search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sayaratsai Deeparathana"

    • சண்முகருக்கு அன்னாபிஷேகமும், உச்சிகால தீபாராதனையும் நடைபெற்றது.
    • மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிர மணிய சுவாமி கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இன்று அதி காலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், தொடர்ந்து உச்சிகால அபிஷேகமும் நடைபெற்றது.

    காலை 10.30 மணிக்கு 'சுவாமி சண்முகருக்கு அன்னாபிஷேகமும், உச்சிகால தீபாராதனையும் நடைபெற்றது. மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், 5 மணிக்கு திருவிளக்கு பூஜையும் தொடர்ந்து மற்ற கால பூஜைகளும் நடக்கிறது.

    கோவில் வளாகத்தில் காலை 8 மணிக்கு நாதஸ்வர மங்கள இசை, 8.30 மணிக்கு தேவார இன்னிசை, காலை 9 மற்றும் 12 மணிக்கு ஆன்மீகச் சொற்பொழிவு, காலை 10.30 மணிக்கு பொது விவரக் குறிப்பேடு வெளியிடப்பட்டது. மாலை 6 மணிக்கு அக்னி தனிப்பயிற்சி கல்வி நிலைய மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

     தமிழ் புத்தாண்டு மற்றும் விடுமுறை தினம் என்பதால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் குவிந்தனர்.

     அவர்கள் காலையில் இருந்தே கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இன்று தமிழ் புத்தாண்டு தினம் என்பதால் சுமார் 5 மணிநேரம் காத்திருந்த பின்னரே பக்தர்கள் தரிசனம் செய்ய முடிந்தது. திருச்செந்தூர் முழுவதும் பக்தர்கள் கூட்டம் மற்றும் வாகன மிகுதியால் போக்குவரத்து ஸ்தம்பித்து.

    • ஏராளமான பக்தர்கள் வந்து பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர்.
    • மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் பெண்களின் சபரிமலை என போற்றப்படுகிறது.

    மணவாளக்குறிச்சி:

    குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இங்கு கேரள பெண் பக்தர்கள் இருமுடி கட்டி வந்து தரிசனம் செய்வதால் இந்த கோவில் பெண்களின் சபரிமலை என போற்றப்படுகிறது.

    இங்கு மாசிக்கொடை விழா கடந்த மாதம் 3-ந் தேதி தொடங்கி 10 நாட்கள் நடந்தது. விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கேரள மாநிலத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர்.

    தொடர்ந்து அம்மனின் பிறந்த நாள் என கருதப்படும் பங்குனி மாத பரணி நட்சத்திரமான இன்று (புதன்கிழமை) மீன பரணிக்கொடை விழா நடக்கிறது. இதனையொட்டி இன்று அதிகாலை 4.30 மணிக்கு நடை திறப்பு, 5 மணிக்கு உருள் நேர்ச்சை, 5.30 மணிக்கு பஞ்சாபிஷேகம், 6.30 மணிக்கு உஷபூஜை, 7 மணிக்கு பூமாலை, 8 மணிக்கு வில்லிசை, 9.30 மணிக்கு அம்மன் வெள்ளிப் பல்லக்கில் பவனி, பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜை, தொடர்ந்து குத்தியோட்டம் ஆகியவை நடக்கிறது.

    மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 8.30 மணிக்கு அத்தாழ பூஜை, 9.30 மணிக்கு அம்மன் வெள்ளிப்பல்லக்கில் பவனி, நள்ளிரவு 12 மணிக்கு மேல் 1 மணிக்குள் வலியபடுக்கை என்னும் மகாபூஜை போன்றவை நடக்கிறது. விழாவில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள். பக்தர்களின் வசதிக்காக தக்கலை, திங்கள்சந்தை, குளச்சல், நாகர்கோவில், மார்த்தாண்டம் ஆகிய பகுதிகளில் இருந்து கோவிலுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    • பானக்காரம் நிவேத்தியமாக படைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.
    • பானக்காரம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.

    கன்னியாகுமரி:

    பங்குனி, சித்திரை மாதங்கள் கோடை காலம் ஆகும். இந்த மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிக மாக இருக்கும். அக்னி நட்சத்திரம் ஆரம்பித்தவுடன் வெயிலின் உக்கிரம் அதிகரித்து அனல் காற்று வீசும். இந்த கோடை வெயில் காலங்களில் பொதுமக்கள் இளநீர், நுங்கு, பானக்காரம், மோர், கரும்பு ஜூஸ், குளிர் பானம் போன்றவற்றை குடித்து சூட்டை தணித்துக் கொள்வார்கள்.

    இதேபோல இறைவனுக்கும் கோடை காலத்தில் வெப்பம் நீங்கி குளிர்ச்சியுடன் இருப்பதற்காக `பானக்காரம்' என்ற குளிர்பானம் மாலை நேரத்தில் நிவேத்தியமாக படைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. கன்னியாகுமரி பகவதி அம்மனுக்கு கோடை காலத்தில் வெப்பம் நீங்கி குளிர்ச்சியாக இருப்பதற்காக பங்குனி, சித்திரை ஆகிய 2 மாதங்களும் தினமும் மாலை 4 மணிக்கு கோவில் நடை திறந்தவுடன் `பானக்காரம்' நிவேத்தியமாக படைத்து சிறப்பு பூஜைகள் நடக்கிறது.

    எலுமிச்சை பழம், சர்க்கரை, ஏலம், சுக்கு, புளி ஆகியவற்றை தண்ணீரில் கரைத்து தயாரிக்கப்படுவது தான் `பானக்காரம்' ஆகும். இந்த பானகாரத்தை கோடை காலத்தில் அருந்தினால் வெப்பம் நீங்கி குளிர்ச்சியாக இருக்கும். இதனால் தான் கன்னியாகுமரி பகவதி அம்மனுக்கு கோடை காலத்தில் பானக்காரம் படைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடக்கிறது.

    இந்த ஆண்டு பங்குனி மாத பிறப்பான இன்று முதல் 60 நாட்கள் தினமும் மாலை 4 மணிக்கு பகவதி அம்மனுக்கு பானக்காரம் படைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு சாயராட்சை தீபாராதனை முடிந்ததும், அம்மனுக்கு படைக்கப்பட்ட பானக்காரம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.

    இதனை அருந்தினால் வெப்பம் சம்மந்தமான நோய்கள் வராது என்பது ஐதீகம் ஆகும். இதனால் இந்த பானக்காரம் பிரசாதத்தை வாங்கி குடிக்க கோவிலில் தினமும் மாலையில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

    ×