search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சகன் புஜ்பால்"

    • தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது.
    • கட்சியின் அரசியலமைப்பு மற்றும் தேர்தல் விதிகள் முறையாக பின்பற்றப்பட்டு உள்ளன.

    மும்பை :

    தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவாரின் விருப்பம் இன்றி, அக்கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்கள் அஜித்பவார் உள்ளிட்ட 9 பேர் ஆளும் பா.ஜனதா தலைமையிலான கூட்டணியில் இணைந்துள்ளனர். அஜித்பவார் துணை முதல்-மந்திரியாகவும் மற்ற 8 பேர் மந்திரிகளாகவும் பதவியேற்றனர். இதனால் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கட்சி வரம்பை மீறி செயல்பட்டதாக கூறி அஜித்பவார் உள்ளிட்ட 9 பேரையும் கட்சிதாவல் சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்ய சரத்பவார் தரப்பு நடவடிக்கை எடுத்து வருகிறது.

    அதேசமயம் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தங்களுக்கு தான் அதிகமாக இருப்பதால் கட்சியும், சின்னமும் தங்களுக்கு தான் சொந்தம் என அஜித்பவார் தரப்பு கூறி வருகிறது.

    இந்த நிலையில் தகுதி நீக்க நடவடிக்கை குறித்து ஷிண்டே அணியை சேர்ந்த மந்திரி சகன் புஜ்பால் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    அஜித்பவார் தலைமையிலான அரசில் இணைவது குறித்து சட்ட வல்லுனர்களிடம் கலந்தாலோசித்து அதன்பிறகு தான் முடிவு எடுக்கப்பட்டது. 2 முதல் 4 வல்லுனர்களுடன் பேசி தகுதி நீக்கத்தில் இருந்து தப்பிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளது.

    ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசுடன் இணைவற்கு முன்பு கட்சியின் அரசியலமைப்பு மற்றும் தேர்தல் விதிகள் முறையாக பின்பற்றப்பட்டு உள்ளன.

    அஜித்பவாருக்கு ஆதரவாக 42 முதல் 43 தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பிரமாண பத்திரங்களில் கையெழுத்திட்டு உள்ளனர்.

    கட்சி தலைவர் சரத்பவாரின் படங்களை போஸ்டர்களில் பயன்படுத்தலாமா என்பது குறித்து அஜித்பவாரும் மற்ற தலைவர்களும் பேசி முடிவெடுப்பார்கள்.

    சரத்பவாரின் மகளை தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக நியமிக்க வேண்டும் என்றும், அஜித்பவாரை மகாராஷ்டிராவை கையாள அனுமதிக்க வேண்டும் என்றும் நாங்கள் முன்பே பரிந்துரைத்தோம். ஆனால் அப்படி நடக்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தனது புகைப்படத்தை அனுமதி இன்றி யாரும் பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். அதையும் மீறி அஜித்பவார் தலைமையில் நடந்த எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் அவரது புகைப்படம் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • கட்சியின் நிறுவன அமைப்புக்கான தேர்தல் நடைமுறைகள் தொடங்கி உள்ளது.
    • மாநில தலைவர் பதவிக்கான விருப்பத்தை அனைவரும் தெரிவிக்கலாம்.

    மும்பை :

    தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவன நாள் கூட்டம் நேற்று முன்தினம் மும்பையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் பதவியில் விருப்பம் இல்லை, கட்சி பணியாற்ற விரும்புவதாக கட்சியின் மூத்த தலைவர் அஜித்பவார் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.

    தேசியவாத காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் பதவிக்கு அவர் அடிபோடுவதாக பேசப்பட்டு வந்தது. இந்த நிலையில் சகன் புஜ்பாலும் தனது பங்கிற்கு களத்தில் குதித்துள்ளார்.

    தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவரான சகன் புஜ்பால் இதுகுறித்து நேற்று கூறியதாவது:-

    இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த ஒருவரை தேசியவாத காங்கிரஸ் கட்சி மாநில பிரிவு தலைவர் பதவிக்கு நியமிக்க வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன். நானும் மாநில பிரிவு தலைவராக பணியாற்ற விரும்புகிறேன். கட்சியில் சுனில் தத்காரே, ஜிதேந்திர அவாத், தனஞ்செய் முண்டே உள்ளிட்ட பல இதர பிற்படுத்தப்பட்ட பிரிவை சேர்ந்த தலைவர்கள் உள்ளனர்.

    கட்சியின் நிறுவன அமைப்புக்கான தேர்தல் நடைமுறைகள் தொடங்கி உள்ளது. எனவே மாநில தலைவர் பதவிக்கான விருப்பத்தை அனைவரும் தெரிவிக்கலாம். இதில் தவறு எதுவும் இல்லை.

    மராட்டிய மக்கள் தொகையில் 54 சதவீதம் இதர பிற்படுத்தப்பட்ட மக்கள் உள்ளனர். எனவே கட்சியின் மாநில தலைவர் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவராக இருந்தால் அவர்களை சென்றடைவது எளிதாக இருக்கும்.

    தற்போது கட்சியின் மாநில தலைவர் ஜெயந்த் பாட்டீல் 5 ஆண்டுகளாக பதவியில் இருக்கிறார். பா.ஜனதாவின் மாநில தலைவர்கள் சந்திரசேகர் பவன்குலே மற்றும் காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் நானா படோலே ஆகியோர் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள்.

    கட்சி விதிகளின் படி கட்சியின் மாநில பிரிவு தலைவர் ஒரு ஆதிக்க சமூகத்தை சேர்ந்தவராக இருக்கும் பட்சத்தில், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் பதவி சிறிய சமூகத்தை சேர்ந்தவருக்கு வழங்கப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தேசியவாத காங்கிரஸ் கட்சி 1999-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட போது கட்சியின் முதல் மாநில பிரிவு தலைவராக இருந்தவர் சகன் புஜ்பால் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×