search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கூலிப்படையினர்"

    சென்னையில் போலீஸ் போல நடித்து ரூ.25 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட லாரி அதிபரை போலீசார் மீட்டனர். இதுதொடர்பாக கூலிப்படையினர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
    செங்குன்றம்:

    சென்னை செங்குன்றம் கரிகாலன் நகர் மூவேந்தர் தெருவை சேர்ந்தவர் கணேசன் (வயது 54). இவர் தனக்கு சொந்தமான லாரிகளை வாடகைக்கு விட்டுள்ளார். மேலும் பல்வேறு தொழில்களும் செய்து வருகிறார். கடந்த 2-ந்தேதி இரவு கணேசன் வீட்டிற்கு 4 பேர் வந்தனர். அவர்களில் ஒருவர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சீருடையில் இருந்தார்.

    அவர், தன்னை சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் என்றும், மணல் கடத்தல் பற்றி விசாரிக்கும் தனிப்படையில் பணியாற்றுவதாகவும் தெரிவித்தார். உங்கள் லாரிகளில் மணலை திருட்டுத்தனமாக கடத்துவதாக புகார் வந்துள்ளது. எனவே உங்களிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று கணேசனிடம் கூறினார்.

    பின்னர், ஒரு காரில் கணேசனை அழைத்துச்சென்றனர். அப்போது கணேசன் வாக்குவாதம் செய்தார். உடனே அவரை, 4 பேரும் சேர்ந்து, கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டினார்கள். சத்தம் போடாமல் எங்களோடு வா, இல்லாவிட்டால் உன்னை தீர்த்துக்கட்டிவிடுவோம் என்று எச்சரித்து காரில் கடத்தி சென்றனர்.

    காரின் சீட்டில் அவரை உட்கார வைக்காமல், சீட்டுக்கு அடியில் படுக்க வைத்தனர். கணேசன் வீடு திரும்பாததால், அவரது மனைவி மாலா, தம்பி ராமச்சந்திரன் உள்ளிட்ட குடும்பத்தினர் பயந்தார்கள். கணேசனின் செல்போன் அணைத்து வைக்கப்பட்டு இருந்தது.

    ஏதோ விபரீதம் நடந்துவிட்டது என்று பயந்த கணேசனின் தம்பி ராமச்சந்திரன், செங்குன்றம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார், கணேசனை காணவில்லை என்று வழக்குப்பதிவு செய்து, முதலில் விசாரணை நடத்தினார்கள். மறுநாள் (3-ந்தேதி) காலை வரை கணேசனை பற்றி எந்த தகவலும் இல்லை.

    இந்தநிலையில் கணேசன் வீட்டிற்கு போனில் பேசிய மர்மநபர், “கணேசனை நாங்கள் கடத்தி வந்துள்ளோம். உடனடியாக ரூ.25 லட்சத்தை நாங்கள் சொல்லும் இடத்திற்கு வந்து தர வேண்டும். போலீசில் புகார் கொடுத்தால், கணேசனின் தலையை துண்டித்து வீட்டு வாசலில் வீசுவோம்” என்று தெரிவித்தார்..

    இதுகுறித்து போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. கடத்தல் கும்பலை பிடித்து, கணேசனை பத்திரமாக மீட்க போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். அதன்படி கணேசனை மீட்க 3 போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டது.

    இந்த 3 தனிப்படையினரும் அதிரடியாக செயல்பட்டு, கடந்த 3-ந்தேதி இரவு வண்டலூர் அருகே உள்ள அனுமந்தபுரம் பகுதியில் வைத்து, துப்பாக்கி முனையில் கடத்தல் கும்பலை சேர்ந்த 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கடத்தப்பட்ட கணேசன் பத்திரமாக மீட்கப்பட்டார்.

    கடத்தல் கும்பலை சேர்ந்த மேலும் 4 பேரை வண்டலூர் மேம்பாலத்திற்கு கீழே வைத்து கைது செய்தனர். மொத்தம் 8 பேர் கைதானார்கள். ஒருவர் மட்டும் தப்பி ஓடிவிட்டார். கைது செய்யப்பட்ட 8 பேரும் செங்குன்றம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டு அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. லாரி அதிபர் கணேசன், அவரது குடும்பத்தினரிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டார்.

    குற்றவாளிகள் பெயர் விவரம்

    கைதான குற்றவாளிகள் பெயர் விவரம் வருமாறு:-

    1. வடகரை சக்தி (49), இவர் செங்குன்றம் அருகே உள்ள வடகரையைச் சேர்ந்தவர். இவர் தான் முக்கிய குற்றவாளி. 2. சிவா (39) இவர் செங்குன்றத்தை சேர்ந்தவர். கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டவர். 3. சுமன் (39) சென்னையை அடுத்த திருப்போரூரை சேர்ந்தவர். இவர் கடத்தலுக்கு தளபதி போல் செயல்பட்டவர். 9-ம் வகுப்பு வரை படித்துள்ள இவர் தான், சப்-இன்ஸ்பெக்டர் சீருடை அணிந்து வந்தவர்.

    4.மதன்குமார் (27). எண்ணூரை சேர்ந்த இவர் கூலிப்படை ஆசாமி. 5.கணேஷ் (27). ஆந்திர மாநிலம் நாயுடுப்பேட்டையை சேர்ந்தவர். கூலிப்படை ஆசாமி. 6. அசோக் (35) சென்னை குரோம்பேட்டையை சேர்ந்தவர், இவருக்கு சொந்தமான காரில் தான் லாரி அதிபர் கணேசனை கடத்தினார்கள். 7.ராஜேஷ் (21) செங்குன்றத்தை சேர்ந்த இவர் கூலிப்படையை சேர்ந்தவர். 8.சதீஷ்குமார் (25) செங்குன்றத்தை சேர்ந்த கூலிப்படை நபர். போலீஸ் கையில் சிக்காமல் தப்பி ஓடிய கூலிப்படை நபரின் பெயர் கந்தன் என்பதாகும். அவரை போலீசார் தேடி வருகிறார்கள். 
    ×