search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "paddy crops damaged"

    கடலூர் மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் 1000 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி நாசமானது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
    குறிஞ்சிப்பாடி:

    கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை விடிய, விடிய கொட்டி தீர்த்தது. கடலூர், சிதம்பரம், பண்ருட்டி, ஸ்ரீமுஷ்ணம், குறிஞ்சிப்பாடி, காட்டு மன்னார்கோவில், பெண்ணாடம், விருத்தாசலம், நெய்வேலி போன்ற பகுதிகளில் மழை பெய்தது.

    இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கியது. நேற்று இரவும் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. குளிர்ந்தகாற்று தொடர்ந்து வீசிக்கொண்டே இருந்தது.

    கடலூர் தேவனாம்பட்டினம், தாழங்குடா, அக்கரைக்கோரி போன்ற கடல் பகுதிகளில் இன்றும் கடல் அதிக சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால் பெரும்பாலான மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. படகுகள் கரையோரம் நிறுத்தப்பட்டது.

    கடலூர் நகரில் இன்று காலையிலும் மழை தூறிக்கொண்டே இருந்தது. சாலையின் இருபுறமும் மழைநீர் ஆறுபோல் ஓடியது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் பெரும் அவதியடைந்தனர்.

    கடலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் மழையால் ஸ்ரீமுஷ்ணம் மற்றும் அதன்சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் சம்பா நடவு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. தொடர்மழை பெய்து வருவதால் விவசாய நிலங்களில் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி பாதிப்படைந்துள்ளது.

    அதேபோல் நெல்லிக்குப்பம் பகுதியில் சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் நடப்பட்டிருந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது. அந்த பகுதியில் உள்ள வயல்களில் குளம்போல் தண்ணீர் தேங்கியுள்ளது. அதேபோல் பண்ருட்டி, சிதம்பரம் போன்ற பகுதிகளிலும் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின.

    குறிஞ்சிப்பாடி அருகே உள்ள திருவெண்ணைநல்லூர் கிராமத்தில் நேற்று முன்தினம் பெய்த மழையின் காரணமாக சுமார் 500 ஏக்கர் பரப்பளவிலான வயல் மழைநீரில் மூழ்கியது.

    இதில் நடப்பட்ட ஒருவாரமே ஆன நாற்றுகள் நீரில் அடித்து செல்லப்பட்டன.

    கடலூர் மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் 1000 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி நாசமானது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

    தொடர்ந்து மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிப்படைந்துள்ளது.
    ×