search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகளுக்கு சிகிச்சை"

    • மனவளர்ச்சி குன்றி உடல் ரீதியாக மகள் கஷ்டப்பட்டு வருவதை கண்டு மனம் கலங்கிய சுலோச்சனா மகளை தீவைத்து எரித்து கொன்று விட்டு தானும் தற்கொலை செய்ய முடிவு செய்தார்.
    • மாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பூந்தமல்லி:

    மாங்காடு அடுத்த கொளப்பாக்கத்தை சேர்ந்தவர் நடராஜன். கார்பெண்டர். இவரது மனைவி சுலோச்சனா (வயது48). இவரது மகள் மீனாட்சி(18). இவர் பிறந்தது முதல் மனவளர்ச்சி, உடல் வளர்ச்சி குன்றி இருந்தார். மகன் தினேஷ்.

    மனவளர்ச்சி குன்றிய மீனாட்சியை சுலோச்சனா மற்றும் அவரது கணவர் கவனித்து வந்தனர். மகள் மனவளர்ச்சி குன்றி கஷ்டப்பட்டு வந்ததால் பெற்றோர் மிகவும் மனவேதனை அடைந்தனர். இதுபற்றி அவர்கள் அடிக்கடி பேசி வருத்தப்பட்டனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு வீட்டில் இருந்த சுலோச்சனாவின் கணவர் நடராஜன், மகன் தினேஷ் ஆகியோர் வெளியேசென்று இருந்தனர். வீட்டில் சுலோச்சனா, அவரது மகள் மீனாட்சி மட்டும் இருந்தனர்.

    ஏற்கனவே மனவளர்ச்சி குன்றி உடல் ரீதியாக மகள் கஷ்டப்பட்டு வருவதை கண்டு மனம் கலங்கிய சுலோச்சனா மகளை தீவைத்து எரித்து கொன்று விட்டு தானும் தற்கொலை செய்ய முடிவு செய்தார்.

    இதையடுத்து வீட்டில் இருந்த மண்எண்ணையை நடக்கப்போகும் விபரீதத்தை அறியாமல் இருந்த மகள் மீனாட்சி மீது ஊற்றி சுலோச்சனா தீவைத்தார். மேலும் அவர் தனது உடல் மீதும் மண்எண்ணையை ஊற்றி தீக்குளித்தார்.

    இதில் அவர்கள் 2 பேரும் தீயில் கருகி அலறி துடித்தனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்த போது சுலோச்சனாவும் அவரது மகள் மீனாட்சியும் தீயில் கருகுவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக தீயை அணைத்து அவர்கள் 2 பேரையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி சுலோச்சனா பரிதாபமாக இறந்தார். அவரது மகள் மீனாட்சிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது நிலைமையும் மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

    மகளை சரிவர பராமரிக்க முடியாததால் சுலோச்சனா இந்த விபரீத முடிவை எடுத்து இருப்பது தெரியவந்து உள்ளது.

    மனவளர்ச்சி குன்றிய மகளை பராமரித்து வந்த தாயே மன உளைச்சலில் மகளை தீவைத்து எரித்து விட்டு தானும் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மாங்காடு பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து மாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×