search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாசுரம்-19"

    • குத்துவிளக்குகள் ஒளி வீசுகிறது.
    • எம் கைகள் உன்னைத்தவிர யாருக்கும் பணி செய்யக்கூடாது.

    திருப்பாவை

    பாடல்

    குத்துவிளக்கு எரியக் கோட்டுக்கால் கட்டில்மேல்

    மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிக்

    கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்

    வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய்திறவாய்;

    மைத்தடங் கண்ணினாய்! நீ உன் மணாளனை

    எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண்,

    எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால்,

    தத்துவம் அன்று தகவேலோ ரெம்பாவாய்

    விளக்கம்

    குத்துவிளக்குகள் ஒளி வீசுகிறது. யானை தந்தத்தால் செய்யப்பட்ட கால்களைக் கொண்ட கட்டிலில் போடப்பட்ட குளிர்ச்சியான படுக்கையில் படுத்திருக்கும் கண்ணபிரானே! கொத்தான மலர்களைச் சூடிய கூந்தலை உடைய மனைவி நப்பின்னையின் மார்பின் மீது துயிலுகின்றவனே! எங்கள் குரல் கேட்டு வாய் திறந்து பேசமாட்டாயா? மை தீட்டப்பட்ட அகன்ற கண்களுடைய நப்பின் னையே! நீ உனது கணவன் கிருஷ்ணன் எவ்வளவு நேரம் தூங்கினாலும் எழுப்பி விடமாட்டாயா? நீ அவனை ஒரு நிமிடம் கூட பிரிய மறுக்கிறாயே.. இது உனக்கே சரியா? நாங்கள் கூறுவது தத்துவம் அல்ல. இது சரி அன்று! அவனை எழுப்பி விடு.

    திருவெம்பாவை

    பாடல்

    உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம்என்

    றாங்கப் பழஞ்சொற் புதுக்குமெம் அச்சத்தால்

    எங்கள் பெருமான் உனக்கொன் றுரைப்போம்கேள்

    எங்கொங்கை நின்னன்ப ரல்லார்தோள் சேரற்க

    எங்கை உனக்கல்லா தெப்பணியுஞ் செய்யற்க

    கங்குல் பகல்எங்கண் மற்றொன்றுங் காணற்க

    இங்கிப் பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல்

    எங்கெழிலென்ஞாயி றெமக்கேலோ ரெம்பாவாய்

    விளக்கம்

    சிவபெருமானே! உன்னிடம் ஓர் விண்ணப்பம் செய்கிறோம், கேட்டருள்வாயாக! 'உன் கையில் பிள்ளை உனக்கே அடைக்கலம்' என்ற பழமொழி உண்டு. அது சிறிதும் மாறிவிடாதபடி அருள்செய்! எங்களுடைய மார்பகங்கள் உனது அடியார்களின் தோள்களைத் தவிர பிறர் தோள்களை தழுவாமல் இருக்க அருள்செய்வாய்! எம் கைகள் உன்னைத்தவிர யாருக்கும் பணி செய்யக்கூடாது. அடியார்களாகிய எங்கள் கண்கள் இரவும், பகலும் உன்னைத் தவிர வேறு எதையும் காணாமல் இருக்க நீ அருள்புரிய வேண்டும். இறைவா.. எங்களுக்கு இந்த வரத்தை அருள்வாயானால் சூரியன் எந்த திசையில் உதித்தால்தான் என்ன? எங்களுக்கு என்ன குறை? கவலையற்றவர்களாக உன் நினைவாகவே சிந்தித்து இருப்போம். உன்னை உணர்ந்து நீராடிப் பாடுவோம்.

    ×