search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கர்நாடகா வனத்துறை"

    • சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார் கொளத்தூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் குழந்தைகளை பராமரிக்கும் வேலையை பெற்று தந்து அதற்கான பணி ஆணையும் வழங்கினார்.
    • ராஜாவின் குழந்தைகள் வரும் கல்வி ஆண்டில் இருந்து இலவசமாக படிக்க ஏற்பாடு செய்யப்படும் என உறுதி அளித்தார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த கொளத்தூர் கோவிந்தப்பாடியை சேர்ந்தவர் காரவடையான் என்கிற ராஜா (வயது 45). செட்டிப்பட்டியை சேர்ந்தவர்கள் ரவி (40), இளைய பெருமாள் (40). மீனவர்களான இவர்கள் உள்பட 4 பேர் கடந்த 14-ந்தேதி இரவு தமிழக-கர்நாடக எல்லையில் உள்ள அடிப்பாலாறு பகுதியில் காவிரி ஆற்றில் மீன் பிடிக்க சென்றனர்.

    அப்போது அவர்களை கர்நாடக மாநில வனத்துறையினர் சுற்றி வளைத்துள்ளனர். இரு தரப்பினருக்கும் இடை யே மோதல் ஏற்பட்டு துப்பாக்கி ச்சண்டை நடந்துள்ளது. இந்த சண்டையில் ராஜா காயம் அடைந்து பலியானார். இதற்கிடையே கர்நாடக வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி அவரது உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக அவர்களுடன் பேச்சுவார்த்தை நடந்தது.

    இதில் மாவட்ட கலெக்டர் கார்மேகம் மற்றும் உதவி கலெக்டர் விஷ்ணுவர்த்தினி கலந்து கொண்டனர். பிரேத பரிசோதனை முழுவதும் வீடியோ பதிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனை செய்வதற்கு உறவினர்கள் சம்மதம் தெரிவித்தனர்.

    மீனவர் ராஜாவின் உடலை அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் கோகுலரமணன், அருண், மகேஷ் ஆகிய 3 பேர் பிரேத பரிசோதனை செய்தனர். இந்த நிகழ்வு முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. பிரேதப் பரிசோதனை முடிந்ததை அடுத்து ராஜாவின் உடல் இன்று காலை உறவினர் களிடம் ஒப்படைக்கப்பட்டது. போலீஸ் பாதுகாப்புடன் அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது. குடும்பத்தின் உறவினர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என ராஜாவின் மனைவி கோரிக்கை வைத்தார்.

    அதனை ஏற்று சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார் கொளத்தூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் குழந்தைகளை பராமரிக்கும் வேலையை பெற்று தந்து அதற்கான பணி ஆணையும் வழங்கினார்.

    ராஜாவின் குழந்தைகள் வரும் கல்வி ஆண்டில் இருந்து இலவசமாக படிக்க ஏற்பாடு செய்யப்படும் என உறுதி அளித்தார். அதை தொடர்ந்து உறவினர்கள் மற்றும் ராஜாவின் மனைவி பவுனா, கணவரின் உடலை பெற சம்மதம் தெரிவித்து கையெழுத்திட்டார். 

    ×