என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சிறப்புக் கட்டுரைகள்
மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு: புதுச்சேரியில் 11 பெண் எம்.எல்.ஏ.க்கள் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு
- நாடு முழுவதும் உள்ளாட்சி தேர்தல்களில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
- 2016-ம் ஆண்டுதான் புதுவை சட்டசபையில் அதிக பெண் எம்.எல்.ஏ.க்கள் இடம் பெற்றனர்.
நாடு முழுவதும் உள்ளாட்சி தேர்தல்களில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் நீண்டகால கோரிக்கையான சட்டமன்றம், பாராளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு நிறைவேற்றப்படவில்லை. புதிய பாராளுமன்ற கட்டடத்தை திறந்து நடந்த சிறப்பு கூட்டத்தில் சட்டமன்றம், பாராளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை நிறைவேற்றியுள்ளனர்.
இந்த மசோதா புதிய மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு பிறகு நடைமுறைப்படுத்தப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதனிடையே பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மசோதா சட்டமன்றம் உள்ள யூனியன் பிரதேசங்களுக்கு பொருந்தாது என்பதால் சட்ட திருத்தம் செய்ய மத்திய அரசு முடிவு செய்தது.
இதன்படி பாராளுமன்றத்தில் நேற்று புதுவை உள்ளிட்ட சட்டமன்றம் உள்ள யூனியன் பிரதேசங்களுக்கு சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்ட திருத்தம் மூலம் புதுவை சட்டமன்றத்தில் 30 எம்.எல்.ஏ.க்களில் 10 எம்.எல்.ஏ.க்கள் பெண்களுக்கு ஒதுக்கீடாக கிடைக்கும்.
இதுதவிர 3 நியமன எம்.எல்.ஏ.க்களில் ஒரு பெண் எம்.எல்.ஏ. இடம் பெறுவார்.
இதன் மூலம் புதுவை சட்டமன்றத்தில் வரும் காலத்தில் 11 பெண் எம்.எல்.ஏ.க்கள் இடம்பெறும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
பிரெஞ்சு ஆட்சியிலிருந்து விடுதலை பெற்ற புதுவையில் முதல்முறையாக 1963-ம் ஆண்டு முதல் சட்டமன்ற தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் நடத்தியது. அன்று முதல் 2021-ம் ஆண்டு வரை மொத்தம் 15 சட்டமன்ற தேர்தல்கள் நடைபெற்றுள்ளது.
புதுவை சட்டப்பேரவை தேர்தலில் பெண் உறுப்பினர்களை குறைந்த அளவே கட்சிகள் வாய்ப்பு தந்தன. முதல் சட்டப் பேரவையில் (1963 முதல் 1964) சரஸ்வதி சுப்பையா, சாவித்திரி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 2-வது சட்டப்பேரவையில் (1964-68) பத்மினி சந்திரசேகரன், அங்கம்மாள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
3-வது சட்டப் பேரவையில் (1969-74) வீரம்மாள் தேர்வு செய்யப்பட்டார். 4-வது, 5-வது சட்டப் பேரவைக்கு பெண்கள் யாரும் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்படவில்லை. 6-வது சட்டப்பேரவையில் (1980-83) ரேணுகா அப்பாதுரை தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் அமைச்சராகவும் இருந்தார்.
7-வது சட்டப்பேரவையில் (1985-90) கோமளா தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே சட்டப்பேரவைக்கு செல்வி சுந்தரம் நியமன எம்.எல்.ஏ.வாக நியமிக்கப்பட்டார். 8-வது சட்டப்பேரவைக்கு பெண்கள் யாரும் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்படவில்லை. 9-வது சட்டப் பேரவைக்கு 1991-ல் கேபக்கிரி அம்மாளும், 10-வது சட்டப்பேரவைக்கு 1996-ல் அரசியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
11-வது சட்டப் பேரவைக்கு 2001-ல் மேரிதெரசா நியமன எம்.எல்.ஏ.வாக இருந்தார். அதன்பிறகு பெண் எம்.எல்.ஏ.க்கள் யாரும் இல்லை.
இந்த நிலையில் 15 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2016 சட்டப்பேரவை தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் 1, காங்கிரஸ் சார்பில் 1, என்.ஆர். காங்கிரஸ் சார்பில் 2, தி.மு.க. சார்பில் 1, பா.ஜ.க., பா.ம.க., ஐ.ஜே.க. என பல்வேறு கட்சிகள் சார்பில் மொத்தம் 12-க்கு மேற்பட்ட பெண்கள் தேர்தலில் போட்டியிட்டனர்.
காங்கிரஸ் சார்பில் நெட்டப்பாக்கம் (தனி) தொகுதியில் போட்டியிட்ட வி.விஜயவேணி, என்.ஆர். காங்கிரஸ் சார்பில் திருபுவனை (தனி) தொகுதியில் போட்டியிட்ட கோபிகா, நெடுங்காடு (தனி) தொகுதியில் போட்டியிட்ட சந்திர பிரியங்கா, தி.மு.க. சார்பில் காரைக்கால் நிரவி தொகுதியில் போட்டியிட்ட கீதா ஆனந்தன், உள்ளிட்ட 4 பெண் வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.
2016-ம் ஆண்டுதான் புதுவை சட்டசபையில் அதிக பெண் எம்.எல்.ஏ.க்கள் இடம் பெற்றனர். 2021-ம் ஆண்டு நடந்த தேர்தலில் காரைக்கால் நெடுங்காடு தொகுதியில் 2-வது முறையாக வெற்றி பெற்ற சந்திரபிரியங்கா அமைச்சராக பதவியேற்றார். இவரும் கடந்த அக்டோபர் மாதம் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். ஒட்டுமொத்தமாக தற்போதுள்ள சட்டசபை யில் ஒரே ஒரு பெண் எம்.எல்.ஏ. மட்டும்தான் உள்ளார். இதற்கு அரசியல் கட்சிகள் பெண்களை சட்டசபை தேர்தலில் நிறுத்த முன்வராததுதான் காரணம்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் பிரதான கட்சிகளான தி.மு.க., பா.ஜ.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகள் பெண் வேட்பாளர்களை நிறுத்தவில்லை. காங்கிரசில் ஒரே ஒரு பெண் வேட்பாளருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. அவரும் நெட்டப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார்.
என்.ஆர். காங்கிரசில் 2 பெண்களுக்கு போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டது. இதில் ஒருவர் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக உள்ளார். ஆனால் வருங்காலத்தில் இந்த நிலை முற்றிலும் மாறும். சட்டசபையில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு சட்ட மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேறி உள்ளதால் அனைத்து அரசியல் கட்சிகளும் பெண்களுக்கு வாய்ப்பளித்தே தீர வேண்டும் என்ற நிலை உருவாகும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்