search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Panguni Brahmortsava Festival Chariot"

    • ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவ விழா கடந்த மாதம் 25-ந் தேதி முதல் தொடங்கி வருகிற 6-ந் தேதி வரை 13 நாட்கள் நடைபெற்று வருகிறது.
    • பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது.

    தென்திருப்பேரை:

    தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நவ திருப்பதி தலங்களில் 9-வது தலமான ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவ விழா கடந்த மாதம் 25-ந் தேதி முதல் தொடங்கி வருகிற 6-ந் தேதி வரை 13 நாட்கள் நடைபெற்று வருகிறது. கடந்த 27-ந் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. 5-ம் நாளான 31-ந் தேதி கருடசேவை நிகழ்ச்சியில் கருட வாகனத்தில் பொலிந்து நின்ற பிரானும், அன்ன வாகனத்தில் நம்மாழ்வாரும் பக்தர்களுக்கு காட்சியளித்து அருள் பாலித்தனர். திருவிழா நாட்களில் காலை, மாலை இரு வேளையும் பொலிந்து நின்ற பிரான் வீதியுலா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

    தேரோட்டம்

    பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது. உற்சவர் பொலிந்து நின்ற பிரான் சிறப்பு பூஜையுடன் காலையில் தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து காலை 8 மணி அளவில் நான்கு ரத வீதிகளில் தேர் வலம் வந்து மதியம் நிலையை அடைந்தது. அப்போது பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என கோசம் எழுப்பி தேரை இழுத்து வந்தனர். தேரோட்டத்தில் ஆழ்வார் திருநகரி எம்பெருமான் ஜீயர், சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை நிர்வாகிகள், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி மற்றும் பலர் கலந்து கொண்டனர். நாளை 5-ந் தேதி தீர்த்தவாரி நடைபெறுகிறது. எற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அஜித், தக்கார் கோவல மணிகண்டன் மற்றும் நிர்வாகத்தினர், காரிமாறன் கலை காப்பகத்தினர் செய்து இருந்தனர்.

    ×