என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "அரும்பாக்கம் வங்கியில் கொள்ளை"
- தனது பள்ளி தோழர்கள் மற்றும் ஜிம் நண்பர்களை கூட்டாளிகளாக சேர்த்துக் கொண்டு முருகன் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது அம்பலமானது.
- முருகன், அவரது கூட்டாளிகளான சந்தோஷ், பாலாஜி, செந்தில், சூர்யா ஆகிய 5 பேர் பிடிபட்டனர்.
சென்னை:
சென்னை அரும்பாக்கத்தில் உள்ள பெடரல் வங்கி கிளையில் கடந்த 13-ந்தேதி 32 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக அரும்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெடரல் வங்கியின் வில்லிவாக்கம் கிளையில் மேலாளராக பணியாற்றி வந்த கொரட்டூரை சேர்ந்த முருகன் என்பவர் இந்த கொள்ளை சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்டது தெரிய வந்தது.
தனது பள்ளி தோழர்கள் மற்றும் ஜிம் நண்பர்களை கூட்டாளிகளாக சேர்த்துக் கொண்டு முருகன் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது அம்பலமானது. இதையடுத்து முருகன், அவரது கூட்டாளிகளான சந்தோஷ், பாலாஜி, செந்தில், சூர்யா ஆகிய 5 பேர் பிடிபட்டனர்.
இவர்கள் வெவ்வேறு இடங்களில் பதுக்கி வைத்திருந்த 32 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. 3½ கிலோ தங்க நகைகளை கொள்ளையர்களில் ஒருவரான சந்தோஷிடம் இருந்து வாங்கி பதுக்கிய குற்றத்துக்காக அச்சரப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமல்ராஜ் கைது செய்யப்பட்டார்.
தங்க நகைகளை உருக்குவதற்கு உதவி செய்த நகை கடை அதிபர் ஸ்ரீவத்சவ் என்பவர் கைதானார். இவர்களுடன் சேர்ந்து தங்க நகை கொள்ளையில் 7 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் இந்த வழக்கில் 8-வது குற்றவாளியாக கபிரியேல் என்பவர் சிக்கியுள்ளார். கொள்ளை கும்பல் தலைவனான முருகனின் பள்ளி தோழனான இவரும் வங்கி கொள்ளை சம்பவத்துக்கு உதவிகளை செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அவரை போலீசார் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனர்.
வங்கி கொள்ளைக்கு கபிரியேல் வெளியில் இருந்தபடியே பல்வேறு வழிகளில் திட்டம் போட்டு கொடுத்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்த அடிப்படையிலேயே விசாரணை நடைபெற்று வருகிறது என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, வங்கி கொள்ளையில் நேரடியாக தொடர்பில் இருந்தவர்கள், கொள்ளை கும்பலுக்கு உதவியவர்கள் என இதுவரை 7 பேர் கைதாகி இருக்கிறார்கள். இந்த குற்ற பின்னணி தொடர்பாக முழுமையாக விசாரணை நடத்த திட்டமிட்டு விசாரணை தொடர்கிறது.
இதன் அடிப்படையில் கொள்ளை கும்பலின் நண்பர்கள், உறவினர்கள் என பலரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். அந்த அடிப்படையில் தான் கபிரியேலிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று தெரிவித்தனர்.
- இன்ஸ்பெக்டர் வீட்டில் கைப்பற்றப்பட்டதை போல மேலும் சில இடங்களில் இருந்தும் நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
- நகைகளை வாங்கி வைத்திருந்த நபர்களும் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
சென்னை:
சென்னை அரும்பாக்கம் பெடரல் வங்கியில் 32 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
வங்கி கொள்ளைக்கு மூளையாக செயல்பட்ட முருகன், சூர்யா, சந்தோஷ், செந்தில்குமார், பாலாஜி ஆகிய 5 பேரும் அடுத்தடுத்து கைது செய்யப்பட்ட நிலையில் அச்சரப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமல்ராஜூம் சிக்கியுள்ளார். இவர்கள் 6 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.
பெடரல் வங்கியில் கொள்ளையடித்த 32 கிலோ நகைகளையும் உடனடியாக உருக்கி விற்க கொள்ளையர்கள் திட்டம் போட்டுள்ளனர். இதற்காக கோவை நகைக்கடை அதிபர் ஸ்ரீவத்சவ் என்பவரிடம் முன்கூட்டியே பேசி இருக்கிறார்கள். இதன்படி கோவை சென்று ஸ்ரீவத்சவை சென்னைக்கு அழைத்து வந்துள்ளனர்.
அப்போது அவரிடம் ஒட்டுமொத்த நகைகளையும் மொத்தமாக உருக்குவதற்கு ஆலோசனை கேட்டுள்ளனர். இதையடுத்து சென்னையில் நகைகளை உருக்கும் மிஷின் ஒன்றை வாங்கி அனைத்து நகைகளையும் உருக்கி தங்க கட்டிகளாக மாற்றி விட திட்டம் போட்டுள்ளனர்.
இதற்காக குரோம்பேட்டை லாட்ஜில் அறை எடுத்து தங்கி உள்ளனர். கோவை நகைக்கடை அதிபர் ஸ்ரீவத்சவ் மற்றும் அவரது உதவியாளரான ஸ்ரீராம் என்பவரும் இந்த லாட்ஜில் தங்கி நகைகளை உருக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். இதுபோன்று 300 கிராம் நகைகளை கொள்ளையர்கள் உருக்கி இருக்கிறார்கள்.
அப்போது புகைமூட்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் பயந்து போன கொள்ளையர்களும், நகைக்கடை அதிபர் ஸ்ரீவத்சவ் மற்றும் உதவியாளர் ஸ்ரீராம் ஆகியோரும் இங்கு வைத்து நகைகளை உருக்கினால் மாட்டிக்கொள்வோம் என்று எண்ணினர். இதையடுத்து நகைகளை உருக்கும் பணியை தற்காலிகமாக நிறுத்தி உள்ளனர்.
32 கிலோ நகைகளையும் சிறிய சிறிய கட்டிகளாக மாற்றி விட்டால் அதனை வெளியில் எடுத்துச் சென்று எளிதாக விற்பனை செய்து விடலாம் என்று கொள்ளை கும்பல் கணக்கு போட்டு உள்ளது. இதற்கு கோவை நகைக்கடை அதிபரான ஸ்ரீவத்சவ் முழு உதவிகளையும் செய்வதாக உறுதி அளித்துள்ளார். இதற்காக வேலை முடிந்தவுடன் ஸ்ரீவத்சவுக்கு பெரிய தொகையை கைமாற்றி விடவும் கொள்ளையர்கள் முடிவு செய்திருந்தனர்.
ஆனால் அதற்குள் போலீசார் விரைந்து செயல்பட்டு அனைத்து நகைகளையும் பறிமுதல் செய்ததுடன் கொள்ளை கும்பலையும் கூண்டோடு கைது செய்து விட்டனர்.
திருட்டு நகைகளை உருக்குவதற்கு பெரிய அளவில் கொள்ளையர்களுக்கு உதவி செய்த கோவை நகைக்கடை அதிபர் ஸ்ரீவத்சவ் போலீஸ் பிடியில் இருந்து வந்தார். அவரை கைது செய்து சிறையில் அடைக்க உள்ளனர்.
நகை கொள்ளை வழக்கில் ஸ்ரீவத்சவின் உதவியாளரான ஸ்ரீராம் என்பவர் மட்டும் தலைமறைவாக உள்ளார். அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவரும் விரைவில் சிக்கி விடுவார் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
வங்கி கொள்ளை தொடர்பாக கைது செய்யப்பட்ட அச்சரப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமல்ராஜ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அவரது மனைவி இந்திரா மீது நடவடிக்கை பாயுமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.
இது தொடர்பாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், அதன் பின்னரே இந்த விஷயத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இன்ஸ்பெக்டர் வீட்டில் கைப்பற்றப்பட்டதை போல மேலும் சில இடங்களில் இருந்தும் நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த நகைகளை வாங்கி வைத்திருந்த நபர்களும் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
- இன்ஸ்பெக்டர் அமல்ராஜூக்கு மட்டும் இந்த கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தெரியும்.
- குரோம்பேட்டையில் உள்ள லாட்ஜில் தங்கி இந்த நகைகளை உருக்க முயற்சி செய்துள்ளார்கள்.
சென்னை அரும்பாக்கத்தில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை குரோம்பேட்டையில் உள்ள லாட்ஜில் வைத்து உருக்க முயற்சி நடந்திருப்பதாக கூடுதல் போலீஸ் கமிஷனர் அன்பு பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார்.
இந்த கொள்ளை சம்பவம் குறித்து கூடுதல் போலீஸ் கமிஷனர் அன்பு நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர்கள் கேட்கப்பட்ட கேள்விகளும், அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- இந்த வழக்கில் இன்ஸ்பெக்டர் அமல்ராஜூடன் வேறு போலீசார் யாருக்காவது தொடர்பு இருக்கிறதா?
பதில்:- வேறு போலீசாருக்கு தொடர்பு இல்லை. அமல்ராஜூக்கு மட்டும் இந்த கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தெரியும். அவர் போலீஸ்துறைக்கு தகவல் எதுவும் சொல்லாமல் திருட்டு நகைகளை வீட்டில் வைத்திருந்தது குற்றம் ஆகும். விசாரணையில் தகவல் தெரிந்தவுடன் தான் அமல்ராஜ் நகைகளை ஒப்படைத்தார்.
கேள்வி:- இன்ஸ்பெக்டர் அமல்ராஜ் ஏற்கனவே இதற்கு முன்பு இது போன்ற கொள்ளை சம்பவங்களில் உறுதுணையாக இருந்திருக்கிறாரா?
பதில்:- அவருடைய சர்வீஸ் ரெக்கார்டில் எந்தவொரு குற்றச்சாட்டும் பதிவாகவில்லை.
கேள்வி:- இன்ஸ்பெக்டர் அமல்ராஜிடம் எப்படி நகைகள் மீட்கப்பட்டது?
பதில்:- சந்தோஷிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் யார்-யாரிடம் பேசி இருந்தார். எங்கே சென்றிருந்தார் என்பதை ஆராய்ந்த போது, அச்சிரப்பாக்கம் சென்றிருப்பது தெரிய வந்தது. அவர் ஏன் சென்றார் என்பது குறித்து மேலும் விசாரணை நடத்திய போது, அமல்ராஜின் மனைவியும், சந்தோஷின் மனைவியும் உறவினர்கள் என்பது தெரியவந்தது. எனவே அமல்ராஜை விசாரணைக்கு அழைத்தோம். அவர் நகையை ஒப்படைத்தார். பின்னர் அவரது உறவினர் வீட்டில் இருந்த மற்ற நகைகள் மீட்கப்பட்டது.
கேள்வி:- ஸ்ரீவத்சவா எதற்கு கைது செய்யப்பட்டார்?
பதில்:- கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை அப்படியே விற்க முடியாது என்பதால் மொத்தமாக உருக்க வேண்டும் என்று திட்டமிட்டுள்ளார்கள். இதற்காக எந்திரம் ஒன்றையும் வாங்கி இருக்கிறார்கள். அந்த எந்திரத்தை வாங்குவதற்கு ஸ்ரீவத்சவா உறுதுணையாக இருந்துள்ளார். குரோம்பேட்டையில் உள்ள லாட்ஜில் தங்கி இந்த நகைகளை உருக்க முயற்சி செய்துள்ளார்கள். நகையை உருக்க தெரிந்த நபர் ஒருவரையும் அழைத்து வந்துள்ளனர். அவரை தேடி வருகிறோம். நகையை உருக்க தயாராக போது இது சின்ன எந்திரம், இவ்வளவு நகைகளை உருக்க முடியாது என்பதால் அவர்களால் உருக்க முடியவில்லை.
இந்த நிலையில் எந்திரத்தில் இருந்து புகை வந்துள்ளது. இதனால் லாட்ஜில் இருப்பவர்கள் சந்தேகம் அடைவார்கள் என்று எண்ணி அறையை காலி செய்துவிட்டு ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையில் சென்றுள்ளனர்.
கவரிங் நகைகள் இருந்ததா...
கேள்வி:- மீட்கப்பட்ட நகைகளில் கவரிங் நகைகள் ஏதேனும் இருந்ததா?
பதில்:- வங்கி ஊழியர்களை வைத்து மீட்கப்பட்ட நகைகள் ஆராயப்பட்டது. அவர்கள் தங்களுடைய நிதி நிறுவனத்தில் கொள்ளை போன நகைகள் என்பதை உறுதி செய்துள்ளார்கள்.
கேள்வி:- இந்த வழக்கில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிக்கி இருப்பது, போலீஸ்துறைக்கு கரும்புள்ளியாக...
பதில்:- சமூகம் என்பது எல்லோரும் சேர்ந்தது தான். இதில் போலீஸ்துறையை மட்டும் தனியாக பார்க்க முடியாது. தற்போது அவரை நாங்கள் விட்டிருந்தால்தான் கரும்புள்ளி என்று எடுத்துக்கொள்ள முடியும். இவ்வளவு பெரிய வழக்கை சீக்கிரம் முடித்திருக்கிறோம் என்பதை சாதனையாகதான் பார்க்க முடியும்.
காரணம் என்ன?
கேள்வி:- இந்த கொள்ளைக்கான காரணம் என்ன?
பதில்:- இந்த வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பணத்தேவைக்காகவே இருந்த கொள்ளை நடந்துள்ளது. குற்றவாளிகள் முககவசம் அணிந்திருந்தாலும், அடையாளம் கண்டு கைது செய்துள்ளோம்.
கேள்வி:- இந்த வழக்கில் மேலும் யாருக்காவது தொடர்பு இருக்க வாய்ப்பு இருக்கிறதா?
பதில்:- மேற்கொண்டு வேறு ஏதேனும் தகவல் வரும்பட்சத்தில் அதனடிப்படையில் கண்டிப்பாக விசாரணை நடத்தப்படும்.
அலாரத்தை மேம்படுத்த அறிவுரை
கேள்வி:- இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான முருகன் மனைவி, இன்ஸ்பெக்டர் மனைவியிடம் விசாரணை நடைபெறுகிறதா?
பதில்:- மேற்கொண்டு வரும் தகவல் அடிப்படையில் விசாரணை நடத்தப்படும். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முக்கிய குற்றவாளியான முருகன் இந்த வங்கியில் வேலைபார்த்ததால் அலாரத்தை அணைத்து வைத்துள்ளார். அதனால்தான் வெளியே சப்தம் கேட்கவில்லை. கொள்ளை சம்பவம் நடந்து 20 நிமிடங்கள் கழித்து வாடிக்கையாளர் ஒருவர் உள்ளே சென்ற பிறகுதான் எங்களுக்கு இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்தது. எனவே வங்கி, நிதி நிறுவனங்கள் அலாரம் சிஸ்டத்தை மேம்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்த இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது இணை கமிஷனர் ராஜேஸ்வரி, துணை கமிஷனர் விஜயகுமார் உள்பட போலீஸ்அதிகாரிகள் உடனிருந்தனர்.
- சென்னை வங்கியில் கொள்ளை போன நகைகள் முழுமையாக மீட்கப்பட்டன.
- கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் என்று தெரிந்தும் மறைத்த குற்றத்திற்காக போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார்.
சென்னை :
சென்னை அரும்பாக்கம் ரசாக் கார்டன் சாலையில் உள்ள பெடரல் வங்கியின் நிதி நிறுவனத்தில் கடந்த 13-ந் தேதி கொள்ளை நடைபெற்றது.
அன்று மதியம் 2 மணி அளவில் நிதி நிறுவனத்துக்குள் புகுந்த கொள்ளை கும்பல் இந்த கொள்ளையில் ஈடுபட்டது,
நிறுவனத்தின் ஊழியர்களை கத்தியை காட்டி மிரட்டி, வாடிக்கையாளர்கள் அடகு வைத்திருந்த நகைகள் உள்ள பாதுகாப்பு அறையின் சாவியை வாங்கினர். பின்னர் ஊழியர்களை ஓய்வு அறையில் அடைத்துவிட்டு பாதுகாப்பு அறையில் இருந்த ரூ.15 கோடி மதிப்பிலான 31.7 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்து தப்பி சென்றனர்.
இந்த கொள்ளை சம்பவம் குறித்து வங்கியின் மேலாளர் சுரேஷ் அரும்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்ட கும்பலை பிடிக்க போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் 11 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீசார் நடத்திய புலன் விசாரணையில் கொள்ளை கும்பல் உடனடியாக அடையாளம் காணப்பட்டது.
இந்த நிதி நிறுவனத்தில் ஏற்கனவே வேலை பார்த்து கொள்ளை திட்டத்துக்கு மூளையாக செயல்பட்ட சென்னை பாடி படவேட்டம்மன் கோவில் தெருவை சேர்ந்த முருகன் (வயது 29), அவரது கூட்டாளிகளான வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த சந்தோஷ் (30), பாலாஜி (28), அம்பத்தூர் கள்ளிக்குப்பம் வ.உ.சி. தெருவை சேர்ந்த சூர்யபிரகாஷ் (29), தியாகராயநகர் ஆர்.கே.புரம் எச்.பிளாக்கை சேர்ந்த செந்தில்குமரன் (38) ஆகியோர் அடுத்தடுத்து அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் அதிரடி திருப்பமாக அச்சிரப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமல்ராஜ் சிக்கினார். அவருடைய வீட்டில் இருந்து கொள்ளை போன நகைகளில் 3.7 கிலோ நகைகள் மீட்கப்பட்டன. கொள்ளையன் சந்தோஷின் மனைவி ஜெயந்தியும், இன்ஸ்பெக்டர் அமல்ராஜின் மனைவி இந்திராவும் நெருங்கிய உறவினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நிதி நிறுவனத்தில் கொள்ளை போன 31.7 கிலோ தங்க நகைகள் மீட்கப்பட்டதாக தகவல் வெளியான நிலையில் சென்னை குரோம்பேட்டையில் உள்ள சந்தோஷின் பாட்டி வீட்டில் இருந்து நேற்று 2 கிலோ 656 கிராம் தங்க நகைகள் மீட்கப்பட்டதாக தகவல் வெளியானது.
இதனால் எத்தனை கிலோ நகைகள் கொள்ளை போனது என்பதில் தொடர்ந்து குழப்பம் நீடித்தது. இதைத்தொடர்ந்து அரும்பாக்கம் போலீசார் எத்தனை இடங்களில் இருந்து எவ்வளவு நகைகள் மீட்கப்பட்டன? என்ற அதிகாரபூர்வ தகவலை பட்டியலாக வெளியிட்டு குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.
திரைப்பட காட்சிகளை மிஞ்சும் அளவுக்கு ஒவ்வொரு நாளும் பரபரப்பை எகிற வைத்த இந்த கொள்ளை வழக்கில் அனைத்து நகைகளும் மீட்கப்பட்டதையடுத்து, சென்னை அரும்பாக்கம் போலீஸ் நிலையத்தில் கூடுதல் போலீஸ் கமிஷனர் அன்பு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்த கொள்ளை வழக்கில் பல்வேறு தனிப்படைகள் அமைக்கப்பட்டு பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் பாலாஜி, சந்தோஷ் ஆகிய 2 பேரை முதலில் கைது செய்தோம். அவர்களிடம் இருந்து 18 கிலோ தங்க நகைகள் மீட்டோம். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் இந்த வங்கியில் வேலை பார்த்த முக்கிய குற்றவாளியான முருகன், அவரது நண்பர்கள் செந்தில், சூர்யா ஆகிய 3 பேரை கைது செய்தோம். இதில் முருகனும், சூர்யாவும் இந்த கொள்ளை சம்பவத்தில் நேரடியாக ஈடுபட்டவர்கள்.
மொத்தம் கொள்ளை போன நகைகளின் எடை 31.7 கிலோ ஆகும். இந்த நகைகள் அனைத்தும் மீட்கப்பட்டுள்ளது. இதில் கோவையை சேர்ந்த ஸ்ரீவத்சவா என்பவரையும் கைது செய்திருக்கிறோம். அவரும் சென்னை அழைத்து வரப்படுகிறார். இதில் சந்தோஷிடம் அதிகபட்சமாக 18 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. எவ்வளவு நகைகள் கொள்ளை போனது என்பதில் குழப்பம் இருப்பதாக தகவல் வெளியானது.
வாடிக்கையாளர் அடகு வைத்த நகைகளை கவருடன் எடை போட்டிருந்தோம். பின்னர் கவர் எடையை கழித்த போது 15 கிலோ 900 கிராம் தங்க நகைகள் இருப்பது தெரிய வந்தது. 2 கிலோ 100 கிராம் கவர் எடை இருந்ததால் தான் இந்த சின்ன குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இந்த வழக்கில் சிக்கிய சந்தோஷின் உறவினர் அச்சிரப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமல்ராஜ் ஆவார். கொள்ளை நடந்த மறுநாள் சந்தோஷ் அவருடைய வீட்டுக்கு சென்றிருக்கிறார். அப்போது கொள்ளையடிக்கப்பட்ட நகைகளில் ஒரு பகுதியை பையில் வைத்துவிட்டு வந்திருப்பது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து அவரிடம் இருந்தும் நகையை பறிமுதல் செய்தோம்.
இதுவரையில் நடத்தப்பட்ட விசாரணையில், கொள்ளையடிக்க போகும் தகவல் இன்ஸ்பெக்டர் அமல்ராஜூக்கு தெரியவில்லை. கொள்ளையடித்துவிட்டு அவருடைய வீட்டுக்கு சென்றவுடன்தான் அவருக்கு தெரிந்திருக்கிறது. கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் அவருடைய வீட்டில் 3 நாட்கள் இருந்திருக்கிறது. அந்த தகவல் அவருக்கு தெரியும். எனவே அவர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுப்பதற்கு பரிந்துரைந்திருந்தோம். அதன் பேரில் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து அவரை நாங்கள் கைது செய்திருக்கிறோம். விசாரணைக்கு பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைப்போம்.
சென்னை போலீஸ்துறை எல்லாவிதமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு முழு முயற்சியுடன் செயல்பட்டு இந்த வழக்கில் அனைத்து குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டு, நகைகள் மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட கொள்ளை வழக்கில் இன்ஸ்பெக்டர் அமல்ராஜ் சிக்கியது எப்படி என்பது பற்றி போலீசில் பரபரப்பான புதிய தகவல்கள் கிடைத்துள்ளன.
- அனைத்தும் சினிமா காட்சிகளை மிஞ்சும் வகையில் அமைந்துள்ளது.
சென்னை:
சென்னை அரும்பாக்கத்தில் உள்ள பெடரல் வங்கியில் 32 கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த கொள்ளை வழக்கில் அதே வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வந்த முருகன் மற்றும் அவனது கூட்டாளிகள் 7 பேர் ஈடுபட்டதும், இதற்காக 10 நாட்களுக்கு மேல் திட்டமிட்டதும் அம்பலமானது.
இதை தொடர்ந்து முருகன், பாலாஜி, சந்தோஷ், சூர்யா உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி பல்வேறு தகவல்களை சேகரித்தனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் முருகனுடன் சேர்ந்து கொள்ளையர்களில் ஒருவரான சந்தோஷ் பெரிய அளவில் திட்டம் தீட்டி உள்ளார்.
கொள்ளையடித்த நகைகளில் 3½ கிலோ நகைகளை அச்சரபாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமல்ராஜ் வீட்டில் சந்தோஷ் கொடுத்து வைத்திருந்தது தற்போது தெரியவந்துள்ளது.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் வீட்டில் இருந்து 3½ கிலோ நகைகளை போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்து உள்ளனர். இது இவ்வழக்கில் அதிரடி திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட கொள்ளை வழக்கில் இன்ஸ்பெக்டர் அமல்ராஜ் சிக்கியது எப்படி என்பது பற்றி போலீசில் பரபரப்பான புதிய தகவல்கள் கிடைத்துள்ளன. இவை அனைத்தும் சினிமா காட்சிகளை மிஞ்சும் வகையில் அமைந்துள்ளது.
கொள்ளையன் சந்தோசின் மனைவி ஜெயந்தியும், அச்சரப்பாக்கம் இன்ஸ்பெக்டர் அமல்ராஜின் மனைவி இந்திராவும் சகோதரிகள் ஆவர். இதை தொடர்ந்து கொள்ளையடித்த நகையில் 3 கிலோ 700 கிராம் நகைகளை சந்தோஷ் தனது மனைவி மூலம் இன்ஸ்பெக்டர் மனைவியிடம் கொடுத்து வைத்தது தெரியவந்துள்ளது.
சந்தோசின் செல்போன் எண்ணை வைத்து போலீசார் விசாரணை நடத்திய போதுதான் இந்த தகவல்கள் அனைத்தும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சந்தோசின் செல்போன் எண்ணில் இருந்து அவர் யார்-யாரிடம் பேசியுள்ளார் என்பதை போலீசார் புள்ளி விவரத்துடன் சேகரித்தனர். இதில்தான் அத்தனை உண்மைகளும் வெளிப்பட்டன.
சந்தோசிடம் போலீசார் விசாரணை நடத்திய போது தனது சகலைபாடியான இன்ஸ்பெக்டர் அமல்ராஜை எந்த சூழ்நிலையிலும் காட்டி கொடுத்துவிடக் கூடாது என்பதில் தீவிரமாக இருந்து உள்ளார்.
"சார், உள்ளதை சொல்லி விடுகிறேன். ஆனால் நீங்கள் எனக்கு ஒரு சத்தியம் செய்து தரவேண்டும்" என்று போலீசாரிடம் சந்தோஷ் கூறி உள்ளார். இதை கேட்டு ஆடிப்போன போலீசார் என்ன உண்மையா சொல். நீ சொல்வதை போல் நடந்து கொள்கிறோம் என்று சத்தியம் செய்துள்ளனர்.
எனது சகலைப்பாடியான இன்ஸ்பெக்டர் அமல்ராஜின் வீட்டில் 3½ கிலோ நகைகளை கொடுத்து வைத்துள்ளேன். அந்த நகைகளை கொடுத்து விடுகிறேன். ஆனால் இன்ஸ்பெக்டர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது. அவரது வேலைக்கு ஆபத்து வந்து விடக்கூடாது என்றுகூறியும் போலீசிடம் சந்தோஷ் சத்தியம் கேட்டு உள்ளார். இதற்கும் சரி என்று கூறி சத்தியம் செய்த தனிப்படை போலீசார் 3½ கிலோ நகைகள் பற்றிய அத்தனை விவரங்களையும் திரட்டினர்.
இதை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3½ கிலோ நகைகளை மீட்பதற்காக தனிப்படை போலீசார் அச்சரப்பாக்கத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு இன்ஸ்பெக்டர் வீட்டில் இருந்த நகைகளை அதிரடியாக மீட்டனர்.
போலீசார் நெருங்கியதை அறிந்ததும் இன்ஸ்பெக்டர் அமல்ராஜ் இந்த நகைகள் அனைத்தையும் தாமாக ஒப்படைப்பது போல கொடுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
கொள்ளையன் சந்தோஷ் பற்றிய அனைத்து தகவல்களும் தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளில் பரபரப்பாக வெளியாகி கொண்டிருந்த நிலையில் இன்ஸ்பெக்டர் அமல்ராஜ் இத்தனை நாட்கள் கழித்து நகைகளை ஒப்படைத்திருப்பது தான் அவர் மீதான சந்தேகத்தை அதிகரிக்க செய்துள்ளது.
இதை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் அமல்ராஜ், அவரது மனைவி இந்திரா, கொள்ளையன் சந்தோசின் மனைவி ஜெயந்தி ஆகிய 3 பேரையும் போலீசார் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்து உள்ளனர். 3 பேரிடமும் தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது. இதன் முடிவில் மூவரையும் கைது செய்யவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.
இதற்கிடையே இன்ஸ்பெக்டர் அமல்ராஜை காவல் துறையில் உள்ள சிலர் தப்ப வைப்பதற்கு முயற்சிகள் மேற்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆனால் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் கொள்ளை வழக்கில் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியதை தொடர்ந்தே இன்ஸ்பெக்டர் அமல்ராஜ் மீதான நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் மீதான பிடி இறுகுகிறது.
- கொள்ளை கும்பலுக்கும், இன்ஸ்பெக்டருக்கும் தொடர்பு ஏற்பட்டது எப்படி? என்பது பற்றிய விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.
- சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதுமே பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கொள்ளை சம்பவத்தில் இன்ஸ்பெக்டர் ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னை:
அரும்பாக்கம் பெடரல் வங்கி கிளையில் 32 கிலோ தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவத்தில் 7 பேர் வரை ஈடுபட்டிருக்கலாம் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. நகைகள் அனைத்தும் மீட்கப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த கொள்ளை வழக்கில் செங்கல்பட்டு மாவட்டத்துக்கு உள்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக திடுக்கிடும் தகவல் வெளியாகி இருக்கிறது. வங்கியில் கொள்யைடிக்கப்பட்ட நகைகளில் 3½ கிலோ நகை இன்ஸ்பெக்டரின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதையடுத்து இன்ஸ்பெக்டரை சென்னை தனிப்படை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சென்னையில் வைத்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. கொள்ளையர்களிடம் இருந்து இன்ஸ்பெக்டர் நகைகளை வாங்கி தனது வீட்டில் பதுக்கி வைத்திருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து கொள்ளை கும்பலுக்கும், இன்ஸ்பெக்டருக்கும் தொடர்பு ஏற்பட்டது எப்படி? என்பது பற்றிய விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.
சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதுமே பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கொள்ளை சம்பவத்தில் இன்ஸ்பெக்டர் ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
- முருகனுடன் சேர்ந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட சந்தோஷ், பாலாஜி, சக்திவேல் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து 20 கிலோ நகைகள் மீட்கப்பட்டன.
- பெடரல் வங்கியில் கொள்ளை அடிக்கப்பட்ட 32 கிலோ நகைகளில் 3 பேரும் 20 கிலோ நகைகளை பங்கு போட்டு பிரித்து எடுத்துக் கொண்டது தெரியவந்துள்ளது.
சென்னை:
சென்னை அரும்பாக்கத்தில் உள்ள பெடரல் வங்கி கிளையில் நேற்று முன்தினம் பட்டப்பகலில் காவலாளிக்கு குளிர்பானம் கொடுத்தும், ஊழியர்களை கட்டிப்போட்டும் 32 கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த வங்கியின் சார்பில் பொது மக்களிடம் இருந்து அடமானமாக பெற்றிருந்த நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டன. இதனால் வங்கி கிளை முன்பு வாடிக்கையாளர்கள் திரண்டனர்.
இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக அரும்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் இதே வங்கியின் இன்னொரு கிளையில் மண்டல மேலாளராக பணியாற்றிய முருகன் என்பவர் கூட்டாளிகளுடன் சேர்ந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
முருகன், தனது 'ஜிம்' நண்பர்கள் சிலருடன் சேர்ந்து திட்டம் போட்டு கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியது கண்டு பிடிக்கப்பட்டது. பெடரல் வங்கியில் கொள்ளை அடிப்பதற்கு முருகன் மூளையாக செயல்பட்டதும், கொள்ளை கும்பலுக்கு தலைவனாக செயல்பட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து முருகனின் செல்போன் எண்ணை வைத்து துப்புதுலங்கும் பணியில் போலீசார் தீவிரம் காட்டினர். போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் அண்ணாநகர் துணை கமிஷனர் விஜயகுமார் தலைமையிலான தனிப்படை போலீசார் முருகனையும் அவரது கூட்டாளிகளையும் பிடிக்க வலை விரித்தனர்.
இதில் முருகனுடன் சேர்ந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட சந்தோஷ், பாலாஜி, சக்திவேல் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து 20 கிலோ நகைகள் மீட்கப்பட்டன. பெடரல் வங்கியில் கொள்ளை அடிக்கப்பட்ட 32 கிலோ நகைகளில் இவர்கள் 3 பேரும் 20 கிலோ நகைகளை பங்கு போட்டு பிரித்து எடுத்துக் கொண்டது தெரியவந்துள்ளது.
கொள்ளை சம்பவத்தில் ஈடுபட முருகனுடன் சேர்ந்து பல நாட்கள் திட்டம் போட்டதாகவும், பின்னரே கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியதாகவும் கைதானவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
கைதான 3 பேரிடம் முருகன் பற்றிய தகவல்களையும் போலீசார் திரட்டி உள்ளனர்.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான கொள்ளை கும்பல் தலைவன் முருகன் தப்பிஓடி தலைமறைாகி விட்டார். அவர் எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை. முருகனை பிடிக்க 4 தனிப்படைகள் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளன. தப்பி ஓடிய முருகன் வெளி மாநிலங்களுக்கு தப்பி சென்று இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
பக்கத்து மாநிலமான ஆந்திராவில் உள்ள தனது நண்பர்கள் வீட்டில் முருகன் பதுங்கி இருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை போலீசாரில் ஒரு பிரிவினர் அங்கு விரைந்து சென்று உள்ளனர்.
பெங்களூரு மற்றும் கொல்கத்தாவுக்கும் தனிப்படையினர் விரைந்து உள்ளனர். முருகனின் நண்பர்கள் மற்றும் உறவினர்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். இவர்களில் முருகனுக்கு நெருக்கமானவர்களின் செல்போன் எண்களை வைத்து போலீசார் ரகசியமாக ஆய்வு செய்து வருகிறார்கள்.
இதன் மூலம் முருகனை சுற்றி வளைத்து பிடிக்க போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.
கொள்ளை கும்பல் தலைவன் முருகன் தலைமறைவாகி இருக்கும் நிலையில் அவரது கூட்டாளிகளை போலீசார் விரைந்து செயல்பட்டு கைது செய்து உள்ளனர். இது தொடர்பான தகவல்கள் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் இன்று வெளியிட்டார்.
அப்போது கொள்ளை வழக்கில் துப்பு துலக்கி குற்றவாளிகளை கைது செய்த துணை கமிஷனர் விஜய குமார் மற்றும் தனிப்படை போலீசாருக்கும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.
நகைகள் கோர்ட்டு நடைமுறைக்கு பின்னர் வங்கியில் ஒப்படைக்கப்பட உள்ளது. கொள்ளை சம்பவத்தை தொடர்ந்து அடகு வைத்த நகைகள் உடனடியாக மீட்டு விட வேண்டும் என்பதில் வாடிக்கையாளர்கள் தீவிரமாக உள்ளனர்.
- போலீசாருக்கு மட்டும் நேற்று ரூ.1 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று கொள்ளையர்கள் பற்றி துப்பு கொடுக்கும் பொதுமக்களுக்கும் ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று டி.ஜி.பி. சைலேந்திர பாபு அறிவித்தார்.
- தகவல் கொடுக்கும் பொதுமக்கள் பற்றிய விபரம் ரகசியமாக வைக்கப்படும் என்று டி.ஜி.பி. சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை:
ரூ.20 கோடி நகைகளுடன் தப்பிய கொள்ளையர்களை பிடிக்க மாநிலம் முழுவதும் தீவிர தேடுதல் வேட்டை நடைபெறுகிறது.
அதேநேரம் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் வங்கி ஊழியர் முருகனை பிடிக்க வசதியாக அவனது போட்டோ தமிழகம் முழுவதும் அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாநிலம் முழுவதும் போலீஸ் டி.ஜி.பி. அவசர தகவல் அனுப்பி இருக்கிறார். போலீஸ் கண்காணிப்பு பணிகளை பலப்படுத்தும் படியும், வாகன சோதனை, சோதனைச்சாவடிகளில் தீவிரமாக கண்காணிக்கவும் உத்தரவிடபட்டுள்ளது.
குறிப்பாக வடமாவட்டங்கள் தீவிர கண்காணிப்பில் இருக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார். பஸ் நிலையம், ரெயில் நிலையங்களில் சந்தேகப்படும்படியாக நடமாட்டம் இருந்தால் பிடித்து விசாரிக்க வேண்டும்.
கொள்ளையர்களை பிடித்துக்கொடுக்கும் போலீசாருக்கு ரூ.1 லட்சம் ரொக்கப்பரிசு வழங்கப்படும் என்றும் டி.ஜி.பி. சைலேந்திர பாபு அறிவித்துள்ளார்.
சைபர் கிரைம் போலீசார் வங்கி ஊழியர் முருகன் அவரது நண்பர்கள், உறவினர்கள் செல்போன் எண்ணை ரகசியமாக கண்காணிக்கிறார்கள்.
நேற்று போலீசாருக்கு மட்டும் ரூ.1 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று கொள்ளையர்கள் பற்றி துப்பு கொடுக்கும் பொதுமக்களுக்கும் ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று டி.ஜி.பி. சைலேந்திர பாபு அறிவித்தார்.
தகவல் கொடுக்கும் பொதுமக்கள் பற்றிய விபரம் ரகசியமாக வைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
- தினமும் ஜிம்முக்கு போகும் பழக்கம் முருகனுக்கு இருந்துள்ளது.
- ஜிம்மில் முருகனுக்கு நெருங்கிய நண்பர்களாக இருந்த இரண்டு பேரை தனது திட்டத்துக்காக தேர்ந்தெடுத்து உள்ளார்.
சென்னை:
கொள்ளையர்கள் ஏற்கனவே ஒத்திகை நடத்தி பார்த்து கொள்ளை சம்பவத்தை கச்சிதமாக செய்து இருப்பது தெரிய வந்துள்ளது.
கொள்ளை நடந்த அரும்பாக்கம் பெடரல் வங்கியின் வில்லிவாக்கம் கிளையில் முருகன் வேலை பார்ப்பதால் சக ஊழியர்களுடன் நன்றாக அறிமுகமாகி இருக்கிறார். இதனால் அவ்வப்போது அரும்பாக்கம் கிளைக்கு வந்து ஊழியர்களுடன் பேசி செல்வாராம்.
அப்போதுதான் இந்த கிளையில் அடகு நகைகள் ஏராளம் உள்ளன என்பதை அறிந்துள்ளார்.
கிலோ கணக்கில் நகைகள் வங்கி லாக்கரில் இருந்ததால் அதை கொள்ளையடித்தால் கோடீஸ்வரன் ஆகி விடலாம் என்று நினைத்துள்ளார். இதுபற்றி பல நாட்களாக சிந்தித்த முருகன் தனது திட்டத்துக்கு தகுதியானவர்கள் யார் என்பதை தேட தொடங்கி இருக்கிறார்.
தினமும் ஜிம்முக்கு போகும் பழக்கம் முருகனுக்கு இருந்துள்ளது. ஜிம்மில் இவரது நெருங்கிய நண்பர்களாக இருந்த இரண்டு பேரை தனது திட்டத்துக்காக தேர்ந்தெடுத்து உள்ளார்.
அவர்களிடம் தனது திட்டத்தை சொல்லி இருக்கிறார். கோடிக்கணக்கில் நகை கிடைக்கப் போகிறது என்ற மகிழ்ச்சியில் அவர்களும் கொள்ளையடிக்க சம்மதித்துள்ளார்கள்.
இதையடுத்து ஒரு வாரம் அந்த வங்கிக்கு 3 பேரும் சென்று ஒத்திகை பார்த்துள்ளார்கள். வங்கிக்குள் செல்ல ஏதுவாக காவலாளியை மயக்க மருந்து கொடுத்து வீழ்த்தி விட்டு உள்ளே சென்று ஊழியர்களை மிரட்டி கட்டிப்போட்டு விட்டு நகைகளை அள்ள வேண்டும் என்று முடிவு செய்துள்ளார்கள்.
ஒத்திகையின் போது ஏற்பட்ட ஒவ்வொரு சந்தேகத்தையும் முருகனிடம் சொல்லி அதற்கு மாற்று வழிகளையும் கேட்டு உள்ளார்கள்.
எல்லா சந்தேகங்களும் தீர்ந்த பிறகு திட்டம் வகுத்து ஆபரேசனை தொடங்கி இருக்கிறார்கள்.
காவலாளிக்கு மயக்க குளிர்பானம் கொடுத்து உள்ளே சென்றதும் ஊழியர்களை கத்திமுனையில் மிரட்டி லாக்கர் சாவிகளை வாங்கி இருக்கிறார்கள். அப்போது முகம் அடையாளம் தெரியாமல் இருக்க கை குட்டையால் முகத்தை மூடிக் கொண்டிருக்கிறார்கள்.
லாக்கரை திறந்து நகைகளை அள்ளி மூட்டை கட்டி இருக்கிறார்கள். மொத்தம் 32 கிலோ என்பதால் 3 மூட்டைகளில் கட்டி இருக்கிறார்கள். அதை சந்தேகம் வராதபடி சாதாரண பைகளில் போட்டு எடுத்து சென்றுள்ளார்கள்.
கண்காணிப்பு கேமிராக்களை சாதுர்யமாக கையாண்டு இருக்கிறார்கள். காட்சிகள் பதிவாகும் 'ஹார்டு டிஸ்கையும்' உருவி சென்று விட்டார்கள். இதனால் போலீசாருக்கு காட்சி பதிவுகள் எதுவும் கிடைக்கவில்லை.
நகைகளுடன் வெளியே வந்தவர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று உள்ளார்கள். மோட்டார் சைக்கிளை போலீசார் மடக்கலாம் என்பதை உணர்ந்து வேறு ஏதாவது வாகனங்களில் ஏறியோ அல்லது சாதரண பாதசாரிகள் போல் நடந்தோ சென்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
பின்னர் காய்கறி லாரிகள் போன்ற சரக்கு வாகனங்களில் ஏறி தப்பி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
- காவலாளி சரவணனுக்கு முருகன் திடீரென்று குளிர்பானம் வாங்கி கொடுத்தது எப்படி?
- கொள்ளையடிக்க வந்தபோது வங்கியில் வாடிக்கையாளர் யாரும் இல்லை என்ற தகவல் முருகனுக்கு எப்படி தெரிய வந்தது.
சென்னை:
சென்னையில் பட்டப்பகலில் வங்கிக்குள் புகுந்து ஊழியர்களை கட்டிப்போட்டு 32 கிலோ நகைகளை கொள்ளையர்கள் அள்ளிச்சென்ற சம்பவம் பொதுமக்கள் மட்டுமல்லாது காவல்துறையையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
அரும்பாக்கம் ரசாக் கார்டன் ரோட்டில் உள்ள பெடரல் வங்கி என்ற தனியார் வங்கியில் நேற்று பட்டப்பகலில் கொள்ளையர்கள் அரங்கேற்றிய இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களையும் அவர்களிடம் சிக்கிய ரூ.20 கோடி மதிப்புள்ள நகைகளை மீட்கவும் போலீசார் தீவிர வேட்டையில் ஈடுபட்டு உள்ளார்கள்.
கொள்ளையர்கள் முகம் தெரியாதவர்கள் அல்ல. இதே வங்கியில் வில்லிவாக்கம் கிளையில் வேலை பார்க்கும் முருகன் என்ற ஊழியர் தலைமையில்தான் இந்த கொள்ளை சம்பவம் அரங்கேற்றப்பட்டுள்ளது.
கொள்ளைக் கும்பலின் தலைவன் அடையாளம் தெரிந்து விட்டதால் அவனை பிடிக்க மாநிலம் முழுவதும் போலீசார் வலை விரித்துள்ளார்கள்.
முருகன் பாடியைச் சேர்ந்தவர். எனவே தனிப்படை போலீசார் முருகனின் வீட்டுக்கு சென்று பார்த்துள்ளார்கள். அங்கு முருகன் இல்லை.
நேற்று முருகன் வீட்டில் இருந்து எப்போது வெளியே சென்றார்? மாலையில் வீட்டுக்கு வந்தாரா? யாரேனும் அவரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார்களா? என்று விசாரித்தனர்.
குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் கிடைத்த தகவல்களின் படி போலீசார் தேடுதல் வேட்டையை தொடங்கி இருக்கிறார்கள்.
அப்போது உறவினர் பாலாஜி என்பவருக்கும் இந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து பாலாஜியை போலீசார் பிடித்து விசாரித்து வருகிறார்கள்.
அவர் கொடுத்த தகவல் படி போலீஸ் தனிப்படை ஒன்று திருவண்ணாமலைக்கும் விரைந்துள்ளது.
இதுவரை 6 பேரை போலீசார் தங்கள் வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளார்கள். அவர்களிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் போலீசாருக்கு சில ரகசிய தகவல்கள் கிடைத்துள்ளன. எனவே கொள்ளைக் கும்பல் விரைவில் பிடிபட வாய்ப்பு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
கொள்ளை நடந்து சுமார் 45 நிமிடங்களுக்கு பிறகே போலீசுக்கு தெரியவந்தது. கொள்ளையர்கள் வங்கிக்குள் புகுந்தது எப்படி என்று விசாரித்த போது, பணியில் இருந்த காவலாளி சரவணன் என்பவருக்கு முருகன் குளிர்பானம் வாங்கி கொடுத்ததாகவும் அதை குடித்ததும் அவர் மயங்கி விட்டதாகவும் அதன் பிறகே கொள்ளையர்கள் தங்கள் கைவரிசையை காட்டியதாகவும் கூறப்பட்டது.
காவலாளி சரவணனுக்கு முருகன் திடீரென்று குளிர்பானம் வாங்கி கொடுத்தது எப்படி? கொள்ளையடிக்க வந்தபோது வங்கியில் வாடிக்கையாளர் யாரும் இல்லை என்ற தகவல் முருகனுக்கு எப்படி தெரிய வந்தது.
இது தொடர்பாக ஏற்கனவே காவலாளியிடம் பேசி தெரிந்து கொண்டார்களா? அல்லது காவலாளியும் உடந்தையா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்