என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மார்க்ரம்"
- இந்திய நேரப்படி இன்று இரவு 8 மணிக்கு பலப்பரீட்சை நடத்துகின்றன.
- வெற்றி வாகை சூடும் அணிக்கு ரூ.20¼ கோடி பரிசுத்தொகை.
பிரிட்ஜ்டவுன்:
9-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த 1-ம்தேதி தொடங்கியது. அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இணைந்து நடத்தும் இந்த கிரிக்கெட் திருவிழாவில் 20 அணிகள் பங்கேற்றன.
லீக் மற்றும் சூப்பர் 8 சுற்று முடிவில் இந்தியா, ஆப்கானிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகள் அரைஇறுதியை எட்டின.
அரைஇறுதியில் தென்ஆப்பிரிக்கா 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானையும், இந்திய அணி 68 ரன் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தையும் விரட்டியடித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.
இந்த நிலையில் மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டத்தில் இந்தியாவும், தென்ஆப்பிரிக்காவும் பார்படோஸ் தலைநகர் பிரிட்ஜ்டவுனில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று (சனிக்கிழமை) இரவு 8 மணிக்கு பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்தியா எப்படி?
முன்னாள் சாம்பியனும், 'நம்பர் ஒன்' அணியுமான இந்தியா, நடப்பு தொடரில் தோல்வி பக்கமே செல்லாமல் இறுதிப்போட்டிக்கு வந்துள்ளது.
லீக்கில் பாகிஸ்தான் உள்பட 3 அணிகளையும், சூப்பர் 8 சுற்றில் ஆஸ்திரேலியா உள்ளிட்ட 3 அணிகளையும் தோற்கடித்தது. கனடாவுக்கு எதிரான லீக் மட்டும் மழையால் டாஸ் கூட போடப்படாமல் கைவிடப்பட்டது.
அரைஇறுதியில் குல்தீப், அக்ஷர் பட்டேலின் சுழல் ஜாலத்தால் இங்கிலாந்தை போட்டுத்தாக்கிய இந்தியா அதே உத்வேகத்துடன் தென்ஆப்பிரிக்காவையும் எதிர்கொள்ள ஆயத்தமாக உள்ளது.
கேப்டன் ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ் கடந்த இரு ஆட்டங்களில் பேட்டிங்கில் அசத்தினர். ஆனால் விராட் கோலியின் செயல்பாடு தொடர்ந்து கவலைக்குரியதாக இருக்கிறது. 7 ஆட்டங்களில் 75 ரன் மட்டுமே எடுத்துள்ளார். தொடக்க ஆட்டக்காரர் வரிசைக்கு தாவிய பிறகு அவரது இயல்பான பேட்டிங்கே காணாமல் போய் விட்டது.
இருப்பினும் அவருக்கு ஆதரவாக உள்ள கேப்டன் ரோகித் சர்மா, 'கோலியின் தரம் குறித்து எங்களுக்கு தெரியும். 15 ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட்டில் ஆடுபவருக்கு பார்ம் ஒரு பிரச்சினையே இல்லை. அனேகமாக இறுதிப்போட்டியில் ஒட்டுமொத்தமாக தனது சிறந்த இன்னிங்சை வெளிப்படுத்துவார்' என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்.
இதே போல் ஷிவம் துபேவும் கணிசமாக ரன் சேர்க்க வேண்டியது அவசியமாகும். பந்து வீச்சில் ஜஸ்பிரித் பும்ரா (13 விக்கெட்), அர்ஷ்தீப்சிங் (15), குல்தீப் யாதவ் (10), அக்ஷர் பட்டேல் பிரமாதப்படுத்துகிறார்கள்.
கடந்த ஆண்டில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், 50 ஓவர் உலகக் கோப்பை இரண்டிலும் இறுதிப்போட்டியில் கோட்டை விட்ட இந்தியா இந்த முறை கோப்பையை கையில் ஏந்தி நீண்ட கால ஏக்கத்தை தணிக்குமா என்பதே ரசிகர்களின் பேராவலாகும். விராட் கோலி, ரோகித் சர்மாவுக்கு இதுவே கடைசி 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியாகும். அதனால் அவர்களும் வெற்றியுடன் நிறைவு செய்ய வேண்டும் என்பதில் தீவிரம் காட்டுவார்கள்.
2013-ம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பையை உச்சிமுகர்ந்த பிறகு இந்தியா எந்த ஐ.சி.சி. கோப்பையும் வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தென்ஆப்பிரிக்கா
உலக தரவரிசையில் 5-வது இடம் வகிக்கும் தென்ஆப்பிரிக்க அணி மீது ஆரம்பத்தில் பெரிய அளவில் எந்த எதிர்பார்ப்பும் கிடையாது. உலகக் கோப்பைக்கு முன்பாக 20 ஓவர் கிரிக்கெட்டில் 11 ஆட்டங்களில் ஆடி 9-ல் தோற்று இருந்தது.
ஆனால் உலகக் கோப்பைக்குள் நுழைந்ததும் பந்து வீச்சுக்கு உகந்த ஆடுகளங்கள் அவர்களுக்கு புதுதெம்பை கொடுத்தது. லீக்கில் 4 வெற்றி, சூப்பர் 8 சுற்றில் 3 வெற்றி, அரைஇறுதி என்று அந்த அணியும் சறுக்கலின்றி வீறுநடை போடுகிறது.
அது மட்டுமின்றி உலகக் கோப்பை போட்டி ஒன்றில் முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்திருக்கிறார்கள். இதற்கு முன்பு அரைஇறுதியை தாண்டியதில்லை. அவர்களின் பேட்டிங் சீரற்றதாக காணப்பட்டாலும் ககிசோ ரபடா (12 விக்கெட்), ஷம்சி (11), அன்ரிச் நோர்டியா (13) மார்கோ யான்சென், கேஷவ் மகராஜ் ஆகிய பந்து வீச்சு கூட்டணி அவர்களுக்கு பக்கபலமாக இருந்து வெற்றியை தேடிக்கொடுத்திருக்கிறது.
இதில் அரைஇறுதியில் ஆப்கானிஸ்தானை 56 ரன்னில் சுருட்டியது கவனிக்கத்தக்கது. பந்து வீச்சில் வலுவாக உள்ள நிலையில் குயின்டான் டி காக், கிளாசென், மில்லர், கேப்டன் மார்க்ரம், ஹென்ரிக்ஸ் ஆகியோரது பேட்டிங் ஒருசேர கிளிக் ஆகும் பட்சத்தில், இன்னும் அபாயகரமான அணியாக மாறி விடுவார்கள். அதனால் களத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.
மொத்தத்தில் இரு அணிகளும் ஏறக்குறைய சரிசம பலத்துடன் மல்லுக்கட்டுவதால் யாருடைய கை ஓங்கும் என்பதை கணிப்பது கடினம். ஆனால் நெருக்கடியை திறம்பட சமாளிக்கும் அணிக்கே வெற்றி வாய்ப்பு கிட்டும்.
தென்ஆப்பிரிக்காவின் உலகக் கோப்பை கனவு நனவாகுமா? வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் உலகக் கோப்பையை வெல்லும் முதல் ஆசிய அணி என்ற பெருமையை இந்தியா வசப்படுத்துமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
இந்த மைதானத்தை பொறுத்தவரை நடப்பு தொடரில் இங்கு 8 ஆட்டங்கள் நடந்துள்ளன. இதில் இந்திய அணி, ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 181 ரன்கள் எடுத்து வெற்றி கண்ட ஆட்டமும் அடங்கும். அந்த அனுபவம் இந்தியாவுக்கு கூடுதல் அனுகூலமாக இருக்கும்.
20 ஓவர் கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் இதுவரை 26 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 14-ல் இந்தியாவும், 11-ல் தென்ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை.
இன்றைய ஆட்டத்தில் வெற்றி வாகை சூடும் அணிக்கு ரூ.20¼ கோடி பரிசுத்தொகையாக வழங்கப்படும். 2-வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.10½ கோடி கிடைக்கும்.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
இந்தியா: விராட் கோலி, ரோகித் சர்மா (கேப்டன்), ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் பட்டேல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப்சிங், பும்ரா.
தென்ஆப்பிரிக்கா: குயின்டான் டி காக், ரீஜா ஹென்ரிக்ஸ், மார்க்ரம் (கேப்டன்), டிரிஸ்டான் ஸ்டப்ஸ், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், மார்கோ யான்சென், கேஷவ் மகராஜ், ககிசோ ரபடா, அன்ரிச் நோர்டியா, தப்ரைஸ் ஷம்சி.
இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை டி.டி. ஸ்போர்ட்ஸ், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
- முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 338 ரன்கள் குவித்தது.
- தென் ஆப்பிரிக்கா 111 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஜோகனஸ்பர்க்:
தென் ஆப்பிரிக்கா சென்றுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. முதல் இரு போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றிருந்தது.
இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 3-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வுசெய்தது.
அதன்படி, முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா ஆரம்பம் முதலே ரன்களை குவித்தது. இதனால் அந்த அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 338 ரன்கள் குவித்தது. மார்கரம் அதிரடியாக ஆடி சதமடித்து அசத்தினார். மார்க்ரம் 102 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். டி காக் 82 ரன்னும், பவுமா 57 ரன்னும் எடுத்தனர்.
இதையடுத்து, 339 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது.
தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் மட்டும் அரை சதமடித்து 78 ரன்னில் அவுட்டானார். டிராவிஸ் ஹெட் 38 ரன்னும், மிட்செல் மார்ஷ் 29 ரன்னும் எடுத்தனர்.
இறுதியில் ஆஸ்திரேலிய அணி 34.3 ஓவரில் 227 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 111 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி முன்னிலை வகிக்கிறது.
தென் ஆப்பிரிக்க சார்பில் ஜெரால்டு கொயட்சி 4 விக்கெட்டும், சம்ஷி, மகராஜ் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
ஆட்ட நாயகன் விருது மார்க்ரமுக்கு வழங்கப்பட்டது.
- மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசும் தனித்திறன் கொண்ட வீரர் உம்ரான்.
- கடந்த ஐபிஎல் சீசனில் ஐதராபாத் அணிக்காக 22 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தி இருந்தார் உம்ரான்.
ஐதராபாத்:
ஐதராபாத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் ஐதராபாத்-பெங்களூரு அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் ஆடிய ஐதராபாத் கிளாசெனின் அதிரடி சதத்தால் 186 ரன்கள் குவித்தது. இதையடுத்து இலக்கை விரட்டிய பெங்களூரு அணி விராட் கோலியின் அசத்தல் சதம் மற்றும் டு பிளெஸ்சிஸ்-யின் அதிரடி ஆட்டத்தால் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தில் மணிக்கு 150 கி.மீ வேகத்தில் பந்துவீசும் உம்ரான் மாலிக்குக்கு இடம் அளிக்கவில்லை. உம்ரான் கடந்த சில ஆட்டங்களாகவே அணியில் இடம் கிடைக்காமல் வெளியே உட்கார வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் உம்ரான் மாலிக் விஷயத்தில் திரைமறைவில் என்ன நடக்கிறது என தனக்கே தெரியவில்லை என ஐதராபாத் அணியின் கேப்டன் எய்டன் மார்க்ரம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது, "உண்மையை சொல்ல வேண்டுமென்றால் என்ன நடக்கிறது என்பதை உறுதியாக சொல்ல முடியவில்லை. மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசும் தனித்திறன் கொண்ட வீரர் உம்ரான். இருந்தும் அவரது விஷயத்தில் திரைமறைவில் என்ன நடக்கிறது என்றே எனக்கு தெரியவில்லை" என மார்க்ரம் தெரிவித்தார். அவரது இந்த பதில் சர்ச்சையை எழுப்பி உள்ளது.
கடந்த ஐபிஎல் சீசனில் ஐதராபாத் அணிக்காக 22 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தி இருந்தார் உம்ரான். அதிவேக பந்து வீச்சுக்காக பரவலாக அறியப்படுபவர். நடப்பு ஐபிஎல் சீசனில் அவர் 7 இன்னிங்ஸ் மட்டுமே விளையாடி உள்ளார். அதன் மூலம் 5 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றி உள்ளார். இந்திய அணியிலும் விளையாடி வருகிறார்.
இதற்கு முன்னர் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக செயல்பட்ட வார்னர், 2021 சீசனின் போதே கேப்டன் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார். அவருக்கு அந்த சீசனில் ஆடும் லெவனிலும் வாய்ப்பு மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்