search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேலூர் அரசு மருத்துவமனை"

    • கார்த்திகேயனுக்கு தலை மற்றும் தாடையில் பலத்த காயம் ஏற்பட்டது.
    • விபத்தின் போது சிக்கிக்கொண்ட நட்டை அகற்றாமலே டாக்டர்கள் தையல் போட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    வேலூர்:

    திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த மின்னூர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 45), லாரி டிரைவர். இவருக்கு திருமணம் ஆகி மனைவி, 1 மகள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.

    நேற்று காலை 6 மணி அளவில் கார்த்திகேயன் லாரியில் பாரம் ஏற்றிக்கொண்டு, ஆம்பூரில் இருந்து வேலூர் நோக்கி வந்தார். அகரம்சேரி அருகே வந்தபோது, பின்னால் வந்த தனியார் பஸ் லாரி மீது மோதியது.

    இந்த விபத்தில் லாரி சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்ததது. இதில், கார்த்திகேயனுக்கு தலை மற்றும் தாடையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    அவரை வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மருத்துவமனையில் உள்ள விபத்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட கார்த்திகேயனுக்கு எக்ஸ்ரே, ஸ்கேன் உள்ளிட்டவைகள் எடுக்கப்பட்ட பின்பு சாதாரண பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

    அங்கு அவருக்கு தலை மற்றும் தாடையில் நர்சுகள் தையல் போட்டுள்ளனர். மாலை 4 மணி ஆகியும் டாக்டர் வராததால் கார்த்திகேயன் வலியால் துடித்துள்ளார். முறையான சிகிச்சை இல்லாத காரணத்தால் உறவினர்கள் கார்த்திகேயனை, நேற்று மாலை அரியூர் நாராயணி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

    அங்கு கார்த்திகேயனுக்கு மீண்டும் எக்ஸ்ரே மற்றும் ஸ்கேன் எடுக்கப்பட்டது. அப்போது அதிர்ச்சியான திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தது. அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது, விபத்தின் போது சிக்கிக்கொண்ட நட்டை அகற்றாமலே டாக்டர்கள் தையல் போட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து கார்த்திகேயன் தலையில் சிக்கிக்கொண்ட நட்டு அகற்றப்பட்டது.

    இதனை அறிந்த கார்த்திகேயனின் உறவினர்கள், அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்த டாக்டரிடம் சென்று கேட்டுள்ளனர். அதற்கு டாக்டர்கள் முறையான பதில் அளிக்கவில்லை என அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் பாப்பாத்தி கூறியதாவது:-

    இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்படும். இதற்காக சிறப்பு விசாரணை குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. விசாரணை முடிந்த பிறகு அனைத்திற்கும் விளக்கம் தெரியும். குற்றம் நிரூபனமாகும் பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    ஏழை எளிய மக்கள் சிகிச்சைக்காக வரும் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் அலட்சியமாக செயல்படுவது மிகவும் கண்டிக்கத்தக்கது என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். 

    ×