இலங்கை ராணுவம். அதற்கு உதவி செய்த அரசு அன்றைக்கு இருந்த காங்கிரஸ், தி.மு.க. அரசு. கருணாநிதி நினைத்திருந்தால் இலங்கை தமிழர்களை காப்பாற்றி இருக்க முடியும். காங்கிரஸ் ஆட்சிக்கு கொடுத்த ஆதரவை வாபஸ் பெறுவோம் என்று கருணாநிதி கூறியிருந்தால் ஈழத்தில் தமிழர்கள் காப்பாற்றப்பட்டு இருப்பார்கள்.

    தி.மு.க.வின் தமிழின துரோகத்தை தலைமுறைக்கும் தமிழக மக்கள் மன்னிக்கவோ மறக்கவோ மாட்டார்கள். இதனை மறைக்கும் விதமாக அ.தி.மு.க. ஆட்சி மீது ஸ்டாலின் ஊழல் குற்றச்சாட்டு கூறிவருகிறார்.

    எங்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு சொல்ல தி.மு.க.விற்கு எந்த யோக்கியதையும் கிடையாது.

    இந்திய வரலாற்றில் ஊழலுக்கு ஆட்சி கலைக்கப்பட்டது என்று சொன்னால் அது தி.மு.க. ஆட்சிதான் என்பது அனைவருக்கும் தெரியும். இதை யாராலும் மறுக்க முடியுமா? எங்களை விமர்சனம் செய்ய ஸ்டாலினுக்கு தகுதி கிடையாது.

    ஆர்.கே.நகர் போன்று திருவாரூர், திருப்பரங்குன்றத்தில் நாங்கள் ஏமாற மாட்டோம். ஏமாற்ற விடவும் மாட்டோம். திருப்பரங்குன்றம், திருவாரூரில் அ.தி.மு.க. வேட்பாளர்களின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது.

    அ.தி.மு.க.வின் பேஸ் மட்டம் வெயிட்டாக உள்ளது. பில்டிங்கில் ஒரு கிராஸ் அடிக்கும். அதை நாங்கள் சரி செய்து விடுவோம். தி.மு.க.வில் பில்டிங் நன்றாக இருந்தாலும் பேஸ்மட்டம் மிகவும் வீக்காக உள்ளது. இடைத்தேர்தலில் வெற்றி பெறுவது என்பது எங்களுக்கு கைவந்த கலை. மக்கள் எங்களுக்கு ஓட்டுப்போட தயாராக உள்ளனர். மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை கூட்டிய போதிலும் தமிழகத்தில் விலைவாசி கட்டுப்பாட்டிற்குள் வைக்கப்பட்டுள்ளது.

    தமிழக முதல்வரிடம் கோயம்பேடு மார்க்கெட்டில் கருணாஸ் கடை கேட்டார். ஏலத்தில்தான் எடுக்க முடியும் என்று முதல்வர் கூறியதால் கோபப்பட்டு ஆட்சிக்கு எதிராக பேச ஆரம்பித்து விட்டார். தமிழக மக்கள் என்றும் அ.தி.மு.க. அரசிற்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். #TNMinister #RajendraBalaji #ADMK #DMK
    ×