search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Navaskani M.P."

    • மீனவர்களை கடத்தல் காரர்களாக சித்தரிக்க முயலும் அண்ணாமலையின் பேச்சு கண்டனத்துக்குரியது.
    • இலங்கை கடற்படையை கூட கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு நமது நாடு பலவீனமாக இருக்கிறதா?

    ராமநாதபுரம் எம்.பி. நவாஸ் கனி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியதாவது:

    மீனவர்களை கடத்தல் காரர்களாக சித்தரிக்க முயலும் பாஜக மாநில தலைவர் திரு அண்ணாமலையின் பேச்சு கடும் கண்டனத்துக்குரியது.

    பாஜக தேர்தலுக்கு முன்பு கடல் தாமரை மாநாடு நடத்துவார்கள், மீனவர்களை சந்திப்பார்கள் தேர்தல் முடிந்த பின்பு ஒட்டுமொத்தமாக மீனவர்களை கைவிட்டு விடுவார்கள்.இதுதான் அவர்களின் வழக்கம்.

    தற்போது அனைத்திற்கும் மேலாக பாஜகவில் மாநிலத் தலைவர் திரு அண்ணாமலை மீனவர்களை கடத்தல் காரர்களாக சித்தரிக்க முயல்கிறார்.

    பத்திரிக்கையாளர் சந்திப்பிலேயே அதனை பகிரங்கமாக கூறுகிறார். அவரது எண்ணம் ஆபத்தானது,

    ஒன்றிய பாஜக அரசு நினைத்தால் மீனவர்களின் பிரச்சனைக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைத்திட முடியும், ஆனால் அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்காத பாஜக, பிரச்சனையை திசை மாற்றும் வண்ணம், பாதிக்கப்பட்ட மீனவர்களையே குற்றம் சாட்டும் வண்ணம், மீனவர்களையே அவமானப்படுத்துவது கடும் கண்டனத்துக்குரியது.

    நம்மை விட சிறிய நாடான இலங்கை கடற்படையை கூட கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு பலவீனமாக நம்முடைய நாட்டை பாஜக மாற்றி இருக்கிறதா என்ற கேள்வியும் எழுகிறது.

    தினம் தினம் செத்துப் பிழைக்கும் எங்களின் மீனவர்களின் இன்னல்களை தீர்க்க எந்தவித நடவடிக்கையும் எடுக்காத பாஜக, தொடர்ந்து ஐந்தாண்டுகளுக்கும் மேலாக நாடாளுமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் நாங்கள் எழுப்பிய குரலுக்கு செவிமடுக்காத பாஜக, தற்போது போலி நாடகம் போடுகிறது.

    பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை ஒட்டுமொத்த மீனவர்களையும் இழிவுபடுத்தும் வண்ணம் அவர்களை கடத்தல் காரர்கள் என்ற போர்வையில் பேசுவது கடும் கண்டனத்துக்குரியது, திரு அண்ணாமலை இதற்கு உடனடியாக பகிரங்க மன்னிப்பு கேட்டிட வேண்டும்.

    • காலம் காலமாக நல்லிணக்கத்தை உயர்த்தி பிடிக்கும் மண் தமிழக மண்.
    • தென் தமிழகத்தில் இந்து, முஸ்லிம் அனைத்து தரப்பட்ட மக்களும் உறவு முறைகளோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்

    மதுரை திருப்பரங்குன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பிரச்சனை தொடர்பாக விரைவில் சுமூக முடிவு எட்டப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இராமநாதபுரம் எம்.பி.யும் தமிழ்நாடு வக்பு வாரிய தலைவருமான நவாஸ்கனி கடிதம் எழுதியுள்ளார்.

    இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததாவது.,

    திராவிட மாடல் நல்லாட்சியின் மூலம் அனைத்து தரப்பட்ட மக்களையும் ஒருங்கிணைத்து நல்லிணக்க நல்லாட்சி தந்து கொண்டிருக்கும் தங்களுக்கு நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் மகிழ்கிறேன்.

    மதுரை திருப்பரங்குன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பிரச்சனை தங்களது மேலான கவனத்திற்கு வந்திருக்கும் என நம்புகிறேன்.

    அங்கு அமைந்திருக்கும் சிக்கந்தர் பாதுஷா தர்கா தமிழ்நாடு வக்ஃபு வாரியத்திற்கு உட்பட்டது என்ற வகையில், வக்ஃபு வாரிய தலைவர் என்ற முறையில் அங்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டேன்.

    திருப்பரங்குன்றம் மலை மற்றும் அதனை சுற்றியுள்ள மதுரை சுற்றுவட்டார பகுதி அனைத்து தரப்பட்ட மக்களும் ஒற்றுமையுடனும், நல்லிணக்கத்துடனும் தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

    வெளியூர்களில் இருந்து அரசியல் செய்யும் நோக்கத்தோடு செல்லும் ஒரு சில அரசியல் கட்சியினரினால் தான் அங்கு தேவையற்ற பதற்றமும் அமைதியின்மையும் பிரச்சனையும் ஏற்படுகிறது என்பதை அறிய முடிகிறது.

    எனவே மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அங்கு அமைந்துள்ள கோவில் நிர்வாகத்தினர், இந்து அறநிலையத்துறை, தர்கா நிர்வாகத்தினர், தமிழ்நாடு வக்ஃபு வாரியம், அரசு வருவாய் துறை ஆகியோர் உள்ளடக்கிய குழுவினை ஏற்படுத்தி, உயர்திரு மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் இக்குழுவோடு உரிய ஆலோசனை செய்து, விரிவான ஆய்வு மேற்கொண்டு இந்த பிரச்சனைக்கு சுமூகமான முடிவு, நிரந்தர தீர்வு எட்டப்பட வழிவகுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    காலம் காலமாக நல்லிணக்கத்தை உயர்த்தி பிடிக்கும் மண் தமிழக மண், அதுவும் குறிப்பாக மதுரையை உள்ளடக்கிய தென் தமிழகத்தில் இந்து, முஸ்லிம் அனைத்து தரப்பட்ட மக்களும் உறவு முறைகளோடு வாழ்ந்து கொண்டிருக்கும் நல்லிணக்கத்திற்கு முன்னுதாரணமான மண்.

    எனவே இதன் அமைதியை கெடுக்க நினைப்போருக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வண்ணம் சுமுகமான முடிவை விரைந்து எடுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    • பள்ளிவாசல் திறப்பு விழா; நவாஸ்கனி எம்.பி. பங்கேற்றார்.
    • ஏற்பாடுகளை எம்.ஆர்.எப், வாலிபர்கள் மற்றும் 18 வாலிபர்கள் ஜகாத் கமிட்டியினர் செய்திருந்தனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சாலை தெருவில் 18 வாலிபர்கள் தர்கா உள்ளது. இங்கு புதிய பள்ளிவாசல் திறப்பு விழா நடந்தது. ஓடக்கரை பள்ளி ஜமாத் மற்றும் புதுப்பள்ளி ஜமாத் தலைவர் யூசுப் சாகிப், முஸ்லீம் சங்க செயலாளர் சதக் அன்சாரி, துணைத் தலைவர் முஜீபுர் ரஹ்மான், அனைத்து ஜமா அத் கூட்டமைப்பு தலைவர் ஹாமீது, ஜகாத் கமிட்டி மூத்த நிர்வாகி ஜப்பார், சிகந்தர் பாட்ஷா ஆகியோர் தலைமை தாங்கினர்.

    ஓடக்கரை பள்ளி ஜமாத் பரிபாலன கமிட்டி நிர்வாகி சதக் இல்யாஸ் முன்னிலை வகித்தனர். ஜகாத் கமிட்டி கவுரவ ஆலோசகர் காதர் ஷாஹீப் வரவேற்றார். எழுத்தாளர் முகம்மது நஜீம் மரிக்கா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். சிறப்பு விருந்தினர்களாக நவாஸ்கனி எம்.பி., வக்பு வாரிய சேர்மன் அப்துல் ரஹ்மான், முஸ்லிம் லீக் மாநில பொருளாளர் ஷாஜகான் பங்கேற்றனர்.

    இதில் முன்னாள் எம்.எல்.ஏ. அசன் அலி, ஏஜே கமால், உமர், மாவட்ட தலைமை காஜி சலாஹுத்தின் ஆலிம், 18 வாலிபர்கள் ஜகாத் கமிட்டி தலைவர் ஜாகிர் உசைன், கீழக்கரை உஸ்வத்துன் ஹஸனா முஸ்லிம் சங்க தலைவர் யூசுப் சாஹிப், சங்க மேலாளர் அப்துல் ரசாக், குதுபுதீன் ராஜா, பசீர்தீன் கலந்து கொண்டனர். ஜக்காத் கமிட்டியின் பொருளாளர் சீனி முகம்மது நன்றி கூறினார்.முடிவில் 1000 கிலோ அரிசியில் நெய் சோறு தயார் செய்து கந்தூரி உணவாக வழங்கினர். விழா ஏற்பாடுகளை எம்.ஆர்.எப், வாலிபர்கள் மற்றும் 18 வாலிபர்கள் ஜகாத் கமிட்டியினர் செய்திருந்தனர்.

    • கமுதி சுந்தரபுரம் ஊரணி பகுதியில் நவாஸ்கனி எம்.பி. சலவை தொட்டிகள் நிதி வழங்கினார்.
    • ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் பொதுமக்கள் வசதிக்காக கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடையை அவர் திறந்து வைத்தார்.

    பசும்பொன்

    கமுதி-சுந்தரபுரம் பகுதியில், ஏராளமான சலவைத் தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள வண்ணாந்துறையில் சலவைத்தொட்டி வசதியின்றி மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இவர்களது நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று ராமநாதபுரம் எம்.பி. நவாஸ்கனி தனது தொகுதி நிதியில் இருந்து ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் சலவைத் தொட்டிகள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்தார்.

    அதன்படி சலவைத்தொட்டி கட்டிமுடிக்கப்பட்டு நேற்று முதல் பயன்பாட்டிற்கு வந்தன. இதன் தொடக்க விழாவில் நவாஸ்கனி எம்.பி., கமுதி பேரூராட்சி தலைவர் அப்துல்வஹாப் சகாராணி, கமுதி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தமிழ்ச்செல்விபோஸ், சுந்தரபுரம் ஜமாத்தை சேர்ந்தவர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் இதில் கலந்து கொண்டனர்.

    இதே போல் கீழராமநதி கிராமத்தில் நவாஸ்கனி எம்பி தனது நிதியில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் பொதுமக்கள் வசதிக்காக கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடையை அவர் திறந்து வைத்தார். இதில் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தமிழ்செல்விபோஸ் மற்றும் கிராம பொது மக்கள் இதில் கலந்து கொண்டனர்.

    • விவசாயிகளுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று நவாஸ்கனி எம்.பி. கூறினார்.
    • விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு நிவாரண உதவி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் எம்.பி. நவாஸ்கனி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தம் 1 லட்சத்து 90 ஆயிரம் ஹெக்டர் நிலப்பரப்பில் நெல், சிறுதானியங்கள், தென்னை மற்றும் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. இதில் 70 சதவீத நெற்பயிர்கள் வடகிழக்கு பருவ மழையையே நம்பி சாகுபடி செய்யப்படுகிறது.ராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை நம்பியே விவசாயம் நடைபெறுகிறது.

    2022-ம் ஆண்டில் வட கிழக்கு பருவமழை போதிய அளவில் பெய்யாத காரணத்தால் ஏறத்தாழ 1 லட்சம் ஹெக்டர் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் மழையின்றி கருகி வீணாகி உள்ளன. இதனால் விவசாயிகள் நஷ்டத்திற்கு உள்ளாகி உள்ளனர்.

    எனவே ராமநாதபுரம் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு நிவாரண உதவி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்து கடிதம் எழுதியுள்ளேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×