search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தனிப்படை விரைவு"

    • நள்ளிரவில் ஏடிஎம் மையங்களின் சட்டர்களை மூடி கியாஸ் வெல்டிங் மூலம் மிஷின்கள் உடைக்கப்பட்டுள்ளன.
    • ஏடிஎம் எந்திரத்தை முழுமையாக கையாளத் தெரிந்தவர்கள் தான் இந்த கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் மையம், தேனிமலை பகுதியில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் மையம், போளூர் பஸ் நிலையம் எதிரே உள்ள எஸ்பிஐ ஏடிஎம் மையம், கலசப்பாக்கம் அண்ணாநகர் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள இண்டிகா ஏடிஎம் மையம் ஆகிய 4 இடங்களில் ஏடிஎம் மையங்களை உடைத்து கும்பல் பணத்தை கொள்ளையடித்தனர்.

    இந்த 4 இடங்களில் உள்ள ஏடிஎம் மையங்களில் இருந்து ரூ.72 லட்சம் பணம் கொள்ளை போனது.

    நள்ளிரவில் ஏடிஎம் மையங்களின் சட்டர்களை மூடி கியாஸ் வெல்டிங் மூலம் மிஷின்கள் உடைக்கப்பட்டுள்ளன. முன்னதாக அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களை கியாஸ் வெல்டிங் மூலம் கும்பல் எரித்துள்ளனர். அதை தொடர்ந்து அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்து விட்டு ஏடிஎம் எந்திரங்களுக்கு தீ வைத்து சென்று விட்டனர்.

    ஒரு ஏடிஎம் மையத்தில் கொள்ளையடிக்க 13 நிமிடங்கள் மட்டுமே கொள்ளையர்கள் எடுத்துக் கொண்டுள்ளனர்.

    போளூர் ஏ.டி.எம். மையம் அருகே உள்ள கேமராக்கைளை ஆய்வு செய்தபோது அதிகாலை 3.50 மணிக்கு காரில் தொப்பி அணிந்தபடி 4 பேர் கும்பல் வந்ததும் அடுத்த 13 நிமிடத்தில் அவர்கள் கொள்ளையை முடித்து விட்டு திரும்பி சென்றதும் பதிவாகி உள்ளது.

    அவர்கள் ஏடிஎம் கொள்ளையில் கைதேர்ந்தவர்கள் என்பது நிரூபணமாகி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 ஏடிஎம் மையங்களில் ஒரே நாளில் ஒரே விதமாக கொள்ளை நடந்திருப்பது போலீசாரை அதிர வைத்துள்ளது.

    கொள்ளை நடந்த ஏடிஎம் மையங்களை போலீஸ் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.

    வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் தலைமையில் டி.ஐ.ஜி முத்துசாமி போலீஸ் சூப்பிரண்டுகள் கார்த்திகேயன், ராஜேஷ் கண்ணன், பாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமையிலான போலீசார் திருவண்ணாமலை முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஏடிஎம் எந்திரத்தை முழுமையாக கையாளத் தெரிந்தவர்கள் தான் இந்த கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். கொள்ளை சம்பந்தமாக பல தகவல்கள் போலீசாருக்கு கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

    கும்பலை பிடிக்க 8 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. வேலூர் திருப்பத்தூர் ராணிப்பேட்டை மாவட்டங்கள் வழியாக ஆந்திராவுக்கு கும்பல் தப்பி செல்ல வாய்ப்பு உள்ளது.

    இதனை தொடர்ந்து ஆந்திர எல்லைகளில் போலீசார் நேற்று காலை முதல் விடிய விடிய சோதனை நடத்தினர். தொடர்ந்து சோதனை நீடித்து வருகிறது.

    இதேபோல தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் போலீசார் வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.

    ஆந்திரா கர்நாடக மாநில எல்லைகளில் தீவிர சோதனை செய்யப்பட்டு வருகிறது. வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தங்கும் விடுதிகளிலும் போலீசார் சோதனை நடத்தினர்.

    வேலூரில் ஆயிரக்கணக்கான வட மாநிலத்தவர்கள் விடுதிகளில் தங்கியுள்ளனர். இன்று 2-வது நாளாக லாட்ஜிகளில் சோதனை நடத்தப்பட்டது.

    இது போன்ற கொள்ளையில் அனுபவம் வாய்ந்த அரியானா மாநிலத்தைச் சேர்ந்த கும்பல்கள் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

    திருவண்ணாமலை போளூர் கலசப்பாக்கம் நகர பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    இது தொடர்பாக டி.ஐ.ஜி முத்துசாமி கூறுகையில்:-

    கொள்ளை கும்பலை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. பல்வேறு இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகிறோம். விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவார்கள் என்றார்.

    ×