search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pilliyarpatti"

    • அடகு நகைகளில் சுரண்டு மோசடி சம்பவம் நடைபெற்று வருகிறது.
    • பல கோடி ரூபாய் மோசடி நடைபெற்றுள்ளதாக வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

    திருப்பத்தூர்:

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டியில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் கிளை அமைந்துள்ளது. சுற்றுவட்டார கிராமங்களான குன்றக்குடி, நேமம், அரிபுரம், கே.ஆத்தங்குடி, வைரவன்பட்டி, சிறுகூடல் பட்டி, என்.புதூர், மாங்கொம்பு உள்ளிட்ட ஏராளமான கிராமங்களைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள் இந்த வங்கி மூலம் பயனடைந்து வருகிறார்கள்.

    குறிப்பாக தங்களது தங்க நகைகளை இந்த வங்கிக் கிளையில் அடகு வைத்து பணம் பெற்றுச் செல்வது வழக்கம்.

    இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நேமம் கிராமத்தைச் சேர்ந்த பெண் வாடிக்கையாளர் ஒருவர் தான் அடகு வைத்த நகையை பிள்ளையார்பட்டி வங்கிக் கிளையில் இருந்து மீட்டுச் சென்றார்.

    வீட்டிற்குச் சென்ற அவர் நகையை அணிந்து பார்த்த போது 4 கிராம் எடை குறைந்து இருப்பது கண்டு கடும் அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து அவர் வங்கிக் கிளையில் சென்று கேட்ட போது, பணியில் இருந்த அதிகாரிகள் உள்பட ஊழியர்கள் யாரும் சரிவர பதிலை அளிக்காமல் இருந்துள்ளனர். இதனால் அந்த வாடிக்கையாளர் அந்த வங்கிக் கிளையின் நகைகள் அடகு வைத்த தனக்கு தெரிந்தவர்கள் நண்பர்களிடம் இதுபற்றி கூறியுள்ளார்.

    இதையடுத்து சுற்றுப்புற கிராம மக்கள் அனைவரும் வங்கி முன்பு திரண்டனர். அப்போது அவர்கள் தங்கள் அடகு வைத்த நகையை எடை சரிபார்ப்பு மற்றும் மீட்பதற்காக வந்தபோது அனைவரது நகைகளிலும் இரண்டு கிராம் முதல் 8 கிராம் வரையிலான எடை குறைந்து இருப்பது வாடிக்கையாளர்களால் கண்டு பிடிக்கப்பட்டது.

    இதனால் பிள்ளையார்பட்டி வங்கிக் கிளை முன்பு தகவல் அறிந்து ஏராளமான வாடிக்கையாளர்கள் குவிந்ததால் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.

    தாங்கள் நகையை அடகு வைக்கும் போது வங்கியில் எழுதி தரப்பட்டிருக்கும் எடைக்கும், மீட்டுக் கொண்டு வந்த பிறகு சரிபார்க்கும் போது உள்ள எடைக்கும் எட்டு கிராம் வரையில் குறைவாக வித்தியாசம் காணப்படுவதாக கிராம மக்கள் குற்றம் சாட்டினர்.

    இந்த வங்கிக் கிளையில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண், பெண் வாடிக்கையாளர்கள் கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக நகையை அடகு வைத்து பணம் பெற்று வருகிறார்கள்.

    இந்தநிலையில் கடந்த ஒரு வருட காலமாக இது போன்று அடகு நகைகளில் சுரண்டு மோசடி சம்பவம் நடைபெற்று உள்ளதாக வாடிக்கையாளர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

    நகைகளை வைக்கும் போது வங்கியில் தரப்படும் கணக்கு சான்று அட்டையிலும் மோசடியாக ஏற்கனவே எழுதப்பட்டிருப்பதை வெள்ளை மை கொண்டு அழித்து புதிதாக எடை எழுதி தரப்பட்டிருப்பதாக ஆதாரத்துடன் வாடிக்கையாளர்கள் குற்றம் சுமத்தி உள்ளனர்.

    வங்கிகளில் அடகு வைத்த வாடிக்கையாளர்களின் அனைவரது நகைகளிலும் எடை குறைந்து காணப்படுவதால் இதன் மூலம் பல கோடி ரூபாய் மோசடி நடைபெற்று இருப்பதாக வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

    இதுகுறித்து வங்கி கிளையின் மூத்த மேலாளரிடம் கேட்ட போது, அனைத்து வாடிக்கையாளர்களின் நகை எடை குறைவது சம்பந்தமாக கணக்கீடுகள் நடைபெற்று வருவதாகவும், போலீசில் முறையாக புகார் அளிக்கப்பட்டு இருப்பதாகவும், மண்டல அலுவலகத்திற்கும், தலைமை அலுவலகத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு அங்கிருந்து சிறப்பு அதிகாரிகள் குழு வங்கிக்கு வருகை தர இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

    மேலும் வாடிக்கையாளர் களுக்கு எந்த விதமான நஷ்டமும் இன்றி அவர்களுக்கு காப்பீட்டுத் தொகை வழங்க விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மேலும் முறைகேடு நடந்திருப்பது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் அதுவரை வாடிக்கையாளர்கள் சற்று பொறுமை காக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

    • 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு திருவனந்தால் பூஜை நடைபெற்றது.
    • பக்தர்களுக்கு புனிதநீர் தெளிக்கப்பட்டது.

    திருப்பத்தூர்:

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டியில் பிரசித்தி பெற்ற கற்பகவிநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தமிழ்ப்புத்தாண்டு தினத்தையொட்டி சிறப்பு அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகளும், கோவில் திருக்குளத்தில் தீர்த்தவாரி உற்சவமும் நடைபெறுவது வழக்கம்.

    அதேபோல நேற்று தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு திருவனந்தால் பூஜை நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    அதைத்தொடர்ந்து மூலவர் கற்பகவிநாயகர் தங்க கவசத்திலும், உற்சவர் தங்க மூஷிக வாகனத்திலும் அருள்பாலித்தனர். காலை 9.30 மணிக்கு அங்குச தேவர் மற்றும் அஸ்திர தேவர் புறப்பாடாகி கோவில் திருக்குளத்தில் எழுந்தருளினர்.

    தீர்த்தவாரி உற்சவம்

    அங்கு பிள்ளையார்பட்டி பிச்சைக்குருக்கள் தலைமையில் அங்குச தேவர் மற்றும் அஸ்திர தேவருக்கு பால், பன்னீர், இளநீர், திருமஞ்சனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் ஸ்ரீதர் குருக்கள் அங்குச தேவர் மற்றும் அஸ்திர தேவரை எடுத்துச் சென்று திருக்குளத்தில் 3 முறை மூழ்கி தீர்த்தவாரி உற்சவத்தை நடத்தினார். தொடர்ந்து அங்கு நின்ற பக்தர்களுக்கு புனிதநீர் தெளிக்கப்பட்டது.

    இரவு 7 மணிக்கு மூலவர் சன்னதி முன் மண்டபத்தில் சிவாச்சாரியார்கள் புதிய புத்தாண்டிற்கான பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    மேலும் பக்தர்களுக்கு உணவு, குடிநீர், மருத்துவம் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டிருந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர்கள் காரைக்குடி ராம.மெய்யப்பன் செட்டியார், பூலான்குறிச்சி சுப.முத்துராமன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • சதுர்த்தி விழாவையொட்டி நேற்று சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலில் நடைபெற்று வரும் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி நேற்று சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    திருப்பத்தூர் அருகே உள்ளது பிள்ளையார்பட்டி. இங்கு பிரசித்தி பெற்ற கற்பகவிநாயகர் கோவில் உள்ளது. குடவரை கோவிலான இக்கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. மேலும் விழாவையொட்டி தினந்தோறும் மூஷிக வாகனம், சிம்ம வாகனம், பூதவாகனம், கமல வாகனம், ரிஷப வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் கற்பகவிநாயகர் எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது.

    விழாவில் 6-ம் திருநாளான நேற்று சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவையொட்டி நேற்று மாலை 4 மணி முதல் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. அதன் பின்னர் மாலை 5.30 மணிக்கு உற்சவர் வெள்ளி யானை வாகனத்திலும், சண்டிகேசுவரர் வெள்ளி ரிஷப வாகனத்திலும் எழுந்தருளி கோவில் கிழக்கு கோபுர வாசல் பகுதியில் தனித்தனியான சப்பரத்தில் எழுந்தருளினர். பின்னர் மூலவரிடம் இருந்து பூஜிக்கப்பட்ட தந்தத்தை கொண்டு வந்து உற்சவர் அருகே வைக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    தொடர்ந்து மாலை 6.15 மணிக்கு சூரனை வதம் செய்ய புறப்பட்ட கற்பகவிநாயகர் கோவிலை சுற்றி வந்து தெப்பக்குளம் எதிரே அமைக்கப்பட்ட பந்தலில் காட்சியளித்து சூரனை வதம் செய்தார். முன்னதாக சூரனை வதம் செய்ய வந்த கற்பகவிநாயகரை அப்பகுதி பெண்கள் பூக்கோலமிட்டு வரவேற்றனர். சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நிறைவு பெற்ற பின்னர் சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நிகழ்ச்சி காட்டப்பட்டது. 7-ம் நாளான இன்று இரவு மயில் வாகனத்திலும், 8-ம் நாளான நாளை வெள்ளி குதிரை வாகனத்திலும் கற்பகவிநாயகர் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    விழாவில் 9-ம் திருநாளான 18-ந்தேதி மாலை தேரோட்டமும் தொடர்ந்துமாலை 4.30 மணி முதல் இரவு 10 மணி வரை மூலவர் சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். 19-ந்தேதி 10-ம் நாளன்று காலை தங்க மூஷிக வாகனத்தில் உற்சவர் கற்பகவிநாயகர் கோவில் திருக்குளத்தில் எழுந்தருளி அங்கு தீர்த்தவாரி உற்சவம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மதியம் மூலவருக்கு மோதகம் (கொளுக்கட்டை) படையல் செய்யும் நிகழ்ச்சியும், இரவு பஞ்சமூர்த்தி சுவாமிகள் புறப்பாடு நிகழ்ச்சியுடன் சதுர்த்தி விழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர்கள் கண்டவராயன்பட்டி தண்ணீர்மலை செட்டியார் மற்றும் காரைக்குடி சாமிநாதன் செட்டியார் ஆகியோர் செய்து வருகின்றனர்.

    • கற்பகவிநாயகர் கோவிலில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா 10 நாட்கள் நடைபெறும்.
    • விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    திருப்பத்தூர்:

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா 10 நாட்கள் நடைபெறும். இந்த விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    காலை 10 மணிக்கு கொடி கோவிலை சுற்றி வந்தது. 11 மணிக்கு கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு விழா தொடங்கியது. முன்னதாக கொடிமரம் அருகே வெள்ளி மூஷிக வாகனத்தில் உற்சவர் கற்பகவிநாயகரும், வெள்ளி ரிஷப வாகனத்தில் சண்டிகேசுவரரும் எழுந்தருளினர். கொடிமரத்திற்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    முதல் நாள் திருவிழாவான நேற்று கற்பகவிநாயகர் மூஷிக வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்தார். 2-ம் நாள் திருவிழாவான இன்று(திங்கட்கிழமை) இரவு சிம்ம வாகனத்திலும், 12-ந்தேதி பூத வாகனத்திலும், 13-ந்தேதி கமல வாகனத்திலும், 14-ந்தேதி இரவு ரிஷப வாகனத்திலும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.வருகிற 15-ந்தேதி மாலை 6 மணிக்கு சூரசம்ஹாரம் நடக்கிறது. 16-ந்தேதி மயில் வாகனத்திலும், 17-ந்தேதி குதிரை வாகனத்திலும் கற்பகவிநாயகர் வீதி உலா நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    இதேபோல் 18-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது. முன்னதாக அன்றைய தினம் மாலை 4.30 மணி முதல் இரவு 10 மணி வரை மூலவர் சந்தனகாப்பு அலங்காரத்தில் காட்சியளிக்கிறார். ஆண்டிற்கு ஒரு நாள் மட்டுமே இவ்வாறு மூலவர் சந்தனகாப்பு அலங்காரத்தில் காட்சியளிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. 19-ந்தேதி விநாயகர் சதுர்த்தி தினத்தன்று தீர்த்தவாரி உற்சவம் நடைபெறுகிறது. அன்றைய தினம் பகலில் மூலவருக்கு மோதகம் படையல் நிகழ்ச்சியும், இரவு 11 மணிக்கு பஞ்சமூர்த்தி சுவாமிகள் புறப்பாடும் நடக்கிறது. இத்துடன் சதுர்த்தி விழா நிறைவு பெறுகிறது.

    விழாவில் கலை நிகழ்ச்சிகள், ஆன்மிக சொற்பொழிவுகள் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர்கள் கண்டவராயன்பட்டி தண்ணீர்மலை செட்டியார், காரைக்குடி சாமிநாதன் செட்டியார் ஆகியோர் செய்து வருகின்றனர்.

    • திரு வலம்- வலம் வந்த விநாயகர் திரு வீழி மிழலை-படிக்காசு விநாயகர்
    • மதுரை-முக்குறுணி பிள்ளையார் திரு வலஞ்சுழி-வெள்ளை விநாயகர்

    பிள்ளையாருக்கு விநாயகர் சதுர்த்தி அன்று மட்டும் துளசி மாலை அணிவிக்கப்படுகிறது. அது ஏன் தெரியுமா? அதற்கு ஒரு கதை கூறப்படுகிறது.

    விநாயக பெருமானை திருமணம் செய்ய வேண்டும் என்று துளசி பல்லாண்டு காலம் தவம் இருந்தாள். எப்போது என்னை மணம் முடிப்பீர்கள் என்று விநாயகரை கேட்டுக்கொண்டே இருந்தாள்.

    இதனால் கோபம் அடைந்த விநாயக பெருமான் துளசியை பார்த்து நீ ஒரு செடியாக மாறக் கடவது என்று கூறினார். இதை கேட்ட துளசி மனம் வருந்தினாள். விநாயகரை பார்த்து என்னை இப்படி சபித்து விட்டீர்களே, ஒரு நாளேனும் உங்கள் திரு மேனியை நான் தாங்கியிருக்க அருள் புரிய வேண்டும் என்று வேண்டினாள்.

    அவளது வேண்டுகோளை விநாயகர் ஏற்றுக்கொண்டார். விநாயகர் சதுர்த்தி அன்று மட்டும் என் திரு மேனியில் நீ தங்கி இருக்கலாம் என்று வரம் கொடுத்தார். அதன்படி விநாயகர் சதுர்த்தி அன்று மட்டும் பூஜையின்போது விநாயகருக்கு துளசி மாலை அணிவிக்கப்படுகிறது.

    பிள்ளையார் சிறப்பு பெற்ற தலங்கள்

    எல்லா ஆலயங்களிலும் விநாயகருக்கு தனி இடம் உண்டு. ஆனாலும் பிள்ளையார் சிறப்பாக வீற்றிருக்கும் தலங்கள் பல உள்ளன. அவை வருமாறு:-

    திருவாவடு துறை-அழகிய விநாயகர்

    திருவையாறு-ஓலமிட்ட விநாயகர்

    விருத்தாசலம் ஆழத்து பிள்ளையார்

    திருச்சி - உச்சி பிள்ளையார்

    திருக்கடவூர்-கள்ள வாரண பிள்ளையார்

    திரு முருகன் பூண்டி -கூப்பிடு பிள்ளையார்

    வேதாரண்யம்-சிந்தாமணி கணபதி

    கீழ்வேளூர்-சுந்தர கணபதி

    அன்பிலாத்துறை -செவி சாய்த்த பிள்ளையார்

    திரு நள்ளாறு-சொர்ண விநாயகர்

    செங்காட்டாங்குடி-கணபதீஸ்வரர்

    திரு வலம்- வலம் வந்த விநாயகர்

    திரு வீழி மிழலை-படிக்காசு விநாயகர்.

    பாண்டிச்சேரி- மணக்குள விநாயகர்

    திரு விடை மருதூர்-படித்துறை விநாயகர்

    திருநாரையூர்-பொல்லா பிள்ளையார்

    திருவெண்ணைநல்லூர்- பொள்ளா பிள்ளையார்

    திருவாரூர்- மாற்றுரைத்த பிள்ளையார்.

    மதுரை-முக்குறுணி பிள்ளையார்

    திரு வலஞ்சுழி-வெள்ளை விநாயகர்

    பிள்ளையார் பட்டி-கற்பக விநாயகர்

    விநாகர் சதுர்த்தி கொண்டாடுவது எப்படி?

    ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி தினம் விநாயகரின் அவதார தினமாக அவரது பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் அவர் பூலோகத்திற்கு வந்து தனது பக்தர்களை நேரடியாக காண்பார் என்பது ஐதீகம்.

    விநாயகர் சதுர்த்தியை யொட்டி சிலைகளை அவரவர் விருப்பத்திற்கு ஏற்றபடி முதல் நாள் மாலையோ அல்லது விநாயகர் சதுர்த்தி அன்றோ வாங்கி வர வேண்டு ம். சுடாத களி மண்ணால் ஆன விநாயகர் பொம்மைகளை வாங்கி வருவது சிறப்பு.

    ஒரு பலகையை சுத்தப்படுத்தி அதில் கோலமிட்டு அதில் பிள்ளையாரை அமர வைக்க வேண்டும். விநாயகர் சதுர்த்தி நாளில் காலையிலே எழுந்து குளிக்க வேண்டும்.

    பஞ்சினால் செய்த மாலையை இடையிடையே சிவப்பு நிறம் இருக்குமாறு குங்குமம் தடவி தயார் செய்து வைத்துக் கொள்ளவேண்டும்.

    அருகம்புல். எருக்க மாலை போன்றவற்றை வாங்கி வைத்து கொள்ளவேண்டும். பூக்கள், அட்சதை, குங்குமம், ஆகியவைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

    பிள்ளையாருக்கு கொழுக்கட்டையும் தேங்காயும் மிக முக்கியம். எனவே கொழுக்கட்டை தயார் செய்து வைத்து கொள்ளவேண்டும். கொழுக்கட்டை குறைந்த பட்சம் 21 இருக்க வேண்டும். உப்பு கொழுக்கட்டை, சுண்டல், அப்பம் ஆகியவைகளை தயார் செய்து வைத்துக்கொண்டு பூஜையை ஆரம்பிக்க வேண்டும்.

    பூஜை தொடங்கும் முன் விநாயகர் சிலையில் குண்டு மணியை பதித்து கண் திறந்து சந்தனம், குங்குமம், திருநீறு பொட்டு இடவேண்டும். பின்னர் பூப்போட்டு எருக்கு மாலை அணிவிக்க வேண்டும். ஒரு தாம்பளத்தில் வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய் வைக்க வேண்டும்.

    அதோடு விளாம் பழத்தை வெல்லத்தோடு கலந்து பழ பச்சடியும் வைக்க வேண்டும்.கணேச பஞ்ச ரத்தினம், விநாயகர் அகவல் சொல்ல வேண்டும்.பின்னர் ஓம் சித்தி விநாயக நம, ஓம் ஸ்ரீமகா ஹணபதியே நம என்று சொல்லி தூப தீபங்கள் காட்டி அனைவரும் வணங்க வேண்டும்.

    எல்வோரும் வணங்கியதும் தயார் செய்து வைத்திருக்கும் கொழுக்கட்டைகளையும் இதர பலகாரங்களையும் நிவேதனம் செய்யவேண்டும் நிவேதனம் செய்யப்பட்ட பிரசாதங்களை முதலில் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். இதையடுத்து பெரியவர்கள் உண்ண வேண்டும். இரவு சந்திர தரிசனம் செய்யவேண்டும். விநாயகர் சதுர்த்தியன்று இரவு சந்திரனை தரிசித்தால்தான் பூஜை முழுமை பெறும்.

    இதையடுத்து மறு நாளான பஞ்சமி அன்றோ அல்லது 2 நாட்களுக்கு பிறகோ சஸ்டி அன்று புனர் பூஜை செய்யலாம். தூப தீபம் காட்டி மந்திரம் சொல்லி வணங்கி சிறிது பால் அல்லது பாயாசம் நிவேதனம் செய்து விநாயகர் சிலையை வடக்கு பக்கமாக நகர்த்தி வைக்க வேண்டும். பின்னர் பிள்ளையார் சிலையை எடுத்து சென்று கடலிலோ அல்லது நதியிலோ குளத்திலோ கரைக்க வேண்டும்.

    • பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் இன்று மாலை தேரோட்டம் நடக்கிறது.
    • தீர்த்தவாரி- கொழுக்கட்டை படையல் நிகழ்ச்சி நாளை நடக்கிறது

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள பிள்ளையார்பட்டியில் பிரசித்தி பெற்ற கற்பக விநாயகர் கோவில் உள்ளது. குடவரை கோவிலான இங்கு மூலவராக விநாயகப் பெருமான் காட்சியளிக்கிறார். இந்த கோவிலில் வருடந்தோறும் விநாயகர் சதுர்த்தி விழா 10 நாட்கள் விமரிசையாக நடைபெறும்.

    இந்த ஆண்டுக்கான சதுர்த்தி விழா கடந்த 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா தொடங்கிய நாளிலிருந்து தினந்தோறும் காலையில் வெள்ளிக் கேடயத்திலும், இரவில் பல்வேறு வாகனங்களிலும் கற்பக விநாயகர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார்.

    விழாவில் கடந்த 27-ந் தேதி கஜமுக சூரசம்காரம் நடந்தது. நேற்று குதிரை வாகனத்தில் கற்பக விநாயகர் எழுந்தருளினார். முன்னதாக பிட்டுக்கு மண் சுமந்த லீலை விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று மாலை நடக்கிறது. 4‌.30 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில் கற்பக விநாயகர் வீதி உலா வருகிறார். சிறிய தேரில் சண்டிகேஸ்வரர் வலம் வருகிறார். இதனை பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுப்பார்கள்.

    தேரோட்டத்தை முன்னிட்டு இன்று காலை விநாயகருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. அதன் பின் விநாயகர் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நடை பெறாமல் இருந்த தேரோட்டம் இந்த ஆண்டு இன்று மாலை நடை பெறுவதால் பக்தர்கள் அதிக அளவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போட ப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு வருடமும் விநாயகர் சதுர்த்தி தினத்தன்று மூலவரான கற்பக விநாயகருக்கு சந்தன காப்பு அலங்காரம் நடக்கும் அதன்படி. நாளை சதுர்த்தி விழாவை முன்னிட்டு இன்று (30-ந் தேதி) மாலை 4.30 மணிக்கு சந்தன காப்பு சாத்தப்பட்டு கற்பக விநாயகர் காட்சியளிப்பார். இரவு 10 மணி வரை இந்த தரிசனம் நிகழ்ச்சி நடைபெறும்.

    விநாயகர் சதுர்த்தியான நாளை காலை கோவில் திருக்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கிறது. பிற்பகலில் மூலவருக்கு முக்குறுணி கொழுக்கட்டை படையல் நிகழ்ச்சியும், இரவு பஞ்ச மூர்த்தி சுவாமி புறப்பாடும் நடக்கிறது.

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று முதல் பிள்ளையார்பட்டியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு சாமி தரிசனம் செய்வார்கள். இதையொட்டி பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகளை மாவட்டம் நிர்வாகம் செய்து வருகிறது.

    • பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் கஜமுக சூரசம்ஹாரம் நடந்தது.
    • 28-ந் தேதி இரவு மயில் வாகனத்திலும், 29-ந் தேதி குதிரை வாகனத்திலும் வீதி உலா நடக்கிறது.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டியில் பிரசித்தி பெற்ற கற்பக விநாயகர் கோவில் உள்ளது. குடவரை கோவிலான இங்கு ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி பெருவிழா 10 நாட்கள் விமரிசையாக நடைபெறும்.

    இந்த ஆண்டுக்கான விழா கடந்த 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா தொடங்கிய நாள் முதல் தினமும் காலை மற்றும் இரவில் கற்பக விநாயகர் குதிரை, மயில், சிம்மம், பூதம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வருகிறார். நேற்று கமல வாகனத்தில் விநாயகர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    விழாவில் 6-ம் நாளான நாளை (27-ந் தேதி) கஜமுக சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது.

    கோவிலின் வடக்கு கோபுரம் அருகே அன்று மாலை 4.30 மணிக்கு கற்பக விநாயகர் எழுந்தருளி அசுரனை வதம் செய்கிறார்.

    28-ந் தேதி இரவு மயில் வாகனத்திலும், 29-ந் தேதி குதிரை வாகனத்திலும் வீதி உலா நடக்கிறது. 30-ந் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. அன்று மாலை சந்தன காப்பு அலங்காரத்தில் கற்பக விநாயகர் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். விநாயகர் சதுர்த்தியான 31-ந் தேதி கோவில்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி, மூலவருக்கு ராட்சத கொழுக்கட்டை படைக்கும் நிகழ்ச்சி உள்ளிட்டவை நடக்கிறது.

    ×