search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Public protest against the construction of an underground sewer Erode News"

    • ஈரோடு சிந்தன் நகரில் இன்று பாதாள சாக்கடை கழிவுநீர் ஊற்று நிலையம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    • இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்தகுமார், இன்ஸ்பெக்டர்கள் ஜெயமுருகன், நிர்மலா உள்பட 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ஈரோடு:

    ஈரோடு கருங்கல்பாளையம் சிந்தன் நகர் பகுதியில் மாநகராட்சி சார்பில் பாதாளசாக்கடை கழிவு நீர் ஊற்று நிலையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்கு இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதுகுறித்து கலெக்டர் அலுவலகம், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், மாநகராட்சி அலுவலகத்தில் பல முறை மனு கொடுத்துள்ளனர். எனினும் பாதாள சாக்கடை கழிவு நீர் ஊற்று அமைக்கும் பணியை மாநகராட்சி நிர்வாகம் கைவிடவில்லை.

    ஏற்கனவே கடந்த 2 வாரத்திற்கு முன்பு இங்கு பணிகள் மேற்கொள்ள வந்த மாநகராட்சி அதிகாரிகளை இப்பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு வந்து பணிகளை செய்ய விடாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

    இந்த நிலையில் பாதாள சாக்கடை கழிவு நீர் ஊற்று நிலையம் அமைப்பதற்கு குழிகள் தோண்டுவதற்காக இன்று மீண்டும் மாநகராட்சி சார்பில் பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டது.

    அப்போது மாநகராட்சி உதவி பொறியாளர் செல்வராஜ், மாலதி செயற்பொறியாளர் விஜயகுமார் ஆகியோர் இருந்தனர். இதை அறிந்த அந்த பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் இங்கு ஒன்று திரண்டனர்.

    அவர்கள் பாதாள சாக்கடை கழிவு நீர் ஊற்று நிலையம் அமைக்க கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்தகுமார், இன்ஸ்பெக்டர்கள் ஜெயமுருகன், நிர்மலா உள்பட 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    அவர்கள் பணிகள் செய்ய விடாமல் தடுக்க சென்றவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசாருக்கும் பொது மக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது

    இதனால் அந்த பகுதியில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. மேலும் போலீசார் பாதுகாப்புடன் மாநகராட்சி பணியாளர்கள் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

    இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

    எங்கள் பகுதியில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு பள்ளி, கோவில்கள் உள்ளன. திடீரென மாநகராட்சி சார்பில் குடியிருப்பு மத்தியில் பாதாள சாக்கடை கழிவுநீர்ஊற்று நிலையம் அமைக்கப்படும் என அறிவித்துள்ளனர்.

    இதற்கு நாங்கள் ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். ஏற்கனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இதுகுறித்து மனு அளித்துள்ளோம். ஆனால் இன்று திடீரென மாநகர் சார்பில் பணிகளை மேற்கொள்வதற்காக அதிகாரிகள் வந்தனர். நாங்கள் பணிகளை மேற்கொள்ளாமல் அவர்க ளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டோம். இருந்தாலும் போலீசார் உதவியுடன் பணிகளை தொடங்கி மேற்கொண்டு வருகின்றனர்.

    இது சம்பந்தமாக எங்களிடம் எந்த ஒரு கருத்தும் இதுவரை கேட்கப்படவில்லை. குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் ஊற்று நிலையம் அமைந்தால் எங்கள் பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். குறிப்பாக பள்ளி குழந்தைகள் இந்த வழியாகத்தான் கடந்து பள்ளிக்கு செல்ல வேண்டும்.

    இதனால் துர்நாற்றம், சுகாதார கெடு, நோய் தொற்று பரவ ஏற்பட வாய்ப்புள்ளது. பொதுமக்கள் குடியிருக்கும் பகுதியில் இந்த திட்டம் அமைக்கப்படுவதற்கு பதில் ஊரின் ஒதுக்குப்புறமாக இந்தத் திட்டத்தை அமைக்க வேண்டும் என்று கூறி வருகிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×