search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெள்ளிங்கிரி மலை"

    • வெள்ளிங்கிரி மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
    • ஏழாவது மலையில் உள்ள சுயம்பு லிங்கத்தை தரிசனம் செய்து வருவது வழக்கம்.

    கோவை:

    கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வெள்ளிங்கிரி மலை உள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 6 ஆயிரம் அடி உயரத்தில் இந்த மலையானது உள்ளது. 5.5 கி.மீ தூரம் செல்லும் இந்த மலைப்பாதையில் வெள்ளை விநாயகர் கோவில், பாம்பாட்டி சுனை, கைதட்டி சுனை, சீதைவனம், அர்ச்சுணன் வீல், பீமன் களி உருண்டை, ஆண்டி சுனை போன்றவற்றை கடந்து 7-வது மலையில் சுயம்பு லிங்கத்தை தரிசிக்க முடியும்.

     ஒவ்வொரு ஆண்டும் சிவராத்திரியை முன்னிட்டு தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் இங்கு வருவார்கள். அவர்கள் ஏழு மலைகள் ஏறி, ஏழாவது மலையில் உள்ள சுயம்பு லிங்கத்தை தரிசனம் செய்து வருவது வழக்கம்.

    இந்த ஆண்டு சிவாரத்திரியை முன்னிட்டு கடந்த மாதம் 9-ந் தேதி முதல் பக்தர்கள் மலையேறுவதற்கு அனுமதிக்கப்பட்டனர். அன்று முதல் தினந்தோறும் வெள்ளியங்கிரி மலைக்கு தமிழ்நாடு மட்டுமின்றி நாட்டின் பல பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

    வருடத்திற்கு வருடம் வெள்ளியங்கிரி மலையேறும் பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தபடியே உள்ளது. அதற்கு ஏற்ப அனைத்து வசதிகளையும் வனத்துறையினர் செய்து கொடுத்து வருகின்றனர்.

     நாளை மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி கடந்த சில தினங்களாக வெள்ளிங்கிரி மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெள்ளிங்கிரி மலையேறி சாமி தரிசனம் செய்து சென்றுள்ளனர். இதுவரை 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலையேறி உள்ளனர்.

    நாளைய தினம் மகா சிவராத்திரி என்பதால் இன்றும், நாளையும் அதிகளவிலான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வருடம் 3 லட்சம் பக்தர்கள் வெள்ளிங்கிரி மலையேறுவார்கள் என தெரிகிறது. அடர் வனப்பகுதியில் மலை ஏற்றம் உள்ளதால் ஒரு சிலருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளதால், அடிவாரத்தில் 108 ஆம்பலன்ஸ் மற்றும் அவசர கால மருத்துவர்கள் பணியில் உள்ளனர்.

    மேலும் கோடைக்காலம் என்பதால் தீயணைப்பு மீட்புக்குழுவினரும், வெள்ளிங்கிரி மலையடிவாரத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே வெள்ளிங்கிரி மலையேறும் பக்தர்களை கண்காணிக்க வனத்துறை சார்பில் சிறப்பு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் 6-வது மலையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    ×