search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசு பஸ் தீ விபத்து"

    • பஸ்சின் என்ஜின் பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறியது.
    • சாலையில் சிறிது நேரம் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

    குனியமுத்தூர்:

    பொள்ளாச்சி புதிய பஸ் நிலையத்தில் இருந்து கோவைக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் அதிகளவில் இயக்கப்பட்டு வருகின்றன.

    இந்த பஸ்களில் பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு பள்ளி, கல்லூரிக்கு வரும் மாணவ-மாணவிகள் மற்றும் பணி நிமித்தமாக வருவோர் என ஏராளமான பயணிகள் தினமும் பயணம் செய்து வருகின்றனர்.

    இன்று காலை பொள்ளாச்சி புதிய பஸ் நிலையத்தில் இருந்து அரசு பஸ் ஒன்று கோவைக்கு புறப்பட்டது. இந்த பஸ்சில் பொள்ளாச்சியை சேர்ந்த டிரைவர் சுரேஷ் (27) என்பவர் ஓட்டுனராக இருந்தார். கண்டக்டராக கதிரேசன் (55) என்பவர் இருந்தார்.

    அதிகாலை நேரம் என்பதால் பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு வேலைக்கு வருவோர் உள்பட 40 பயணிகள் பஸ்சில் இருந்தனர்.

    காலை 8 மணியளவில் ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் பஸ் வந்து கொண்டிருந்தது. அப்போது பஸ்சின் என்ஜின் பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறியது.

    இதை பார்த்த டிரைவர் சுரேஷ் அதிர்ச்சியானார். ஏதோ அசம்பாவிதம் நடக்கப்போவதை உணர்ந்த அவர் உடனடியாக பஸ்சை சாலையோரம் நிறுத்தினார்.

    பின்னர் பஸ்சில் இருந்த பயணிகள் 40 பேரையும் உடனடியாக பஸ்சை விட்டு கீழே இறங்குமாறு அறிவுறுத்தினார். இதையடுத்து பஸ்சில் இருந்த பயணிகள் மற்றும் டிரைவர், கண்டக்டர் அனைவரும் பஸ்சை விட்டு இறங்கினர்.

    அவர்கள் இறங்கிய சிறிது நேரத்தில் பஸ் தீப்பிடித்து எரிய தொடங்கியது. பஸ்சின் முன்பகுதியில் எரிய தொடங்கிய தீ பஸ் முழுவதும் வேகமாக பரவி கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது.

    இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    பின்னர் தண்ணீரை பீய்ச்சி அடித்து பஸ்சில் பற்றி எரிந்த தீயை முற்றிலுமாக அணைத்தனர். இந்த தீ விபத்தில் பஸ்சின் இருக்கைகளும் எரிந்து விட்டன. பஸ் தற்போது பாதி எரிந்த நிலையில் உள்ளது.

    தகவல் அறிந்து செட்டிப்பாளையம் போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் எரிந்த பஸ்சை பார்வையிட்டனர்.

    பஸ்சில் தீ விபத்து ஏற்பட்டது எப்படி? தீ விபத்திற்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். போக்குவரத்து கழக அதிகாரிகளும் விசாரிக்கின்றனர்.

    என்ஜினில் புகை வருவதை பார்த்ததும் டிரைவர் உடனடியாக சாமர்த்தியமாக செயல்பட்டு பஸ் நிறுத்தி பயணிகளை கீழே இறக்கியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. 40 பயணிகளும் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினர்.

    காலை நேரத்தில் பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த அரசு பஸ் தீப்பிடித்து எரிந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் காரணமாக அந்த சாலையில் சிறிது நேரம் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

    ×