search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thalaiyuttru Falls"

    • ஆண்டு முழுவதும் அருவியில் தண்ணீர் கொட்டுவது இதன் சிறப்பாகும்.
    • சுற்றுலா தலமாக மாறினால் இப்பகுதி மக்கள் பொருளாதாரத்தில் வளர்ச்சியடைவார்கள் என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

    ஒட்டன்சத்திரம்:

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மலைப்பகுதியில் உள்ள பரப்பலாறு அணையில் பாச்சலூர், பன்றிமலை, வடகாடு பகுதியில் உற்பத்தியாகும் நீரோடைகள் ஒரே இடத்தில் சங்கமிக்கின்றன. அணையில் இருந்து வெளியேறும் தண்ணீர் விருப்பாச்சி மலைக்குன்று வழியாக தலையூத்தில் அருவியாக கொட்டுகிறது.

    பல அடி உயரத்தில் இருந்து தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவது காண்போரை மிகவும் ஆச்சரியப்படுத்தி வருகிறது. விருப்பாச்சியில் இருந்து 2 கி.மீ தூரம் பயணித்தால் மலையடிவாரத்தில் பெருமாள் கோவிலை சென்றடையலாம். அங்கிருந்து சிறிது தூரம் சென்றால் நல்காசி விருப்பாச்சி ஈஸ்வரர் கோவிலின் முன் பகுதியில் இந்த அருவியை காண முடியும்.

    ஆண்டு முழுவதும் அருவியில் தண்ணீர் கொட்டுவது இதன் சிறப்பாகும். மலையடிவாரத்தில் இன்னொரு அருவியாகவும், தலையூத்து அருவி கொட்டுகிறது. இதனை கீழ் தலையூத்து அருவி என்று அழைக்கின்றனர். மலையடிவாரத்தில் இருந்து பல கி.மீ தூரத்துக்கு இது நங்காஞ்சியாறாக ஓடுகிறது. இயற்கை எழில் கொஞ்சும் இந்த அருவி இருக்கும் இடம் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

    அருவி பகுதியில் நீர் சுழல் மற்றும் சில இடங்களில் ஆழம் அதிகமாக இருப்பதால் பாதுகாப்பு கருதி இங்கு யாரையும் குளிக்க அனுமதிப்பது கிடையாது. இருந்தபோதும் உள்ளூர் மக்களும், அருவி பகுதியில் உள்ள கோவிலுக்கு செல்பவர்களும் அவ்வப்போது இந்த அருவியில் ஆனந்த குளியல் போட்டுச் செல்கின்றனர். தற்போது தமிழகம் முழுவதும் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையிலும் தலையூத்து அருவியில் தண்ணீர் வற்றாத ஜீவநதி போல வருகிறது. இதனைப் பார்த்து பொதுமக்கள் ரசித்தும், புகைப்படம் எடுத்தும் செல்கின்றனர். ஒட்டன்சத்திரம் பகுதியில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் பரப்பலாறு அணை மற்றும் தலையூத்து அருவியை சுற்றுலா தலமாக்க வேண்டும் என்று பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனை ஏற்று ரூ.8.22 கோடி நிதியை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இருந்தபோதும் இத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்து சுற்றுலா தலமாக மாறினால் இப்பகுதி மக்கள் பொருளாதாரத்தில் வளர்ச்சியடைவார்கள் என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

    ×