search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சமயபுரம் மாரியம்மன் கோவில்"

    • மக்களின் நலனுக்காக அம்மன் பச்சை பட்டினி விரதம் இருப்பது வழக்கம்.
    • தேரோட்டம் இன்று 10.30 மணிக்கு வெகு விமரிசையாக தொடங்கியது.

    மண்ணச்சநல்லூர்:

    தமிழகத்தில் உள்ள அம்மன் ஆலயங்களில் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவில். இக்கோவிலுக்கு தினசரி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து அம்மனை வழிபட்டு நேர்த்திக்கடனை செலுத்துவர். இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் இறுதியில் இருந்து மக்களின் நலனுக்காக அம்மன் பச்சை பட்டினி விரதம் இருப்பது வழக்கம். இக்காலங்களில் அம்மனுக்கு பக்தர்களால் பூச்செரிதல் நடைபெறும்.

    பூச்செரிதலையடுத்து சித்திரை மாதம் முதல் செவ்வாய்கிழமை தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெறும். அதன்படி அம்மன் பட்டினி விரதம் முடிவடைந்து, சித்திரை தேர்திருவிழா கடந்த 7ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து அம்பாள் தினமும் சிறப்பு அலங்காரத்தில் சிம்மவாகனம், பூதவாகனம், அன்னவாகனம், ரிஷப வாகனம், யானை வாகனம், சேஷ வாகனம், குதிரை வாகனம், வெள்ளிக்குதிரை வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று 10.30 மணிக்கு வெகு விமரிசையாக தொடங்கியது. முன்னதாக மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று அதன் பின்னர் மூலஸ்தானத்திலிருந்து அம்மன்(உற்சவர்) புறப்பட்டு அலங்கரிக்கப்பட்ட பிரம்மாண்டமான திருத்தேரில் மிதுன லக்கனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    மிகுந்த உற்சாகத்துடன் ஒம் சக்தி, பராசக்தி என்ற பக்தி கோஷமிட்டவாறு பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். தேரானது பக்தர்கள் வெள்ளத்தில் சென்று, முக்கிய வீதிகளின் வழியாக வலம்வந்து பின்னர் நிலையை அடைந்தது.

    விழாவின்போது ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும், பறவைக்காவடி எடுத்தும், தீச்சட்டி ஏந்தியும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்ரனர். இத்தேரோட்டத்தினைக் காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டுள்ளனர்.

    இந்த திருவிழாவை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் உள்ளுர் விடுமுறை அளிக்கபட்டுள்ளது குறிப்பிடதக்கது. மேலும் திருவிழாவையொட்டி 7 மாவட்டங்களை சேர்ந்த 1500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர்.

    இதேபோன்று திருச்சியில் இருந்து சென்னை செல்லும் கனரக வாகனங்கள் துறையூர் வழியாக சென்னை செல்வதற்காக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    முன்னதாக மரக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி 48 இடங்களில் மண்டகப்படி பூஜைக்கான அம்பாள் நேற்று இரவு புறப்பட்டார்.

    பல்வேறு இடங்களில் பூஜைகளை பெற்றுக் கொண்டு பின்னர் இரவு வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளி பின்னர் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை அம்மன் தேரில் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    2 ஆண்டுகளுக்குப் பிறகு சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சித்திரை தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த திருவிழாவில் திருச்சி மாவட்டத்தை சுற்றியுள்ள மக்கள் மட்டுமல்லாமல், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் தேர் திருவிழாவை கண்டுகளிக்க குவிந்தனர்.

    இந்நிலையில் எந்தவிதமான அசம்பாவித சம்பவமும் ஏற்படாமல் இருக்க அப்பகுதி முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ×