search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிளாம்பாக்கம் பஸ் நிலையம்"

    • பூங்கா ரூ.15.2 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது.
    • பல்வேறு வசதிகளுடன் பிரமாண்டமாக தயாராகி வருகிறது.

    வண்டலூர்:

    கிளாம்பாக்கம் புதிய பஸ்நிலையத்தில் 16 ஏக்கர் பரப்பளவில்  காலநிலை பூங்கா ரூ.15.2 கோடி செலவில் அமைக்கப்பட்டு உள்ளது.

    நடைபாதை, பூச்செடிகள், மரங்கள், சிறிய குளங்கள், சிறுவர் பூங்கா, விளையாட்டு சாதனங்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் பிரமாண்டமாக தயாராகி வருகிறது.

    இந்த நிலையில் கிளாம்பாக்கம் பஸ்நிலையத்தில் அமைக்கப்பட்டு வரும் காலநிலை பூங்காவை இன்று காலை அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, தா.மோ.அன்பரசன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.


    அப்போது அமைச்சர் பி.கே.சேகர்பாபு நிருபர்க ளிடம் கூறியதாவது:-

    கடந்த ஆட்சியில் எந்தவித கட்டமைப்பு பணிகளையும் முழுமை பெறாமல் தொடங்கிய கிளாம்பாக்கம் பஸ்நிலையத்தில் அன்றாடம் பயன்படுத்தும் பயணிகளின் தேவைகளுக்கு ஏற்ப பல அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி  வருகிறோம்.

    அதன்படி 16 ஏக்கர் பரப்பளவில்  மக்களுக்கு பயன்படும் வகையில் காலநிலை பூங்கா ரூ. 15.2 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டு உள்ளது.

    இந்த காலநிலை பூங்காவில் பல்வேறு வகையான செடி கொடி மரங்கள் நடப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. மழைநீர் சேகரிப்புக்கான குளங்களும் உள்ளன.

    மக்கள் காலை நேரங்களில் நடைபயிற்சி செல்வதற்காகவும், குழந்தைகளின் பூங்காவும் அமைக்கப்பட்டு உள்ளது இந்த பூங்கா பொது மக்களுக்கு ஒரு பொழுது போக்கான பூங்காவாக அமையும்.

    இந்த பூங்காவும், முடிச்சூர் பகுதியில் அமையும் ஆம்னி பஸ்நிலையம் ஆகிய இரண்டையும் அடுத்த மாதம் முதல் அமைச்சரால் திறக்கப்பட உள்ளது. கிளாம்பாக்கம் ெரயில் நிலைய பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

    இன்னும் 10 நாட்களுக்குள் நானும் இந்த மாவட்ட அமைச்சரான தா.மோ.அன்பரசனும் அங்கு சென்று ஆய்வு மேற்கொள்ள உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • முகூர்த்த நாள் என்பதால் பயணிகள் பலர் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல நேற்று கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் திரண்டனர்.
    • கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் 500-க்கும் மேற்பட்ட பயணிகள் நேற்று நள்ளிரவு 2 மணி வரை தவித்தனர்.

    வண்டலூர்:

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். மேலும் முகூர்த்த நாட்களில் திருமணங்கள் உள்ளிட்ட விசேஷ நிகழ்ச்சிகளுக்காக சொந்த ஊர்களுக்கு செல்வதால் அப்போதும் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதும்.

    இதற்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் கூடுதல் பஸ்களும் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் அதையும் மீறி பயணிகள் வருகை அதிகமாக இருப்பதால் பயணிகள் பஸ் கிடைக்காமல் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று முகூர்த்த நாள் என்பதால் பயணிகள் பலர் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல நேற்று கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் திரண்டனர்.

    அங்கிருந்து திருவண்ணாமலை, திருச்சி, மதுரை, தஞ்சாவூர், கும்பகோணம் ஆகிய பகுதிகளுக்கு செல்லக்கூடிய பஸ்கள் போதிய அளவு இல்லாததால் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் 500-க்கும் மேற்பட்ட பயணிகள் நேற்று நள்ளிரவு 2 மணி வரை தவித்தனர்.

    குறிப்பாக விழுப்புரம், திண்டிவனம், கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி மற்றும் தென் மாவட்டங்களுக்கு செல்ல வேண்டிய பஸ்கள் கூடுதலாக இயக்கப்பட்டு இருந்தால் பயணிகள் இதுபோன்று காத்துக் கிடக்க வேண்டியதில்லை என்று பயணிகள் தரப்பில் கூறுகின்றனர்.

    ஆனால் அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் சார்பில் தினமும் இயக்கப்படும் 1136 பஸ்கள் தவிர கூடுதலாக வெள்ளிக்கிழமை 482 பஸ்களும், நேற்று கூடுதலாக 550 பஸ்களும் இயக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • கட்டுமானப்பணியை விரைந்து முடிக்க ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
    • நள்ளிரவில் பஸ்வசதி இல்லை என்று போராட்டத்தில் ஈடுபட்டு இருப்பது உள்நோக்கம் போல் தெரிகிறது.

    வண்டலூர்:

    வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    இதேபோல் முடிச்சூரை அடுத்த மண்ணிவாக்கத்தில் இருந்து ஆம்னி பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டு பஸ்களை நிறுத்தும் வளாகம் கட்டப்பட்டு வருகிறது.

    இதனை இன்று காலை அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, சிவசங்கர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதே போல் கிளாம்பாக்கம் புதிய பஸ்நிலையத்தையும் அவர்கள் பார்வையிட்டனர். பின்னர் அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:-


    மண்ணிவாக்கத்தில் ஆம்னி பஸ் நிறுத்த வளாகம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. 300 பேர் தங்கும் இடம், உணவகம், கழிப்பிட வசதியுடன் 5 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டுமான பணி நடக்கிறது. மேலும் தேவையான வசதிகள் செய்யப்படும்.

    கட்டுமானப்பணியை விரைந்து முடிக்க ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அப்பகுதியில் சென்ற உயர் அழுத்த மின்கம்பியை அகற்றுவதில் தாமதம் ஏற்பட்டதால் பணியில் தாமதம் ஆனது. ஏப்ரல் மாத இறுதிக்குள் ஆம்னி பஸ்நிலையம் பயன் பாட்டுக்கு கொண்டு வரப்படும். ஆம்னி பஸ்நிலையத்தில் பயணிகளின் தேவைக்கு ஏற்பட கூடுதல் வசதிகள் செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அமைச்சர் சிவசங்கர் கூறியதாவது:-

    கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து வழக்கமான பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பஸ்கள் போதிய அளவு இயக்கப்படவில்லை என்று சிலர் திட்டமிட்டு வேண்டும் என்றே பொய், வதந்தி பரப்புகிறார்கள்.

    கோயம்பேடு பஸ் நிலையத்தில் இயங்கிய 100 சதவீத பஸ்களில் 80 சதவீதம் கிளாம்பாக்கத்திலும், 20 சதவீதம் மாதவரத்தில் இருந்தும் இயக்கப்படுகிறது. கடந்த 2 நாட்களாக கிளாம்பாக்கத்தில் இருந்து போதிய பஸ்கள் இயக்கப்படவில்லை என்று நள்ளிரவு பயணிகள் போராட்டம் நடத்தி உள்ளனர்.

    பஸ் நிலையத்தில் நள்ளிரவில் சிலர் போராட்டம் நடத்தியது சந்தேகம் அளிக்கிறது. நள்ளிரவு நேரத்தில் எப்போதுமே குறைந்த அளவு பஸ்கள் இயக்கப்படும். கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் இயக்கப்பட்ட போதும் இரவு 11.30 மணிக்கு மேல் எப்போதும் பஸ்கள் குறைந்த அளவில் இயக்கப்படும்.


    நள்ளிரவு நீண்ட தூரம் செல்லும் பயணிகள் பாதுகாப்புக்காக பஸ் பயணம் செல்வதை தவிர்ப்பார்கள். ஆனால் 200 பேர் திடீரென நள்ளிரவில் பஸ்வசதி இல்லை என்று போராட்டத்தில் ஈடுபட்டு இருப்பது உள்நோக்கம் போல் தெரிகிறது.

    ஆம்னி பஸ்கள் பயணிகளை ஏற்றிச்செல்வது தொடர்பாக கோர்ட்டில் உத்தரவு பெற்று உள்ளனர். கோயம்பேடு பஸ்நிலையத்தில் இருந்து பயணிகளை ஏற்றி செல்வதாக கூறி ஆம்னி பஸ் உரிமையாளர்கள் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நாற்பது நாட்கள் கடந்தும், இன்னும் பயணிகள் தினம் தினம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்க்கவில்லை.
    • திராவிட மாடல், விடியல் என்ற நாடகங்களை நிறுத்திவிட்டு, தங்கள் நிர்வாகத் தோல்வியை ஒப்புக்கொண்டு, அதைச் சரி செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும்.

    சென்னை:

    தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் கூறி இருப்பதாவது:-

    தி.மு.க. அரசின் நிர்வாகக் குளறுபடிகளால், பொது மக்கள் அவதிக்குள்ளாவது தொடர்ந்து கொண்டிருக்கிறது. கோயம்பேடு பஸ் நிலையம் அமைந்திருக்கும் இடத்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு, எந்த வித முறையான ஏற்பாடுகளும் செய்யாமல், அவசரகதியில், பஸ் நிலையத்தை சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள கிளாம்பாக்கத்துக்கு மாற்றிய தி.மு.க. அரசு, கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தைத் திறந்து நாற்பது நாட்கள் கடந்தும், இன்னும் பயணிகள் தினம் தினம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்க்கவில்லை.

    நேற்றைய தினம் இரவு, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்குச் செல்வதற்காக, சென்னையின் பல பகுதிகளில் இருந்து கிளாம்பாக்கம் பஸ் நிலையம் வந்த பயணிகள், ஊருக்குச் செல்லப் பஸ்கள் இல்லாமலும், இருந்த ஒன்றிரண்டு பஸ்களும் ஏற்கனவே முன்பதிவு செய்திருந்ததால் பயணிக்க முடியாமலும் நள்ளிரவில் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர்.

    குழந்தைகள், தாய்மார்கள், வயது முதிர்ந்தவர்கள் என நூற்றுக்கணக்கான பயணிகள் தி.மு.க. அரசின் நிர்வாகக் குளறுபடிகளால் தவித்துள்ளனர். சாலை மறியல் போராட்டம் செய் தும், பஸ்களைச் சிறை பிடித்தும் பொதுமக்கள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.

    பஸ் நிலையம் முழுமையான செயல்பாட்டுக்கு வந்துவிட்டது என்று கூறிக் கொள்ளும் தி.மு.க. அரசு, வார இறுதியில் கூட போதுமான பஸ்களை ஏற்பாடு செய்யாமல் இருந்திருப்பது வெட்கக் கேடு. நள்ளிரவில் பயணிகளை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய அவல நிலைக்குத் தள்ளியிருக்கும் தி.மு.க. அரசு முழுவதுமாகச் செயலற்றுப் போயிருக்கிறது என்பது வெளிப்படையாக தெரிகிறது.

    தி.மு.க. அரசு, உடனடி யாக இந்த திராவிட மாடல், விடியல் என்ற நாடகங்களை நிறுத்திவிட்டு, தங்கள் நிர்வாகத் தோல்வியை ஒப்புக்கொண்டு, அதைச் சரி செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும். கிளாம்பாக்கம் பஸ் நிலையம் முழுவதுமாகத் தயாராகும் வரை, பஸ்களை மீண்டும் கோயம்பேட்டில் இருந்து செயல்பட அனு மதிக்க வேண்டும். அதை விடுத்து, பூசி மொழுகும் வேலையில், பொது மக்களைத் தொடர்ந்து அவதிக்குள்ளாக்கினால், நேற்றைய பொதுமக்களின் போராட்டம், சென்னை முழுக்க மிகப் பெருமளவில் வெடிக்கும் என்று எச்சரிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • வெளியூர்களுக்கு செல்லும் அனைத்து அரசு பஸ்கள் மற்றும் ஆம்னி பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
    • பயணிகள் தங்களது உடமைகளை எளிதாக வைத்து சிரமமின்றி பயணம் செய்ய முடியும்.

    வண்டலூர்:

    சென்னையில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் நவீன வசதியுடன் புதிய பஸ்நிலையம் கட்டப்பட்டு பயணிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு உள் ளது. இங்கிருந்து தற்போது வெளியூர்களுக்கு செல்லும் அனைத்து அரசு பஸ்கள் மற்றும் ஆம்னி பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    கிளாம்பாக்கம் பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகளின் தேவையை அறிந்து தேவையான வசதிகள் ஒவ்வொன்றாக செய்யப்பட்டு வருகிறது. கோயம்பேடு மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து வெளியூர் செல்ல கிளாம்பாக்கத்திற்கு மாநகர பஸ்களில் வரும் பயணிகள் தங்களது உடமைகள் மற்றும் பொருட்களை வைக்க இடம் இல்லாமல் கடும் சிரமப்பட்டனர். கூட்ட நெரிசலில் பயணிகளில் பொருட்களுடன் பயணம் செய்யும் நிலை இருந்தது.

    இதைத்தொடர்ந்து கிளாம்பாக்கத்திற்கு செல்லும் மாநகர பஸ்கள் மற்றும் கிளாம்பாக்கத்தில் இருந்து புறப்படும் மாநகர பஸ்களிலும் பயணிகளின் பொருட்களை வைக்க உரிய வசதி ஏற்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் முதல் கட்டமாக கிளாம்பாக்கத்தில் இருந்து கோயம்பேடு வரும் 20 மாநகர பஸ்களில் முன் பக்கம் மற்றும் பின்பக்கம் உள்ள படிக்கட்டுகளுக்கு அருகே தலா ஒரு இருக்கை என மொத்தம் 2 இருக்கைகள் அகற்றப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் தங்களது உடமைகளை எளிதாக வைத்து சிரமமின்றி பயணம் செய்ய முடியும். இதற்கு பயணிகள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர். வரும் நாட்களில் மற்ற கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும் மாநகர பஸ்களிலும் பொருட்கள் வைக்க வசதியாக இருக்கை அகற்றப்படும் என்று போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    • கோயம்பேடு பஸ் நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளும் போக்குவரத்து நெரிசல் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
    • எப்போதும் களைகட்டி காணப்படும் கோயம்பேடு பஸ் நிலைய வளாகம் தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது.

    போரூர்:

    சென்னை கோயம்பேடு புறநகர் பஸ் நிலையத்தில் 6 பிளாட்பாரங்களில் இருந்து தென் மாவட்டங்கள் உள்பட பல்வேறு ஊர்களுக்கு நாள்தோறும் 2100 பஸ்கள் வரை இயக்கப்பட்டு வந்தன. இதனால் கோயம்பேடு பஸ் நிலையம் எப்போதும் பயணிகள் கூட்டத்துடன் பரபரப்பாகவே காணப்படும்.

    இந்த நிலையில் சென்னை நகரில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக கிளாம்பாக்கத்தில் நவீன முறையில் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டு கடந்த மாதம் 30-ந்தேதி முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதையடுத்து சென்னை கோயம்பேடு புறநகர் பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்ட அரசு விரைவு பஸ்கள் மற்றும் ஆம்னி பஸ்கள் அனைத்தும் ஏற்கெனவே கிளாம்பாக்கம் பஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டன. விழுப்புரம், கும்பகோணம் போக்குவரத்து கழகங்கள் சார்பில் இயக்கப்பட்ட அரசு பஸ்கள் மட்டும் கோயம்பேட்டில் இருந்து இயக்கப்பட்டன. இந்த நிலையில் கோயம்பேட்டில் இருந்து இயக்கப்பட்ட விழுப்புரம், கும்பகோணம் போக்குவரத்து கழக பஸ்களில் 80 சதவீத பஸ்கள் நேற்று முதல் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டன. மீதமுள்ள 20 சதவீத பஸ்கள் மாதவரம் புறநகர் பஸ் நிலையத்துக்கும் மாற்றப்பட்டன.

    மாதவரம் பஸ் நிலையத்தில் இருந்து ஏற்கெனவே ஆந்திராவுக்கு செல்லும் பஸ்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது திருச்சி, சேலம், விருத்தாசலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கும்பகோணம், சிதம்பரம், நெய்வேலி, கடலூர், புதுச்சேரி, திருவண்ணாமலை, போளூர், வந்தவாசி ஆகிய இடங்களுக்கு தினமும் 160 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த ஊர்களுக்கு செல்லும் மற்ற 80 சதவீத பஸ்கள் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படுகின்றன. கிளாம்பாக்கத்தில் இருந்து இந்த பகுதிகளுக்கு 710 பஸ்கள் செல்கின்றன.

    இதையடுத்து பூந்தமல்லி மற்றும் கிழக்கு கடற்கரை சாலை வழியாக செல்லும் குறைந்த எண்ணிக்கையிலான எஸ்.இ.டி.சி மற்றும் டி.என்.எஸ்.டி.சி பஸ்கள் மட்டுமே கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது. காஞ்சிபுரம், வேலூர், ஆரணி, புதுச்சேரி, பெங்களூரு உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் பஸ்கள் மட்டுமே தற்போது கோயம்பேட்டில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது.

    இதனால் பகல் நேரத்தில் மிகவும் குறைந்த அளவிலான பயணிகள் மட்டுமே கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து பஸ் மூலம் பயணம் மேற்கொள்வதை காண முடிகிறது. இதனால் எப்போதும் களைகட்டி காணப்படும் கோயம்பேடு பஸ் நிலைய வளாகம் தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது. மேலும் அங்கு செயல்பட்டு வந்த ஓட்டல்கள், டீக்கடைகள், தின்பண்டங்கள் விற்பனை செய்து வந்த பெரும்பாலான கடைகளும் அடைக்கப்பட்டு கிடக்கிறது. கோயம்பேடு பஸ் நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளும் போக்குவரத்து நெரிசல் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கிளாம்பாக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புடன் புதிய பஸ் நிலையம் தொடங்கப்பட்டது.
    • பல்வேறு பகுதிகளுக்கு இணைப்பை ஏற்படுத்தித் தருவதற்கு சிறந்த வழி விமான நிலையம் - கிளாம்பாக்கம் மெட்ரோ தொடர்வண்டித் திட்டத்தை செயல்படுத்துவது தான்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    கிளாம்பாக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புடன் தொடங்கப்பட்ட புதிய பஸ் நிலையம், சென்னையின் பிற பகுதிகளுக்கு பயணிகள் செல்ல போதிய இணைப்பு வசதி இல்லாமல் கடுமையான நெருக்கடிகளையும், பல்வேறு தரப்பினரின் விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது. கிளாம்பாக்கத்திலிருந்து சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு இணைப்பை ஏற்படுத்தித் தருவதற்கு சிறந்த வழி விமான நிலையம் - கிளாம்பாக்கம் மெட்ரோ தொடர்வண்டித் திட்டத்தை செயல்படுத்துவது தான்.

    கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையம் அமைப்பது என முடி வெடுக்கப்பட்ட போதே, ஏற்கனவே விமான நிலையம் வரை அமைக்கப்பட்டுள்ள மெட்ரோ தொடர்வண்டிப் பாதையை நீட்டிக்க தீர்மானிக்கப்பட்டு அதற்கான விரிவான திட்ட அறிக்கைகள் அனைத்தும் தயாரிக்கப்பட்டுவிட்டன. எனவே, விமான நிலையம் - கிளாம்பாக்கம் மெட்ரோ தொடர்வண்டிப் பாதை அமைக்கும் பணிகளை தொடங்கி விரைந்து நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • முற்றிலும் இலவசமாக மருத்துவ வசதியை ஏற்படுத்த அரசு முன்வர வேண்டும்.
    • குறைந்த விலையில் உணவு சாப்பிடும் வகையில் அம்மா உணவகம் திறந்தால் வசதியாக இருக்கும்.

    வண்டலூர்:

    சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் கட்டப்பட்ட புதிய பஸ்நிலையம் கடந்த சில நாட்களுக்கு முன்பு பயன்பாட்டுக்கு வந்தது. பயணிகளின் தேவைக்கு ஏற்ப கூடுதல் வசதிகள் படிப்படியாக செய்யப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில் கிளாம்பாக்கம் பஸ்நிலையத்தில் பயணிகளின் அவசர சிகிச்சைக்கு நிரந்தரமாக 108 ஆம்புலன்ஸ் சேவை நேற்று முதல் கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கு பயணிகள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.

    இதுகுறித்து பயணிகள் கூறும்போது, புதிய பஸ் நிலையத்தில் இலவச தனியார் மருத்துவ மையம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் மருத்துவர் ஆலோசனை, மட்டுமே இலவசமாக வழங்கப்படும் என்றும், மற்ற அனைத்துக்கும் கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனவே முற்றிலும் இலவசமாக மருத்துவ வசதியை ஏற்படுத்த அரசு முன்வர வேண்டும். அல்லது, அரசு மருத்துவமனை ஒன்றை இங்கு அமைக்க வேண்டும்.

    இதேபோல் ஏழை, எளியோர் குறைந்த விலையில் உணவு சாப்பிடும் வகையில் அம்மா உணவகம் திறந்தால் வசதியாக இருக்கும் என்றனர்.

    • கடந்த 10-ந்தேதி அல்லது 15-ந்தேதி பஸ் நிலையத்தை திறந்துவிடலாம் என்று அதிகாரிகள் திட்டமிட்டு இருந்தனர்.
    • திறப்பு விழாவையொட்டி அழைப்பிதழ் தயாரிக்கும் பணிகள், கல்வெட்டு அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

    வண்டலூர்:

    சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் ரூ.400 கோடி செலவில் புதிய புறநகர் பஸ் நிலையம் கட்டப்பட்டுள்ளது. இந்த பஸ் நிலையத்தின் கட்டுமான பணிகள் சில மாதங்களுக்கு முன்பே முடிந்துவிட்டன.

    அதன் பிறகு இணைப்பு சாலை, மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடந்து வந்தன. இந்நிலையில் அனைத்து பணிகளும் முடிந்து பஸ் நிலையம் திறப்பு விழாவுக்கு தயாராக இருக்கிறது. கடந்த 10-ந்தேதி அல்லது 15-ந்தேதி பஸ் நிலையத்தை திறந்துவிடலாம் என்று அதிகாரிகள் திட்டமிட்டு இருந்தனர். ஆனால் 'மிக்ஜம்' புயலால் பெய்த பலத்தமழை காரணமாக திறப்பு விழா நடத்தப்படவில்லை.

    இந்நிலையில் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தை திறப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. பொங்கல் பண்டிகைக்கு முன்பு கிளாம்பாக்கம் பஸ் நிலையம் திறக்கப்பட உள்ளது.

    கிளாம்பாக்கம் பஸ் நிலைய பணிகள் அனைத்தும் முடிந்துவிட்டன. பஸ் நிலையம் திறப்பு விழாவுக்கு தயாராக உள்ளது. முதல்- அமைச்சரின் தேதிக்காக காத்திருக்கிறோம். முதல்-அமைச்சர் தேதி கொடுத்ததும் பஸ் நிலையத்தை திறப்பதற்கான பணிகளை தொடங்கி விடுவோம். பொங்கல் பண்டிகைக்கு முன்பு கிளாம்பாக்கம் பஸ் நிலைய திறக்கப்படும்.

    திறப்பு விழாவையொட்டி அழைப்பிதழ் தயாரிக்கும் பணிகள், கல்வெட்டு அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. 'கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்' என்று பெயரிடப்பட்டு அதன் அடிப்படையிலேயே அழைப்பிதழ்கள் தயாரிக்கப்பட உள்ளன.

    கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் கட்டுமான பிரிவு கட்டியுள்ளது. அதற்கு முறையான பணி நிறைவு சான்றிதழ் இன்னும் வழங்கப்படவில்லை.

    மேலும் மாற்றுத் திறனாளிகளுகான வசதிகள் முறையாக இல்லை என்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கை முடித்து பணி நிறைவு சான்றிதழ் பெறும் நடவடிக்கைகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையம் அமைக்க முதலில் கூறப்பட்ட தொகையை விட ரூ.100 கோடிக்கு பணிகள் கூடுதலாக நடந்துள்ளது.
    • மக்களின் நலனுக்காக ஆஸ்பத்திரி என பல்வேறு பணிகள் முடிக்கப்பட்டு விரைவில் முதலமைச்சரால் திறந்து வைக்கப்படும்.

    வண்டலூர்:

    சென்னையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் ஜி.எஸ்.டி சாலையையொட்டி புதிய பஸ்நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. ரூ.394 கோடி செலவில் 88.50 ஏக்கர் பரப்பளவில் நவீன வசதிகளுடன் இந்த பஸ்நிலையம் அமைய உள்ளது. சுமார் 6.40 லட்சம் சதுரஅடி பரப்பளவில் பஸ்நிலைய கட்டுமான பணிகள் 90 சதவீதத்துக்குமேல் முடிந்து உள்ளன. இந்த புதிய பஸ் நிலையத்துக்கு கலைஞர் நூற்றாண்டு பஸ்நிலையம் என்று பெயரிடப்பட்டு உள்ளது.

    சமீபத்தில் பெய்த மழையின் போது பஸ்நிலைய முன்பகுதியில் தண்ணீர் தேங்கியதால் அப்பகுதியில் புதிதாக மழைநீர்கால்வாய் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. விரைவில் பணிகள் முழுவதும் முடிந்து திறப்பு விழா நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    இந்தநிலையில் இன்று காலை கிளாம்பாக்கம் புதிய பஸ்நிலையத்தில் நடைபெற்று வரும் பணிகளை அமைச்சர் சேகர் பாபு ஆய்வு செய்தார். அப்போது பஸ்நிலையத்துக்குள் பணிகள் முடிந்த பகுதிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

    மேலும் தற்போது நடந்து வரும் மழைநீர் வடிகால்வாய் மற்றும் மீதமுள்ள பணிகளை அடுத்த மாதம் (நவம்பர்) 15-ந் தேதிக்குள் முடிக்க உத்தரவிட்டார்.

    பின்னர் அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-

    கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையம் அமைக்க முதலில் கூறப்பட்ட தொகையை விட ரூ.100 கோடிக்கு பணிகள் கூடுதலாக நடந்துள்ளது. இதற்காக 3-க்கும் மேற்பட்ட சாலைகள் விரிவாக்கப்பட்டுள்ளன. கூடுவாஞ்சேரி முதல் மாடம்பாக்கம் வரையிலும், மாடம்பாக்கத்தில் இருந்து ஆதனூர் சாலை, ஆதனூரில் இருந்து வண்டலூர்-வாலாஜா சாலை இணைப்பு, அய்யஞ்சேரி முதல் மீனாட்சிபுரம் வரை, போலீஸ் அகாடமி, வனத்துறைக்கு சொந்தமான இரண்டு கிலோமீட்டர் சாலை அமைக்கும் பணிகள் புதிதாக மேற்கொள்ளப்பட்டது.

    தினமும் 450 பஸ்கள் வந்து செல்லும் வகையிலும், 5ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்ல ஏதுவாகவும் பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். ஆம்னி பஸ்களுக்கான பஸ்நிலையம் முடிச்சூரில் கட்டப்பட்டு வருகிறது. மேலும் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்காத வண்ணம் இருக்க ரூ.17 கோடி செலவில்1250 மீட்டர் நீளத்திற்கு மழை நீர் வடிகால் பணிகள் நடைபெறுகின்றன. இதில் 750 மீட்டர் பணிகள் முடிவடைந்த நிலையில் இன்னும் சில நாட்களில் அந்த பணிகளும் முடிந்து விடும்.

    வாகனங்கள் பஸ் நிலையத்திற்கு வந்து செல்வதற்கும் புதிய நுழைவு வாயில்கள் அமைக்கப்படும். பயணிகள் பொழுது போக்கிற்கு பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பஸ் நிலையம் பயன்பாட்டிற்கு வந்த பிறகு எந்தவித போக்குவரத்து நெரிசலும் ஏற்படாதபடி அனைத்து நடவடிக்கைகளும் அதற்கான பணிகளும் நடந்து வருகின்றன. பயணிகளின் பாதுகாப்பை கருதி ரூ.13 கோடியில் நவீன காவல் நிலையம் அமைக்கப்படும். தொடர்ந்து மக்களின் நலனுக்காக ஆஸ்பத்திரி என பல்வேறு பணிகள் முடிக்கப்பட்டு விரைவில் முதலமைச்சரால் திறந்து வைக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின் போது சென்னை பெருநகர வளர்ச்சி குழும செயலாளர் சமய மூர்த்தி, சென்னை பெருநகர வளர்ச்சி குழும உறுப்பினர் செயலாளர் அன்சுல் மிஸ்ரா, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • 275-வது குழுமக் கூட்டம் அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் நடைபெற்றது.
    • உயர் அலுவலர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    சென்னை:

    சென்னைப் பெருநகர வளர்ச்சி குழும அலுவலகக் கூட்டரங்கில் சென்னைப் பெருநகர வளர்ச்சி குழுமத்தின் 275-வது குழுமக் கூட்டம் அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் 2023- 2024-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களில் 27 திட்டங்களுக்கு ஒப்பந்த புள்ளி கோரப்பட்டு நிதி ஒப்புதல் வழங்குவது குறித்தும், புதிதாக கட்டப்பட்டு வரும் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் சாலை வசதிகள் மற்றும் மழைநீர் வடிகால் பணிகள் அமைப்பதற்கு நிதி ஒப்புதல் வழங்குவது குறித்தும், சென்னை பெருநகர எல்லைக்குள் நில உபயோக மாற்ற விண்ணப்பங்களின் மீது பரிசீலிப்பது குறித்தும் மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் நிர்வாக நடவடிக்கைகள் குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

    இதில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவர் பூச்சி எஸ்.முருகன், தொழில், சட்டமன்ற உறுப்பினர்கள் (மாதவரம்) எஸ்.சுதர்சனம் (திரு.வி.க.நகர்) பி.சிவக்குமார் என்கிற தாயகம் கவி, போக்குவரத்துத்துறை சிறப்புச் செயலாளர் வெங்கடேஷ் , சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் அன்சூல் மிஸ்ரா , தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர் சங்கர், நிதித் துறை கூடுதல் செயலாளர் பிரசாந்த் வடநெரே, குழும உறுப்பினர்கள், உயர் அலுவலர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • கட்டுப்பாட்டு அறையில் இருந்த படியே போலீசார் பயணிகளின் நடவடிக்கையை கண்காணிப்பார்கள்.
    • மொத்தம் 72 போலீசார் போக்குவரத்து மற்றும் சட்டம் ஒழுங்கு பிரிவில் பணியாற்ற கேட்கப்பட்டு உள்ளனர்.

    வண்டலூர்:

    சென்னையில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் ரூ.394 கோடி செலவில் 88.50 ஏக்கர் பரப்பளவில் நவீன வசதிகளுடன் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டு வருகிறது.

    90 சதவீதத்துக்கு மேல் கட்டுமான பணிகள் முடிந்த நிலையில் விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வர இருக்கிறது.

    இந்த புதிய பஸ் நிலையத்துக்கு கலைஞர் நூற்றாண்டு பஸ் நிலையம் என்று பெயரிடப்பட்டு உள்ளது.

    இதற்கிடையே கடந்த சில நாட்களாக பெய்து வரும் பலத்த மழையின் போது கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையத்தின் முன் பகுதியில் மழைநீர் அதிக அளவில் தேங்கிய மழைநீர் வெளியேற கால்வாய் வசதி இல்லாததால் இந்த பாதிப்பு ஏற்பட்டது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து பஸ் நிலையத்தின் முன் பகுதியில் கால்வாய் பணியை முடித்த பின்னர் பஸ் நிலையத்தை திறக்க முடிவு செய்யப்பட்டது.

    இதையடுத்து கால்வாய் அமைக்கும் பணி வேகமாக நடந்து வருகின்றன. அப்பகுதியில் கல்வெட்டுகள் அமைக்கப்பட உள்ளது. இந்த பணிகள் முழுமையாக முடிந்த பின்னரே கிளாம்பாக்கம் புதிய பஸ்நிலையம் திறக்கப்படும் என்று தெரிகிறது. தீபாவளிக்கு முன்பு புதிய பஸ்நிலையம் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையம் திறக்கப்படும் போது பயணிகள் பாதுகாப்பு, போக்குவரத்து சீரமைப்பு, கண்காணிப்பு கேமிரா பொருத்தம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை மேம்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

    இதனால் புதிய பஸ் நிலைய பகுதியில் புதிதாக நவீன வசதிகளுடன் போலீஸ் நிலையம் அமைய இருக்கிறது. இதற்கான டெண்டரை சி.எம்.டி.ஏ. கோரி உள்ளது.

    சுமார் 7,380 சதுர அடி பரப்பளவில் புதிய போலீஸ் நிலையம் அமைய இருக்கிறது. ஒரே இடத்தில் சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து பிரிவு, கண்காணிப்பு கேமிரா மையம், ஆயுதங்கள் வைப்பு அறை, கட்டுப்பாட்டு அறை, கீழ்தளத்தில் கார்கள் நிறுத்தும் இடம், முதல் உதவி சிகிச்சை மையம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட உள்ளது.

    இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும் போது, மொத்தம் 72 போலீசார் போக்குவரத்து மற்றும் சட்டம் ஒழுங்கு பிரிவில் பணியாற்ற கேட்கப்பட்டு உள்ளனர். கட்டுப்பாட்டு அறையில் இருந்த படியே போலீசார் பயணிகளின் நடவடிக்கையை கண்காணிப்பார்கள். நவீன வசதியுடன் போலீஸ் நிலையம் அமைய உள்ளது. பஸ் நிலையத்தின் அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்படும்.

    ×