search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pollachi assault case"

    பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசுக்கு ஜாமின் வழங்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. #PollachiAbuseCase #PollachiAssaultCase #JusticeforWomen
    பொள்ளாச்சி:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஜோதிநகரை சேர்ந்தவர் சபரி என்கிற ரிஷ்வந்த் (வயது 25).சிவில் என்ஜினீயர். இவர் பொள்ளாச்சி பகுதியில் வசிக்கும் தனியார் கல்லூரி மாணவியுடன் பேஸ்புக்கில் பழகி வந்துள்ளார். நாளடைவில் தொலைபேசியில் பேசும் அளவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் 12-ந் தேதி கல்லூரி மாணவியை ஊஞ்சவேலாம்பட்டியில் காத்திருக்குமாறு சபரி தெரிவித்துள்ளார். ஊஞ்சவேலாம்பட்டிக்கு தனது நண்பர்கள் வசந்தகுமார் (24), சதீஸ்குமார் (28) திருநாவுக்கரசு ஆகியோருடன் காரில் சென்ற சபரி காரில் மாணவியை தாராபுரம் சாலையில் அழைத்து சென்று செல்போனில் ஆபாச வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது.

    அந்த புகைப்படத்தை காட்டி மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடமுயன்றுள்ளனர். மேலும் மாணவியின் கழுத்தில் இருந்த ஒரு பவுன் நகையை பறித்து கொண்டு தேவைப்படும் போது பணம் தர வேண்டும் எனவும் மிரட்டி உள்ளதாகவும் கூறப்படுகிறது. மாணவி கூச்சலிடவே தாராபுரம் சாலையில் பெரியாக்கவுண்டனூர் பகுதியில் இறக்கி விட்டு சென்றுள்ளனர்.



    அங்கிருந்து தப்பித்து வீடு திரும்பியவரை திருநாவுக்கரசு மற்றும் குழுவினர் தொடர்ந்து போன் செய்து மிரட்டி வந்துள்ளனர். இதையடுத்து மாணவி பொள்ளாச்சி கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, கடந்த மாதம் 25-ந் தேதி காலை சபரி, வசந்தகுமார், சதீஸ்குமார் ஆகியோரை கைதுசெய்தனர்.

    பின்னர் 3 பேரையும் பொள்ளாச்சி ஜே.எம்.1., நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். 3 பேரின் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிந்த நிலையில் 3 பேரும் பொள்ளாச்சி ஜே.எம்.1 மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி வரும் 25-ந் தேதி வரை காவல் நீட்டிப்பு செய்து உத்தரவிட்டார்.

    ஆபாச வீடியோ வழக்கில் முக்கிய குற்றவாளியாக கூறப்படும் திருநாவுக்கரசு கடந்த 5-ந் தேதி கைது செய்யப்பட்டார். இந்நிலையில், திருநாவுக்கரசுவுக்கு ஜாமீன் கேட்டு அவரது தாயார் லதா பொள்ளாச்சி ஜே.எம்.1., கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இன்று ஜாமின் மனு விசாரணைக்கு வந்தது.  அப்போது, அவரது ஜாமின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

    குற்றச்சாட்டுகளின் தன்மையின் அடிப்படையிலும், சாட்சிகளை கலைக்க வாய்ப்பு உள்ளதாகவும் கருதுவதாலும் அவருக்கு ஜாமின் மறுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.   #PollachiAbuseCase #PollachiAssaultCase #JusticeforWomen 
    விஸ்வரூபம் எடுத்துள்ள பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கும்பல் தலைவனாக செயல்பட்ட திருநாவுக்கரசு கல்லூரியில் படிக்கும் போதே பிளே-பாயாக வலம் வந்ததாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. #PollachiAssaultCase
    பொள்ளாச்சி:

    விஸ்வரூபம் எடுத்துள்ள பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கும்பல் தலைவனாக செயல்பட்ட திருநாவுக்கரசு எம்.பி.ஏ. பட்டதாரி ஆவார்.

    வசதியான குடும்பத்தை சேர்ந்த இவர் தற்போது வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வருகிறார்.

    சொகுசு கார், பண்ணைத் தோட்டம் என ஆடம்பரமாக வாழ்ந்து வரும் இவர் 2011-ம் ஆண்டு முதல் 2016- வரை கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்த போது ‘பிளே-பாயாக’ வலம் வந்துள்ளார்.

    இவரது தோழி ஒருவர் மூலமாக திருநாவுக்கரசுக்கு ஏராளமான மாணவிகளின் பழக்கம் கிடைத்துள்ளது. அவர்களிடம் இருந்து செல்போன் எண் வாங்கிய திருநாவுக்கரசு, அதனை தனது நண்பரும், என்ஜினீயருமான சபரிராஜனிடம் கூறி உள்ளார்.

    நுனி நாக்கில் ஆங்கிலம் பேசும் சபரிராஜன் தனது பேச்சால் மாணவிகளை மயக்கி உள்ளார். தனது வலையில் சிக்கிய மாணவிகளை சபரிராஜன் ஜாலியாக ‘பிக்னிக்’ போகலாம் என அழைத்துள்ளார். அதை நம்பி வந்த மாணவிகளை சபரிராஜன், திருநாவுக்கரசின் காரில் ஏற்றி ஆள் நடமாட்டம் இல்லாத ஒதுக்குப்புறமான இடத்துக்கு அழைத்து சென்றுள்ளார்.

    அங்கு மாணவிகளிடம் சபரிராஜன் சில்மி‌ஷ லீலைகளை அரங்கேற்றுவதை திருநாவுக்கரசு மற்றும் அவரது நண்பர்கள் மறைந்து நின்று வீடியோ எடுத்துள்ளனர். பின்னர் அந்த வீடியோக்களை காட்டி மிரட்டி மாணவிகளை, திருநாவுக்கரசுக்கு சொந்தமான பண்ணைத் தோட்டத்துக்கு அழைத்து சென்று தங்களது இச்சைக்கு பலியாக்கி உள்ளனர்.

    படித்த, பணம் படைத்த வாலிபர்களான இவர்களிடம் கல்லூரி மாணவிகள் மட்டுமல்லாது, சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் உள்ள பெண்கள் மற்றும் குடும்பப் பெண்களும் சிக்கி சீரழிந்துள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள் மானம் கருதி போலீசில் புகார் கொடுக்காதது இந்த கும்பலுக்கு மேலும் வசதியாகி போய் விட்டது.

    தற்போது கைதாகி உள்ள திருநாவுக்கரசு, சபரிராஜன், ஜவுளிக்கடை அதிபர் சதீஷ், வசந்தகுமார் ஆகிய 4 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதுகுறித்து மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு பாண்டியராஜன் மேலும் கூறியதாவது:-

    இந்த வழக்கில் போலீஸ் விசாரணையில் எந்த பாரபட்சமும் காட்டவில்லை. கைதானவர்களின் செல்போன்களில் 4 வீடியோக்கள் மட்டுமே இருந்தது. அதில் உள்ள பெண்களை அடையாளம் காணவும், அவர்களிடம் இருந்து வாக்குமூலம் பெற்று இவ்வழக்கில் மேலும் ஆதாரங்களை திரட்டவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

    பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளித்தால் அவர்களின் பெயர் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும். இந்த கும்பலுக்கு ஒரு பெண் உள்பட யார்-யாரெல்லாம் உதவி செய்தார்கள்? என்று விசாரித்து வருகிறோம். அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

    பொதுவாக பெண்கள், மாணவிகள் சமூக வலை தளங்களில் தங்களுக்கு தெரியாதவர்களுடன் பழக வேண்டாம். தேவையில்லாதவர்கள் ‘பிரண்ட் ரிக்வஸ்ட்’ கொடுத்தால் அதை ஏற்க கூடாது. தங்களின் புகைப்படங்கள், வீடியோக்களை தெரியாதவர்களுடன் பகிர வேண்டாம். அதையும் மீறி யாரேனும் தொந்தரவு செய்தால் தைரியமாக புகார் கொடுக்கலாம். உங்களது விவரங்கள் ரகசியமாக வைத்து, புகாரின் பேரில் நடவடிக்கை எடுத்து குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #PollachiAssaultCase
    ×