search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Readymade Garment"

    • கடந்த 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஏற்றுமதி ரூ.11 ஆயிரத்து 628 கோடியாக இருந்தது.
    • திருப்பூர் ஆடை உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    திருப்பூர்:

    பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் உலக நாடுகளை சார்ந்து உள்ளது. ரஷியா-உக்ரைன் போர் சூழல் காரணமாக ஐரோப்பிய நாடுகளுக்கான இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் குறைந்தது. பணவீக்கம் காரணமாக அமெரிக்க ஏற்றுமதியும் பின்னடைவை சந்தித்தது. புதிய வர்த்தக வாய்ப்புகளும் எதிர்பார்த்த அளவுக்கு கை கொடுக்கவில்லை.

    இந்திய தொழில் முனைவோரின் விடாமுயற்சி காரணமாக நாட்டின் ஒட்டுமொத்த ஆயத்த ஆடை ஏற்றுமதி கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் அதிகரித்துள்ளது. கடந்த 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஏற்றுமதி ரூ.11 ஆயிரத்து 628 கோடியாக இருந்தது. 2024 பிப்ரவரி மாதம் ரூ.12 ஆயிரத்து 248 கோடியாக உயர்ந்துள்ளது.

    இதுபோல் கடந்த 2023ம் ஆண்டு மார்ச் மாதம் ரூ.11 ஆயிரத்து 917 கோடிக்கு பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் நடந்துள்ளது. 2024 மார்ச் மாதம் ரூ.12 ஆயிரத்து 224 கோடியாக வர்த்தகம் உயர்ந்துள்ளது. இதனால் திருப்பூர் ஆடை உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இனிவரும் நாட்களில் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் வளர்ச்சிப்பாதைக்கு திரும்பும் என்றும் திருப்பூர் ஆடை உற்பத்தியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்திய பின்னலாடை ஏற்றுமதியில் திருப்பூரின் பங்களிப்பு முக்கியமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • கண்காட்சியில் ஏற்றுமதியாளர்கள் பங்கேற்று பயனடைய ஏற்பாடுகளை செய்து வருகிறது.
    • செயற்கை நூலிழை ஆடை ஏற்றுமதியில் சிறப்பு கவனம் செலுத்தினால், இந்தியாவின் ஆயத்த ஆடை ஏற்றுமதி கணிசமாக உயரும்

    திருப்பூர்:

    சர்வதேச ஆயத்த ஆடை மற்றும் ஜவுளி கண்காட்சி ஐக்கிய அரபு நாடுகளின் துபாய் நகரில் உள்ள உலக வர்த்தக மைய வளாகத்தில் நடக்கிறது. வருகிற நவம்பர் 27-ந்தேதி தொடங்கி 3 நாட்கள் நடக்கும் கண்காட்சியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வர்த்தகர்கள், உற்பத்தியாளர்கள் பங்கேற்க உள்ளனர்.

    இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதி வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஐக்கிய அரபு நாடுகளுடன் வர்த்தகத்தை மேம்படுத்த இந்த கண்காட்சி உதவுமென ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏ.இ.பி.சி.,) தெரிவித்துள்ளது. கண்காட்சியில் ஏற்றுமதியாளர்கள் பங்கேற்று பயனடைய ஏற்பாடுகளை செய்து வருகிறது.

    ஐக்கிய அரசு நாடுகளுடன் இந்தியா வர்த்தக உறவை வளர்க்க வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்தியுள்ளது. இனிவரும் ஆண்டுகளில் கூடுதல் வர்த்தகம் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2019ல் ஐக்கிய அரபு நாடுகளின் மொத்த ஆயத்த ஆடை இறக்குமதி 36 ஆயிரத்து 400 கோடி ரூபாயாக இருந்தது.கடந்த 2020ம் ஆண்டு 28 ஆயிரத்து 848 கோடி ரூபாய்க்கும், 2021ல் 50 ஆயிரத்து 405 கோடி ரூபாய்க்கும், பல்வேறு நாடுகளில் இருந்து அங்கு ஆடைகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

    இந்தியாவில் இருந்து 2019ல் 15 ஆயிரத்து 252 கோடி ரூபாய்க்கும், 2020ல் 12 ஆயிரத்து 423 கோடி ரூபாய்க்கும், 2021ல் 15 ஆயிரத்து 727 கோடி ரூபாய்க்கும், ஐக்கிய அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி நடந்துள்ளது.கடைசியாக 2021ல் ஐக்கிய அரபு நாடுகள் இறக்குமதி 80 சதவீதம் அதிகரித்துள்ளது. இருப்பினும் இந்தியாவின் பங்களிப்பு அதிக அளவு உயரவில்லை. செயற்கை நூலிழை ஆடை ஏற்றுமதியில் சிறப்பு கவனம் செலுத்தினால், இந்தியாவின் ஆயத்த ஆடை ஏற்றுமதி கணிசமாக உயரும் என்று ஏ.இ.பி.சி., தெரிவித்துள்ளது.திருப்பூர் ஏற்றுமதியாளர்களும், தொழில் முனைவோர்களும் துபாயில் நடக்கும் கண்காட்சியில் பங்கேற்று வாய்ப்புகளை குவிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

    • தீனதயாள் உபத்யாய கிராமின் கவுசல்ய யோஜனா திட்டத்தில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
    • 2019 முதல் இதுவரை 1,050 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் முதலிபாளையம் நிப்ட் -டீ கல்லூரியில் தீனதயாள் உபத்யாய கிராமின் கவுசல்ய யோஜனா (டி.டி.யு.ஜி.கே.ஒய்.,) திட்டத்தில் ஆயத்த ஆடை உற்பத்தி சார்ந்த பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மொத்தம் 1,250 பேருக்கு பயிற்சி அளிக்க கல்லூரிக்கு அரசு அனுமதி அளித்திருந்தது. கிராமப்புற இளைஞர்களுக்கு தையல், அப்பேரல் பேஷன் டிசைன், மெர்ச்சன்டைசிங் பயிற்சிகள் இலவசமாக அளிக்கப்படுகிறது.

    கடந்த 2019 முதல் இதுவரை 1,050 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் 150 பேருக்கு அப்பேரல் பேஷன் டிசைன் பயிற்சி அளிக்க கல்லூரியின் திறன் பயிற்சி மையம் முடிவு செய்துள்ளது.இதற்கான மாணவர் சேர்க்கை துவங்கப்பட்டுள்ளது. டி.டி.யு.ஜி.கே.ஒய்., திட்டத்தில் உணவு, தங்குமிடம், சீருடை, கல்வி உபகரணங்களுடன் இலவசமாக பேஷன் டிசைன் பயிற்சி அளிக்கப்படுகிறது. மொத்தம் 6 மாதங்கள் பயிற்சி அளிக்கப்படும்.

    தமிழகம் முழுவதும் உள்ள பிளஸ் 2 மற்றும் அதற்குமேல் படித்த கிராமப்புற இளைஞர்கள் இப்பயிற்சியில் இணையலாம். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. பயிற்சி முடிப்போருக்கு மத்திய அரசு சான்றிதழ் மற்றும் ஆடை உற்பத்தி நிறுவனங்களின் உடனடி வேலைவாய்ப்பும் பெற்றுத்தரப்படும்என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    ×