என் மலர்
வழிபாடு
மார்கழி வழிபாடு திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம்-19)
- மையிட்டு விரிந்த கண்களை உடைய நப்பின்னையே!
- எம் பெருமானே! 'உன் கைப்பிள்ளை உனக்கே அடைக்கலம்.
திருப்பாவை
பாடல்:
குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிக்
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்
வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய் திறவாய்;
மைத்தடங் கண்ணினாய்! நீ உன் மணவாளனை
எத்தனை போதும் துயிலெழ வொட்டாய்காண்;
எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால்;
தத்துவம் அன்று தகவேலோ ரெம்பாவாய்.
விளக்கம்:
குத்து விளக்குகள் சுற்றிலும் எரிந்து கொண்டிருக்க, யானையின் தந்தத்தால் செய்த கட்டிலில், மென்மையான பஞ்சு மெத்தையில், பூச்சூடிய கூந்தலை உடைய நப்பின்னையின் மார்பகத்தின் மீது சாய்ந்து படுத்திருக்கும் கண்ணபிரானே! வாய் திறந்து பேசுவாய்! மையிட்டு விரிந்த கண்களை உடைய நப்பின்னையே! எத்தனை நேரமானாலும், நீ உன் கணவனை எழுப்ப மாட்டாய். சிறு பொழுதும் அவன் பிரிவை நீ பொறுக்க மாட்டாய்; இது உன் பெருமைக்குப் பொருந்தாது.
திருவெம்பாவை
பாடல்:
உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம்என்று
அங்கப் பழஞ்சொற் புதுக்கும்எம் அச்சத்தால்
எங்கள் பெருமான்! உனக்கொன் றுரைப்போம்கேள்!
எங்கொங்கை நின்னன்பர் அல்லார்தோள் சேரற்க
எங்கை உனக்கல்லா தெப்பணியுஞ் செய்யற்க;
கங்குல் பகல்எங்கண் மற்றொன்றுங் காணற்க
இங்கிப் பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல்
எங்கெழிலன் ஞாயிறு?எமக்கேலோர் எம்பாவாய்.
விளக்கம்:
எம் பெருமானே! 'உன் கைப்பிள்ளை உனக்கே அடைக்கலம்' என்ற பழமொழியை நாங்கள் புதுப்பிக்கின்றோம். இருப்பினும் அச்சமே ஏற்படுகின்றது. அதனால் நாங்கள் உன்னை வேண்டிக் கொள்கிறோம். எங்கள் மார்புகள் உன் அடியாரல்லாதவரைச் சேராதிருக்கட்டும். எங்கள் கைகள் உங்களைத் தவிர வேறு யாருக்கும் ஏவல் செய்யாது இருக்கட்டும். எங்கள் கண்கள் இரவும் பகலும் உன்னைத் தவிர வேறெதையும் காணாமல் இருக்கட்டும். இத்தகைய வரத்தை எங்களுக்கு நீ அருள் செய்தால், கதிரவன் எத்திசையில் உதித்தால் எமக்கு என்ன கவலை?