search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "4வது கட்ட தேர்தல்"

    • 4-வது கட்டத் தேர்தல் 10 மாநிலங்களில் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. அன்று 96 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடைபெறும்.
    • பதற்றமான ஓட்டுச் சாவடிகளுக்கு கூடுதல் பாதுகாப்புப் படையினர் நாளை காலை முதல் சென்று பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்வார்கள்.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது.

    கடந்த மாதம் 19-ந் தேதி 102 தொகுதிகளுக்கு முதல் கட்டத் தேர்தல் நடைபெற்றது. அதன் பிறகு கடந்த மாதம் 26-ந்தேதி 89 தொகுதிகளுக்கு 2-வது கட்ட ஓட்டுப்பதிவு நடந்தது.

    இதை தொடர்ந்து 3-வது கட்டத் தேர்தலுக்கான பிரசாரம் தீவிரமாக நடந்தது. கடந்த 5-ந் தேதி பிரசாரம் ஓய்வுபெற்ற நிலையில், கடந்த செவ்வாய்க் கிழமை 93 தொகுதிகளில் 3-வது கட்டத் தேர்தல் நடந்தது.

    அதில் 66 சதவீதம் வாக்குகள் பதிவானது. இந்த நிலையில் 4-வது கட்டத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக நடந்து வருகின்றன.

    4-வது கட்டத் தேர்தல் 10 மாநிலங்களில் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. அன்று 96 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடைபெறும்.

    இந்த 96 தொகுதிகள், ஆந்திரா (25), பீகார் (5), ஜார்க்கண்ட் (4), மத்திய பிரதேசம் (8), மராட்டியம் (11), ஒடிசா (4), தெலுங்கானா (17), உத்தரபிரதேசம் (13), மேற்கு வங்காளம் (8), காஷ்மீர் (1) ஆகிய 10 மாநிலங்களில் இடம்பெற்று உள்ளன. இதில் தெலுங்கானாவில் உள்ள 17 தொகுதிகளுக்கும் வருகிற 13-ந் தேதி ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.


    அதுபோல ஆந்திரா மாநிலத்தில் உள்ள 25 தொகுதிகளுக்கும் அன்றைய தினம் ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடைபெற இருக்கிறது. 4-வது கட்டத் தேர்தலுக்கான 96 தொகுதிகளிலும் கடந்த ஒரு மாதமாக பிரசாரம் தீவிரமாக நடந்து வந்தது. பா.ஜ.க., காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஆந்திராவில் முற்றுகையிட்டு ஆதரவு திரட்டினார்கள்.

    கடந்த 2 நாட்களாக தேசிய தலைவர்களும் அங்கு முகாமிட்டு ஓட்டு வேட்டையாடினார்கள்.

    பிரசாரம் நிறைவு பெற சில மணி நேரங்களே இருப்பதால் 96 தொகுதிகளி லும் பிரசாரம் அனல் பறக்கும் வகையில் உள்ளது. குறிப்பாக ஆந்திராவிலும், தெலுங்கானாவிலும் தேர்தல் பிரசாரம் மிகமிக தீவிரமாக நடத்தப்பட்டு வருகிறது.

    ஆந்திராவில் சட்டசபை தேர்தலுடன் பாராளுமன்றத்துக்கும் ஓட்டுப்பதிவு நடத்தப்பட இருப்பதால் அங்கு, தேர்தல் பிரசாரம் இதுவரை இல்லாத அளவுக்கு உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. அங்கு ஆட்சியை கைப்பற்ற ஜெகன் மோகன் ரெட்டிக்கும், சந்திரபாபு நாயுடு வுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

    ஒடிசாவிலும் சட்டசபைத் தேர்தலுடன் பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்பட இருக்கிறது. அங்கு அசைக்க முடியாத செல்வாக்குடன் இருக்கும் முதல் மந்திரி நவீன் பட்நாயக் மீண்டும் ஆட்சியமைக்கும் வகையில் தேர்தல் பிரசாரத்தை தீவிரப்படுத்தி உள்ளார்.

    ஆனால் நவீன் பட்நாயக்கிடம் இருந்து கணிசமான தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்று பாரதிய ஜனதா தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது.


    மராட்டியம், உத்தரபிர தேசம், மேற்குவங்காளம் மாநிலங்களிலும் தேர்தல் பிரசாரம் உச்சக் கட்டத்திற்கு சென்றுள்ளது. இந்த மாநிலங்களில் பிரதமர் மோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இருவரும் போட்டி போட்டு பிரசாரத்தை மேற்கொண்டுள்ளனர்.

    96 தொகுதிகளிலும் இன்று (சனிக்கிழமை) தேர்தல் பிரசாரம் நிறைவு பெறுகிறது. இன்று மாலை 6 மணிக்கு பிறகு தொகுதிக்கு தொடர்பில்லாதவர்கள் வெளியேற்றப்படுவார்கள். முக்கியத் தொகுதிகளில் கூடுதல் கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    நாளை எந்த கட்சியும், எந்த வகையிலும் பிரசாரம் செய்யக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. 96 தொகுதிகளிலும் ஓட்டுப்பதிவுக்கு நாளை காலையில் இருந்து பணிகள் தொடங்குகின்றன.

    ஓட்டுச் சாவடி அதிகாரிகள் வசம் மின்னணு எந்திரங்கள் ஒப்படைக்கப்படும். பதற்றமான ஓட்டுச் சாவடிகளுக்கு கூடுதல் பாதுகாப்புப் படையினர் நாளை காலை முதல் சென்று பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்வார்கள்.

    பாராளுமன்றத்தில் ஆட்சியை கைப்பற்ற அதிக இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்று பாரதிய ஜனதா இலக்கு நிர்ணயித்துள்ளது. அதற்கு 4-வது கட்டத் தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் இந்த 96 தொகுதிகளிலும் அதிக இடங்களை பாரதிய ஜனதா கைப்பற்றி இருந்தது. இந்த தடவை காங்கிரஸ் கூட்டணி கடுமையான சவாலை ஏற்படுத்தி இருக்கிறது. இதன் காரணமாக 4-வது கட்டத் தேர்தலை பா.ஜ.க. தலைவர்கள் முக்கியமாக கருதி, பிரசாரத்தை தீவி ரப்படுத்தி இருக்கிறார்கள்.

    ×