search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐயப்ப பக்தர்கள் பலி"

    • ஒரே பகுதியை சேர்ந்த 8 பேர் விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
    • விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை கலெக்டர் முரளிதரன் பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள சண்முகசுந்தரபுரத்தை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் குழு சபரிமலைக்கு சென்றனர். அங்கு தரிசனம் முடிந்ததும் ஒரு காரில் ஊர்திரும்பி கொண்டிருந்தனர். இதில் சிறுவன் உள்பட 11 பேர் இருந்தனர். காரை பிச்சம்பட்டியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன்(40) என்பவர் ஓட்டினார். நேற்று நள்ளிரவு சமயம் சுமார் 11.30 மணியளவில் குமுளிலோயர்கேம்ப் மலைப்பாதையில் மாதா கோவில் அருகே வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கார் தாறுமாறாக ஓடியது.

    நிலைதடுமாறிய கார் 100 அடி பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்து பெரியாறு அணையிலிருந்து லோயர்கேம்ப் மின்உற்பத்தி நிலையம் செல்லக்கூடிய ராட்சத குழாய்மீது விழுந்து நொறுங்கியது. இதனால் காரில் இருந்த ஐயப்ப பக்தர்கள் அபயகுரல் எழுப்பினர்.

    சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஒன்றுகூடினர். மேலும் இதுகுறித்து போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தேனி மற்றும் இடுக்கி மாவட்ட போலீசார் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். ராட்சத கிரேன் வரவழைக்கப்பட்டு மீட்பு பணிகள் துரிதமாக நடந்தது. சம்பவ இடத்திற்கு உடனே சென்ற தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன்உமேஷ் டோங்கரே மீட்பு பணிகளை பார்வையிட்டார்.

    இடிபாடுகளுக்குள் சிக்கி 7 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் அங்கு சிகிச்சையில் இருந்த மேலும் ஒருவர் உயிரிழந்தார். இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 8ஆக உயர்ந்தது. மேலும் 3 பேர் தொடர்ந்து சிகிசசை பெற்று வருகின்றனர்.

    இதில் ஆண்டிபட்டியை சேர்ந்த ஓட்டல் கடை உரிமையாளர் ராஜா(40) என்பவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

    இந்த விபத்தில் கார் டிரைவராக பிச்சம்பட்டியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன்(42), சக்கம்பட்டியை சேர்ந்த முனியாண்டி(33), பத்திரஆபீஸ்ரோடு பகுதியை சேர்ந்த தேவதாஸ்(35), சாவடிதெருவை சேர்ந்த கன்னிச்சாமி(55), மயானதெருவை சேர்ந்த நாகராஜ்(46), எஸ்.எஸ்.புரத்தை சேர்ந்த வினோத்குமார்(47), சிவக்குமார்(43), கலைச்செல்வன்(45), ஆகிய 8 பேர் உயிரிழந்தனர்.

    மலைப்பாதையில் நள்ளிரவு சமயத்தில் வந்தபோது நிலைதடுமாறி வேன் கவிழ்ந்ததா அல்லது டிரைவர் தூங்கியதால் விபத்து ஏற்பட்டதா என்று கூடலூர் இன்ஸ்பெக்டர் பிச்சைபாண்டியன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பலியான 8 பேர் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு உறவினர்கள் இறந்தவர்களின் உடல்களை பார்த்து கதறி அழுதனர். ஒரே பகுதியை சேர்ந்த 8 பேர் விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை கலெக்டர் முரளிதரன் பார்வையிட்டு ஆறுதல் கூறினார். மேலும் அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும் டாக்டர்களிடம் வலியுறுத்தினார்.

    ×