என் மலர்
நீங்கள் தேடியது "Survey of Poiyamoli Schools"
- தமிழகத்தில் மலை கிராமங்களில் உள்ள பள்ளிகளின் கட்டமைப்பில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
- இல்லம் தேடி கல்வித் திட்டம் குறித்து முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்த தன்னாா்வலா்களிடம் தொலைபேசி வாயிலாக பேசினாா்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று ஆய்வு மேற்கொண்டாா்.
தமிழகத்தில் மலை கிராமங்களில் உள்ள பள்ளிகளின் கட்டமைப்பில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டுமென முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் அடிப்படையில் நீலகிரி மாவட்டத்தில் வாழைத்தோட்டத்தில் ஜி.ஆா்.ஜி நினைவு மேல்நிலைப்பள்ளி, பொக்காபுரம் அரசு உறைவிடப் பள்ளி, மசினகுடி அரசு மேல்நிலைப்பள்ளி, உதகை பிரீக்ஸ் மேல்நிலைப்பள்ளி, தூனேரி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, கட்டபெட்டு அரசு உயா்நிலைப்பள்ளி ஆகியவற்றில் அடிப்படை வசதிகள் மற்றும் வகுப்பறைகள், நூலகம், ஆய்வுக் கூடங்கள் ஆகியவற்றை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.
பள்ளி மாணவ, மாணவிகளிடம் கல்வித்தரம் மற்றும் ஆசிரியா்களின் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தாா். தொடா்ந்து குன்னூரில் சில்வா்டேல் பகுதியில் தன்னாா்வலா்களைக் கொண்டு நடத்தப்படும் இல்லம் தேடி கல்வித் திட்டம் குறித்து முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்த தன்னாா்வலா்களிடம் தொலைபேசி வாயிலாக பேசினாா்.
இதையடுத்து அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது:
தமிழகத்தில் ஆதிதிராவிடா், பிற்படுத்தப்பட்டோா் மற்றும் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் அனைத்து பள்ளிகளிலும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடா்பாக ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. மிகவும் பழுதடைந்த பள்ளிக் கட்டிடங்கள் பொதுப் பணித் துறை மூலம் இடிக்கப்பட்டு வருகின்றன. பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பள்ளி கல்வித் துறைக்கு ஏற்கெனவே ரூ.7,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருந்த சூழலில் தற்போது கூடுதலாக ரூ.1,500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையில் காலியாகவுள்ள ஆசிரியா் பணியிடங்கள் ஆசிரியா் தோ்வு வாரியம் மூலம் 3 மாதத்துக்குள் படிப்படியாக நிரப்பப்படும். இல்லம் தேடி கல்வித் திட்டம் வெற்றிகரமாக ஓராண்டை எட்டியிருக்கும் நிலையில் இத்திட்டத்தின் மூலம் தற்போது 34 லட்சம் மாணவா்கள் பயன் பெற்று வருகின்றனா் . இவ்வாறு அவர் கூறினார்.






