search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மெட்ரோ ரெயில் பணி"

    • 910 மீட்டர் நீளத்திற்கு துளையிடும் பணிகள் இன்று தொடங்கியது.
    • உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு பணியினை தொடங்கி வைத்தார்.

    சென்னை:

    மெட்ரோ ரெயில் நிறுவனம் சார்பில் சென்னையில் பல்வேறு இடங்களில் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இதில் ராயப்பேட்டையில் மெட்ரோ ரெயில் திட்டத்தின் 2-வது கட்டம், வழித்தடம் 4-ல் பவானி என்று பெயரிடப்பட்ட சுரங்கம் தோண்டும் எந்திரம் மூலம் ராயப்பேட்டை முதல் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை வரை சுரங்கம் அமைக்கப்படுகிறது.

    இதற்காக 910 மீட்டர் நீளத்திற்கு துளையிடும் பணிகள் இன்று தொடங்கியது. இந்த பணிகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு பணியினை தொடங்கி வைத்தார்.

    அப்போது அவரிடம் அதிகாரிகள் மெட்ரோ ரெயில் பணிகள் குறித்து விளக்கி கூறினார்கள். இதன் பிறகு ஆலப்பாக்கம் இரண்டு அடுக்கு மெட்ரோ ரெயில் பாதை, பூந்தமல்லி புறவழி மெட்ரோ ரெயில் நிலையம் பூந்தமல்லி மெட்ரோ பணிமனை ஆகியவற்றில் நடைபெற்ற பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது அமைச்சர் மா.சுப்பிரமணியன், தயாநிதி மாறன் எம்.பி., சென்னை மேற்கு தி.மு.க. மாவட்டச் செயலாளர் நே.சிற்றரசு, சேப்பாக்கம் மதன் மோகன் உள்பட உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • இந்தியாவிலேயே ஒரே தடவையில் தனியாக செயல்படுத்தப்படும் மிகப்பெரிய பணியாக உள்ளது.
    • பெரம்பூர் வரையிலான 837 மீட்டர் வரை சுரங்கத்தில் பாதை அமைக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. 116. 1 கி.மீ. நீளத்திற்கு 3, 4 மற்றும் 5 ஆகிய மூன்று வழித் தடங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

    இந்த திட்டம் இந்தியாவிலேயே ஒரே தடவையில் தனியாக செயல்படுத்தப்படும் மிகப்பெரிய பணியாக உள்ளது.

    மாதவரம்-சிறுசேரி சிப்காட் வரையிலான 45.4 கி.மீ. தூரம் 3-வது வழித்தடம் மாதவரம் மில்க் காலனி, மூலக்கடை, செம்பியம், பெரம்பூர் மார்க்கெட், பெரம்பூர், அயனாவரம், பட்டாளம், பெரம்பூர் பேரக்ஸ் ரோடு, புரசை வாக்கம் வழியாக செல்கிறது.

    இந்த வழித்தடத்தில் பெரம்பூர் ரெயில் தண்டவாளத்திற்கு அடியில் மெட்ரோ ரெயில் சுரங்கப் பாதை அமைகிறது. 4 வழி ரெயில் பாதைக்கு அடியில் மிகப்பெரிய சுரங்கம் தோண்டும் எந்திரம் மூலம் பாதை அமைக்கும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது.

    கடந்த வாரம் தண்டவாளத்தை கடந்து சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடந்தது. அதற்காக பெரம்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மெதுவாக இயக்கப்பட்டன. 6 நாட்கள் வேகம் குறைக்கப்பட்டு அந்த வழியாக எக்ஸ்பிரஸ் ரெயில்கள் கடந்து சென்றன.

    மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதை பாதுகாப்பு மற்றும் எச்சரிக்கையாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதுகுறித்து மெட்ரோ ரெயில் அதிகாரிகள் கூறியதாவது:-

    கல்வராயன் என்ற பெயர் கொண்ட சுரங்கம் தோண்டும் எந்திரம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அயனாவரத்தில் இருந்து பணியை தொடங்கியது. பெரம்பூர் வரையிலான 837 மீட்டர் வரை சுரங்கத்தில் பாதை அமைக்கப்பட்டுள்ளது.

    பெரம்பூரில் ரெயில் தண்டவாளத்தை சுரங்கம் தோண்டும் எந்திரம் கடக்கும் போது எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் இருப்பதற்காக பாதுகாப்பு நடவடிக்கையாக எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மிக குறைவான வேகத்தில் இயக்கப்பட்டன. சரக்கு ரெயில்கள், பயணிகள் ரெயில்கள் அனைத்தும் 20 கி.மீ. வேகத்தில் இயக்கப்பட்டன.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • மாற்றுபாதையில் போரூர் சந்திப்பில் ஆற்காடு சாலை வழியாகசென்று அவர்களது இலக்கை அடையலாம்.
    • மெட்ரோ ரெயில் நிறுவனம் சார்பில் போரூர் முதல் கத்திபாரா வரை உயர்த்தப்பட்ட வழித்தடத்திற்கு கட்டுமான பணி நடைபெற்று வருகிறது.

    சென்னை:

    சென்னை போக்குவரத்து துறை வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் சார்பில் போரூர் முதல் கத்திபாரா வரை உயர்த்தப்பட்ட வழித்தடத்திற்கு கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. மவுண்ட்-பூந்தமல்லி சாலை முகலிவாக்கத்தில் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

    இன்று (சனிக்கிழமை) முதல் வாரந்தோறும் சனிக்கிழமை இரவு 11 மணிமுதல் திங்கள்கிழமை காலை 5 மணிவரை மெட்ரோ ரெயில் பணி மேற்கொள்ள ஏதுவாக கீழ்கண்டவாறு போக்கு வரத்து காவல் துறைசார்பாக அனுமதி வழங்கப்படுகிறது.

    இன்று (சனிக்கிழமை) இரவு 11 மணிமுதல் 19-ந் தேதி (திங்கட்கிழமை)காலை 5 மணிவரை.

    24-ந்தேதி (சனிக்கிழமை இரவு 11 மணிமுதல் 26-6-2023 (திங்கட்கிழமை) காலை 5 மணிவரை.

    1-7-2023 (சனிக்கிழமை) இரவு 11 மணிமுதல் 3-7-2023 (திங்கட்கிழமை) காலை 5 மணிவரை. 8-7-2023 (சனிக்கி ழமை) இரவு 11 மணி முதல் 10-7-2023 (திங்கட்கிழமை) காலை 5 மணி வரை.

    15-7-2023 (சனிக்கிழமை) இரவு 11 மணி முதல் 17-07-2023 (திங்கட்கிழமை) காலை 5 மணிவரை. 22-7-2023 (சனிக்கிழமை) இரவு 11 மணிமுதல் 24-7-2023 (திங்கட்கிழமை) காலை 5 மணி வரை.

    மேற்கண்ட தினங்களில் கீழ்கண்டவாறு போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    சென்னை பூந்தமல்லியில் இருந்து கிண்டி நோக்கி செல்லும் அனைத்து வணிக வாகனங்களும் மற்றும் கனரக வாகனங்களும் (அரசு பேருந்துகள் தவிர்த்து) போரூர் சுங்கச்சாவடி சர்வீஸ் சாலைவழியாக சென்னை புற வழிச்சாலை மூலம் அவர்களது இலக்கை சென்று அடையலாம். அனைத்து வணிக வாகனங்களும் சாலை வழியாக போரூர் நோக்கி செல்லும் மற்றும் கனரகவாகனங்களும் போரூர் சந்திப்பில் மாற்று பாதையில் ஆற்காடு சாலை வழியாக சென்று அவர்களது இலக்கை அடையலாம்.

    குன்றத்தூரில் இருந்து போரூர் சந்திப்பு நோக்கி செல்லும் அனைத்து வணிக வாகனங்களும் மற்றும் கனரக வாகனங்களும் (அரசுபேருந்துகள் தவிர்த்து) மாற்றுபாதையில் போரூர் சந்திப்பில் ஆற்காடு சாலை வழியாகசென்று அவர்களது இலக்கை அடையலாம்.

    சென்னை கத்திபாராவில் இருந்து போரூர் மற்றும் பூந்தமல்லி நோக்கிசெல்லும் அனைத்து வணிக வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் (அரசு பேருந்துகள் தவிர்த்து) மவுண்ட்- பூந்தமல்லி சாலையில் மேற்கண்ட தினங்களில் மெட்ரோ ரெயில் பணி நடை பெறுவதால் அன்றைய தினம் இவ்வாகனங்களை உள்வட்ட சாலையில் கோயம்பேடு வழியாக இயக்குவதற்கு சாலை போக்கு வரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • நான்கு வழித்தடங்களில் செயல்படுத்த ஆலோசிக்கப்பட்டது.
    • தீவிர பரிசீலனையில் இருக்கிறது என சென்னை மெட்ரோ ெரயில் நிறுவனம் பதில் அளித்துள்ளது.

    கோவை,

    கோவையில், 'மெட்ரோ' ெரயில் திட்டம் செயல்படுத்துவதற்கான சாத்திய கூறுகளை, சென்னை மெட்ரோ ெரயில் நிறுவனம் ஆய்வு செய்து வருகிறது.

    தொடக்கத்தில் உக்கடம் - கணியூர், உக்கடம்- பெரியநாயக்கன்பாளையம் அருகே பிளீச்சி, தடாகம் ரோடு மற்றும் தண்ணீர் பந்தல் முதல் கருமத்தம்பட்டி வரை, காருண்யா நகர் முதல் அன்னூர் கணேசபுரம் என, நான்கு வழித்தடங்களில் செயல்படுத்த ஆலோசிக்கப்பட்டது.

    முதல்கட்ட மாக, வெள்ளலூர் பஸ் முனையத்தில் இருந்து, உக்கடம் - அவினாசிரோடு வழியாக, நீலாம் பூரில் உள்ள பி.எஸ்.ஜி., பவுண்டரி (பி.எஸ்.ஜி., ஐடெக்) வரை 31.2 கி.மீ. தூரத்துக்கு முதல் வழித்தடம்; கோவை கலெக்டர் அலுவலகத்தில் இருந்து சத்தி ரோடு வழியாக வலியாம்பா ளையம் பிரிவு வரை, 14.1 கி.மீ., தூரத்துக்கு இரண்டாவது வழித்தடம் என இரு வழித்தடங்களில் ரூ.9,424 கோடியில் மெட்ரோ ரயில் திட்டத்தை 45.3கி.மீ. தூரத்துக்கு செயல்படு த்தலாம் என தமிழக அரசுக்கு திட்ட அறிக்கை முன் மொழி ந்திருக்கிறது.

    இந்த நிலையில் கோவையை சேர்ந்த பாலசுப்ரமணியம் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தில், மெட்ரோ ெரயில் திட்டம் தொடர்பாக, சென்னை மெட்ரோ ெரயில் நிறுவனத்திடம் தகவல் பெற்றிருக்கிறார்.

    அதில், 'மெட்ரோ திட்டம் தொடர்பாக, 'சிஸ்த்ரா' மற்றும் 'ரைட்ஸ்' என்கிற ஆலோசனை நிறுவனங்கள் விரிவான திட்ட அறிக்கை தயாரித்து வருகின்றன. 'பேஸ்-1 திட்ட அறிக்கை தமிழக அரசின் தீவிர பரி சீலனையில் இருக்கிறது. தமிழக அரசின் ஒப்புதலுக்கு பின், மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப் பப்படும்' என தெரிவித்துள்ளது.

    அவிநாசி ரோட்டில் மேம்பாலம் கட்டுவதால், மெட்ரோ ெரயில் திட்டத்துக்கு பாதிப்பு வருமா என்ற கேள்விக்கு கோவை நகரத்துக்கு முன்மொழியப் படும் அதிவிரைவு போக்குவரத்து திட்டம் தமிழக அர சின் தீவிர பரிசீலனையில் இருக்கிறது என சென்னை மெட்ரோ ெரயில் நிறுவனம் பதில் அளித்துள்ளது.

    • குமணன்சாவடியில் பகுதியில் மெட்ரோ பணிகளுக்காக அமைக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்புகள் ஒருபுறமாக சீட்டுக்கட்டு போல் சரிந்து விழுந்தது.
    • மெட்ரோ ரெயில் கட்டுமான ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலையில் விழுந்து கிடந்த இரும்பு தடுப்புகளை அகற்றினர்.

    சென்னை:

    கிண்டியில் இருந்து பூந்தமல்லி வரை தற்போது மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளுக்காக இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு பணிகள் வேகமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில் குமணன்சாவடியில் பகுதியில் மெட்ரோ பணிகளுக்காக அமைக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்புகள் ஒருபுறமாக சீட்டுக்கட்டு போல் சரிந்து விழுந்தது. இதில் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டி ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. அவரை உடனடியாக அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், அவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.

    இதையடுத்து மெட்ரோ ரெயில் கட்டுமான ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலையில் விழுந்து கிடந்த இரும்பு தடுப்புகளை அகற்றினர்.

    அதிக பாரம் கொண்ட இரும்பு தடுப்புகளை சிறிய கம்பிகளில் நிறுத்தி வைப்பதால் இத்தகையை விபத்துக்கள் ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

    • கிரேன் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்த தர்மேந்திர குமார் சிங் என்பவர் முன் அனுபவம் ஏதும் இல்லாமல் வேலைக்கு சேர்ந்தது தெரிய வந்தது.
    • 5 வருடம் அனுபவம் உள்ளதுபோல் போலியாக சான்றிதழ் தயாரித்து கொடுத்து தெரியவந்தது.

    போரூர்:

    சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் 2-ம் கட்டமாக மெட்ரோ ரெயில் பணி 3 வழித்தடங்களில் நடந்து வருகிறது.

    கிண்டி-போரூரை இணைக்கும் மவுண்ட்-பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மெட்ரோ ரெயில் கட்டுமான பணிகள் விறு விறுப்பாக நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 27-ந் தேதி அதிகாலை மாநகர பஸ் ஒன்று குன்றத்தூரில் இருந்து போக்குவரத்து ஊழியர்கள் 8 பேருடன் ஆலந்தூர் நோக்கி மவுண்ட-பூந்தமல்லி நெடுஞ்சாலை வழியாக சென்று கொண்டிருந்தது.

    ராமாபுரம் அருகே பஸ் வந்தபோது மெட்ரோ ரெயில் பணிக்காக இரும்பு கம்பிகளை "டிரெய்லர் லாரியில்" ஏற்றிக்கொண்டு இருந்தனர். அப்போது ராட்சத கிரேனில் இருந்து இரும்பு கம்பிகள் திடீரென சரிந்து பஸ் மீது விழுந்தது. இதில் மாநகர பஸ் டிரைவர்கள் 2 பேர் மற்றும் டிரெய்லர் லாரி டிரைவர் ஆகியோர் பலத்த காயத்துடன் உயிர் தப்பினர்.

    இது தொடர்பாக ராமாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் கிரேன் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்த தர்மேந்திர குமார் சிங் என்பவர் முன் அனுபவம் ஏதும் இல்லாமல் போலி சான்றிதழ் மூலம் வேலைக்கு சேர்ந்தது தெரிய வந்தது.

    அவருக்கு 5 வருடம் அனுபவம் உள்ளது போல் போலியாக சான்றிதழ் தயாரித்து கொடுத்து பிரபல கட்டுமான நிறுவனத்தின் என்ஜினீயர்கள் சிவனாந்த நாயக், பொன் சந்திரசேகர் ஆகிய இருவரும் வேலைக்கு சேர்த்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் 5 பிரிவின்கீழ் வழக்குப் பதிவு செய்து என்ஜினீயர்கள் சிவனாந்த நாயக், பொன் சந்திரசேகர் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

    • மயிலாப்பூரில் உள்ள கச்சேரி சாலையில் சென்னை மெட்ரோ ரெயில் கட்டுமான பணிகள் நடக்கவுள்ளது.
    • கடந்த 10-ந்தேதி முதல் ஒரு வாரம் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

    சென்னை :

    சென்னை மயிலாப்பூரில் உள்ள கச்சேரி சாலையில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட உள்ள கட்டுமான பணிகளை கருத்தில்கொண்டு, போக்குவரத்து மாற்றங்கள் திட்டமிடப்பட்டு கடந்த 10-ந்தேதி முதல் ஒரு வாரம் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

    இது நன்றாக செயல்பட்டதால், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் கோரியப்படி இந்த போக்குவரத்து மாற்றங்கள் மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

    கச்சேரி சாலை மற்றும் அதை சுற்றியுள்ள சாலைகளில் 24-ந்தேதி (நாளை) முதல் 3 ஆண்டுகளுக்கு செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றங்கள் வருமாறு:-

    * முண்டக்கன்னி அம்மன் கோவில் தெருவில் இருந்து கச்சேரி சாலைக்கு வாகனங்கள் செல்வதை கட்டுப்படுத்தி, கல்விவாரு தெருவில் தற்போது உள்ள ஒருவழி பாதை அமைப்பு மாற்றியமைக்கப்பட்டு வாகனங்கள் கச்சேரி சாலையில் இருந்து முண்டக்கன்னி அம்மன் கோவில் தெருவுக்கு அனுமதிக்கப்படும்.

    * லஸ் சந்திப்பில் இருந்து கச்சேரி சாலை வழியாக சாந்தோம் நெடுஞ்சாலைய நோக்கி இலகு ரக வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்டு, கல்விவாரு தெரு வழியாக முண்டக்கன்னி அம்மன் கோவில் தெரு மற்றும் பஜார் சாலை வழியாக செல்லலாம்.

    * சாந்தோம் நெடுஞ்சாலையில் இருந்து கச்சேரி சாலை வழியாக லஸ் சந்திப்பை நோக்கி இலகு ரக வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்டு, தேவடி தெரு, நடு தெரு மற்றும் ஆர்.கே.மடம் சாலை அல்லது மாதா சர்ச் சாலை வழியாகவும் செல்லலாம்.

    * மாநகர பஸ் எண் '12 பி' லஸ் சந்திப்பில் இருந்து கச்சேரி சாலை வழியாக பட்டினப்பாக்கம் பஸ் நிலையம் செல்ல தடை செய்யப்பட்டு, ராயப்பேட்டை நெடுஞ்சாலை டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை மற்றும் சாந்தோம் நெடுஞ்சாலை வழியாகவும் திரும்பி வரும்போது வி.எம்.தெரு வரை வழக்கம்போல் வந்து டி.டி.கே.சாலை வழியாக செல்லலாம்.

    * மாநகர பஸ் எண் '12 எக்ஸ்' லஸ் சந்திப்பில் இருந்து கச்சேரி சாலை வழியாக பட்டினப்பாக்கம் பஸ் நிலையம் செல்ல தடை செய்யப்பட்டு, ஆர்.கே.மடம் சாலை மற்றும் தெற்கு கால்வாய் கரை சாலை வழியாகவும் திரும்பி வரும்போது மந்தைவெளி பஸ் நிறுத்தம் வரை வழக்கம்போல் வந்து வெங்கடகிருஷ்ணா சாலை மற்றும் ஆர்.கே.மடம் சாலை வழியாக செல்லலாம்.

    மேற்கண்ட தகவல் சென்னை போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    ×