என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மகளிர் இட ஒதுக்கீடு மசோதா"
- பெண்கள் பங்கேற்கும் பிரமாண்ட கூட்டம் நாளை நடத்தப்படுகிறது.
- இது மாநில அளவில் மட்டுமின்றி, தேசிய அளவிலும் முதல் நிகழ்வாக இருக்கும்.
திருவனந்தபுரம்:
பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் மகளிர் இடஒதுக்கீடு மசோதா கடந்த செப்டம்பர் மாதம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து பா.ஜ.க. சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கேரளாவில் அம்மாநில பா.ஜ.க. சார்பில் 2 லட்சம் பெண்கள் பங்கேற்கும் பிரமாண்ட கூட்டம் நாளை நடத்தப்படுகிறது. திருச்சூர் தேக்கிங்காடு மைதானத்தில் இந்த கூட்டம் நடத்தப்படுகிறது.
'ஸ்ரீ சக்தி சங்கமம்' என்ற தலைப்பில் நடத்தப்படும் இந்தக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசுகிறார்.
இதுதொடர்பாக கேரள மாநில பா.ஜ.க. தலைவர் சுரேந்திரன் கூறுகையில், பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை வெற்றிகரமாக நிறைவேற்றியதற்காக பிரதமர் மோடியை வாழ்த்துவதற்காக ஸ்ரீ சக்தி சங்கமம் என்ற கூட்டம் திருச்சூரில் ஜனவரி 3-ம் தேதி நடத்தப்படுகிறது. இதில் 2 லட்சம் பெண்கள் பங்கேற்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசுகிறார். தென்மாநிலத்தில் எந்த ஒரு அரசியல் கட்சியும் இவ்வளவு பெரிய பெண்கள் கூட்டத்தை ஏற்பாடு செய்ததில்லை. இந்த நிகழ்ச்சி தேசிய அளவில் முதல் நிகழ்வாக இருக்கும் என தெரிவித்தார்.
- பெண்கள் பங்கேற்கும் பிரமாண்ட கூட்டம் நடத்தப்படுகிறது.
- நிகழ்ச்சி மாநில அளவில் மட்டுமின்றி தேசிய அளவிலும் முதல் நிகழ்வாக இருக்கும்.
திருவனந்தபுரம்:
பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் மகளிர் இடஒதுக்கீடு மசோதா கடந்த செப்டம்பர் மாதம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
கேரளாவில் அம்மாநில பாரதிய ஜனதா கட்சி சார்பில் 2 லட்சம் பெண்கள் பங்கேற்கும் பிரமாண்ட கூட்டம் நடத்தப்படுகிறது. திருச்சூர் தேக்கிங்காடு மைதானத்தில் அடுத்த மாதம் (ஜனவரி) 2-ந்தேதி இந்த கூட்டம் நடத்தப்படுகிறது.
ஸ்ரீ சக்தி சங்கமம் என்ற தலைப்பில் நடத்தப்படும் இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசுகிறார். இது தொடர்பாக கேரள மாநில பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் சுரேந்திரன் கூறியிருப்பதாவது:-
பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை வெற்றிகரமாக நிறைவேற்றியதற்காக பிரதமர் மோடியை வாழ்த்துவதற்காக ஸ்ரீ சக்தி சங்கமம் என்ற கூட்டம் திருச்சூரில் ஜனவரி 2-ந்தேதி நடத்தப்படுகிறது. இதில் 2 லட்சம் பெண்கள் பங்கேற்கிறார்கள்.
அங்கன்வாடி பணியாளர்கள் தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்கள் தொழில் முனைவோர் சமூக மற்றும் கலாச்சார ஆர்வலர்கள் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசுகிறார்.
தென்மாநிலத்தில் எந்த ஒரு அரசியல் கட்சியும் இவ்வளவு பெரிய பெண்கள் கூட்டத்தை ஏற்பாடு செய்ததில்லை. இந்த நிகழ்ச்சி மாநில அளவில் மட்டுமின்றி தேசிய அளவிலும் முதல் நிகழ்வாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடி கேரளா வருவதை முன்னிட்டு அம்மாநில பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். மேலும் பிரதமரை வரவேற்க தயாராகி வருகின்றனர்.
- நாடு முழுவதும் உள்ளாட்சி தேர்தல்களில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
- 2016-ம் ஆண்டுதான் புதுவை சட்டசபையில் அதிக பெண் எம்.எல்.ஏ.க்கள் இடம் பெற்றனர்.
நாடு முழுவதும் உள்ளாட்சி தேர்தல்களில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் நீண்டகால கோரிக்கையான சட்டமன்றம், பாராளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு நிறைவேற்றப்படவில்லை. புதிய பாராளுமன்ற கட்டடத்தை திறந்து நடந்த சிறப்பு கூட்டத்தில் சட்டமன்றம், பாராளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை நிறைவேற்றியுள்ளனர்.
இந்த மசோதா புதிய மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு பிறகு நடைமுறைப்படுத்தப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதனிடையே பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மசோதா சட்டமன்றம் உள்ள யூனியன் பிரதேசங்களுக்கு பொருந்தாது என்பதால் சட்ட திருத்தம் செய்ய மத்திய அரசு முடிவு செய்தது.
இதன்படி பாராளுமன்றத்தில் நேற்று புதுவை உள்ளிட்ட சட்டமன்றம் உள்ள யூனியன் பிரதேசங்களுக்கு சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்ட திருத்தம் மூலம் புதுவை சட்டமன்றத்தில் 30 எம்.எல்.ஏ.க்களில் 10 எம்.எல்.ஏ.க்கள் பெண்களுக்கு ஒதுக்கீடாக கிடைக்கும்.
இதுதவிர 3 நியமன எம்.எல்.ஏ.க்களில் ஒரு பெண் எம்.எல்.ஏ. இடம் பெறுவார்.
இதன் மூலம் புதுவை சட்டமன்றத்தில் வரும் காலத்தில் 11 பெண் எம்.எல்.ஏ.க்கள் இடம்பெறும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
பிரெஞ்சு ஆட்சியிலிருந்து விடுதலை பெற்ற புதுவையில் முதல்முறையாக 1963-ம் ஆண்டு முதல் சட்டமன்ற தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் நடத்தியது. அன்று முதல் 2021-ம் ஆண்டு வரை மொத்தம் 15 சட்டமன்ற தேர்தல்கள் நடைபெற்றுள்ளது.
புதுவை சட்டப்பேரவை தேர்தலில் பெண் உறுப்பினர்களை குறைந்த அளவே கட்சிகள் வாய்ப்பு தந்தன. முதல் சட்டப் பேரவையில் (1963 முதல் 1964) சரஸ்வதி சுப்பையா, சாவித்திரி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 2-வது சட்டப்பேரவையில் (1964-68) பத்மினி சந்திரசேகரன், அங்கம்மாள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
3-வது சட்டப் பேரவையில் (1969-74) வீரம்மாள் தேர்வு செய்யப்பட்டார். 4-வது, 5-வது சட்டப் பேரவைக்கு பெண்கள் யாரும் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்படவில்லை. 6-வது சட்டப்பேரவையில் (1980-83) ரேணுகா அப்பாதுரை தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் அமைச்சராகவும் இருந்தார்.
7-வது சட்டப்பேரவையில் (1985-90) கோமளா தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே சட்டப்பேரவைக்கு செல்வி சுந்தரம் நியமன எம்.எல்.ஏ.வாக நியமிக்கப்பட்டார். 8-வது சட்டப்பேரவைக்கு பெண்கள் யாரும் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்படவில்லை. 9-வது சட்டப் பேரவைக்கு 1991-ல் கேபக்கிரி அம்மாளும், 10-வது சட்டப்பேரவைக்கு 1996-ல் அரசியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
11-வது சட்டப் பேரவைக்கு 2001-ல் மேரிதெரசா நியமன எம்.எல்.ஏ.வாக இருந்தார். அதன்பிறகு பெண் எம்.எல்.ஏ.க்கள் யாரும் இல்லை.
இந்த நிலையில் 15 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2016 சட்டப்பேரவை தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் 1, காங்கிரஸ் சார்பில் 1, என்.ஆர். காங்கிரஸ் சார்பில் 2, தி.மு.க. சார்பில் 1, பா.ஜ.க., பா.ம.க., ஐ.ஜே.க. என பல்வேறு கட்சிகள் சார்பில் மொத்தம் 12-க்கு மேற்பட்ட பெண்கள் தேர்தலில் போட்டியிட்டனர்.
காங்கிரஸ் சார்பில் நெட்டப்பாக்கம் (தனி) தொகுதியில் போட்டியிட்ட வி.விஜயவேணி, என்.ஆர். காங்கிரஸ் சார்பில் திருபுவனை (தனி) தொகுதியில் போட்டியிட்ட கோபிகா, நெடுங்காடு (தனி) தொகுதியில் போட்டியிட்ட சந்திர பிரியங்கா, தி.மு.க. சார்பில் காரைக்கால் நிரவி தொகுதியில் போட்டியிட்ட கீதா ஆனந்தன், உள்ளிட்ட 4 பெண் வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.
2016-ம் ஆண்டுதான் புதுவை சட்டசபையில் அதிக பெண் எம்.எல்.ஏ.க்கள் இடம் பெற்றனர். 2021-ம் ஆண்டு நடந்த தேர்தலில் காரைக்கால் நெடுங்காடு தொகுதியில் 2-வது முறையாக வெற்றி பெற்ற சந்திரபிரியங்கா அமைச்சராக பதவியேற்றார். இவரும் கடந்த அக்டோபர் மாதம் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். ஒட்டுமொத்தமாக தற்போதுள்ள சட்டசபை யில் ஒரே ஒரு பெண் எம்.எல்.ஏ. மட்டும்தான் உள்ளார். இதற்கு அரசியல் கட்சிகள் பெண்களை சட்டசபை தேர்தலில் நிறுத்த முன்வராததுதான் காரணம்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் பிரதான கட்சிகளான தி.மு.க., பா.ஜ.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகள் பெண் வேட்பாளர்களை நிறுத்தவில்லை. காங்கிரசில் ஒரே ஒரு பெண் வேட்பாளருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. அவரும் நெட்டப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார்.
என்.ஆர். காங்கிரசில் 2 பெண்களுக்கு போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டது. இதில் ஒருவர் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக உள்ளார். ஆனால் வருங்காலத்தில் இந்த நிலை முற்றிலும் மாறும். சட்டசபையில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு சட்ட மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேறி உள்ளதால் அனைத்து அரசியல் கட்சிகளும் பெண்களுக்கு வாய்ப்பளித்தே தீர வேண்டும் என்ற நிலை உருவாகும்.
- கடந்த 9 ஆண்டுகளில் இந்தியாவின் கல்வி கட்டமைப்பு மாபெரும் வளர்ச்சி கண்டுள்ளது.
- வள்ளலாரின் வார்த்தைகள் வாசிக்கவும், புரிந்து கொள்ளவும் எளிமையானவை.
சென்னை:
வள்ளலாரின் 200-வது பிறந்தநாளையொட்டி சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் அவரது சிலை அமைக்கப்பட்டு உள்ளது. அவரது பிறந்தநாள் விழா இன்று கவர்னர் மாளிகையில் நடந்தது.
இதில் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டு வள்ளலார் சிலையை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மத்திய மந்திரி எல்.முருகன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
இவ்விழாவில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
வள்ளலார் எடுத்த முயற்சிகள் புகழ்மிக்கவை. அதற்கு இணையாக நவீன கல்வி திட்டத்துக்கு அவர் அளித்த முக்கியத்துவமும் விளங்குகிறது. இளைஞர்கள் தமிழிலும், சமஸ்கிருதத்திலும், ஆங்கிலத்திலும் புலமை பெற வேண்டும் என்று அவர் விரும்பினார்.
கடந்த 9 ஆண்டுகளில் இந்தியாவின் கல்வி கட்டமைப்பு மாபெரும் வளர்ச்சி கண்டுள்ளது. மூன்று தசாப்தங்களுக்கு பிறகு இந்தியா தேசிய கல்வி கொள்கை பெற்று இருக்கிறது. இக்கொள்கை முழு கல்வித்துறையில் சிறந்த மாற்றம் அடைய வைக்கும்.
இதில் புதுமை சிந்தனை, ஆராய்ச்சி, வளர்ச்சி ஆகிய வற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. பல்கலைக்கழகங்கள், மொழியியல் மற்றும் மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கை கடந்த 9 ஆண்டுகளில் சாதனை அளவாக அதிகரித்துள்ளது.
இப்போது இளைஞர்கள் தங்களது வட்டார மொழிகளிலேயே மருத்துவம், பொறியியல் படிக்க இயலும். இதன் மூலம் இளைஞர்களுக்கு பல வாய்ப்புகள் உருவாகி உள்ளன. வள்ளலார், காலத்திற்கும் முன்னதாகவே சிந்தித்தவர். சமூக சீர்த்திருத்தத்தை எடுத்துக் கொண்டால் கடவுளை பற்றிய வள்ளலாரின் பார்வை பல்வேறு மதங்கள், வகுப்புகள், நம்பிக்கைகள் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டவை.
இவ்வுலகின் ஒவ்வொரு அணுவிலும் அவர் கடவுளின் அம்சத்தை கண்டார். தெய்வீக பிணைப்பை மனிதர்களை அங்கீகரிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
அவரது போதனைகள் அனைவருடனும், அனைவரின் வளர்ச்சிக்காகவும், அனைவரின் நம்பிக்கையுடனும், அனைவரின் முயற்சியுடன் கூடிய சமத்துவ சமுதாயத்தை வலியுறுத்துவதாகும். வள்ளலாருக்கு நான் மரியாதை செலுத்தும்போது இதற்கான எனது உறுதிப்பாடு மேலும் வலுவடைகிறது.
அனைத்து பாராளுமன்ற, சட்டமன்ற அவைகளிலேயே மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கான மகளிர் இட ஒதுக்கீட்டு சட்டத்தை இன்று வள்ளலார் உயிரோடு இருந்திருந்தால் பாராட்டி இருப்பார் என நான் நம்புகிறேன்.
வள்ளலாரின் வார்த்தைகள் வாசிக்கவும், புரிந்து கொள்ளவும் எளிமையானவை. இதனால் சிக்கலான ஆன்மீக ஞான கருத்துக்களை எளிய வார்த்தைகளில் வெளிப்படுத்த முடிகிறது. ஒரு பாரதம், உன்னத பாரதம் என்ற நமது ஒட்டுமொத்த சிந்தனைக்கு வலுசேர்க்க காலமும், இடமும் கடந்த நமது கலாசார பன்முகத்தன்மைக்கு பெரும் ஞானிகளின் போதனைகள் பெரிதும் உதவுகின்றன.
அன்பு, இரக்கம், நீதி ஆகியவற்றை வலியுறுத்தும் வள்ளலாரின் போதனைகளை நாம் பரப்புவோம். அவரது இதயபூர்வமான சிந்தனைகள் தொடர்பாக நாம் கடினமாக உழைப்போம்.
ஒருவரும் பட்டினியுடன் இல்லாதிருக்க வேண்டும் என்பதை உறுதி செய்வோம். ஒவ்வொரு குழந்தைக்கும் தரமான கல்வி வழங்குவோம். இந்த மாமனிதரின் 200-வது பிறந்த தின ஆண்டு விழா கொண்டாட்டத்தின்போது அவருக்கு நான் எனது மரியாதையை மீண்டும் செலுத்துகிறேன்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
பிரதமர் மோடியின் உரை தமிழில் ஒளிப்பரப்பப்பட்டது.
வள்ளலாரின் பிறந்தநாளையொட்டி கவர்னர் ஆர்.என்.ரவி எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:-
திருவருட்பிரகாச வள்ளலாரின் 200-வது பிறந்த நாளை முன்னிட்டு அனைவருக்கும் அன்பான நல்வாழ்த்துக்கள். அனைத்து உயிரினங்களுக்கும் இரக்கம் காட்டும் அவரது செய்தி ஒரு நிலையான உலகத்திற்கு முக்கியமானது. அவரது ஒளி நம் தேசம் பெருமை அடைய வழிகாட்டட்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- 2026-ல் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தினாலும், இந்த பணி முடிய 2028-ம் ஆண்டு வரை ஆகும்.
- மகளிருக்கான இட ஒதுக்கீட்டில் பா.ஜனதா அரசுக்கு உண்மையான அக்கறை இல்லை, விருப்பமும் இல்லை.
காரைக்குடி:
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள தனது அலுவலகத்தில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் நிருபர்களிடம் கூறியதாவது:-
மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டுக்கான அரசியல் சாசன திருத்த மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் வழங்கி உள்ளார்.
மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது மாநிலங்கள் அவையில் இந்த மசோதா நிறைவேறியது. அதே வரைவு மசோதாவை நிறைவேற்றி ஒப்புதல் வாங்கி இருந்தால் 2024 தேர்தலுக்கே இச்சட்டம் அமலுக்கு வந்திருக்கும். ஆனால் பா.ஜனதா அரசு வேண்டுமென்றே 2 தடைகளை வைத்துள்ளது.
ஒன்று மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும். மற்றொன்று தொகுதிகளை மறுவரையறை செய்வது.
எனவே இச்சட்டம் 2024 தேர்தலில் மட்டுமல்ல, 2029 தேர்தலிலும் கூட அமலுக்கு வராது. காரணம் அரசியல் சாசனத்தில் 88-வது பிரிவில் 3-வது உட்பிரிவில் 2026-ம் ஆண்டிற்கு பிறகே மக்கள்தொகை கணக்கெடுப்பு என கூறப்பட்டுள்ளது.
2026-ல் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தினாலும், இந்த பணி முடிய 2028-ம் ஆண்டு வரை ஆகும். அதன்பிறகு அடுத்த தடையாக தொகுதியை மறுவரையறை செய்ய வேண்டும். இதற்கு பாராளுமன்றத்தில் புதிய சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும். இந்தியாவில் உள்ள 543 தொகுதிகளையும் மறுவரை செய்ய வேண்டும் என்பது கடினமான பணியாகும். எனவே இச்சட்டம் நிச்சயம் அமலுக்கு வராது.
மகளிருக்கான இட ஒதுக்கீட்டில் பா.ஜனதா அரசுக்கு உண்மையான அக்கறை இல்லை, விருப்பமும் இல்லை.
543 தொகுதிகளிலும் மக்கள்தொகை அடிப்படையிலான மறு வரையறை செய்யப்பட்டால் தென் மாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கை குறையவும், வடமாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.
2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை அச்சடித்ததும் தவறு. அதனை செல்லாது என்று அறிவித்ததும் தவறு.
இந்தியா கூட்டணியில் பிளவு என்பதே கிடையாது. நாளுக்கு நாள் வலுவடைந்து வருகிறது.
அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி முறிவு ஒரு பக்கம் மகிழ்ச்சியும், மறுபக்கம் வருத்தத்தையும் ஏற்படுத்துகிறது. காவிரி பிரச்சினையில் இரு மாநிலத்தவரும் அவரவர் கோரிக்கையை வலியுறுத்துவர்.
தேசிய மருத்துவ ஆணையம் தமிழ்நாட்டில் புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க அனுமதி இல்லை என்றும், ஏற்கனவே செயல்பட்டு வரும் மருத்துவ கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான இடங்களை அதிகரிக்க இயலாது என உத்தரவிட்டிருப்பது கண்டிக்கத்தக்கது
இவ்வாறு அவர் கூறினார்.
- மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையறைக்குப்பின் இந்த இடஒதுக்கீடு வழங்கப்படும் என மசோதாவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
- பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மகளிர் இடஒதுக்கீடு மசோதா ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது.
புதுடெல்லி:
பாராளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க முந்தைய மத்திய அரசுகள் பலமுறை முயன்றன. இது தொடர்பாக கொண்டு வரப்பட்ட மசோதாக்களை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற முடியவில்லை.
ஆனால் தற்போதைய மத்திய அரசு இந்த மசோதா நிறைவேற்றுவதில் தீவிரம் காட்டியது. இதற்காக சமீபத்தில் நடந்த பாராளுமன்ற சிறப்புக்கூட்டத்தொடரில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
அரசியல் சாசன திருத்த மசோதாவாக கொண்டு வரப்பட்ட இந்த மசோதாவுக்கு தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் மட்டுமின்றி, காங்கிரஸ் உள்ளிட்ட பிரதான எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன.
இதைத்தொடர்ந்து பாராளுமன்ற இரு அவைகளிலும் இந்த மசோதா நிறைவேறியது. மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையறைக்குப்பின் இந்த இடஒதுக்கீடு வழங்கப்படும் என மசோதாவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
அதேநேரம் இந்த மசோதாவில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு ஒதுக்கீடு வழங்க வகை செய்ய வேண்டும் என பல்வேறு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.
இதைப்போல மகளிர் இடஒதுக்கீட்டை தற்போதே அமல்படுத்தவும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கேட்டுக்கொண்டு உள்ளன.
இந்த நிலையில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மகளிர் இடஒதுக்கீடு மசோதா ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது.
அதன்படி இந்த மசோதாவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்து உள்ளார். இதை மத்திய சட்ட அமைச்சகம் அறிவிப்பு ஒன்றில் வெளியிட்டு இருக்கிறது.
இதன் மூலம் இந்த மசோதா தற்போது சட்டமாகி இருக்கிறது.
அதன் விதியின்படி, அதிகாரபூர்வ அரசிதழில் மத்திய அரசு வெளியிடும் தேதியில் இருந்து இது நடைமுறைக்கு வரும் என சட்ட அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
- வருகிற 2027-ம் ஆண்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- மசோதா சட்டம் ஆனதும் பாராளுமன்றம் மற்றும் நாட்டில் உள்ள அனைத்து சட்டப்பேரவைகளில் 3ல் 1 பங்கு இடம் பெண்களுக்கு ஒதுக்கப்படும்.
புதுடெல்லி:
புதிய பாராளுமன்றத்தின் மக்களவையில் முதல் மசோதாவாக தாக்கல் செய்யப்பட்ட மகளிர் இடஒதுக்கீடு மசோதா நேற்று முன்தினம் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் நிறைவேறியது. இதை தொடர்ந்து மாநிலங்களவையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
மாநிலங்களவையிலும் மகளிர் இடஒதுக்கீடு மசோதா எதிர்ப்பு இன்றி நிறைவேறியது. இந்நிலையில், கூட்டத் தொடர் முடிந்து வெளியே வந்த பிரதமர் மோடிக்கு அனைத்து எம்.பி.க்களும் வாழ்த்து தெரிவித்தனர்.
அதன்பின், பாராளுமன்ற வளாகத்தில் ஒன்று கூடிய மாநிலங்களவை பெண் எம்.பி.க்கள் பிரதமர் மோடிக்கு பூங்கொத்து கொடுத்தும், இனிப்பு வழங்கியும் வாழ்த்துகள் தெரிவித்தனர். மேலும், அவர்கள் அனைவரும் பிரதமர் மோடியுடன் சேர்ந்து நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
இந்த மசோதா சட்டப்பேரவைகளிலும், பாராளுமன்றத்திலும் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வழி வகுக்கும். இந்த மசோதா 2 அவைகளிலும் நிறைவேறிய நிலையில் அடுத்த கட்டமாக ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. ஜனாதிபதி ஒப்புதல் அளித்ததும் இந்த மசோதா சட்டமாக மாறும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன்பிறகு நாட்டில் உள்ள மொத்த மாநிலங்களில் சுமார் 50 சதவீத மாநிலங்களின் சட்டப்பேரவைகளில் இந்த மசோதாவை நிறைவேற்ற வேண்டும். இதனிடையே கடந்த 2021-ம் ஆண்டிலேயே மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இந்த கணக்கெடுப்பு காலதாமதமாகி வருகிறது.
வருகிற 2027-ம் ஆண்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பிறகு மக்கள் தொகையின் அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட உள்ளன. புதிய தொகுதிகளின் அடிப்படையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா அமல் செய்யப்படும்.
இதன்படி வரும் 2029-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போதுதான் மசோதா அமலுக்கு வரும். சட்ட மசோதா அமலுக்கு வந்த பிறகு 15 ஆண்டுகள் செல்லுபடியாகும். அதன்பிறகு காலத்தை நீட்டித்துக் கொள்ளலாம் என்று சட்ட நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.
மசோதா சட்டம் ஆனதும் பாராளுமன்றம் மற்றும் நாட்டில் உள்ள அனைத்து சட்டப்பேரவைகளில் 3ல் 1 பங்கு இடம் பெண்களுக்கு ஒதுக்கப்படும்.
- மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்கும் முன்பு மக்கள் தொகை கணக்கெடுப்பு, தொகுதி மறுவரையறை செய்ய வேண்டும்.
- இப்போதைய நிலையில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா அரசியலை திசை திருப்பும் செயலாகவே தெரிகிறது.
புதுடெல்லி:
டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் ராகுல் காந்தி எம்.பி. இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நாங்கள் வரவேற்கிறோம். மகளிர் மசோதாவில் ஓ.பி.சி. இட ஒதுக்கீடு கட்டாயம் வழங்க வேண்டும்.
நாடு தழுவிய அளவில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். அப்போதுதான் இந்தியாவில் இதர பிற்படுத்தப்பட்ட மக்கள் (ஓ.பி.சி.)எவ்வளவுபேர் இருக்கிறார்கள் என்பது தெரியவரும்.
அமைச்சரவை செயலாளர்கள் மற்றும் பாராளுமன்ற செயலாளர்கள் 90 பேரில் 3 அதிகாரிகள் மட்டுமே ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர்கள். பிரதமர் மோடி ஒவ்வொரு நாளும் ஓ.பி.சி. பற்றி பேசுகிறார், ஆனால் அவர் ஓ.பி.சி. பிரிவினருக்கு என்ன செய்தார்?
நாட்டில் 5 சதவீத மக்களே எஞ்சிய 95 சதவீத மக்களுக்கு சட்டத்தை உருவாக்குகிறார்கள். மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்கும் முன்பு மக்கள் தொகை கணக்கெடுப்பு, தொகுதி மறுவரையறை செய்ய வேண்டும்.
இதற்கு 10 ஆண்டுகளாவது ஆகும். சிறப்பு கூட்ட தொடரின் நோக்கமே மகளிர் இட ஒதுக்கீடு மசோதாதான். எனவே இந்த மசோதாவை உடனே செயல்படுத்துவதில் எந்த சிக்கலும் இல்லை.
இப்போதைய நிலையில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா அரசியலை திசை திருப்பும் செயலாகவே தெரிகிறது. எனவே காங்கிரஸ் மேற்கொண்ட சாதிவாரி கணக்கெடுப்பின் புள்ளி விவரங்களை வெளியிட வேண்டும்.
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அதன் அடிப்படையில் இட ஒதுக்கீட்டை முறைப்படுத்த வேண்டும். மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவில் ஓ.பி.சி. பிரிவினர் பயன்பெற உள் ஒதுக்கீடு அவசியமானது.
இவ்வாறு அவர் கூறினார்.
- திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் அரசியலில் நுழைவது கடினம் என்று நினைக்கிறார்கள்.
- பாராளுமன்றத்துக்கு இப்படி நடிகைகள் வருவதை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் விமர்சனம் செய்துள்ளனர்.
புதுடெல்லி:
சுமார் ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட புதிய பாராளுமன்றம் கடந்த மே மாத இறுதியில் திறக்கப்பட்டது. இதன்பிறகு நடைபெற்ற மழைக்கால கூட்டத்தொடர், பழைய பாராளுமன்ற கட்டிடத்திலேயே நடந்தது. இந்த நிலையில் திடீரென அறிவிக்கப்பட்ட 5 நாள் சிறப்புக்கூட்டத்தொடர், முதல் நாளான கடந்த 18-ந்தேதி பழைய பாராளுமன்றத்தில் தொடங்கி மறுநாளில் இருந்து புதிய பாராளுமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
புதிய பாராளுமன்றத்தில் சிறப்பு கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளிலேயே பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டு விட்டது. இதனையொட்டி பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பிரம்மகுமாரிகள் உள்பட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பெண்கள் பாராளுமன்றத்துக்கு சிறப்பு அழைப்பாளர்களாக வரவழைக்கப்பட்டு வருகிறார்கள். அதிகாரிகள் அவர்களை அழைத்துச்சென்று புதிய பாராளுமன்றத்தை சுற்றிக்காட்டுகிறார்கள். இரு அவைகளின் மாடங்களிலும் அமர வைத்து பாராளுமன்ற நடவடிக்கைகளை பார்க்கச் செய்கிறார்கள்.
இந்த வகையில் நடிகைகளும் அழைக்கப்படுகிறார்கள். இதன்படி 19-ந்தேதி இந்தி நடிகைகள் கங்கனா ரணாவத், ஈஷா குப்தா, பாடகி சப்னா சவுத்ரி, பாடகர் சுமித்ரா குஹா, ஆடை வடிவமைப்பாளர் ரினா டாக்கா, நடன கலைஞர்கள் நளினி கம்லினி ஆகியோர் அழைக்கப்பட்டு இருந்தனர்.
இதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இந்தி நடிகைகள் பூமி பெட்னேகர், ஷெஹ்லான் கில், டோலிசிங், ஷிபானி பேடி ஆகியோர் வந்தனர்.
இந்த நிலையில் நேற்று நடிகைகள் குஷ்பு, தமன்னா மற்றும் திவ்யா தத்தா உள்ளிட்டோர் வந்திருந்தனர். இதனையொட்டி பாராளுமன்ற வளாகத்தில் அவர்களைச் சுற்றி கூட்டம் கூடியது. அவர்களுடன் பலர் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
பின்னர் அவர்கள் புதிய பாராளுமன்றத்தை சுற்றிப்பார்த்தனர். மக்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்ட பெண்கள் இடஒதுக்கீடு மசோதா மாநிலங்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதன் மீதான விவாதங்களை நடிகைகள், பார்வையாளர் மாடத்தில் இருந்து பார்த்தனர்.
இதற்கிடையே நடிகை குஷ்புவும், தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி.யும் சந்தித்தனர். இவர்கள் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை குஷ்பு தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டார். இதைப்போல பிற நடிகைகளுடன் எடுத்துக் கொண்ட படத்தையும் பதிவேற்றம் செய்திருந்தார்.
மேலும், புதிய பாராளுமன்றத்தில் பெண்கள் இடஒதுக்கீடு மசோதா மாநிலங்களவையில் சமர்ப்பிக்கப்பட்டதை நேரில் பார்த்த பெருமை கிடைத்தது என்றும், அதற்காக என்னை அழைத்ததற்கு மரியாதைக்குரிய பிரதமர் மோடிக்கும், அனுராக் தாக்குருக்கும் மிகவும் நன்றி என்றும் பதிவிட்டு உள்ளார்.
இதைப்போல நடிகை தமன்னா செய்தியாளர்களிடம் பேசும்போது, "இது ஒரு விழிப்புணர்வாக இருக்கும் என நான் நினைக்கிறேன். திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் அரசியலில் நுழைவது கடினம் என்று நினைக்கிறார்கள். ஆனால் பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா, சாமானியர்களைக்கூட அரசியலுக்கு வர ஊக்குவிக்கும்" என்று கூறினார்.
இதற்கிடையே, பாராளுமன்றத்துக்கு இப்படி நடிகைகள் வருவதை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் விமர்சனம் செய்துள்ளனர். குறிப்பாக உத்தவ் தாக்கரே அணியைச் சேர்ந்த சிவசேனா எம்.பி. பிரியங்கா சதுர்வேதி, தனது எக்ஸ் தள பக்கத்தில், "பாராளுமன்றத்தில்கூட திரைப்பட விளம்பரங்கள் நடக்கின்றன" என்று கிண்டலாக பதிவிட்டு உள்ளார்.
- வருங்காலங்களில், பாராளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் மகளிர்க்கான பங்களிப்பு அதிகரிக்கும்.
- பெண்களுக்கான 33 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவிற்கு த.மா.கா. என்றும் துணை நிற்கும்.
சென்னை:
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பாராளுமன்றத்தில் வரலாற்று சிறப்பு மிக்க அறிவிப்பாக மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது மகளிர்க்கான இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டதால், வருங்காலங்களில், பாராளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் மகளிர்க்கான பங்களிப்பு அதிகரிக்கும். எதிர்கட்சிகள் இந்த இட ஒதுக்கீட்டை அரசியல் கண்ணோட்டத்தோடு பார்க்காமல் மகளிர்க்கு அளிக்கும் உரிமையை, அங்கீகாரத்தை, பகிர்ந்தளிக்கும் நிகழ்வாக பார்க்க வேண்டும், தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும்.
பெண்களுக்கான 33 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவிற்கு த.மா.கா. என்றும் துணை நிற்கும். புதிய பாராளுமன்ற கட்டித்தில், புதிய தொடக்கமாக வரலாற்று சிறப்புமிக்க மசோதாவை கொண்டு வந்த பிரதமர் மோடிக்குக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும், மனம் நிறைந்த பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- பெண்களுக்கு சட்டமன்றம், பாராளுமன்றத்தில் 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க பிரதமர் முடிவெடுத்துள்ளார்.
- தெலுங்கானா கவர்னர் மாளிகையில் கூட அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களின் திறன் மேம்பாட்டு பயிற்சி நடக்க உள்ளது.
புதுச்சேரி:
தமிழிசை சவுந்தரராஜன் புதுவை கோரிமேடு அருகே உள்ள ஆலங்குப்பம் அரசு தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளியை பார்வையிட்டார்.
ஸ்மார்ட் வகுப்பறையை பார்வையிட்ட அவர், மாணவர்களோடு கலந்துரையாடி பாடம் நடத்தினார். மேலும் மாணவர்களுக்கு மதிய உணவினையும் பரிமாறினார்.
அதைத்தொடர்ந்து கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-
பெண்களுக்கு சட்டமன்றம், பாராளுமன்றத்தில் 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க பிரதமர் முடிவெடுத்துள்ளார். இது பெண்கள் பொது வாழ்க்கைக்கு வர உதவியாக இருக்கும்.
இந்த இடஒதுக்கீடு நடைமுறைக்கு வரும்போது, புதுவை மாநிலத்தில் 11 பெண் எம்.எல்.ஏ.க்களும், தமிழகத்தில் 77 பெண் எம்.எல்.ஏ.க்களும், 13 பெண் எம்.பி.க்களும் இருப்பார்கள்.
கவர்னர் உண்மையாக மக்களுக்காக பணியாற்ற வேண்டும் என்று அடிப்படையில் என்னிடம் வரும் கோப்புகள், அதிகாரிகளிடம் இருந்து கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில்தான் சிலவற்றை தெரிவிக்கிறேன். அதற்காக பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
குடும்ப தலைவிகளுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் நல்ல எண்ணத்தோடு தொடங்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில்தான் மிகவும் கடுமையாக முயற்சித்து மருத்துவ கல்வியில் 10 சதவீத இடஒதுக்கீட்டை பெற்றுள்ளோம். அதற்காக நன்றி தெரிவித்து பிரதமருக்கு மாணவிகள் கடிதமும் எழுதியுள்ளனர்.
தெலுங்கானா கவர்னர் மாளிகையில் கூட அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களின் திறன் மேம்பாட்டு பயிற்சி நடக்க உள்ளது. கல்வி சாரா செயல்பாடுகளில் விளையாட்டு, கலை, பண்பாடு ஆகியவற்றில் மாணவர்களுடைய திறமையை மேம்படுத்துவதற்காகவும், மற்ற குழந்தைகளை ஊக்கப்படுத்துவதற்கும் எல்லா விதத்திலும் உறுதுணையாக இருப்பதற்கும், பொது போட்டிகளில் அவர்கள் கலந்து கொள்ள உதவி செய்யும் நோக்கத்தில் இந்த திட்டத்தை தொடங்குகிறோம்.
அரசு ஆஸ்பத்திரிகளும், அரசு பள்ளிகளும் சாமானிய மக்களுக்கு பலன் தர வேண்டும் என்பது தான் என்னுடைய அடிப்படையான ஆசை.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீட்டை வெற்றிகரமாக செயல்படுத்திய புரட்சித் தலைவி அம்மாவை நினைவுகூர விரும்புகிறேன்.
- மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயப் பெண்களுக்கான பிரதிநிதித்துவம் போதுமான அளவு இருப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்.
சென்னை:
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-
பாராளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டமசோதா பாராளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. ஒரு நாட்டின் உண்மையான வளர்ச்சி என்பது பெண்களின் வளர்ச்சியை பொறுத்தே அமையும் என்று கூறியதோடு உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீட்டை வெற்றிகரமாக அமல்படுத்தி சாதனை படைத்து நாட்டின் முன்னோடியாக திகழ்ந்த புரட்சித் தலைவி அம்மாவை இந்த நேரத்தில் நினைவுகூர விரும்புகிறேன்.
அதே நேரத்தில் நீண்டகாலமாக நடத்தப்படாமல் இருக்கும் மக்கள்தொகை மற்றும் சாதிவாரி கணக்கெடுப்புக்கான பணிகளை உடனடியாக தொடங்குவதோடு, இட ஒதுக்கீடு மசோதாவின் மூலம் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயப் பெண்களுக்கான பிரதிநிதித்துவம் போதுமான அளவு இருப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்.
மேலும், நாட்டின் முக்கிய முடிவுகள் மற்றும் அதிகாரங்களில் பெண்களுக்கான பங்களிப்பை அதிகப்படுத்தும் 33 சதவீதம் இட ஒதுக்கீட்டு சட்டமசோதாவை ஒரு மனதாக நிறைவேற்றுவதோடு, அதனை விரைவில் அமலுக்கு கொண்டு வரத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்