search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழ்ப்புதல்வன்"

    • தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் 79 ஆயிரத்து 723 ஆசிரியர்களுக்கு கையடக்கக் கணினி வழங்கப்பட்டிருக்கிறது.
    • கல்வி எனும் நீரோடை தடங்கல் இல்லாமல் பாய்வதற்கு உங்களுடைய இந்த அரசு முழுமையாக ஆதரவாக நிற்கும்!

    சென்னை:

    10 மற்றும் 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் தமிழ் பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் மற்றும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா சென்னையில் நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற்றது.

    விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

    அரசியல் மேடைகளில் தான் ஐம்பெரும் விழாக்கள், முப்பெரும் விழாக்களை நடத்துவோம். ஆனால், இப்போது பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் ஐம்பெரும் விழா ஏற்பாடு செய்திருக்கிறார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

    இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொள்வதற்கு முன்பு மாணவர்களுக்காக நம்முடைய அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களைப் பற்றி கேட்டபோது, பள்ளிக்கல்வித்துறையில் இருந்து ஒரு பெரிய பட்டியலே வந்தது.


    அதிலும் மாணவிகளுக்கு மாதா மாதம் ரூ.1000 வழங்குகிற மற்றொரு முக்கியமான திட்டம் இருக்கிறது. அதுதான் "புதுமைப் பெண் திட்டம்". எனக்கு மாணவிகளிடம் இருந்து வந்த கடிதங்களாக இருந்தாலும், இந்த தேர்தல் பிரசாரத்தின்போது நான் சந்தித்த மாணவிகளாக இருந்தாலும், பலரும் இந்த "புதுமைப்பெண்" திட்டத்தை மிகவும் பாராட்டிப் பேசினார்கள். மாணவிகள் தங்களின் சிறிய சிறிய தேவைகளுக்கு யாரையும் எதிர்பார்த்து காத்திருக்க வேண்டிய நிலை இனி இல்லை என்றும், இந்த திட்டத்தில் மாதா மாதம் கிடைக்கும் ஆயிரம் ரூபாய் தங்களின் தேவைக்கு உதவியாக இருப்பதாகவும் மிகுந்த மகிழ்ச்சியுடன் கூறினார்கள்.

    அந்த மகிழ்ச்சி மாணவர்கள் முகத்திலும் ஏற்பட வேண்டும் என்பதற்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குகின்ற "தமிழ்ப் புதல்வன் திட்டம்" செயல்படுத்தப்படும் என்று சொல்லியிருந்தேன். நீங்கள் கல்லூரி சென்றவுடனே வருகிற ஆகஸ்டு மாதத்தில் இருந்து அந்த ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என இந்த மேடையில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

    10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சிப் பெற வைத்த 1,728 அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் சாதனையை ஊக்கப்படுத்த அவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட இருக்கிறது. தலைமை ஆசிரியர்களுக்கு வழங்குகிறோம் என்றால் அது அனைத்து ஆசிரியர்களுக்கும் வழங்கும் அங்கீகாரம்.

    100 சதவீதம் தேர்ச்சி என்று சொல்லி பாராட்டுவது மூலமாக அந்த இலக்கை அனைவரும் அடைய வேண்டும் என்று ஊக்கப்படுத்துவதற்கு தான் இந்த விழா.

    தமிழ்ப் பாடத்தில் நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்களை பாராட்ட விரும்புகிறேன். எந்த பாடத்தில் நூறு மதிப்பெண் எடுத்தாலும் பாராட்டுக்குரியதுதான். ஆனால், நம்முடைய தாய்மொழி தமிழ். அதுவும் உயர்தனிச் செம்மொழி என்பதால், அதில் 100 மதிப்பெண் பெற்றவர்கள் சிறப்பான பாராட்டுக்குரியவர்கள்.


    12-ம் வகுப்பில் 35 பேரும், 10-ம் வகுப்பில் 8 பேரும், தமிழ்ப் பாடத்தில் நூற்றுக்கு நூறு பெற்றிருக்கின்றனர். அவர்களுக்குத் தலா 10 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படுகிறது.

    அடுத்ததாக, கடந்த ஆண்டு தேசிய பள்ளி விளையாட்டு கூட்டமைப்பு நடத்தும் போட்டிகளில் கலந்துகொண்டு, 95 தங்கப் பதக்கங்களையும், 112 வெள்ளிப் பதக்கங்களையும், 202 வெண்கலப் பதக்கங்களையும் வென்ற மாணவர்களையும் மனதார நான் பாராட்டுகிறேன்.

    கடந்த 10-ந்தேதி பள்ளிகள் திறந்தபோது, நான் போட்ட சமூக வலைத்தளப் பதிவில் கூட மாணவர்களின் மனநலனுடன் உடல்நலனும் முக்கியம் என்று சொல்லி இருந்தேன். அதற்கு விளையாட்டு மிகவும் முக்கியமான ஒன்று.

    இந்த பதக்கம் பெற்றவர்கள், அடுத்து, உலக அளவிலான போட்டிகளில் பங்கேற்கவேண்டும். உங்களில் இருந்து பல ஒலிம்பிக் சாம்பியன்கள் உருவாக வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

    தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் 79 ஆயிரத்து 723 ஆசிரியர்களுக்கு கையடக்கக் கணினி வழங்கப்பட்டிருக்கிறது. ஆசிரியர்கள் இதைப் பயன்படுத்தி, மாணவர்கள் விரும்பும் வகையில் கற்பித்தல் முறைகள் அமையும் என்று நம்புகிறேன்.

    அரசுப் பள்ளிகளில் 22 ஆயிரத்து 931 ஸ்மார்ட் வகுப்பறைகள் உருவாக்கப்பட இருக்கிறது. வகுப்பறையை குழந்தைகள் மனதிற்குப் பிடித்த இடமாக வண்ணமயமாக மாற்ற, அங்கு ஸ்மார்ட் போர்டு ஒன்றைப் பொருத்தப் போகிறோம். இங்கு இணையதள வசதியும் இருக்கும்.

    முதற்கட்டமாக, 500 ஸ்மார்ட் வகுப்பறைகளை இன்றைக்கு துவக்கி வைத்திருக்கிறேன். என்னுடைய ஆசையெல்லாம், உலகத்தில் எந்த ஊர் மாணவர்களுக்கும், என்னுடைய தமிழ்நாட்டு மாணவர்கள் சவால் விடுகின்ற அளவிற்கு வளர்ந்து இருக்கவேண்டும். அதுதான் என் கனவு.

    மாணவர்களான உங்களை நான் கேட்டுக்கொள்வது ஒன்றே ஒன்று தான்... படியுங்கள்.. படியுங்கள்.. படித்துக்கொண்டே இருக்க வேண்டும். எங்கும் தேங்கி நிற்காமல், முன்னோக்கி ஓடிக்கொண்டே இருக்க வேண்டும்.

    கல்விதான் உங்களிடம் இருந்து யாராலும் திருட முடியாத ஒரே சொத்து. ஆனால், அதிலும் கூட, மோசடிகள் செய்வதை "நீட்" போன்ற தேர்வு முறைகளில் பார்க்கிறோம். அதனால்தான் அதை கடுமையாக எதிர்த்து வருகிறோம். "நீட்" போன்ற தேர்வுகள் மோசடியானவை என்று முதன்முதலில் கூறியது தமிழ்நாடுதான். அதை இன்றைக்கு இந்தியாவே சொல்லத் தொடங்கி இருக்கிறது. இந்த மோசடிக்கு நிச்சயம் ஒரு நாள் முடிவுகட்டுவோம். அது எங்கள் பொறுப்பு.

    கல்வி எனும் நீரோடை தடங்கல் இல்லாமல் பாய்வதற்கு உங்களுடைய இந்த அரசு முழுமையாக ஆதரவாக நிற்கும்! அதை நீங்கள் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். எந்த கவனச் சிதறலும் இல்லாமல் படிக்கவேண்டும். "படிக்காமலும் பெரிய ஆள் ஆகலாம்" என்று யாரோ ஒன்று இரண்டு பெயரைப் பார்த்து தவறான பாதையில் செல்லாமல், கல்விதான் உண்மையான, பெருமையான அடையாளம் என்று புரிந்துக்கொள்ள வேண்டும். கல்வி இருந்தால் மற்ற எல்லாம் தானாக வரும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, மேயர் பிரியா, தயாநிதிமாறன் எம்.பி., திண்டுக்கல் லியோனி, பரந்தாமன் எம்.எல்.ஏ. மற்றும் கல்வித்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • கல்லூரியில் சேரும் அரசு பள்ளி படித்த மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.
    • திட்டத்தின் மூலம் அந்த மாணவர்களும் கல்லூரிக்கு வரும் நிலையை உருவாக்கி உள்ளனர்.

    தமிழகத்தில் உள்ள ஏழை குடும்பங்களை சேர்ந்த மாணவிகளும் உயர் கல்வி படிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் புதுமைப்பெண் திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தி மாதந்தோறும் மாணவிகளுக்கு ரூ.1000 வழங்கி அவர்களின் வாழ்விலும், கல்வியிலும் ஒளியேற்றியுள்ளது.

    அதேபோன்று தற்போது அரசு பள்ளியில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து கல்லூரி பயிலும் மாணவர்களுக்கும் மாதந்தோறும் ரூ.1000 வழங்க கூடிய தமிழ்ப்புதல்வன் என்ற திட்டத்தை நடப்பாண்டு முதல் தொடங்க உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

    அரசு பள்ளிகளில் பயின்ற ஏழை, எளிய மாணவர்களை சாதனையார்களாக உருவாக்கவும், அரசு பள்ளி மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கையை அதிகரிக்கவும் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளனர்.

    இந்த திட்டத்திற்கு கல்லூரி மாணவர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது. இதன் மூலம் உயர்கல்வியில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும் அவர்கள் கருத்து தெரிவித்து இருக்கின்றனர்.

    மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் தமிழ்ப்புதல்வன் திட்டம் குறித்து கல்லூரி மாணவர்கள் சிலர் கூறிய கருத்துக்கள் வருமாறு:-

    கோவை அரசு கலைக்கல்லூரியில் 3-ம் ஆண்டு அரசியல் அறிவியல் படித்து வரும் மாணவர் முகிலன் கூறியதாவது:-

    தமிழக பட்ஜெட்டில் அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து உயர் கல்வியில் சேரும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இந்த திட்டமானது கல்லூரி படிக்கும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் திட்டமாகும்.


    இந்த திட்டத்தின் மூலம் அரசு பள்ளிகளில் படித்து உயர் கல்வி பயின்று வரும் ஏழை மாணவர்கள் மிகவும் பயன் அடைவார்கள். கல்லூரியில் சேரும் அரசு பள்ளி படித்த மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். அதுமட்டுமின்றி இந்த திட்டத்தின் மூலம் மாணவர்கள் தங்களுக்கு தேவையான புத்தகங்கள் உள்பட தங்களது தேவைகளை தாங்களே நிறைவேற்றி கொள்ளவும் இந்த திட்டமானது மிகவும் உதவிகரமாக இருக்கும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    அரசு கலைக்கல்லூரியில் அரசியல் அறிவியல் 2-ம் ஆண்டு படித்து வரும் மாணவர் பரத் கூறியதாவது:-

    தமிழக அரசு ஏற்கனவே புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் அரசு பள்ளியில் படித்து கல்லூரி பயின்று வரும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படுகிறது. அதுபோன்று தற்போது அரசு பள்ளியில் படித்து உயர் கல்வி பயின்று வரும் மாணவர்களுக்கும் மாதந்தோறும் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ள தமிழ்ப்புதல்வன் திட்டம் மிகவும் வரவேற்கத்தக்கது. இந்த திட்டத்தின் உயர் கல்வி படிக்க கூடிய அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.


    சில ஏழை மாணவர்கள் தங்கள் குடும்ப வறுமை காரணமாக கல்லூரி செல்ல முடியாமல் வேலைக்கு செல்வதும் ஆங்காங்கே இருக்க தான் செய்கிறது. இந்த திட்டத்தின் மூலம் அந்த மாணவர்களும் கல்லூரிக்கு வரும் நிலையை உருவாக்கி உள்ளனர். இதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    எம்.சி 3-ம் ஆண்டு படிக்கும் சக்திவேல் கூறியதாவது:

    இந்த திட்டமானது கல்லூரி மாணவர்களுக்கு மிகவும் நல்லது. ஆரம்பத்திலேயே பெண்களுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் அறிவித்த போது, அரசு பள்ளியில் படித்து உயர் கல்வி படிக்கும் மாணவர்களுக்கும் வழங்கி இருந்தால் நன்றாக இருந்திருக்கும். தற்போது அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை அறிவித்ததற்கு தமிழக அரசுக்கு நன்றி.

    ஏழை மாணவர்கள் பலரும் இந்த திட்டம் மூலம் பயன் அடைவார்கள். வழக்கம் போல மாதந்தோறும் ரூ.1000 கொடுத்து வந்தால் மாணவர்களும் நமக்கு அரசு உதவி செய்கிறது படிக்க வேண்டும் என்று நினைத்து படிப்பில் கவனம் செலுத்துவார்கள். இது அவர்கள் படிப்பு செலவுக்கும் உதவிகரமாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அரசு கல்லூரியில் எம்.சி. 3-ம் ஆண்டு படித்து வரும் மாணவர்கள் சிவக்குமார், வினோத் கூறுகையில், இந்த திட்டம் மிகவும் வரவேற்கத்தக்கது. இது மாணவர்களின் படிப்புக்கு உதவியாக இருக்கும். இந்த திட்டம் மூலம் மாணவர்கள் பெற்றோருக்கு எந்தவித இடையூறும் கொடுக்காமல் தங்களுக்கு தேவையான படிப்பு உதவிகளை அவர்களே செய்து கொள்ள முடியும். இந்த திட்டத்தை கொண்டு வந்ததற்கு தமிழக அரசுக்கு எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

    ×