search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pillayarpatti Temple"

    • இரவு புத்தாண்டிற்கான பஞ்சாங்கம் வாசிக்கப்படுகிறது.
    • பக்தர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து தரிசனம் செய்ய வேண்டும்.

    திருப்பத்தூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டியில் பிரசித்தி பெற்ற கற்பகவிநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தினந்தோறும் இங்கு வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். மேலும் ஆண்டுதோறும் தமிழ்புத்தாண்டு தினத்தன்று இங்குள்ள திருக்குளத்தில் தீர்த்தவாரி உற்சவம் நிகழ்ச்சி நடைபெறுவதும் வழக்கமாக இருந்து வருகிறது.

    இதையடுத்து தமிழ் புத்தாண்டு தினத்தையொட்டி இன்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு பூர்வாங்க பூஜை நடைபெற்று அதன் பின்னர் சுவாமி தரிசனம் தொடங்க உள்ளது. மேலும் காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் கோவில் திருக்குளத்தில் அஸ்திர தேவர் மற்றும் அங்குச தேவருக்கு தலைமை சிவாச்சாரியார் பிச்சைக்குருக்கள் தலைமையில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறுகிறது. தொடர்ந்து மூலவர் கற்பகவிநாயகர் தங்க கவசத்திலும், உற்சவர் வெள்ளி மூஷிக அலங்காரத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றனர்.

    தொடர்ந்து இரவு 7 மணிக்கு மூலவர் சன்னதி முன்பு புத்தாண்டு பஞ்சாங்கம் வாசிக்கப்படுகிறது. புத்தாண்டு தினத்தையொட்டி பக்தர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து தரிசனம் செய்ய வேண்டும். இதுதவிர கோவில் நிர்வாகம் சார்பில் காலை முதல் இரவு வரை குடிதண்ணீர், உணவு, சுகாதாரம் ஆகிய வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர்கள் கண்டவராயன்பட்டி எஸ்.தண்ணீர்மலை செட்டியார், காரைக்குடி சா.க.சுவாமிநாதன் செட்டியார் ஆகியோர் செய்து வருகின்றனர். இதேபோல் தமிழ்புத்தாண்டை முன்னிட்டு காரைக்குடி அருகே குன்றக்குடி சண்முகநாதபெருமான் கோவிலில் மடத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து பொன்னம்பல அடிகளார் தலைமையில் கோவில் வீதியை சுற்றி வந்து சண்முகநாதபெருமானுக்கு பாலாபிஷேகம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    • புத்தாண்டு தினத்தன்று அதிகாலை முதல் சாமி தரிசனம் செய்வார்கள்.
    • மூலவர் தங்க கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    திருப்பத்தூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டியில் கற்பக விநாயகர் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் புத்தாண்டு தினத்தன்று முதற்கடவுளாக கற்பக விநாயகர் உள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு கார், வேன், பஸ் உள்ளிட்ட சிறப்பு வாகனங்களில் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கமாக இருந்து வருகிறது.

    இந்நிலையில் புத்தாண்டு தினத்திற்காக இன்னும் 8 நாட்கள் மட்டும் உள்ளதால் வெளி மாவட்டங்களில் இருந்து இங்கு வரும் பக்தர்களின் வசதிக்கேற்ப பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து கோவில் பரம்பரை அறங்காவலர்கள் கண்டனூர் கருப்பஞ்செட்டியார், ஆத்தங்குடி முத்துப்பட்டினம் சுப்பிரமணியன் செட்டியார் ஆகியோர் கூறியதாவது:-

    ஆண்டுதோறும் ஆங்கில புத்தாண்டு தினத்தையொட்டி தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கமாக இருந்து வருகிறது. அதற்காக முதல் நாள் இரவு முதல் இங்கு ஏராளமான பக்தர்கள் வந்து தங்கியிருந்து புத்தாண்டு தினத்தன்று அதிகாலை முதல் சாமி தரிசனம் செய்வார்கள்.

    இதையடுத்து புத்தாண்டு தினத்தையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. மேலும் மூலவர் தங்க கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மூலவர் முகப்பு பகுதியின் அருகே உற்சவர் கற்பகவிநாயகர் வெள்ளி மூஷிக வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. பக்தர்கள் வரிசையாக நின்று சாமி தரிசனம் செய்யும் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. குடிநீர் வசதி, உணவு வசதி, மருத்துவ வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வாகனங்கள் நிறுத்தும் வகையில் பார்க்கிங் வசதியும் செய்யப்பட உள்ளது.

    மேலும் தமிழ்நாடு போக்குவரத்து கழகம் சார்பில் காரைக்குடி, திருப்பத்தூர், மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து பிள்ளையார்பட்டிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என தெரிகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • கோவிலில் வழக்கமாக நடக்கும் பூஜைகள் நடைபெறும்.
    • ஏராளாமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.

    திருப்பத்தூர் அருகே உள்ளது பிள்ளையார்பட்டி. இங்கு மிகவும் பிரசித்தி பெற்ற கற்பகவிநாயகர் கோவில் உள்ளது. குடவரை கோவிலாக உள்ள இக்கோவிலுக்கு தினந்தோறும் ஏராளாமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். ஆங்கில புத்தாண்டு, விநாயகர் சதுர்த்தி விழா காலங்கள் மற்றும் தமிழ் புத்தாண்டு உள்ளிட்ட விசேஷ காலங்களில் நாடு முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து தரிசனம் செய்து செல்வார்கள். ஆண்டுதோறும் வரும் கார்த்திகை மாதம் மற்றும் தைப்பூச காலங்களில் ஏராளமான ஐயப்ப பக்தர்களும், முருக பக்தர்களும் தமிழகம் முழுவதும் இருந்து இங்கு வருவது வழக்கம். இதற்காக கார்த்திகை மாதம் தொடக்கம் முதல் தைப்பூசம் வரை பகல் நேரங்களில் பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலில் நடை திறந்து தரிசனம் செய்ய அனுமதிக்கப்படும்.

    இந்நிலையில் இன்று கார்த்திகை மாதம் பிறப்பையொட்டி ஏராளமான ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருக்க தொடங்குவார்கள். இதேபோல் தை பூச திருவிழாவும் நெருங்கி வருவதையொட்டி பழனி கோவிலுக்கு செல்லும் முருக பக்தர்கள் விரதமிருந்து மாலை அணிவிக்க தொடங்குவார்கள்.

    பக்தர்களின் தரிசனத்திற்காக இன்று முதல் பிள்ளையார்பட்டி கோவில் பகல் முழுவதும் நடை திறக்கப்படுகிறது. இதுகுறித்து கோவில் பரம்பரை அறங்காவலர்கள் கண்டனூர் என். கருப்பஞ்செட்டியார் மற்றும் ஆத்தங்குடி முத்துப்பட்டினம் சி.சுப்பிரமணியன்செட்டியார் ஆகியோர் கூறியதாவது:-

    பக்தர்கள் விரதம் தொடங்கும் காலங்களில் பிள்ளையார்பட்டி கோவிலுக்கு பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும். அவர்களின் பயணம் தாமதமின்றி தொடரவும், கூட்ட நெரிசல் இல்லாமல் விரைந்து சாமி தரிசனம் செய்வதற்காகவும் இன்று முதல் கோவிலில் காலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடை சாத்தப்படாமல் பகல் முழுவதும் கோவில் திறந்து இருக்கும். அதேபோல் கோவிலில் வழக்கமாக நடக்கும் பூஜைகள் நடைபெறும். பக்தர்களுக்கு தேவையான குடிநீர், உணவு வசதி மற்றும் கார் பார்க்கிங் வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • இன்று சந்திர கிரகணம் நடக்கிறது.
    • திருப்பத்தூரில் உள்ளது பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவில்.

    திருப்பத்தூர் அருகே உள்ளது பிள்ளையார்பட்டி. இங்கு பிரசித்தி பெற்ற கற்பகவிநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து தரிசனம் செய்துவது வழக்கம்.

    இந்நிலையில் இன்று(செவ்வாய்க்கிழமை) சந்திர கிரகணத்தை முன்னிட்டு கோவில் நடை காலை 6 மணி்க்கு திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. அதன் பின்னர் காலை 11.30 மணிக்கு உச்சிகால பூஜை நடைபெற்று மதியம் 12 மணிக்கு நடை சாத்தப்படுகிறது. மீண்டும் சந்திரகிரகணம் முடிந்தவுடன் இரவு 7.30 மணிக்கு நடை திறந்து வழக்கம் போல் பூஜைகள் நடைபெற உள்ளது. இந்த தகவலை கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

    • பக்தர்களுக்கு திருக்குளத்தில் தண்ணீர் தீர்த்தமாக தெளிக்கப்பட்டது.
    • இரவு பஞ்சமூர்த்தி சுவாமிகள் வீதி உலா நடந்தது.

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள பிரசித்தி பெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினந்தோறும் காலையில் வெள்ளி கேடயத்திலும் இரவு மூஷிக, சிம்மம், பூத, கமல, ரிஷிப, மயில், குதிரை, யானை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் கற்பகவிநாயகர் எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. 6-ம் நாளில் கஜமுக சூரசம்ஹாரம், 9-ம் நாள் தேரோட்டம் நடந்தது.

    நேற்று 10-ம் நாள் திருவிழாவாக விநாயகர் சதுர்த்தியையொட்டி கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு மூலவர் தங்க அங்கியில் காட்சியளித்தார். தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. காலை 10 மணிக்கு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர் அலங்கரிக்கப்பட்டு கோவில் வளாகத்தில் சிறப்பு தீபாராதனை நடந்தது.

    அதன் பின்னர் உற்சவர், கோவில் திருக்குள கரையில் எழுந்தருளினார். அங்கு கோவில் தலைமை பிச்சைக்குருக்கள் தலைமையில் அங்குச தேவருக்கு பால், பன்னீர், தயிர் உள்ளிட்ட 16 திரவிய பொருட்கள் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. அங்கு அங்குச தேவருக்கு கோவில் திருக்குளத்தில் தீர்த்தவாரி உற்சவம், சிறப்பு தீபாராதனை நடந்தது. அப்போது பக்தர்களுக்கு திருக்குளத்தில் தண்ணீர் தீர்த்தமாக தெளிக்கப்பட்டது. அதன் பின்னர் கோவில் திருக்குளத்தை சுற்றி வந்த உற்சவர் கற்பகமூர்த்தி மீண்டும் கோவிலுக்கு எழுந்தருளினார்.

    தொடர்ந்து மதியம் மூலருக்கு அபிஷேகம் நடைபெற்று மதியம் 1.45 மணிக்கு 18 படி கொண்ட முக்குறுணி கொழுக்கட்டை படையலுக்காக திருப்பள்ளியில் இருந்து எடுத்து செல்லப்பட்டு மூலவருக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இரவு பஞ்சமூர்த்தி சுவாமிகள் வீதி உலா நடந்தது.

    • மூலவருக்கு சந்தனகாப்பு சாத்தப்பட்டு அதன் பின்னர் தேரோட்டம் நடக்கிறது.
    • நாளை மதியம் மூலவருக்கு முக்குறுணி கொழுக்கட்டை படையல் நிகழ்ச்சி நடக்கிறது.

    திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டியில் பிரசித்தி பெற்ற கற்பகவிநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு இந்த விழா கடந்த 22-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    விழாவையொட்டி தினந்தோறும் காலை வெள்ளி கேடயத்திலும், இரவு சிம்ம வாகனம், பூதவாகனம், கமல வாகனம், ரிஷப வாகனம், மயில் வாகனம், குதிரை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் கற்பக விநாயகர் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

    9-ம் திருவிழாவான இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை தேரோட்டம் நிகழ்ச்சி நடக்கிறது. முன்னதாக காலையில் கற்பக விநாயகர் திருத்தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் மாலை 4.30 மணிக்கு மூலவருக்கு சந்தனகாப்பு சாத்தப்பட்டு அதன் பின்னர் தேரோட்டம் நிகழ்ச்சி நடக்கிறது.

    பெரிய தேரில் கற்பக விநாயகரும், சிறிய தேரில் சண்டிகேசுவரரும் எழுந்தருளி வீதி உலா நடக்கிறது. இதில் கற்பகவிநாயகர் தேரை பக்தர்கள் வடம் பிடித்தும், சண்டிகேசுவரர் தேரை முழுக்க, முழுக்க பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

    முன்னதாக ஆண்டிற்கு ஒரு முறை மட்டும் மூலவருக்கு நடைபெறும் சந்தனகாப்பு அலங்காரம் இன்று மாலை 4.30 மணி முதல் இரவு 10 மணி வரை அலங்கார தரிசனம் நிகழ்ச்சி நடக்கிறது.

    நாளை (புதன்கிழமை) விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி காலையில் கோவில் திருக்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும், மதியம் மூலவருக்கு முக்குறுணி கொழுக்கட்டை படையல் நிகழ்ச்சியும், இரவு பஞ்சமூர்த்தி சுவாமி புறப்பாடு நிகழ்ச்சியும் நடக்கிறது. விழாவையொட்டி தினந்தோறும் இரவு சொற்பொழிவு, பரதநாட்டியம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

    விழாஏற்பாடுகளை கோவில் டிரஸ்டிகள் கண்டனூர் கருப்பஞ் செட்டியார், ஆத்தங்குடி முத்துப்பட்டிணம் சுப்பிர மணியன் செட்டியார் ஆகியோர் செய்து வருகின்றனர்.

    • நாளை மயில் வாகனத்தில் கற்பகவிநாயகர் வீதி உலா நடக்கிறது.
    • 30-ந்தேதி பக்தர்கள் வடம் பிடித்து இழுக்கும் தேரோட்டம் நடக்கிறது.

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள பிரசித்தி பெற்ற பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு விழா கடந்த 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி 2-ம் நாள் திருவிழா முதல் 8-ம் நாள் திருவிழா வரை தினந்தோறும் காலை வெள்ளி கேடயத்திலும், இரவு மூஷிக, சிம்மம், பூத, கமல, ரிஷப, மயில், குதிரை உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

    6-ம் திருவிழாவான இன்று(சனிக்கிழமை) மாலை கஜமுக சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தடை காரணமாக இந்த விழா கோவில் வளாகத்தில் எளிமையான முறையில் நடைபெற்ற நிலையில் இந்தாண்டு சிறப்பாக நடைபெற உள்ளது. இதையடுத்து இன்று மாலை 4.30 மணிக்கு கோவிலின் கிழக்கு கோபுரம் முன்பு கஜமுக சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கிறது.

    முன்னதாக விநாயகர் வெள்ளி யானை வாகனத்தில் எழுந்தருளுகிறார். தொடர்ந்து கோவில் வீதிகளில் வலம் வந்து கோவில் முன்பு சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது. 7-ம் திருவிழாவான நாளை(ஞாயிற்றுக்கிழமை) இரவு மயில் வாகனத்திலும், 8-ம் திருவிழா அன்று இரவு குதிரை வாகனத்திலும் கற்பகவிநாயகர் வீதி உலா நிகழ்ச்சி நடக்கிறது. 9-ம் திருவிழாவான வருகிற 30-ந்தேதி காலை திருத்தேருக்கு கற்பகவிநாயகர் எழுந்தருளல் நிகழ்ச்சியும், மாலை 4.30 மணிக்கு பக்தர்கள் வடம் பிடித்து இழுக்கும் தேரோட்டம் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    அன்றைய தினம் மாலை 4.30 மணி முதல் இரவு 10 மணி வரை ஆண்டிற்கு ஒரு முறை நடைபெறும் மூலவருக்கு சந்தனகாப்பு அலங்காரம் நிகழ்ச்சி நடக்கிறது. 31-ந்தேதி விநாயகர் சதுர்த்தி விழா அன்று காலை கோவில் குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும், மதியம் உச்சி கால பூஜை, மூலவருக்கு முக்குறுணி கொழுக்கட்டை படையல், இரவு பஞ்சமூர்த்தி சுவாமிகள் புறப்பாடு நிகழ்ச்சி நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை கோவில் டிரஸ்டிகள் கண்டனூர் நா.கருப்பஞ்செட்டியார், ஆத்தங்குடி சி.சுப்பிரமணியன் செட்டியார் ஆகியோர் செய்து வருகின்றனர்.

    • விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 30-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது.
    • விழாவையொட்டி பல கட்ட முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகிறது.

    திருப்பத்தூர் அருகே பிரசித்தி பெற்ற பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக இந்த விழா அரசின் விதிமுறைகளுக்குட்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடைபெற்றது. 2 ஆண்டுகளாக மக்கள் கூட்டத்தை தவிர்க்கும் வகையில் தேரோட்டம் மட்டும் நடைபெறவில்லை.

    இந்தாண்டு இந்த விழா நேற்று முன்தினம் முதல் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையடுத்து தினந்தோறும் இரவு பல்வேறு வாகனத்தில் சுவாமி எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 30-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது.

    2 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தாண்டு தேரோட்டம் நடைபெறுவதால் பக்தர்கள் கூட்டம் மிகவும் அதிக அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே தேர் பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்ட கண்ணாடி கூண்டை அகற்றி தற்போது தேர் சுத்தம் செய்யும் பணியும் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து தேரை சுற்றி பெயிண்ட் மூலம் வர்ணம் பூசி அழகுபடுத்தும் பணி நடக்கிறது.

    இதுகுறித்து கோவில் டிரஸ்டிகள் கண்டனூர் நா.கருப்பஞ்செட்டியார், ஆத்தங்குடி சி.சுப்பிரமணியன் செட்டியார் ஆகியோர் கூறியதாவது:- மிகவும் பிரசித்தி பெற்ற பிள்ளையார்பட்டி கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக தொடங்கி நடைபெற்று வருகிறது.

    விழாவையொட்டி தினந்தோறும் இரவு சொற்பொழிவு நிகழ்ச்சி, பட்டிமன்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. 2 ஆண்டுகளுக்கு பின்னர் தேரோட்டம் நடைபெற உள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தேரோட்டத்திற்கு தேர் தயார் நிலையில் உள்ளது. தற்போது அவற்றை வர்ணம் பூசி அழகுபடுத்தும் பணி நடக்கிறது.

    விழாவையொட்டி பல கட்ட முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகிறது. இதுதவிர வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்களின் வாகனங்கள் நிறுத்துவதற்கான இடம் ஒதுக்கப்பட்டு அதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது. மேலும், பக்தர்களுக்கு தேவையான குடிநீர், உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • தேரோடும் வீதிகளில் உள்ள தார்சாலை ஆங்காங்கே குண்டும், குழியுமாக காணப்பட்டது.
    • வருகிற 30-ந் தேதி மீண்டும் தேரோட்டம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    திருப்பத்தூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து கோவில்களில் பல்வேறு முன்னேற்பாடு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு கார், வேன், மோட்டார்சைக்கிளில் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கமாக இருந்து வருகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 9-வது திருநாள் அன்று தேரோட்டம் நடைபெறும். இதில் சுவாமி தேரை பக்தர்களும், சண்டிகேசுவரர் தேரை முழுக்க, முழுக்க பெண்களே இழுத்து வருவார்கள். கடந்த 2ஆண்டுகளாக கொரோனா பரவல் தடை காரணமாக பிள்ளையார்பட்டியில் விநாயகர் சதுர்த்தி விழா பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடைபெற்றது. அப்போது தேரோட்டம் நடக்கவில்லை.

    இதனால் 2 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது வருகிற 30-ந் தேதி மீண்டும் தேரோட்டம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. பிள்ளையார்பட்டி கோவிலை சுற்றி 4 ரத தேரோடும் வீதிகளில் உள்ள தார்சாலை ஆங்காங்கே குண்டும், குழியுமாக காணப்பட்டது.

    இந்நிலையில் தேரோட்டம் நடைபெறுவதையொட்டி திருப்பத்தூர் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை ஆய்வாளர்கள் சாத்தையா, சிவ சுப்பையா ஆகியோர் தலைமையில் சாலை பணியாளர்கள் ரோடு ரோலர் எந்திரம் கொண்டு கோவிலை சுற்றி தேரோடும் வீதி சாலையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    இதுதவிர முக்கியமான இடங்களில் புதிதாக தார் ஊற்றப்பட்டு சாலைகளை போடும் பணியையும் மேற்கொண்டனர். இதேபோல் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி பிள்ளையார்பட்டி கோவிலில் முகப்பு தோற்றம் மற்றும் ராஜகோபுரம், மூலவர் கோபுரம் உள்ளிட்ட இடங்களில் மின்விளக்கு அலங்காரம் அமைக்கும் பணிக்காக கம்புகளை கொண்டு உயர் கோபுரங்கள் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

    விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பல்வேறு முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருவதால் தற்போது விழா களைக்கட்ட தொடங்கி உள்ளது.

    • தேரோட்டம் 30-ந்தேதி நடக்கிறது
    • வருகிற 27-ந்தேதி மாலை கஜமுகசூரசம்ஹாரம் நடைபெறுகிறது.

    சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் பிரசித்தி பெற்ற கற்பக விநாயகர் கோவில் உள்ளது.மூலவராக விநாயகர் வீற்றிருக்கும் இக்கோவில் குடவரை கோவில் ஆகும். இங்கு ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி திருவிழா விமர்சியாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு வருகிற 31-ந் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது.

    இதையொட்டி இன்று பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை முன்னிட்டு விநாயகர், சண்டிகேஸ்வரர், அங்குசத்தேவர் ஆகியோர் சிறப்பு அலங்காரங்களில் கொடிமரம் அருகில் எழுந்தருளினர்.

    அதனை தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத காலை9.30 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட கொடி மரத்துக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. விழா நடக்கும் நாட்களில் தினமும் காலை, மாலையில் விநாயகர் பல்வேறு வாகனங்களில் வீதிஉலா வந்து அருள்பாலிக்கிறார்.

    அதன்படி இன்று மாலை தங்க மூஷிக வாகனத்தில் வீதிஉலா நடக்கிறது. விழாவில் 6-ம் நாளான 27-ந் தேதி கஜமுக சூரசம்ஹாரமும், சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 30-ந் தேதியும் நடக்கிறது. அன்றைய நாளில் சந்தனகாப்பு அலங்காரத்தில் விநாயகர் காட்சி அளிக்கிறார்.

    விநாயகர் சதுர்த்தி அன்று (31-ந் தேதி) காலையில் கோவில் குளத்தில் அங்குசத்தேவருக்கு தீர்த்தவாரியும், மதியம் மூக்குரணி மோதகம் மூலவருக்கு படையலும், இரவில் பஞ்சமூர்த்திகள் வீதி உலாவுடன் விழா நிறைவடைகிறது.

    விழா நடக்கும் நாளில் தினசரி மாலையில் கலை நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள், ஆன்மீகச் சொற்பொழிவுகள் நடைபெறும்.

    • சாமி தரிசனம் செய்த பக்தர்களுக்கு அவ்வப்போது தீர்த்தமும் தலையில் தெளிக்கப்பட்டது.
    • இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    திருப்பத்தூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டியில் கற்பக விநாயகர் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற குடவறை கோவிலான இக்கோவிலுக்கு தினந்தோறும் பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில் உலக மக்கள், நோயின்றி ஆரோக்கியமாக வாழவும், மழை பெய்து விவசாயம் செழிக்கவும், உலக நன்மை வேண்டியும் 1008 கலசாபிஷேக விழா கடந்த 13-ந்தேதி காலை கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.

    தொடர்ந்து சாந்தி ஹோமம், திரச ஹோமம், ப்ரவேசபலி, ரசோக்ன ஹோமம், நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தி உள்ளிட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் யாகசாலை மண்டபத்தில் 1008 கலசாபிஷேகங்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டு விழா தீர்த்தஸங்க்ரஹணம், மிருத்சங்கிரஹரணம், அங்குரார்ப்பணம், ரக்‌ஷா பந்தனம், கடஸ்தாபனமும், முதற்கால யாகசாலை பூஜைகள் தொடங்கி 6-வது கால யாகபூஜைகள் வரை நடைபெற்றது.

    பூர்ணாகுதி, சதுர்லெக்ச ஜெபதசாம்ச ஹோமங்களும், 6-வது கால மஹாபூர்ணாகுதி தீபாராதனையும், மதியம் 12 மணிக்கு கலசாபிஷேக தொடக்க அலங்காரம், தீபாராதனைகளும் நடந்தது. தொடர்ந்து 12.30 மணிக்கு யாகசாலையில் இருந்து கலசங்கள் புறப்படும் நிகழ்ச்சி தலைமை பிச்சைக்குருக்கள் தலைமையில் நடைபெற்றது. அப்போது மேளதாளங்கள் முழங்க அதிர்வேட்டுகள் ஒலித்தபடி கோவில் வடக்கு கோபுரம் நுழைவு வாயில் வழியாக சென்று மூலவருக்கு அபிஷேகம் தொடங்கியது.

    பின்னர் பிரகாரங்களில் உள்ள மற்ற தெய்வங்களுக்கும் அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் உற்சவர் கற்பகவிநாயகர், சண்டிகேசுவரர், அங்குச தேவருக்கும் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து 12.40 மணிக்கு தொடங்கிய அபிஷேகம் 3 மணி வரை நடைபெற்றது. சாமி தரிசனம் செய்த பக்தர்களுக்கு அவ்வப்போது தீர்த்தமும் தலையில் தெளிக்கப்பட்டது.

    இந்த விழாவில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், தர்மபுரம் மற்றும் துளாவூர் ஆதினம், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு ஆங்காங்கே தண்ணீர் மற்றும் மோர் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் டிரஸ்டிகள், கண்டனூர் கருப்பஞ் செட்டியார் மற்றும் ஆத்தங்குடி முத்துப்பட்டினம் சுப்பிரமணியன் செட்டியார் ஆகியோர் செய்திருந்தனர்.

    • திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டியில் உள்ளது ஸ்ரீகற்பகவிநாயகர் கோவில்.
    • இன்று மூலவருக்கு அபிஷேகம் நடைபெற்று பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

    திருப்பத்தூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டியில் ஸ்ரீகற்பகவிநாயகர் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற குடவறை கோவிலான இக்கோவிலுக்கு தினந்தோறும் பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து தரிசனம் செய்வது வழக்கம். இதையடுத்து உலக மக்கள் நோய், நோடியின்றி ஆரோக்கியமாக வாழவும், நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்கவும், உலக நன்மை வேண்டி 1008 கலசாபிஷேக விழா கடந்த 13- ந்தேதி காலை கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.

    இதைதொடர்ந்து சாந்தி ஹோமம், திரச ஹோமம், ப்ரவேசபலி, ரசோக்ன ஹோமம் நிகழ்ச்சியும் நடைபெற்றது. கடந்த 15-ந்தேதி நவக்கிரக ஹோமம், அஸ்த்ரமந்த ஐயம் நிகழ்ச்சி மற்றும் வாஸ்து சாந்தி நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து யாகசாலை மண்டபத்தில் 1008 கலசாபிஷேகங்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டு விழா தீர்த்தஸங்க்ரஹணம் நிகழ்ச்சியும், மிருத்சங்கிரஹரணம், அங்குரார்ப்பணம், ரக்‌ஷா பந்தனம், கடஸ்தாபனமும், இரவு முதற்கால யாகசாலை பூஜைகள், சதுர்லெக்ச ஜெபம் நடைபெற்றது.

    தொடர்ந்து முதற்கால பூர்ணாகுதியும், தீபாராதனையும் நேற்று முன்தினம் இரண்டாம் கால யாக பூஜைகளும், சதுர்லெக்ச ஜெபமும், மதியம் இரண்டாம் கால பூர்ணாகுதி மற்றும் தீபாராதனைகளும், மாலை 3-வது கால யாகசாலை பூஜைகளும், சதுர்லெக்ச ஜெபமும், இரவு 3-வது கால பூர்ணாகுதி மற்றும் தீபாராதனைகளும் நடைபெற்றது.

    நேற்று காலை 9 மணிக்கு 4-வது கால யாகசாலை பூஜைகளும், சதுர்லெக்ச ஜெபமும், மதியம் 12 மணிக்கு 4-வது கால பூர்ணாகுதி மற்றும் தீபாராதனையும், மாலை 5 மணிக்கு 5-வது கால யாக பூஜை மற்றும் சதுர்லெக்ச ஜெபமும், இரவு 8.30 மணிக்கு 5-வது கால பூர்ணாகுதி மற்றும் தீபாராதனையும் நடைபெற்றது.

    இன்று(செவ்வாய்க்கிழமை) 19-ந்தேதி காலை 8.30 மணிக்கு 6-வது கால யாக பூஜைகளும், 11 மணிக்கு சதுர்லெக்ச ஜெபதசாம்ச ஹோமங்களும், 6-வது கால மஹாபூர்ணாகுதி தீபாராதனையும், மதியம் 12 மணிக்கு கலசாபிஷேக தொடக்க அலங்காரம், தீபாராதனைகளும் தொடர்ந்து மூலவருக்கு அபிஷேகம் நடைபெற்று பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் டிரஸ்டிகள் கண்டனூர் கருப்பஞ் செட்டியார் மற்றும் ஆத்தங்குடி முத்துப்பட்டினம் சுப்பிரமணியன் செட்டியார் ஆகியோர் செய்து வருகின்றனர்.

    ×