search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெள்ளம் பெருக்கு"

    • நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில்கனமழை பெய்தது.
    • நெல்லை மாவட்டத்தில் பெய்த பலத்த மழை காரணமாக பெரும்பாலான இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் பெய்த பலத்த மழை காரணமாக பெரும்பாலான இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    இடி-மின்னலுடன் களக்காடு, சேரன்மகாதேவி, அம்பை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி கனமழை பெய்ததால் அங்குள்ள கால்வாய்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் குளங்களுக்கும் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. களக்காடு-சிதம்பராபுரம் சாலையில் உள்ள தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி வெள்ளம் கரைபுரண்டு சென்றது. இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.

    களக்காடு பகுதியில் 8.2 சென்டிமீட்டர் மழை கொட்டியது. கன்னடியன் கால்வாய் பகுதியில் 20 மில்லி மீட்டரும், மூலக்கரைப்பட்டியில் 15 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது. அம்பை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் நேற்று மாலை 3-வது நாளாக கனமழை பெய்தது. அங்கு 27.2 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. ராதாபுரம், நாங்குநேரி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் கனமழை பெய்ததால் சாலைகளில் வெள்ளம் ஓடியது.

    மாவட்டத்தில் கனமழை காரணமாக பெரும்பாலான குளங்களுக்கு நீர்வரத்து ஏற்பட்டது. தென்காசி சாலையில் அமைந்துள்ள புதூர், சீதபற்பநல்லூர், வெள்ளாளன்குளம் பகுதிகளில் உள்ள குளங்கள் வறண்டு வெடிப்பு விழுந்து கிடந்த நிலையில் 3 நாட்களாக தொடர் மழையால் ஓரளவு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.

    மாநகரில் நேற்று பிற்பகலில் கனமழை பெய்தது. இதனால் மாநகரின் முக்கிய பகுதிகளில் சாலைகளில் குளம்போல் மழைநீர் தேங்கி கிடந்தது. இதனால் வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றதால் வண்ணார்பேட்டை, சந்திப்பு, எஸ்.என்.ஹைரோடு ஆகிய இடங்களில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இரவில் பெய்த கனமழையால் மாநகரின் பல்வேறு இடங்களில் மின்தடை அடிக்கடி ஏற்பட்டது.

    அதீத மின்னல் காரணமாக மின்சாரம் வருவதும், போவதுமாக இருந்தது. இதனால் முதியவர்கள், குழந்தைகள் வைத்திருப்போர் கடும் அவதி அடைந்தனர். பெரும்பாலான இடங்களில் இன்று காலை வரை தண்ணீர் வடியாமல் இருக்கிறது. மாநகராட்சி அலுவலகத்துக்கு உள்ளே நுழையும் வாசலில் குளம்போல் மழை நீர் தேங்கியது. டவுன் சாப்டர் பள்ளி மைதானம், சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலம் கீழ்பகுதி ஆகிய இடங்களிலும் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். பாளையில் 9 சென்டி மீட்டரும், நெல்லையில் 5 சென்டி மீட்டரும் மழை பதிவாகியது.

    அணைகளை பொறுத்தவரை மாவட்டத்தின் பிரதான அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. அதே நேரம் அணைகள் நீர்மட்டம் உயரவில்லை. மணிமுத்தாறு அணை பகுதியில் 19.8 மில்லி மீட்டரும், சேர்வலாறில் 15 மில்லி மீட்டரும், பாபநாசத்தில் 11 மில்லி மீட்டரும் மழை பதிவாகி உள்ளது.

    143 அடி கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் 113.65 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 359 கனஅடி நீர் வருகிறது. அணையில் இருந்து 1154 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. 156 அடி கொண்ட சேர்வலாறு அணையில் 117.45 அடி நீர் இருப்பு உள்ளது. மணிமுத்தாறில் 69.40 அடி நீர் இருப்பு உள்ளது. கொடுமுடியாறில் 30 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான நாலு முக்கில் 39 மில்லி மீட்டர், ஊத்து பகுதியில் 30 மில்லி மீட்டர், காக்காச்சியில் 14 மில்லி மீட்டர், மாஞ்சோலையில் 6 மில்லி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.

    தென்காசி மாவட்டத்தில் சாரல் மழை பரவலாக பெய்தது. செங்கோட்டை, ஆய்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் சாரல் மழை விட்டு விட்டு பெய்தது. இதனால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. சங்கரன்கோவில், சிவகிரி பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்தது. மாவட்டத்தில் அதிக பட்சமாக தென்காசியில் 10 மில்லி மீட்ரும், செங்கோட்டையில் 8.2 மில்லி மீட்டரும் மழை பதிவாகியது.

    அணைகளை பொறுத்தவரை கடனா அணை, கருப்பாநதி அணை பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. அணைகள் நீர்மட்டம் உயரும் அளவில் மழை இல்லை என்றாலும், ஓரளவுக்கு நீர்வரத்து ஏற்பட்டது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் மணியாச்சி, கயத்தாறு, கடம்பூர், எட்டயபுரம் மற்றும் அதனை ஒட்டியுள்ள கிராமங்களில் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வயல்வெளிகளில் மழைநீர் தேங்கி கிடந்தது. இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

    மணியாச்சி பகுதியில் 2 மணி நேரத்திற்கும் மேலாக இடி-மின்னலுடன் கனமழை பெய்தது. அங்கு அதிகபட்சமாக 68 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. கயத்தாறில் 43 மில்லிமீட்டரும், கடம்பூரில் 50 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது. எட்டயபுரம் பகுதியில் மதியத்திற்கு பின்னர் திடீரென கருமேகங்கள் வானில் திரண்டு கனமழை பொழிந்தது. அங்கு 39 மில்லிமீட்டர் மழை பெய்தது.

    தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம், கழுகுமலை, சாத்தான்குளம், திருச்செந்தூர், கோவில் பட்டி, காயல்பட்டினம், குல சேகரப்பட்டினம், காடல்குடி, விளாத்திகுளம், வைப்பார், வேடநத்தம் என அனைத்து பகுதிகளில் சாரல் மழை பரவலாக பெய்தது.

    ×