search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கந்த சஷ்டி திருவிழா"

    • வீட்டில் கடன், வியாதி, சத்ரு பயம் இல்லை என்ற நிலை ஏற்படும்.
    • தினம், தினம் கந்த சஷ்டி கவசம் படியுங்கள். வேலனைப் போற்றுங்கள்

    சஷ்டி கவசத்தை தினம் காலையிலும் மாலையிலும் ஓத முருகனே காட்சி தந்துவிடுவான்.

    ஆரம்பமே சஷ்டியை நோக்க என்று இருக்கிறது. சஷ்டி என்பது அமாவாசை அல்லது பூர்ணிமாவுக்கும் அடுத்து ஆறாம் நாள்.

    ஜாதகத்தில் ஆறாம் இடம் ரோகம், கடன், விரோதம், சத்ரு, போன்றவைகளைக் குறிக்கும். செவ்வாய் ரோகக் காரகன். இந்த எல்லா தோஷத்தைப் போக்கும் பெருமான் திரு முருகப்பெருமான்.


    அவருக்கு உகந்த நாள் சஷ்டி. சஷ்டி என்றால் ஆறு, முருகனுக்கோ ஆறு முகங்கள், சரவணபவ என்று ஆறு அட்சரம், ஆறு படை வீடுகள், ஆறு கார்த்திகைப் பெண்ணால் வளர்க்கப்பட்டவர். நாம் அந்த திருவடியை விடாது பிடித்தால் மேலே சொன்ன ஒரு கெடுதலும் அண்டாது.

    வீட்டில் கடன், வியாதி, சத்ரு பயம் இல்லை என்ற நிலை ஏற்படும். இப்போது சஷ்டி கவசத்தைப் பார்ப்போம்.

    கந்தன் வரும் அழகே அழகு, பாதம் இரண்டில் பண்மணிச் சலங்கை கீதம் பாட கிண்கிணியாட, மயில் மேல் அமர்ந்து ஆடி ஆடி வரும் அழகை என்னவென்பது?

    இந்திரன் மற்ற எட்டு திசைகளில் இருந்தும் பலர் முருகனை போற்றுகிறார்கள். முருகன் வந்து விட்டான், இப்போது என்னைக் காக்க வேண்டும், பன்னி ரண்டு விழிகளும் பன்னி ரெண்டு ஆயுதத்துடன் வந்து என்னைக் காக்க வேண்டும்.

    அவர் அழகை வர்ணிக்கும் போது பரமேஸ்வரி பெற்ற மகனே முருகா, உன் நெற்றியில் இருக்கும் திருநீர் அழகும், நீண்ட புருவமும், பவளச் செவ்வாயும், காதில் அசைந் தாடும் குண்டலமும், அழகிய மார்பில் தங்க நகைகளும், பதக்கங்களும், நவரத்ன மாலை அசைய உன் வயிறும், அதில் பட்டு வஸ்திரமும் சுடர் ஒளி விட்டு வீச, மயில் மேலேறி வந்து கேட்டவர்களுக்கு எல்லாம் வரம் தரும் முருகா, என்றெல்லாம் அவரை ஸ்ரீ தேவராயர் வர்ணிக்கிறார்.

    அவர் கூப்பிடும் வேல்கள் தான் எத்தனை? உடம்பில் தான் எத்தனை பாகங்கள்? காக்க என்று வேலை அழைக்கிறார், வதனத்திற்கு அழகு வேல், நெற்றிக்குப் புனிதவேல், கண்ணிற்குக் கதிர்வேல் நாசிகளுக்கு நல்வேல், செவிகளுக்கு வேலவர் வேல், பற்களுக்கு முனைவேல், செப்பிய நாவிற்கு செவ்வேல், கன்னத்திற்கு கதிர்வேல், கழுத்திற்கு இனியவேல், மார்பிற்கு ரத்தின வடிவேல், இளமுலை மார்புக்கு திருவேல், தோள்களுக்கு வடிவேல், பிடறிகளுக்கு பெருவேல், அழகு முதுகிற்கு அருள்வேல், வயிறுக்கு வெற்றிவேல் சின்ன இடைக்கு செவ்வேல், நாண்கயிற்றை நால்வேல், பிட்டம் இரண்டும் பெருவேல், கணைக் காலுக்கு கதிர் வேல், ஐவிரல்களுக்கு அருள்வேல், கைகளுக்கு கருணை வேல், நாபிக்கமலம் நல்வேல் முப்பால் நாடியை முனை வேல், எப்போதும் என்னை எதிர் வேல், பகலில் வஜ்ர வேல், இரவில் அனைய வேல், காக்க காக்க கனக வேல் காக்க.

    அப்பப்பா எத்தனை விதமான வேல் நம்மைக் காக்கின்றன.

    அடுத்தது எந்தெந்த வகை பயங்களில் இருந்து காக்க வேண்டும் என்று விளக்கப்பட்டுள்ளது.

    பில்லி, சூன்யம், பெரும் பகை, வல்லபூதம், பேய்கள், அடங்காமுனி, கொள்ளிவாய்ப் பிசாசு, குறளைப் பேய்கள், பிரும்ம ராட்சசன், ரிசி காட்டேரி, இவைகள் அத்தனையும் முருகன் பெயர் சொன்னாலே ஓடி ஒளிந்து விடும் என்கிறார்.

    அடுத்தது மந்திரவாதிகள் கெடுதல் செய்ய உபயோகிக்கும் பொருட்கள் பாவை, பொம்மை, முடி, மண்டைஓடு, எலும்பு, நகம், சின்ன மண்பானை, மாயாஜால் மந்திரம், இவைகள் எல்லாம் சஷ்டி கவசம் படித்தால் செயலிழந்து விடும் என்கிறார்.

    பின் மிருகங்களைப் பார்ப்போம், புலியும் நரியும், எலியும் கரடியும், தேளும் பாம்பும் செய்யான், பூரான், இவைகளால் எற்படும் விஷம் சஷ்டி கவச ஓசையிலேயே இறங்கி விடும் என்கிறார்.

    நோய்களை எடுத்துக் கொண்டால் வலிப்பு, சுரம், சுளுக்கு, ஒத்த தலைவலி, வாதம், பைத்தியம், பித்தம், சூலை, குடைச்சல், சிலந்தி, குடல் புண், பக்கப் பிளவை போன்ற வியாதிகள் இதனைப் படித்தால் உடனே சரியாகி விடும் என்கிறார்.

    இதைப் படித்தால் வறுமை ஓடிவிடும் நவகிரகங்களும் நமக்குத் துணை இருப்பார்கள். சத்ருக்கள் மனம் மாறி விடுவார்கள். முகத்தில் தெய்வீக ஒளி வீசும் என்று கூறப்பட்டுள்ளது.

    எனவே தினம், தினம் கந்த சஷ்டி கவசம் படியுங்கள். வேலனைப் போற்றுங்கள் உங்கள் வேதனைகள் எல்லாம் விலகி ஓடிவிடும்.

    • கவசம் என்றால் பாதுகாப்பது அல்லது காப்பாற்றுவது.
    • கந்த சஷ்டி கவசத்தை அருளியவர் ஸ்ரீ தேவராய சுவாமிகள்.

    கவசம் என்றால் பாதுகாப்பது அல்லது காப்பாற்றுவது என்று பொருள்படும். போரின்போது வீரர்கள் எதிரிகளிடமிருந்து தன்னைக் காத்துக்கொள்ள கவசம் அணிந்து கொள்வார்கள்.

    அவ்வாறு கந்த சஷ்டி கவசம் நம்மை தீமைகளில் இருந்தும், கஷ்டத்தில் இருந்தும், நோய் நொடிகளில் இருந்தும் காப்பதால் அதை கவசம் என்று அழைக்கின்றோம்.

    கந்த சஷ்டி கவசத்தை அருளியவர் ஸ்ரீ தேவராய சுவாமிகள். இவர் எதற்காக இந்த கவசத்தை பாடினார் தெரியுமா? தேவராய சுவாமிகள் ஒரு சமயம் கடும் வயிற்றுவலியால் மிகவும் அவதிப்பட்டு வந்தார். எவ்வளவோ சிகிச்சைகள் மேற்கொண்டும் அவருடைய வயிற்றுவலி தீர்ந்தபாடில்லை.

    வாழ்க்கையே வெறுத்துப்போய் கடலில் விழுந்து தற்கொலை செய்து கொள்ளும் முடிவோடு திருச்செந்தூர் சென்றார். அவர் சென்ற நாளில் திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழா ஆரம்பித்திருந்தது.

    தீவிர முருக பக்தரான தேவராய சுவாமிகள், சஷ்டி நாட்களில் விரதமிருந்து முருகனை மனம் குளிர வழிபட்டு சூரசம்ஹாரம் கண்ட பின்பு உயிர் விடலாம் என்று முடிவெடுத்தார்.

    நல்ல அருட்கவியும், மந்திரநூல் வல்லுனருமான தேவராய சுவாமிகள், சஷ்டி விரத நாட்களான ஆறு தினங்களில், தினத்துக்கு ஒன்றாக, ஆறுபடை வீடுகளுக்கும் தனித்தனியாக ஆறு கவசங்களை பாடி முடிப்பது என்று முடிவு செய்தார்.

    அவ்வண்ணமே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு படை வீட்டிற்குரிய கவசங்களை பாட ஆரம்பித்தார். அவர் பாட ஆரம்பித்ததும் வயிற்றுவலி படிப்படியாக குறைய ஆரம்பித்தது.

    சஷ்டியின் ஆறாவது நாளன்று வயிற்றுவலி அறவே நீங்கிவிட்டது. இப்படி பிறந்தவை தான் கந்த சஷ்டி கவசங்கள் ஆறும்.

    தேவராய சுவாமிகள் ஒவ்வொரு படைவீட்டிற்கும் ஒவ்வொரு கவசமாக ஆறு கவசங்களை இயற்றியுள்ளார். இவை அனைத்துமே 'கந்த சஷ்டி கவசம்' என்ற ஒரே பெயரைத்தான் கொண்டு அழைக்கப்படுகின்றன. அவர் முதன் முதலில் இயற்றிய 'திருச்செந்தூர் கவசம்' தான் பொதுவாக எல்லோரும் அறிந்தது.

    'சஷ்டியை நோக்க சரவண பவனார் சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன்' என்று தொடங்கும் கவசம். இதுபோல் ஒவ்வொரு படைவீட்டிற்கும் ஒவ்வொரு கவசம் உள்ளது. இருப்பினும் திருச்செந்தூர் கந்த சஷ்டி கவச நூலே பிரபலமாகி எல்லோராலும் அறியப்பட்டு பாடப்பட்டு வருகிறது.

    • 2-ந் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • தீபாராதனைக்கு பின்னர் சுவாமி ஜெயந்தி நாதர் கடற்கரையில் எழுந்தருவார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெறும் பல்வேறு திருவிழாக்களில் முக்கிய திருவிழாவான கந்த சஷ்டி திருவிழா கடந்த 2-ந் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    விழாவில் ஒவ்வொரு நாளும் காலை 7மணிக்கு யாக பூஜை தொடங்கி,12 மணிக்கு யாகசாலையில் தீபாராதனை நடைபெற்றது. 12.45 மணிக்கு சுவாமி தங்க சப்பரத்தில் சண்முக விலாசம் வந்து அங்கு தீபாராதனைக்குப்பின் மாலை 4.30 மணிக்கு திருவாவடுதுறை ஆதீனம் சஷ்டி மண்டபத்தில் அபிஷேகம் நடைபெற்று அலங்கார தீபாராதனைக்கு பின் தங்க தேரில் சுவாமி, அம்பாள் கிரி வீதி உலா வந்து கோவில் சேர்தல் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி இன்று மதியம் 2 மணிக்கு திருவாவடுதுறை ஆதீனம் சஷ்டி மண்டபத்தில் சுவாமி ஜெயந்தி நாதருக்கு பல்வேறு வகையான அபிஷேக பொருட்களால் அபிசேகம் நடைபெற்று தீபாராதனைக்கு பின்னர் சுவாமி ஜெயந்தி நாதர் கடற்கரையில் எழுந்தருவார்.

    அங்கு முதலில் சுவாமி ஜெயந்தி நாதர் தன்னிடம் போரிட வரும் யானை முகம் கொண்ட சூரனையும், 2-வதாக சிங்கமுகன், 3-வதாக தன் முகம் கொண்ட சூரனையும் வதம் செய்கிறார். இறுதியில் மரமாக மாறிய சூரனை சுவாமி ஜெயந்தி நாதர் சேவலாகவும், மயிலாகவும் மாற்றி தன்னோடு ஜக்கியமாக்கி கொள்ளும் நிகழ்ச்சி நடக்கிறது.


    இதையொட்டி சூரசம்ஹாரத்தை காண்பதற்கு லட்சக்கணக்கானோர் அதிகாலை முதலே கோயில் வளாகத்தை நோக்கி வந்துள்ள வண்ணம் உள்ளனர். பக்தர்கள் கடலில் நீராடிவிட்டு கடற்கரைகளில் காத்திருக்கின்றனர்.

    சூரசம்ஹாரத்தையொட்டி பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகிறார்கள். இன்று பிற்பகல் சுமார் 6 லட்சம் பக்தர்கள் சூரசம்ஹார நிகழ்ச்சிக்காக திரண்டிருந்தனர்.

    பாதுகாப்பிற்கு 4500 போலீசார் சீருடையிலும், சாதாரண உடையிலும் உயர் கோபுரங்கள் அமைத்து கண்காணிப்பு காமிரா மூலம் பக்தர்களை கண்காணித்து வருகின்றனர்.

    கடலில் புனித நீராடும் பக்தர்கள் வசதிக்காக கடலோர பாதுகாப்பு குழுமம் போலிசார் டி.எஸ்.பி. பிரதாபன் தலைமையில் 90 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


    தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் மற்றும் பஸ்கள் நிறுத்துவதற்கு புறநகர் பகுதிகளில் 9 இடங்களில் சுமார் 7000 வாகனங்கள் நிறுத்துவதற்கு வசதியாக தற்காலிக பேருந்து நிலையங்கள் மற்றும் வாகன நிறுத்துமிடங்கள் காவல்துறை சார்பில், தயார் செய்யப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி, மதுரை, திருச்சி, சென்னை போன்ற இடங்களுக்கு செல்லக்கூடிய அரசு பஸ்கள் மற்றும் தனியார் பஸ்கள் நிறுத்துவதற்கு திருச்செந்தூர் பஸ் நிலையத்தில் மற்றும் அதன் அருகில் தற்காலிக பஸ் நிறுத்து மிடம் அமைக்கப்பட்டுள்ளது.

    சுற்றுலா வாகனங்கள் கார்கள் நிறுத்துவதற்கு வீரபாண்டியன் பட்டினம் அருகே உள்ள ஜே.ஜே. நகர், அரசு தொழிற்பெயர்ச்சி நிலையம், சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் அருகில் ஆகிய மூன்று இடங்களில் தற்காலிக வாகனங்கள் நிறுத்துமிடம் அமைக்கப் பட்டுள்ளது.

    நெல்லை, தென்காசி செல்லக்கூடிய பஸ்கள் நிறுத்துவதற்கு திருச்செந்தூர் நெல்லை சாலையில் அன்பு நகர், மற்றும் அரசு டாஸ்மாக் அருகில் சுற்றுலா வாகனங்கள் கார்கள் நிறுத்துவதற்கு 2 இடங்களில் தற்காலிக பஸ் நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது.

    கன்னியாகுமரி நாகர்கோவில் செல்லக்கூடிய பஸ்கள், சுற்றுலா வாகனங்கள் கார்கள் நிறுத்து வதற்கு பரமன்குறிச்சி சாலையில் உள்ள நுகர்பொருள் வாணிப கழகம் குடோன் அருகிலும் ஆம்னி பஸ்களுக்கும், தற்காலிக பஸ்கள் நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது.

    காவல் உதவி மையங்கள், முதலுதவி நிலையங்கள், தற்காலிக பஸ் நிலையங்கள், கழிப்பறைகள், பொது மக்களுக்கான நியமிக்கப்பட்ட வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் போக்குவரத்து மாற்றுப பாதைகள், வழித்தடங்கள் பற்றிய அத்தியாவசியத் தகவல்களை பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் எளிதாக இணையதளத்தில் அறிந்து கொள்ளும் வகையில் கியூ ஆர் கோடு மற்றும் லிங்க் மூலம் பெறும் வசதியை தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அறிமுகம் செய்துள்ளது.

    மேலும் அவசர உதவிகளுக்கு பொதுமக்கள் தொடர்பு கொள்ள தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், திருச்செந்தூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர், திருச்செந்தூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மற்றும் திருச்செந்தூர் கோவில் காவல் ஆய்வாளர் ஆகியோரின் தொலைபேசி எண்களும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கோவில் வளாகத்தில் அவசர சிகிச்சைக்கு தற்காலிக மருத்துவ மனைகள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் மருத்துவர்கள் உள்ளனர். அம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

    நாளை இரவு 11மணிக்கு கோவில் அருகில் உள்ள திருக்கல்யாண மேடையில் சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும் தெய்வானைக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் தக்கார் அருள் முருகன், இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • காப்பு கட்டிய பக்தர்கள் பால், மிளகு, துளசி ஆகியவற்றை ஒரு வேளை மட்டுமே சாப்பிட்டு வருவர்.
    • விழா நாட்களில் சண்முகருக்கு பகல் 11 மணிக்கும், மாலை 6 மணிக்கும் சண்முகார்ச்சனை நடைபெறும்.

    திருப்பரங்குன்றம்:

    தமிழ்க்கடவுளாக போற்றப்படும் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுள் முதலாம் படை வீடாக திகழும் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் கந்தசஷ்டி விழா 7 நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான கந்த சஷ்டி விழா இன்று காலை காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

    இதனையொட்டி காலை 8 மணிக்கு யாகசாலை பூஜைகள் நடைபெற்று, உற்சவர் சன்னதியில் உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, சண்முகர் சன்னதியில் சண்முகப்பெருமான் வள்ளி, தெய்வானை, உற்சவ நம்பியாருக்கும் காப்புக்கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையடுத்து காலை 9 மணிக்கு கோவில் கம்பத்தடி மண்டபத்தில் சிவாச்சாரியார்கள் பக்தர்களுக்கு காப்பு கட்டினர்.

    இந்த விழாவில் மதுரை மட்டுமல்லாது சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் காப்பு கட்டி தங்களது விரதத்தை தொடங்கினார்கள். காப்பு கட்டிய பக்தர்கள் பால், மிளகு, துளசி ஆகியவற்றை ஒரு வேளை மட்டுமே சாப்பிட்டு வருவர். மேலும் காலை, மாலை வேளைகளில் சரவணப்பொய்கையில் நீராடி கிரிவலம் வருவார்கள்.

    அதேபோல் விழா நாட்களில் சண்முகருக்கு பகல் 11 மணிக்கும், மாலை 6 மணிக்கும் சண்முகார்ச்சனை நடைபெறும். தினமும் தந்தத்தொட்டி விடையாத்தி சப்பரத்தில் தெய்வானையுடன் சுப்பிரமணியசுவாமி எழுந்தருளி திருவாச்சி மண்டபத்தை 6 முறை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். வருகிற 7-ந்தேதி வரை சுவாமி உற்சவர் சன்னதியிலிருந்து திருவாச்சி மண்டபத்தில் தந்தத்தொட்டி சப்பரத்தில் எழுந்தருளுவார்.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான வேல்வாங்கும் நிகழ்ச்சி வருகிற 6-ந்தேதியும், மறுநாள் 7-ந்தேதி (வியாழக்கிழமை) மாலை 6.30 மணிக்கு சன்னதி தெருவில் உள்ள சொக்கநாதர் கோவில் முன் சூரசம்ஹாரமும் நடைபெறும். 8-ந்தேதி காலை சிறிய சட்டத் தேரோட்டமும், மாலை 3 மணிக்கு பாவாடை தரிசனமும் நடைபெற உள்ளது.

    மதுரை பகுதியில் சஷ்டி விரதமிருக்கும் பக்தர்கள் விழா தொடங்கிய இன்று முதல் 7 நாட்களும் திருப்பரங்குன்றம் கோவில் வளாகத்திலேயே தங்கியிருந்து பூஜைகளில் பங்கேற்பர். மேலும் கோவிலில் பக்தர்கள் வசதிக்காக தொலைக்காட்சி பெட்டிகள் மூலம் பூஜை நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படும். கோவில் சார்பில் பக்தர்களுக்கு தங்க வசதியாக கோவில் வளாகத்தில் மின்விளக்கு, மின்விசிறி, பந்தல் மற்றும் குடிநீர் வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது.

    மேலும் மாநகராட்சி சார்பில் கிரிவலப்பாதை பகுதி, பேருந்து நிலையம், கோவில் வாசல் முன்பு மற்றும் மலைக்கு பின்புறம் குடிநீர் வசதியும், நடமாடும் கழிப்பறை வசதியும் செய்யப்பட்டுள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் சத்யபிரியா, அறங்காவலர்கள் சண்முக சுந்தரம், மணிசெல்வம், பொம்மதேவன், ராமையா, கோவில் துணை ஆணையர் சூரிய நாராயணன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.

    இதேபோல் ஆறாம் படை வீடாக போற்றப்படும் பழமுதிர்சோலை எனப்படும் சோலைமலை முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா இன்று காலை 8 மணிக்கு விக்னேஸ்வர பூஜை மற்றும் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து யாகசாலை பூஜை, சண்முகார்ச்சன, மகா அபிஷேகம், தீபாராதனை நடந்தது. மாலையில் அன்ன வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடக்கிறது.

    இதேபோல் விழா நாட்களில் சுவாமி காமதேனு, யானை, ஆட்டுக்கிடாய், சப்பரம் ஆகிய வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். 7-ந்தேதி சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கிறது. அன்றைய தினம் சுவாமி குதிரை வாகனத்தில் எழுந்தருளி மதியம் 3.45 மணிக்கு வேல்வாங்குதலும், 4 மணிக்கு வெள்ளி மயில் வாகனத்தில் புறப்பட்டு ஈசான திக்கில் கஜமுகாசூரனையும், அக்கினி திக்கில் சிங்கமுகாசூரனையும் கோவில் ஸ்தல விருட்சமான நாவல் மரத்தடியில் சுப்பிரமணிய சுவாமி வதம் செய்கிறார்.

    8-ந்தேதி திருக்கல்யாணமும், அன்று மாலை ஊஞ்சல் உற்சவமும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் வெங்கடாசலம், அறநிலையத்துறை இணை இயக்குனர் செல்லத்துரை மற்றும் அறங்காவலர்கள், கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர். 

    • கந்த சஷ்டி திருவிழா நாளை தொடங்கி 13-ந்தேதி வரை 12நாட்கள் நடக்கிறது.
    • சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 7-ந்தேதி நடக்கிறது.

    திருச்செந்தூர்:

    முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பல்வேறு திரு விழாக்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ளும் முக்கிய திருவிழாவான கந்த சஷ்டி திருவிழா நாளை (சனிக்கிழமை) தொடங்கி 13-ந்தேதி வரை 12நாட்கள் நடக்கிறது.

    கந்த சஷ்டி திருவிழா முதல் நாளான நாளை அதிகாலை 1மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 5.30 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலைக்கு புறப்படுகிறார்.

    7 மணிக்கு யாகபூஜை தொடங்குகிறது. காலை 9 மணிக்கு உச்சி கால அபிஷேகம் நடக்கிறது. மதியம் 12 மணிக்கு யாக பூஜையில் தீபாராதனை, 12.45 மணிக்கு வகுப்பு, வீரவாள் வகுப்பு பாடல்களுடன் சுவாமி ஜெயந்தி நாதர் வள்ளி, தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் எழுந்தருளி சண்முக விலாசம் மண்டபம் வந்து அங்கு தீபாராதனை நடக்கிறது.

    மாலை 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், 4 மணிக்கு திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் சுவாமிக்கு ஜெயந்தி நாதருக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம் உள்பட பல்வேறு அபிஷேக பொருட்களால் அபிசேகம் நடைபெற்று தீபாராதனைக்கு பின் சுவாமி ஜெயந்தி நாதர் தங்க தேரில் கிரி வீதி உலா வந்து கோவில் சேர்தல் நடக்கிறது.

    2-ம் திருவிழாவில் இருந்து 5-ம் திருவிழா வரை 4 நாட்கள் வரை அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது 3.30 மணிக்கு விஸ்வரூபம், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிக்கால அபிஷேகம், மாலை 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் தொடர்ந்து மற்ற கால பூஜையும் நடக்கிறது.

    காலை 7 மணிக்கு யாக பூஜை தொடங்கி,12 மணிக்கு யாக சாலையில் தீபாராதனை நடைபெற்று 12.45 மணிக்கு சுவாமி ஜெயந்தி நாதர் தங்க சப்பரத்தில் சண்முக விலாசம் மண்டபம் வந்து அங்கு தீபாராதனை நடைபெற்று மாலை 4.30 மணிக்கு திருவாவடுதுறை ஆதீனம் சஷ்டி மண்டபம் வந்து அங்கு அபிஷேகம் நடைபெற்று தீபாராதனைக்கு பின் கிரி வீதி உலா வந்து கோவில் சேர்தல் நடக்கிறது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 7-ந்தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது. அன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது 1.30 க்கு விஸ்வரூபம் 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடக்கிறது.

    காலை 6 மணிக்கு யாக பூஜை தொடங்கி மதியம் 12 மணிக்கு யாக சாலையில் தீபாராதனையும்,12.45 மணிக்கு சுவாமி ஜெயந்தி நாதர் சண்முக விலாசம் மண்டபம் வந்து அங்கு தீபாராதனை நடைபெற்று பின் மதியம் 2 மணிக்கு திருவாவடுதுறை ஆதீனம் சஷ்டி மண்டபத்தில் பல்வேறு அபிஷேக பொருட்க ளால் அபிஷேகம் நடைபெற்று அலங்கார தீபாராதனைக்கு பிறகு மாலை 4.30 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் சூரபத்மனை வதம் செய்ய கடற்கரையில் எழுந்தருளி சூரனை சம்ஹாரம் செய்கிறார்.

    பின்னர் சந்தோஷ் மண்டபத்தில் அபிஷேகம் நடைபெற்று கோவில் சேர்தல் நடக்கிறது. இரவு 108 மகாதேவர் சன்னதி முன்பு சாயாபிஷேகம் நடைபெற்று சஷ்டி தகடு கட்டுதல் நடக்கிறது.

    7-ம் திருவிழாவான 8-ந்தேதி திருக்கல்யாணம் நடக்கிறது. அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 3.30-க்கு விஸ்வரூபம், 4.30 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சி கால அபிஷேகம், மதியம் 1மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் நடக்கிறது.

    தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது. அதிகாலை 5.30 மணிக்கு அம்பாள் தபசு காட்சிக்காக புறப்படுதல், மாலை 6 மணிக்கு சுவாமி அம்பாளுக்கு காட்சி கொடுத்து தோல் மாலை மாற்றும் வைபவம் நடக்கிறது.

    இரவு 11 மணிக்கு கோவில் அருகில் உள்ள திருக்கல்யாண மேடையில் சுவாமிக்கும், தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது.

    8-ம்திருவிழா இரவு சுவாமி குமரவிடங்க பெருமான் தங்க மயில் வாகனத்திலும் அம்பாள் பூம் பல்லக்கில் பட்டிண பிரவேசம் நடக்கிறது.

    9,10,11 ஆகிய திருவிழா நாட்களில் திருக்கல்யாண மேடை அருகில் ஊஞ்சல் வைபவமும் 12-ம் திருவிழா மாலை 4.30மணிக்கு மஞ்சள் நீராட்டு விழாவுடன் விழா நிறைவு பெறுகிறது.



    விரதம் இருக்கும் பக்தர்கள் வசதிக்காக ஆங்காங்கே 18 இடங்களில் கொட்டகைகள் அமைக்கப்பட்டுள்ளது. சுத்தமான குடிநீர் வசதி, சுகாதார வசதி, மருத்துவ வசதிகள் கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளது.

    பாதுகாப்பிற்கு ஏராளமான போலீசார் சீருடையிலும், சாதாரண உடையிலும் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். பாதுகாப்பிற்கு உயர் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் அருள் முருகன், இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • இளநீர், பால், தயிர் மற்றும் பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
    • முருகபெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பா–லித்தார்.

    தருமபுரி

    தருமபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை மற்றும் வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.

    குமாரசாமிப்பேட்டையில் சூரசம்கார விழா

    தருமபுரி குமாரசாமிப் பேட்டை சிவசுப்பிரமணிய சாமி கோவிலில் 59-வது

    ஆண்டு கந்த சஷ்டி லட்சார்ச்சனை திருவிழா கடந்த 14-ந் தேதி தொடங்கி யது. விழாவை முன்னிட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடு கள் நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நாளான கந்த சஷ்டியை யொட்டி இன்று அதிகாலை யில் சாமிக்கு மஞ்சள், இளநீர், பால், தயிர் மற்றும் பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. முருகபெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பா–லித்தார். சிவசுப்பரமணிய கோவிலில் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமியை தரிசனம் செய்தனர்.

    இதைத்தொடர்ந்து இன்று இரவு அலங்கரிக்கப்–பட்ட தங்க மண்டபத்தில் சுப்பிரமணிய சாமி மற்றும் சூரபத்மன் புறப்பாடும், தொடர்ந்து பைபாஸ் ரோட்டில் உள்ள சாமி நிலத்தில் வான வேடிக்கையுடன் சூரசம்ஹார விழாவும் நடக்கிறது.

    இந்த நிகழ்ச்சியில் சூரபத்மணை முருகப்பெரு–மான் வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறு கிறது. தொடர்ந்து சாமிக்கு உபகார பூஜைகள் மற்றும் மகா தீபாரதனை நடக்கிறது. இந்த விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் விழா நடைபெறுகிறது.

    இதை தொடர்ந்து இரவு 12 மணிக்கு கோவிலில் சாமிக்கு பன்னீர் அபிஷேகம் நடக்கிறது.

    விழாவிற்கான ஏற்பாடு களை இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் உதயகுமார், கோவில் செயல் அலுவலர் ராதாமணி, அறங்காவலர் குழுவினர் மற்றும் செங்குந்தர் சமூகத்தினர் செய்து வருகிறார்கள்.

    இதேபோன்று தருமபுரி அன்னசாகரம் பகுதியில் உள்ள விநாயகர் சிவசுப்ர–மணியர் கோவில், எஸ்.வி. சாலையில் உள்ள முருகன் கோவில், டிரசரி காலனியில் உள்ள முருகன் கோவில், நெசவாளர் காலனியில் உள்ள விநாயகர் முருகன் கோவில் ஆகிய கோவில்களில் இன்று கந்த சஷ்டியை யொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமியை தரிசனம் செய்தனர்.

    இதேபோன்று தருமபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு, காரிமங்கலம், நல்லம்பள்ளி, அரூர், கம்பைநல்லூர் ஆகிய பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களிலும் இன்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    • விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்காரம் நாளை மறுநாள்
    • ஞாயிற்றுக்கிழமை இரவு திருக்கல்யாணம் நடக்கிறது.

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 13-ந் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    விழாவில் ஒவ்வொரு நாளும் காலையில் சுவாமி ஜெயந்தி நாதர் யாகசாலையில் எழுந்தருளி அங்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்று மதியம் சண்முக விலாசத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார்.

    தொடர்ந்து மாலையில் திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் சுவாமிக்கு பால், தயிர் இளநீர் பன்னீர், விபூதி, சந்தனம் உள்பட பல்வேறு வகையான அபிஷேக பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று அலங்கார அலங்காரமாகி தீபாராதனைக்கு பிறகு சுவாமி தங்க தேரில் எழுந்தருளி கிரி வீதி உலா வந்து கோவில் சேர்தல் நடைபெற்று வருகிறது.

    4-ம் திருவிழாவான இன்று அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகத்தை தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்காரம் நாளை மறுநாள் (சனிக்கிழமை) மாலையில் கடற்கரையில் நடக்கிறது. ஞாயிற்றுக்கிழமை இரவு திருக்கல்யாணம் நடக்கிறது. விழாவில் கலந்து கொள்ள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து விரதம் மேற்கொண்டு வருகின்றனர்.

    விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், கணேசன், ராமதாஸ், செந்தில் முருகன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • கோவில் நிர்வாகம் மற்றும் நகராட்சி நிர்வாகம் சார்பில் ஆங்காங்கே குடிநீர் வசதி, கழிப்பிட வசதி மற்றும் மருத்துவ வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
    • பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமையில் திருச்செந்தூர் டி.எஸ்.பி. வசந்தராஜ் மற்றும் போலீசார் செய்து வருகின்றனர்.

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெறும் விழாக்களில் மிகவும் முக்கிய திருவிழாவான கந்த சஷ்டி திருவிழா வருகிற 13-ந்தேதி (திங்கட்கிழமை) தொடங்குகிறது.

    அன்று அதிகாலை 5.30 மணிக்கு சுவாமி ஜெயந்தி நாதர் யாகசாலையில் எழுந்தருளுகிறார். காலை 7 மணிக்கு யாக பூஜை தொடங்குகிறது. பகல் 12 மணிக்கு யாகசாலையில் தீபாராதனையும், 12.45 மணிக்கு சுவாமி சப்பரத்தில் எழுந்தருளி வேல் வகுப்பு, வீரவாள் வகுப்பு முதலிய பாடல்களுடன் மேள வாத்தியங்கள் முழங்க சண்முக விலாசம் மண்டபம் சேர்தல், அங்கு தீபாராதனை நடக்கிறது.

    தொடர்ந்து மாலை 4 மணிக்கு திருவாவடுதுறை ஆதின சஷ்டி மண்டபத்தில் சுவாமி ஜெயந்தி நாதருக்கு அபிஷேகம், அலங்காரமாகி கிரி வீதி உலா வந்து கோவில் சேர்தல் நடக்கிறது.

    திருவிழா 2-ம் நாளில் இருந்து 5-ம் நாள் வரை (14 முதல் 17-ந்தேதிவரை) காலை 7 மணிக்கு யாகசாலையில் பூஜை ஆரம்பமாகும். பகல் 12 மணிக்கு யாகசாலையில் தீபாராதனை, 12.45 மணிக்கு வேல் வகுப்பு, வீரவாள் வகுப்பு முதலிய பாடல்களுடன் மேள வாத்தியங்களுடன் சண்முக விலாசம் வருதலும், அங்கு தீபாராதனையும் நடக்கிறது. பின்னர் சுவாமி அங்கிருந்து மாலை 4 மணிக்கு மேல் திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபம் வருகிறார். அங்கு சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரமாகி, தீபாராதனைக்கு பிறகு கிரிவீதி உலா வந்து கோவில் சேர்தல் நடக்கிறது.

    கந்த சஷ்டி திருவிழா 6-ம் நாளான 18-ந்தேதி (சனிக்கிழமை) காலை 6 மணிக்கு யாகசாலை பூஜை தொடங்குகிறது. பகல் 12 மணிக்கு யாகசாலை பூஜையில் தீபாராதனையும், 12.45 மணிக்கு சுவாமி சப்பரத்தில் எழுந்தருளி வேல் வகுப்பு, வீரவாள் வகுப்பு பாடலுடன் மேள வாத்தியம் முழங்க சுவாமி சண்முக விலாசம் வருதல் நடக்கிறது. அங்கு தீபாராதனை நடைபெற்று பகல் 2 மணிக்கு திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனைக்கு பின் மாலை 4 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் கடற்கரையில் எழுந்தருளி சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடக்கிறது.

    சூரசம்ஹாரம் முடிந்த பின்பு சுவாமிக்கும், அம்பாளுக்கும் சந்தோஷ மண்டபத்தில் அபிஷேகம், அலங்காரமாகி, தீபாராதனைக்கு பிறகு கிரி பிரகாரத்தில் உலா வந்து கோவில் சேர்தல் நடக்கிறது. அன்று இரவு 108 மகாதேவர் சன்னதி முன்பு சுவாமிக்கு சாயாபிஷேகம் நடைபெற்று அதன் பின் சஷ்டி பூஜை தகடுகள் கட்டுதல் நடக்கிறது.

    கந்த சஷ்டி திருவிழா 7-ம்நாளான 19-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலையில் தெய்வானை அம்பாள் தவசு காட்சிக்கு புறப்படுதல், மாலை 6.30 மணிக்கு அம்பாளுக்கு சுவாமி காட்சி கொடுத்து தோல் மாலை மாற்றுதல், இரவு 11 மணிக்கு சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் மேல கோபுரம் அருகில் உள்ள மண்டபத்தில் திருக்கல்யாணம் நடக்கிறது.

    கந்த சஷ்டி திருவிழா 8-ம்நாளான 20-ந்தேதி இரவு சுவாமி குமரவிடங்க பெருமான் தங்க மயில் வாகனத்திலும், தெய்வானை அம்பாள் பூம் பல்லக்கிலும் பட்டின பிரவேசம் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றனர். திருவிழாவின் 9, 10, 11 ஆகிய 3 நாட்களும் (21, 22, 23-ந்தேதிவரை) தினமும் மாலை 6 மணிக்கு சுவாமி குமரவிடங்க பெருமான், தெய்வானை அம்பாள் ஊஞ்சல் காட்சி நடக்கிறது.

    12-ம் திருவிழாவான 24-ந்தேதி மாலை 4.30 மணிக்கு மஞ்சள் நீராட்டு வைபவம் நடைபெற்று சுவாமியும், அம்பாளும் வீதி உலா வந்து கோவில் சேர்தலுடன் விழா நிறைவு பெறுகிறது.

    கோவில் நிர்வாகம் மற்றும் நகராட்சி நிர்வாகம் சார்பில் ஆங்காங்கே குடிநீர் வசதி, கழிப்பிட வசதி மற்றும் மருத்துவ வசதிகள் செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமையில் திருச்செந்தூர் டி.எஸ்.பி. வசந்தராஜ் மற்றும் போலீசார் செய்து வருகின்றனர்.

    விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன், உறுப்பினர்கள் அனிதா குமரன், கணேசன், ராம்தாஸ், செந்தில் முருகன் கோவில் இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
    • சிறப்பு பணி அலுவலர்கள் பணிக்கு வரும்போது உடன் வாக்கிடாக்கி கொண்டு வர வேண்டும்.

    சென்னை:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெறும் கந்த சஷ்டி விழாவை காண லட்சக்கணக்கான மக்கள் வருவார்கள் என்பதால் கூட்டத்தை ஒழுங்குபடுத்த விரிவான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் முரளிதரன் இணை ஆணையர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இதையொட்டி பக்தர்களின் வருகையை சீர்படுத்திடவும், தரிசன முறைகளை நெறிப்படுத்திடவும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை வழங்கிடவும் பணிகளை கண்காணிக்கவும் மண்டல இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள் மற்றும் உதவி ஆணையர்களை சிறப்பு பணி அதிகாரிகளாக 15-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை நியமனம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

    அந்த அதிகாரிகள் பெயர் விவரம் வருமாறு:-

    இணை ஆணையர்கள் தூத்துக்குடி அன்புமணி, திருநெல்வேலி கவிதா பிரியதர்ஷினி, மதுரை செல்லத்துரை, திருச்சி பிரகாஷ், தஞ்சை ஞானசேகரன், கடலூர் பரணீதரன், மதுரை கிருஷ்ணன், திருவேற்காடு அருணாசலம், ஸ்ரீரங்கம் மாரியப்பன், சுசீந்திரம் ரத்தினவேல் பாண்டியன், ராமேஸ்வரம் சிவராம் குமார், துணை ஆணையர்கள் திருநெல்வேலி ஜான்சிராணி, தூத்துக்குடி வெங்கடேசன் மயிலாடுதுறை ராமு, உதவி ஆணையர்கள் திருச்சி லட்சுமணன், நெல்லை கவிதா, திண்டுக்கல் சுரேஷ், நாகர் கோவில் தங்கம், தூத்துக்குடி சங்கர்.

    சிவகங்கை செல்வராஜ், மதுரை வளர்மதி, தென்காசி கோமதி, குற்றாலம் கண்ணதாசன், மேல்மலையனூர் ஜீவானந்தம், சேலம் சரவணன், தான்தோன்றிமலை நந்தகுமார், தேக்கம்பட்டி கைலாசமூர்த்தி, மலைக்கோட்டை ஹரிஹர சுப்பிரமணியம், மதுரை நாராயணன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இவர்கள் ஆய்வர்கள் மற்றும் செயல் அலுவலர்களாக பணிபுரிய ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். சிறப்பு பணி அலுவலர்கள் பணிக்கு வரும்போது உடன் வாக்கிடாக்கி கொண்டு வர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கந்த சஷ்டி திருவிழா இந்த ஆண்டு வருகிற 13-ந் தேதி தொடங்குகிறது.
    • திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வருகிற 18-ந் தேதி நடைபெறுகிறது.

    தூத்துக்குடி:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுகிறது. அவற்றில் முக்கியமானது கந்த சஷ்டி திருவிழாவாகும்.

    இந்த ஆண்டு கந்த சஷ்டி திருவிழா வருகிற 13-ந் தேதி தொடங்குகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வருகிற 18-ந் தேதி நடைபெறுகிறது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    இந்நிலையில் வருகிற 18-ந் தேதி கந்த சஷ்டி திருவிழாவையொட்டி தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து கலெக்டர் லெட்சுமிபதி உத்தரவிட்டுள்ளார்.

    இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்த சஷ்டி திருவிழா சூரசம்ஹாரம் வருகிற 18-ந் தேதி (சனிக்கிழமை) நடைபெறுவதை முன்னிட்டு அன்று தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.

    எனினும் அத்தியாவசிய பணியாளர்களுக்கு மட்டும் இந்த விடுமுறை பொருந்தாது. இது செலாவணி முறி சட்டத்தின்படி பொது விடுமுறை நாள் அல்ல என தெரிவிக்கப்படுகிறது.

    இந்த விடுமுறைக்கு பதிலாக அடுத்த மாதம் 9-ந் தேதி (சனிக்கிழமை) மாற்று பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சண்முகர், வள்ளி-தெய்வானைக்கு 16 வகை அபிஷேகம் செய்யப்பட்டது.
    • கந்தசஷ்டி விழாவின் சிறப்பு குறித்து விளக்கி கூறப்பட்டது.

    உலக புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா, கடந்த மாதம் 25-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் உச்சிகால பூஜையில் சுவாமிக்கு கல்பபூஜை நடைபெற்றது. இதேபோல் தங்க சப்பரம், வெள்ளி சப்பரத்தில் சின்னக்குமாரர் புறப்பாடும் நடந்தது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று முன்தினம் இரவு அடிவாரம் கிரிவீதிகளில் நடைபெற்றது. அப்போது பராசக்திவேல் கொண்டு முருகப்பெருமான் சூரர்களை வதம் செய்தார்.

    இந்தநிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று காலை மலைக்கோவிலில் சண்முகர், வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடந்தது. முன்னதாக காலை 8 மணிக்கு மேல் மலைக்கோவில் திருக்கல்யாண மண்டபத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மணமேடையில் சண்முகர், வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளினார். அதைத்தொடர்ந்து திருமண சடங்குகள் தொடங்கின. மணமேடைக்கு முன்பு பிரதான கலசம் வைக்கப்பட்டு சிறப்பு யாகம் நடைபெற்றது.

    பின்னர் சண்முகர், வள்ளி-தெய்வானைக்கு 16 வகை அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து காலை 9.30 மணிக்கு மேல் தனுர் லக்னத்தில் சண்முகர், வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடந்தது. கோவில் பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம், திருமாங்கல்யத்தை தெய்வானை மற்றும் வள்ளிக்கு அணிவித்து திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தார்.

    அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் கந்தனுக்கு அரோகரா...! முருகனுக்கு அரோகரா...! என சரண கோஷம் எழுப்பினர். கோவில் குருக்கள் செல்வசுப்பிரமணியம் மற்றும் குருக்கள்கள் திருமண மந்திரங்களை ஓதினர். முன்னதாக கந்தசஷ்டி விழாவின் சிறப்பு குறித்து விளக்கி கூறப்பட்டது.

    இதைத்தொடர்ந்து சண்முகர், வள்ளி-தெய்வானைக்கு மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதையடுத்து சண்முகர், வள்ளி-தெய்வானைக்கு 16 வகை தீபாராதனை, மகாதீபாராதனை காட்டப்பட்டது. முடிவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    பின்னர் திருக்கல்யாண மண்டபத்தில் இருந்து சப்பரத்தில் சண்முகர், வள்ளி-தெய்வானையுடன் மலைக்கோவில் பிரகாரத்தை வலம் வந்து சண்முகருக்கான சன்னதியில் எழுந்தருளினார். திருக்கல்யாண நிகழ்ச்சியையொட்டி கோவில் அன்னதான கூடத்தில் நேற்று திருமண விருந்து நடைபெற்றது. இந்த விருந்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    திருக்கல்யாண நிகழ்ச்சியில் கோவில் அறங்காவலர் குழு தலைவர் சந்திரமோகன், உறுப்பினர்கள் ராஜசேகரன், மணிமாறன், சத்யா, கோவில் இணை ஆணையர் நடராஜன், துணை ஆணையர் பிரகாஷ் மற்றும் கோவில் அலுவலர்கள், பழனி நகர் முக்கிய பிரமுகர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    இதேபோல் கந்தசஷ்டி விழாவையொட்டி பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் நேற்று இரவு 7 மணிக்கு மேல் ரிஷப லக்னத்தில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து இரவு 9 மணிக்கு மேல் முத்துக்குமாரசுவாமி தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி வீதிஉலா வந்தார். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.

    • திருக்கல்யாணத்தை முன்னிட்டு மண்டபம் முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
    • பக்தர்களுக்கு கோவில் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.

    கோவையை அடுத்த மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் முருகனின் 7-வது படை வீடாக பக்தர்களால் போற்றப்படுகிறது. இந்த கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 26-ந் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதில் முக்கிய நிகழ்ச்சியான சூரசம் ஹார நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது.

    நேற்று காலை 6 மணிக்கு கோ பூஜை நடைபெற்றது. பின்னர் கோவில் நடை திறக்கப்பட்டது. இதையடுத்து மூலவருக்கு யாகசாலை கலசங்கள் மூலம் அபிஷேகம் நடைபெற்றது. விநாயகர் பூஜை, புண் யாகம் கலசங்கள், ஆவாகனம், கணபதி வேள்வி நடந்தது. காலை 9 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி, வள்ளி தெய்வானையுடன் ஆதி மூலஸ்தானத்தின் முன்புறம் உள்ள திருக்கல்யாண மண்டபத்திற்கு எழுந்தருளினார்.

    திருக்கல்யாணத்தை முன்னிட்டு மண்டபம் முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அதில் சுப்பிரமணிய சுவாமி வெண் பட்டு உடுத்தியும், வள்ளி பச்சை பட்டு உடுத்தியும் தெய்வானை அம்மன் சிவப்பு பட்டு உடுத்தியும் எழுந்தருளினர். இதையடுத்து சுவாமிக்கும் வள்ளி தெய்வானைக்கும் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. அதைத்தொடர்ந்து கணபதி வேள்வி பூஜை, தாரை வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது.

    சரியாக 10.25 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி, வள்ளி தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது. அப்போது அங்கு கூடி இருந்த பக்தர்கள் மருதமலை முருகனுக்கு அரோகரா, கந்தனுக்கு அரோகரா, என பக்தி முழக்கமிட்டனர். பக்தர்களுக்கு மாங்கல்ய பிரசாதம் குங்குமம், மஞ்சள் மாங்கல்ய கயிறு ஆகியவை வழங்கப்பட்டது. அதை பெண்கள் அணிந்து கொண்டனர். பக்தர்கள் சுவாமிக்கு மொய்ப்பணம் எழுதினர். இதில், மொத்தம் ரூ.57ஆயிரத்து 910 வசூல் ஆனது.

    அதைத்தொடர்ந்து பொற்சுன்ன பாடல் பாடி சுவாமிக்கும் வள்ளி, தெய்வானைக்கும் மஞ்சள் அணிவிக்கப்பட்டது. பாத காணிக்கை செலுத்துதல், பூஜை, மகா தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து சுப்பிரமணிய சுவாமி வள்ளி தெய்வானையுடன் புஷ்ப பல்லக்கில் கோவிலை சுற்றி வீதி உலா வந்தார். கந்த சஷ்டி விரதம் இருந்த பக்தர்களுக்கு கோவில் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. அதை சாப்பிட்டு அவர்கள் விரதத்தை முடித்துக் கொண்டனர்.

    திருக்கல்யாணத்தையொட்டி மலைப்பாதையில் செல்ல 2 சக்கர மற்றும் 4 சக்கர வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட வில்லை. கோவில் சார்பில் மினி பஸ்கள் இயக்கப் பட்டன. விழா ஏற்பாடுக ளை மருதமலை சுப்பிரமணியசாமி கோவில் துணை ஆணையர் ஹர்ஷினி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து இருந்தனர்.

    ×